...

23 views

என்னுயிர் துணையே - 3
துணை - 3

சத்யா கதவு திறக்கவும் உள்ளே வந்தார் கோகிலா. பாலை மேஜை மீது வைத்து விட்டு சத்யாவின் முகத்தை தொட்டு பார்த்தார். சத்யா புன்னகை முகமாக நிற்க, ரசனையாய் இருவரையும் பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள் அனு.

" எங்க இந்த வீட்டு வாரிசு? நந்தா சொன்னதும் எனக்கு சந்தோசம் தாங்கல தெரியுமா? " கோகிலா முகமெல்லாம் புன்னகையுடன் கூற, சத்யா மகனை அள்ளி அவர் கையில் கொடுக்க அவரோ கண் நிறைந்து போய் பார்த்தார்.

" பையனா..? பொண்ணா..? " கோகிலா கேட்க சத்யா மெலிதாய் புன்னகைக்க, அனு சத்தமாக சிரிக்க,

" உன் பொண்டாட்டியை எனக்கு எல்லாம் அறிமுகம் பண்ண மாட்டியா டா சத்யா? " அவர் ஏக்கமாக கேட்க,

" ஏன் கோகிமா நீங்களே பேசினா நான் என்ன பேச? இதோ என் பொண்டாட்டி அனுஹாசினி, இவன் என் பையன் வியாஷ். அனு இவங்க கோகிமா என் அம்மாக்கு நெருங்கின தோழி, எனக்கு இன்னொரு அம்மா.. " சத்யா சொல்ல, அனு சட்டென அவர் கால்களில் விழ, கோகிலா முகத்தில் நிறைவு.

" இவன் பையனா? ஏன்டா ஆம்பளை பையனுக்கு தலையில இத்தனை முடி? அழகா இருந்தாலும் சட்டுன்னு பையனா பொண்ணான்னு கண்டுபிடிக்க முடியல பாரு அதான் கேட்டேன்.."

" அத்தை இதான் லண்டன் ஸ்டைல். உங்க பேரனுக்கு இதான் பிடிக்கும், முடிஞ்சா நீங்களே பேசி அவனுக்கு முடி வெட்டி விடுங்க. " அனு கூறவும், கோகிலா அவளின் முகம் பார்த்து விட்டு மடியில் இருக்கும் யாஷ் முகம் பார்த்து, தயங்கி தயங்கி கேட்டார்.

" ஏன் சத்யா இவன் யார் ஜாடை? உன் முக அமைப்பும் இல்ல, அனு முக அமைப்பும் இல்ல.. " கோகிலாவின் கேள்வியில் மகனை அவர் கையில் இருந்து மெல்ல வாங்கியவன்,

" அவன் அனு அப்பா மாதிரி கோகிமா.. " சத்யா உறுத்தாது பொய் சொல்ல,

" ஓ.. சரி நீங்க பால் குடிச்சுட்டு படுங்க. நான் பொறுத்து வரேன். " அவர் அறையை விட்டு செல்ல, சத்யா நெஞ்சை தடவி கொடுக்க, அனு அறை கதவை சாற்றி விட்டு, சத்யா அருகில் வந்து அமர்ந்தவள் வாய் விட்டு பெரிதாய் சிரித்து இருந்தாள். சத்யா யாஷை கண்காட்டி மிரட்ட, வாயில் கை வைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

" எங்க அப்பாவை நேரில் பார்த்தா உன் கோகிமாகிட்ட மாட்டிக்குவடா மங்கி.. "

" இருக்க போற ரெண்டு மாசத்துக்கு டிஎன்ஏ டெஸ்டா எடுத்து தர முடியும்? பொய் தான்.. தப்பு தான்.. ஆனா எல்லாருக்கும் இது தான் நல்லது. நல்லதுக்காக சொல்ற பொய், பொய் இல்ல.. அதனால தேவைக்கு சொல்வோம். " சத்யா புன்னகை முகமாகவே சொல்ல,

" சரி பால் குடிக்கிறோம். மட்டையாகுறோம்.. நான் போய் என்னை ஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன். " அனு முதலில் அறைக்குள் செல்ல, சத்யா மகனுக்கு உடை மாற்றி ஏசியை கூட்டி, கட்டிலை ஒன்றாக இணைத்து போட்டு, கீழே ஒரு மெத்தையை விரித்து போட்டு இருக்க அனு வந்தாள்.

" செல்லம் என்ன கட்டிலை ஒன்னா சேர்த்துட்ட? "

" ஏன் அம்மு வேண்டாமா? வீணா இதுக்கும் கேள்வி வரும்… நீயும் அப்புவும் மேல நான் கீழ, உன்னை எனக்கு தெரியும். என்னை உனக்கு தெரியும். வேற என்ன கவலை?" சத்யா உடையை எடுத்து கொண்டு குளியல் அறை செல்ல, அனு பாலை குடிக்க தொடங்கி இருந்தாள்.

சத்யாவும் பால் குடித்து மதியம் எழ அலாரம் வைத்து கொண்டு படுக்க, மூவரும் நிம்மதியாய் உறங்கி இருந்தனர். அறையின் வெளியே மொத்த குடும்பமும் அவனுக்காக காத்து இருந்தது. அதுவும் வீட்டுக்கு வந்த இரு மருமகளுக்கும் தன் அக்காவாக வந்து இருப்பவள் யார் எனவும், சத்யா எப்படி இருப்பான் எனவும் அறிந்து கொள்ள அதிக ஆவல். நந்தாவும், கோகிலாவும் அனு பற்றி கூறிய வார்த்தைகள் சிவாவை மகிழ்வித்து இருந்தது.

மதிய உணவுக்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருக்க அங்கே வந்தான் அப்புக்குட்டி. தூங்கி சலித்தவன் முதலில் எழுந்திருக்க, சத்யாவும் அனுவும் உறக்கத்தில் இருக்க, பாபாவின் பாபாவை (தாத்தாவை) பார்க்க ஆவல் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவன் இவர்கள் முன் வந்து நின்று இருந்தான்.

மெல்ல அங்கு இருக்கும் முகங்கள் எல்லாம் அவனை கண்டு புன்னகையை சிந்த, அனைவரையும் கேள்வியாக பார்த்தவன், நேரே சிவாவின் முன் போய் நிற்க, அவருக்கோ சிரிப்புடன் அழுகையும் வர, கை விரித்து பேரனை அழைத்திருந்தார். ஆவலாக அவரின் கைக்குள் வந்து இருந்தான் பேரன்.

" உங்க பெயர் என்ன? " அவன் தாத்தன் கேட்கவும்,

" வியாஷ் சத்யா " கனீர் குரலில் கூறினான் அப்புக்குட்டி..

" நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு? "

" என் கிராண்ட் ஃபாதர்.. பாபாக்கு பாபா.. " தெளிவாய் சொன்னான் சிறுவன்.

" அப்ப நான் யாருன்னு சொல்லு பார்ப்போம்.. " ஜோதி கேட்க,

அவனோ தெரியாது என்று தலையாட்ட, ஜோதியின் முகம் சுருங்க, அப்புவின் கண்கள் அடுத்தடுத்து அமர்ந்து இருப்பவர்களின் மேல் பதிய, என்ன உணர்ந்தானோ மெல்ல தாத்தனின் மடி விட்டு இறங்கி மெல்ல நகர்ந்தான்.

" என் பட்டுக்குட்டி இல்ல.. இங்க வா.." சிவா பக்கம் அழைக்க, கோகிலா ஒரு பக்கம் வா என்று அழைக்க, நந்தா பக்கம் வந்து அவனை தூக்க வர, என்ன தோன்றியதோ அவனுக்கு? பாபா… " என பெருங்குரல் எடுத்து கத்தி அழுது இருந்தான். அவனின் அழுகை குரல் கேட்கவும், சத்யா சட்டென விழித்து எழுந்து இருந்தான். மகனை கட்டிலில் தேடி திறந்திருக்கும் கதவை பார்த்து விட்டு அவன் படியிறங்கி கீழே வர, அங்கே பரிமாற நின்று இருந்த அவள் மெல்ல அறைக்குள் சென்று மறைந்து இருந்தாள்.

சத்யா கீழே வர, வியாஷ் நந்தாவிடம் இருந்து துள்ளி அப்பனின் கைகளுக்குள் வந்து சேர்ந்து இருந்தான். மகனை அள்ளி தோளில் போட்டுக்கொண்டு அவனை சமாதானம் செய்தவனை மொத்த குடும்பமும் கண் விரிய பார்த்துக்கொண்டு நின்று இருந்தது.

" உங்களை எல்லாம் புதுசா பார்க்கிறான் இல்லையா? அதான் பயந்துட்டான். சாரிப்பா.. " சத்யா தணிந்த குரலில் சொல்ல,

" என் தப்பு தான்.. இப்படி ஒரு தாத்தாவும் குடும்பமும் இருக்குன்னு இவனுக்கு காட்டாம விட்டது என் தப்பு தான்..." சிவா கவலையான குரலில் கூற,

" அப்படி எல்லாம் எதுவும் இல்லப்பா.. நான் இவனை சமாதானம் பண்ணிட்டு அப்புறமா வரேன்.. "

" அண்ணா.. எங்களை எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா இல்ல? உன் கல்யாணத்தை கூட எங்களுக்கு சொல்லனும் தோணல தானே? " ஏக்கமாக கேட்டாள் அவனின் தங்கை வித்யா.

" எனக்கும் யாரும் அவங்க கல்யாணத்தை பத்தி சொல்லல. " சத்யா அமைதியாய் கூற, வித்யாவை முறைத்தான் அவளின் கணவனான விஜயராகவன் அவனை கண்டு சத்யா மெல்ல நகர,

" டேய் சாப்பிட்டு போ.. " ஜோதி சத்தம் கொடுக்க,

" இல்ல பெரியம்மா நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா அனு கூட சாப்பிட வரேன். கோகிமா இவனுக்கு ஒரு கப் பால் சூடா கொடுங்க கூடவே ஒரு பவுல்.. "

" இவன் என்ன சாப்பிடுவான் சொல்லு சத்யா நான் செஞ்சு தரேன்.." கோகிலா கேட்கவும்,

" இவனுக்கு நம்ம சாப்பாடு எதுவும் சாப்பிட்டு பழக்கம் இல்ல. நான் அவனுக்கு கொஞ்சம் சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா நம்ம சாப்பாடு பழக்கனும் இனிமேல்.." சத்யா விளக்கமாக சொல்ல,

" அனு நம்ம ஊர் பொண்ணு மாதிரி தான் தெரியுது. அவளும் இவனுக்கு பழக்கம் பண்ணலயா? " கோகிலா சத்யாவை நோக்கி கேள்வியை அடுக்கி தர்ம சங்கடம் கொடுக்க,

" நாங்க இருக்கிற இடத்தில் இந்திய உணவு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம். இந்தியா வரனும் நாங்க இதுவரை யோசிச்சது கூட இல்ல, அதனால அப்புக்கு இந்திய உணவு கொடுக்க வேண்டிய அவசியமும் வரல.. " சத்யா கொஞ்சம் இறுக்கமாக பதில் சொல்ல அமைதியாய் அவனுக்கு பால் எடுத்து கொடுக்க சமையலறை உள்ளே சென்று விட்டார்.

சத்யா மகனோடு அறைக்குள் வர, அனு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். மகனை கட்டிலில் அமர வைத்தவன்,

" ஏன் அப்புக்குட்டி அழுதீங்க? "

" எனக்கு பயமா இருந்துச்சு அதான்.."

" அவங்க எல்லாரும் நம்ம சொந்தம் தான்.. பயப்பட வேண்டாம். "

" நீ யாரும் இல்லனு சொன்ன தானே? "

" ஆமா அப்பாக்கு தான் யாரும் இல்ல. அவங்க என்னோட தான் பேச மாட்டாங்க. நானும் பேச மாட்டேன். ஆனா உனக்கு எல்லாரும் சொந்தம் தான். இனி யாரை பார்த்தும் இப்படி பயந்து அழ கூடாது.." சத்யா கூற, மகன் சரியென தலையாட்ட,

" ஏன் நீ பேச மாட்ட? "

" அது.. எங்களுக்கு சண்டை.. அண்ணன் தம்பி சண்டை நாங்களே பேசிப்போம் சீக்கிரம்.. ஆனா நீ எல்லார் கூடவும் பேசனும். என் அப்புக்குட்டி குட் பாய் தானே? "

மகன் ஆம் என்று தலையாட்ட, சத்யா அவன் கன்னத்தில் முத்தம் வைத்தான்.

" முத்தம் தரலாமா உன் பாபாக்கு? "

" ஓ தரலாமே.. அப்புக்குட்டி பிடிச்ச எல்லாருக்கும் முத்தம் தரலாம்." சத்யா கண் சிமிட்டி புன்னகையுடன் சொல்ல, சட்டென அங்கிருந்து எழுந்து ஓடிய மகன் போய் நின்றான் அவன் தாத்தனிடம், சத்யா அமைதியாய் அவர்களை பார்த்துக்கொண்டு நின்று இருக்க, இரு கை நீட்டி தூக்க சொன்னான்.

சிவபிரகாஷம் முகத்தில் ஒளி வர, அவரும் பேரனை தூக்க புன்னகையுடன் தாத்தாவின் கன்னம் பிடித்து முத்தம் வைத்து இருந்தான். தாத்தனின் கண்கள் விரிய, அடுத்த முத்தம் பாட்டியின் கன்னத்தில் விழுந்திருந்தது. அந்த முத்தமே ஜோதிக்கு சத்யா மீது இருந்த கோபத்தையும் துடைத்து இருந்தது. துள்ளி குதித்து நந்தா கை மாறி அவருக்கும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு இறங்கி அப்பனை நோக்கி வர, கோகிலா கன்னம் காட்டவும் மாட்டேன் என ஓடி வந்து சத்யாவின் கைகளுக்குள் தஞ்சமாகி இருந்தான்.

" பாட்டிக்கு ஒரு உம்மா கொடுத்துடு அப்பு" சத்யா கூறவும்,

" இதுவும் என் பாட்டியா? " மகன் சந்தேகம் கேட்க, சத்யா ஆம் என்று சொல்லவும் அவர் கன்னத்தில் எச்சில் பதிய வைத்து இருந்தான் முத்தம் ஒன்றை.. சத்யா பாலை வாங்க கிண்ணத்தை அப்பு வாங்கி கொண்டான். மீண்டும் இருவரும் அறைக்குள் மறைய, அங்கே அனைவரின் முகத்திலும் புன்னகை.

" பரவாயில்ல அப்பன் சொன்னா தட்டாம செய்யுறான் பாரேன். " சிவா வியந்து கூற,

" அப்படியே சத்யா போலவே.. " நந்தா பதில் சொல்ல,

" எங்கையோ கண்ணுக்கு தெரியாம இருந்திருந்தாலும் பொண்டாட்டி குடும்பம்னு நிறைவா தான் வாழுறான். "

" சத்யாவை திருப்பி அனுப்ப வேண்டாம் ஐயா.. பிள்ளை இங்கேயே இருக்கட்டும். நீங்க சூர்யா தம்பிகிட்ட பேசுங்களேன் கொஞ்சம்.. " கோகிலா வேண்டுதலாக கேட்க,

" அவன் இங்க இருந்தா நாங்க யாரும் இங்க இருக்க மாட்டோம் மாமா.. " விஜயராகவன் சொல்ல, வித்யா முகத்தில் அதிருப்தி.

" என்ன தம்பி நம்ம சத்யாவை இன்னும் ஒதுக்கி வைக்கனும்னு சொல்றீங்களா? பாவம் தானே அவனும்? " கோகிலா கேட்க,

" தாராளமா வீட்டுல வையுங்க. யார் ஒதுக்க சொன்னா? எங்களை விடுங்க அது போதும்.. எங்களுக்கு அவனோட ஒரு வீட்டில இருக்க விருப்பம் இல்ல அவ்ளோ தான்."

" விஜய் ஏன் இப்ப இத்தனை கோவம்? அவனை நாங்க இருன்னு சொன்னாலும் அவன் இருக்க மாட்டான். எட்டு வருஷமா வராதவன் வந்து இருக்கான். எந்த சண்டையும் வேண்டாமே? சொத்து பிரிக்கிற வேலையை மட்டும் பார்ப்போம்." சிவப்பிரகாசம் கூற விஜய் அமைதியாகி இருந்தான்.

அறைக்கு மகனை அழைத்து சென்ற சத்யா அவனுக்கு என பானம் கலந்து கொடுக்க குடித்தவன் சிறிது நேரம் கார்டூன் பார்த்து சத்யாவின் நெஞ்சிலே உறங்கி இருந்தான். மகனை அள்ளி முத்தம் வைத்து கட்டிலில் படுக்க வைத்தவன் மீண்டும் கண் அயர்ந்தான் கொஞ்ச நேரம்..

© GMKNOVELS