...

6 views

மௌன ஒத்திகை மீள்ப்பார்வை
கவிதை என்றாலே சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு ஒரு கவிஞனால் இயற்றப்படுவதாகும். அந்தவகையில் கவிஞர்.சிவமணி அவர்களின் "மௌன ஒத்திகைகள்" என்ற கவிதைத்தொகுப்பிற்கு நான் ஓர் மதிப்புரையினை அமைத்துள்ளேன்.

இந்த கவிதைத்தொகுப்பினை முழுமைாக வாசித்ததன் மூலம் கவிஞர்.சிவமணி அவர்கள் காதல் மீது கொண்ட தீராப்பற்றே கவிதைத்தொகுப்பாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கவிதைத்தொகுப்பிலுள்ள அனைத்து பகுதிகளும் என்னை ஈர்த்தன. அதிகமாக கவர்ந்தது திரைப்பட இயக்குநர் திரு.அகத்தியன், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்.விவேகா, நிகழ்ச்சி தொகுப்பாளர் கவிஞர்.நாகா அவர்களின் அணிந்துரைகளும் எழுத்தாளரின் முன்னுரையுமாகும்.

இவ்வெழுத்தாளரின் முன்னுரையினை நோக்குகையில் இவர் ஒரு புதிய எழுத்தாளர் என்று தோன்றவில்லை. ஆனால் அதே உணர்வு கவிதையை படிக்கும்போது ஏற்பட்டுள்ளதா? என்பது கேள்வி குறிதான். "புதியன புகுதலும் பழையன கழிதலும்" இவருடைய கவிதைகளில் காணக்கூடியதாகவுள்ளது. ஒன்பது கோள்களும் ஒன்றினைந்து ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது என்று கூட கூறலாம். குடும்ப வறுமையினை ஒரிரு வார்த்தையில் "அன்பான குடும்பம் மேடு பள்ளங்களோடு கூடிய ஆனந்த வாழ்க்கை" என சுருக்கிவிட்டார். அம்மாச்சியின் பிரிவு, சிறுவயது நண்பனின் பிரிவு, சகோதரியின் பிரிவு என்பனவே இவ்வெழுத்தாளரை உருவாக்கியுள்ளது. இக்கவிதை தொகுப்பிலுள்ள முன்னுரையில் எழுத்தாளர் பிரயோகித்து இருக்கும் வார்த்தைகள் அவரின் வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அடுத்ததாக இக்கவிதைத்தொகுப்பிற்கான அணிந்துரைகள் ஊடாக இக்கவிஞன் பற்றியும் இக்கவிஞரின் கவிதைகள் பற்றியும் முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு வாசகனின் உள்ளுணர்வுகள் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதனை அறியக்கூடியதாகவுள்ளது. இப்பிபஞ்சம் இன்றும் நிலையாக இருக்கிறது என்றால் அதற்கு ஆண் பெண் படைப்பே காரணம். திரைப்பட இயக்குநர் திரு அகத்தியன் அவர்கள் சொன்னது போல நட்பு கொண்ட ஆணும் பெண்ணும் இணைந்து இந்த நூலை ஒருசேர உட்கார்ந்து படித்தால் அவர்களுக்கும் காதல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மையை நானும் உணர்கிறேன். நூலாசிரியரும் ஆண் பெண் பாலினம் பற்றிய மெய்யுணர்வை நன்றாக உணர்ந்து இருக்கிறார். அதனால் மௌன ஒத்திகைகள் என்ற தலைப்பு கவிதைகளுக்கு பொருந்திப் போகிறது என்ற ஐயத்தை தீர்த்து வைத்தது.

1990களில் பாலாஜி இசையில் S.P.B பாடிய வைரமுத்துவின் பாடல் வரிகள் பொருத்தமானதாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

"ஆணுக்கொரு பசியெடுத்தால்
பெண்தான் வேண்டும்
பெண்ணுக்கொரு பசியெடுத்தால்
ஆண்தான் வேண்டும்

இருவருக்கும் பசியெடுத்தால்
காதல் தோன்றும்
காதலுக்கு பசியெடுத்தால்
காமம் தோன்றும்"

ஆண் பெண் உறவுக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளார். " பெண்ணுக்குள் ஆண்மையும் ஆண்மைக்குள் பெண்மையும் பார்த்தால் காதல் வாய்ப்பு அல்ல வரம்" என்ற கவியினை மிக ஆழமாகவும் வித்தியாசமான நோக்கிலும் அணகியுள்ளார். இதனை யாராலும் நிராகரிக்க இயலாது. கவிஞன் கையாண்ட பார்வை என்ற ஒற்றை சொல்லைக்கொண்டு இக்கவிதைத்தொகுப்பினுள் சிறு விளக்கக்கட்டுரையே கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன் அவர்கள்.

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்.விவேகா நிரந்தர புன்னகையரசன் என்ற பட்டத்தை எழுத்தாளர் சிவமணி அவர்களுக்கு சூட்டியுள்ளார். இக்கவிதை தொகுப்பினை வாசித்த பின்னர்தான் தன் முண்டம் வெளியே தென்பட தன்னுடல் மறைத்து செல்லும் பாலைவனப் பாம்புகள் பற்றியும் அறிந்துக்கொண்டேன். மேலும் எழுத்தாளர் பற்றிய இவரது நோக்கு ஏற்புடையதாகும்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கவிஞர்.நாகா இக்கவிதைத்தொகுப்பினை முடி முதல் அடிவரை வாசித்து காதல் பற்றி அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்.

"மௌன ஒத்திகைகள்" என்ற கவிதைத்தொகுப்பினை நான் முழுமையாக வாசித்தேன். ஒரு காதலன் தன் காதலி மீது கொண்டுள்ள அதீத காதலால் அவன்படும் இன்ப வேதனைகளை கவிஞர் காட்டியுள்ளார். சந்தித்து பேசிப்பழகிய ஒரிரு நாளில் I LOVE YOU சொல்லி காதலை வெற்றிக்கொண்டவர்களும் உண்டு. ஒன்றாக பேசிப்பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு. ஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக முக்கியமான விடயமாகும் இதனை எழுத்தாளர் நன்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

"நீ பார்க்கும் திசையில்
பாதை அமைத்தேன்"

காதல் என்பது வாய்ப்பாக அல்லாமல் வரமாக இருந்தாலும் அதனை வெற்றிக்கொள்ள நம்பிக்கை என்ற பூ ஆண்களிடத்தில் மலரதானே வேண்டும். இம்மலர்ச்சியினை இவரது கவிதைகளில் காணக்கூடியதாகவுள்ளது.

நாம் இன்று பின்னவினத்துவ() காலத்தில் இருக்கின்றோம். இதனால் பல துறைகள் மாற்றம் அடைந்துள்ளன. இதனை போலவே காதலையும் கூட ஒரு புதிய அணுமுறையினை கொண்டு உலகறிய செய்துள்ளார். காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம் நம் இலக்கை நோக்கி பயணம் செய்ய வழிவகுக்கிறது அவ்வாறுதான் இவ்வெழுத்தாளரின் படைப்பும் பல வலிகளை கடந்து தொகுப்பாகியுள்ளது. என்பதனை அவருடைய முன்னுரையில் இருந்து அறிந்துக்கொண்டேன்.

அன்பு, பாசம், ஈர்ப்பு, காமம், கவர்ச்சி எல்லாவற்றுக்கும் பொதுவாக 'காதல்' என்ற ஓர் அர்த்தத்தை கொடுத்ததன் விளைவுதான் காதல் என்றாலே சிலர் முகம் சுளிக்க காரணமாகும். காமம் என்ற ஒன்று காதலை வேட்டையாடும்போது உண்மை என்ற நம்பிக்கை ஔியை ஏற்றியே ஆக வேண்டும். இக்கவிதைத்தொகுப்பில் உண்மைக்கு பஞ்சமில்லை. உணவின்றி பசியினால் தன்னுடல் மெலிந்து எழும்பும் தோளுமாக உருகிய மனிதர்களைப்பற்றி பல இலக்கியங்களில் படித்துள்ளேன். ஆனால் தீராத காதல் பசிக்கொண்ட ஒரு காதலனை பற்றி அறிந்துக்கொள்ள இவ்வழகிய கவிதை பூங்கொத்தினை வாசிக்க வாய்பினை அளித்த இவ்வெழுத்தாளனுக்கு என்னுடைய நன்றிகள்.

ஒரு ஆணின் காதல் தன் காதலியை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டவுடன் முற்றுப்பெறும். ஆனால் ஒரு பெண்ணின் காதல் அவ்வாறில்லை சற்று சிக்கலானதுதான். தேர்ந்தெடுக்கும் ஆண் எதிர்காலத்தில் தன்னையும் தன் பிள்ளைகளையும் காப்பாற்றும் திறன் உடையவனா என்பதே பெண்களது முதல் தேவை. ஆனால் இதனை புரிந்துக்கொள்ளாது ஒரு சில ஆண்கள் பெண் விட்டு பெண் பாய்ந்து பெண்களின் நியாயமான ஆசைகளையும் வாழ்க்கையையும் அழித்து விடுகிறார்கள். இவ்வுண்மையை தெரிந்துக்கொண்ட பெண்ணாக இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் அதனால்தான் இவ்வெழுத்தாளரின் கவிதையும் நீண்ட தொகுப்பாக வெளிவந்துள்ளது.

என் மனதை தொட்ட ஏராளமான கவிவரிகளை இத்தொகுப்பிலே வாசித்து இன்புற்றேன். இவ்வெழுத்தாளரின் கவிப்பணி மேலும் தொடர வேண்மென்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
பரமசிவம் இந்துஜா
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்