...

8 views

நெடிய கழியும் இரா 3
"நாம் விலங்குகள்" என்கிறார் டார்வின். "நாம்‌ விலங்குணர்ச்சிகளால் தீர்மானிக்கப்படுகிறோம்" என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

      டார்வினின் கூற்றுப்படி அனைத்து உயிரினங்களின் முதன்மை இலக்கு உடல் இருப்புதான். அதற்கேற்பவே அமைந்துள்ளன அவற்றின் பொறிகள். ஒவ்வொரு பொறிக்கும் உள்ளுணர்ச்சி இருப்பதெனவும், அதை தற்காப்புணர்ச்சி மற்றும் இனப்பெருக்க உணர்ச்சிகள் எனும் இரு வகைக்குள் அமைக்கிறார் .

      ஃப்ராய்டின் உளவியலும் உள்ளுணர்ச்சி  உளவியலே. ஃப்ராய்ட் தனது இருமையவாத உள்ளுணர்ச்சி கோட்பாட்டிற்குள் பாலுணர்ச்சியை முதன்மையாகவும் அதற்கு துணை உணர்ச்சியாக எதிர்மை அடிப்படையில் சாவுணர்ச்சியையும் கொள்கிறார்.
- தி.கு இரவிச்சந்திரன் ஃப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும் நூலிலிருந்து

கௌதமன் கைகளை நீட்டி மடக்கி வாவென அழைக்கவும் இவ்வளவு நேரம் மிரட்சியுடன் நின்றிருந்த குழந்தைகள் இரண்டும் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்ள அவன் அவர்களை ஆதரவாக தழுவிக் கொண்டான்.

குழந்தைகள் இருவரும் அழுதபடியே இருக்க, அவர்களை தன்னிடமிருந்து பிரித்தவன் சொன்னான்
"போய் அம்மா முகத்தை கடைசியா பார்த்துகிடுங்க"

குழந்தைகள் இருவரும் ஒருசேர ம்ஹூம் என்று தலையசைத்து மறுக்கவும், கனிவாக கேட்டான்...
"ஏன்டா...?"

"பயமாயிருக்கு' ப்பா" என்று தந்தையை இறுக்கிக் கொண்டாள் அவனது 14 வயது மகள் நந்திதா. "எனக்கும் எனக்கும்.." என்று அக்காவைத் தொடர்ந்து தானும் தந்தையைக் கட்டிக் கொண்டான் 12 வயது மகன் நரேந்திரன்.

என்ன சொல்லி இந்த குழந்தைகளின் பயத்தை போக்குவது? என்று அவனுக்கு புரியவில்லை. இருந்தும் குழந்தைகளை சமாதானம் செய்யும் பொருட்டு இதமாக வார்த்தைகளாக  கோர்த்து சொன்னான்
"அப்பா இருக்கும் போது எதுக்கு பயம். வாங்க நான் கூட்டிட்டு போறேன்"

"ம்ம்"காரம் கொட்டிய பிள்ளைகளை மனைவியின் சடலத்துக்கு அருகே அழைத்துச் சென்றான். உடல் முழுவதும் வெள்ளைத் துணியில் சுற்றியிருக்க, தீயினுக்கு இரையானது போக  எஞ்சிய முகம் மட்டும் தான் பார்வைக்கு தெரிந்தது.

அவள் தான் உங்களது அன்னை என்று அடையாளம் காண இயலாத முகத்தினை தந்தை கூற, கருகிய முகத்தில் தங்களது பாசமிகு அம்மாவை தேடித்தேடி ஏமாந்து போய் தந்தையை இறுக்கிக் கட்டிக் கொண்டனர் பிள்ளைகள்.

"லேட்டாகிறது தெரியலையா ... இன்னும் எவ்வளவு நேரத்துக்கு சவத்தை வெச்சிருக்கிறது. சட்டுபுட்டுனு எடுக்கறதுக்கான காரியத்தை பாருங்கப்பா..." என்று ஊர் பெரியவர் ஒருவர் ஞாபகப்படுத்தவும், யார் கொள்ளி வைப்பது என்ற அடுத்த கேள்வி  நின்றது.

மகன் இருந்தாலும் சிறிய வயது என்பதால் கணவன் உயிரோடு இருக்கையில் அவன்தான் ஈமகிரியைக்கான சடங்குகள் செய்ய வேண்டும் என்று மூத்தவர்கள் வலியுறுத்திட வேகமாக தலையை அசைத்து மாட்டேன் என்று மறுத்தான் கௌதமன்.

"ஐயா... சிறுக்கி மக ஏதோ புத்திகெட்டுபோய் அவசரத்துல இப்படி பண்ணிக்கிட்டா... அவ நெனைப்பெல்லாம் உங்களை சுத்தியேதான் இருக்கும். பூவும் பொட்டு மா போறா... அவெ ஆத்மா சாந்தி அடையணும்னா நீ தான்யா கொள்ளி வைக்கோணோம்." என்று வயதான மூதாட்டி அவன் நாடியைத் தடவி கூற.....

'ப்ச்... அவ நெனைப்பெல்லாம் எங்களை சுத்தியில்லே... என்னை சுத்தி மட்டும் தான் இருக்கும். என் மேலே கொள்ளை ஆசையில்லே அந்த படுபாவிக்கு... இருந்தா இப்படி செய்திருப்பாளா?' என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டான் கௌதமன்.

துளியும் விருப்பமில்லாமல் போயினும் வேறுவழியின்றி தலை மொட்டையடிக்கப்பட்டு, மீசை மழிக்கப்பட்டு அவளுக்கு கொள்ளி வைக்க ஆயத்தமானான் கௌதமன்.

அவளை கொல்லக்கூட தயங்காத கோபம் கொட்டிக்கிடக்க இறுகிப்போன இதயத்துக்குள்ளே இப்போது எள்ளளவும் அவள் மீது காதல் இல்லை... அவளுக்கேனும் இவன் மீது உண்மையான காதல் இருந்ததா என்றால் பெருமூச்சே பதிலாக வந்தது.

மழிக்கப்பட்ட பின்னர் அவள் ஆசையாக வருடும் மீசை..... கைகளை கோர்த்து கோதி சுகமேற்றும் அலைஅலையான கேசம் என எதிலும் அவள் நினைவுகளே.... அவளுக்காக இவற்றை தியாகம் செய்தது அவனுக்கு எரிச்சலையே தந்தது.

அதை சப்தம் போட்டு மற்றவருக்கு தெரியப்படுத்தவும் விரும்பவில்லை. ஊருக்கு உரக்க கூற நினைத்திருந்தால் அதை காலையிலேயே செய்திருப்பான். ஏதோவொன்று அவன் வாயை கட்டிப் போட்டது. அந்த ஏதோவொன்று என்பது வேறெதுவும் இல்லை காதல்... தான். ஆனால் அக்காதல் அவனுடையதா? இல்லை அவளுடையதா? அப்புரிதலுக்கான காலம் இப்போதில்லை என்பது மட்டுமே நிதர்சனம்.

எப்படியாகினும் 16 வருடங்கள் உடன் வாழ்ந்திருக்கிறாள். அவள் வாழந்தாளா என்று அவனுக்கு எப்படி நிச்சயம். ஆனால் இவன் வாழ்ந்தான். திகட்ட திகட்ட ... அப்படித்தான் எண்ணியிருந்தான் அன்றைய காலையில் வரைக்கும்.

உண்மை கழுத்து மேல் கத்தியாக தொங்கிக்கொண்டு இருந்தாலும் அறியாமல் இருந்திருக்கிறான். இப்போது கழுத்தை அறுத்தப் பின்னரும் கூட ஏற்கவியலாது ஒரு மனம் அவளுக்காக பேசுகிறது.

ஏறக்குறைய ஒரு லட்சம் பணத்தை இழந்திருக்கிறாளே. அதன் அடிப்படை என்னவாக இருக்கும்??? எத்தனை சாமர்த்தியமாக மறைத்திருக்கிறாள்.  நம்பிக்கை இருபுறமும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணராது அசடனாக இவ்வளவு காலம் அவனுடன் அவள் இருந்திருக்கிறாள். காமத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் உணரமுடியாதோர்... ஆசைக்கும் நேசத்துக்கும் வேறுபாடு உணர முடியாதோர் பட்டியலில் இப்போது இவன் பேரும் புதிதாக சேர்ந்திருக்கும் என்று சலித்துக் கொண்டான்.

பாவி...மாபாவி... கடைசியில் அவள் எண்ணம் போலவே என் கையால் கொள்ளி வாங்கிக் கொள்கிறாள்.... என்னை கொன்றுவிட்டு என்று உள்ளுக்குள் துடிதுடித்து போனான்.

என்னதான் இருந்தாலும் இந்த கௌதம் பைய ஒரெட்டு அழுதிருக்கலாம். ஊரை எதிர்த்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி... குடும்பம் நடத்தினவன் கட்டுனவ கட்டையிலே போகும் போது ஒரு சொட்டு கண்ணீர் விடலையே?!

அப்படி என்ன பிரச்சினை நடந்திருக்கும் ரெண்டு பேருக்குள்ளே?

இளம்வட்டங்க சிலரு சொல்றது போல இவனே அந்த பொண்ணை கொளுத்தி விட்டானா?

இப்படி... காதில் விழுந்தன சில... விழாமல் உலாவந்த கேள்விகள் எத்தனை எத்தனையோ?
அத்தனைக்கும் பதில் இருவரிடம் மட்டும். அதில் ஒருத்தி உயிரோடு இல்லை. இருக்கும் இவனும் கல்லூளி மங்கனாக வாய்மூடி மௌனித்திருக்கிறான்.

பெண்ணாய் பிறந்தால் பூவோடும் பொட்டோடும் போய் சேர வேண்டுமாம். அது ஆகச் சிறந்த பெரும் பேறாம். இப்படி அபத்தமாக சொன்ன மூத்தோரை பழிக்கத்தான் தோன்றியது அவனுக்கு!

முடிந்தது... அவளின்  மொத்த உடலையும் சுவைக்கும் பேராவலில் தீயின் நீண்ட நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. எரியும் நெருப்பில் மடக்கி வைக்கப்பட்டிருந்த அவளது இரண்டு கைகளும் வெளியே நீண்டு விரித்து காத்திருக்கின்றன. ஆனால் எதற்காக? யாருக்காக பதில் சொல்வார் எவருமில்லை.

மயானத்தில் தகனம் முடிந்து குளித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியவனை வெறிச்சோடி போயிருந்த செங்கல் கட்டிடம்‌  தான் வரவேற்றது. எப்போதும் ரீங்காரமிடும் அவளது கொலுசொலிகள் கொள்ளை போயிருந்தன.

அமைதியாக வந்து கூடத்தில் அவளது புகைப்படத்தின்
அருகே இருந்த காமாட்சி அம்மன் விளக்கினை ஏற்றி விட்டு நேராக அவனது அறைக்குள் சென்று மெத்தையில் விழுந்தான்.

இமைகள் மூடியிருந்தாலும் விழிகள் அன்றைய சம்பவங்களில் அசைப்போட்டபடி இருந்தன. அவளை தவறாக நினையாதே... அவளது மரணத்துக்கு பின்னர் நிச்சயம் கோழைத்தனமோ குற்றவுணர்வோ மட்டும் இருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதோ ஒன்று... உள்ளது...! அப்படித்தான் அவனது ஆழ்மனம் அவனுக்கு எடுத்துரைத்தது.

அதேநேரத்தில் சிவா வேகமாக கௌதமனின் வீட்டுக்குள் நுழைந்தான். எதிர்ப்பட்ட கௌதமின் தாயிடம் கேட்டான்
"கௌதம் எங்கம்மா? ஏதாவது குடிக்க கொடுத்தீங்களா" என்று

"அவன்கிட்ட போகவே பயமா இருக்குப்பா. மயானத்திலிருந்து வந்து விளக்கேத்திட்டு ரூம்'க்குள்ள போனவன் தான்... என்ன குரல் கொடுத்தாலும் வாயே திறக்க மாட்டேங்குறான்" தாயாக மகனை நினைத்து மகனது நண்பனிடம் அங்கலாய்த்தார் பூங்காவனம்.

"விடுங்கம்மா. நான் பார்த்துக்கிறேன். நீங்க காஃபி போட்டு கொண்டு வாங்க" என்று அவரிடம் வாக்களித்து விட்டு நண்பனின் அறைக்குள் நுழைந்தவன் மெல்ல கௌதமனின் தோளினை பற்றினான்.

நண்பனது ஸ்பரிசத்தில் இமைகளை திறந்தவன் என்ன என்பது போல பார்க்க, "எழுந்து உட்காருடா..."என்றான் சிவா.

நண்பனுக்கு மறுபேச்சு கூறாது எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டவனிடம் அவனுடைய ஃபோனை அளித்தவன்... கௌதமனிடம் "அடுத்து என்ன செய்ய போற?" என்று முக்கியமான கேள்வியை வைத்தான்.

"செய்யணும். நிறைய இருக்கு. முதல்ல நாளைக்கு காலைல போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கணும்"

வெளியே நின்று பூங்காவனம் குரல்கொடுக்க
ம்ம். முதல்ல சூடா‌ இந்த காஃபியை குடி. கொஞ்ச நேரத்தில் சாப்பிட்டு படுத்து தூங்கி ஓய்வெடு. நாளைக்கு எல்லாம் பார்த்துக்கலாம் என்று நம்பிக்கை அளித்தான் சிவா.

"ஓய்வா... எனக்கா? அவனை ஒரு வழி பண்ணாம எனக்கு தூக்கம் வராதுடா...?" என்று கௌதமன் கொதிக்க...

"யார் என்னவென்று புரிந்தாலும் யாரை என்று எதிர் கேள்வி எழுப்பாமல் "எதுவானாலும் ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசித்து முடிவெடுடா... பின்னாளில் பிரச்சினை ஆகாது பார்த்துக்கணும்." உற்ற நட்பாக அறிவுரை வழங்கும் சிவாவை பார்த்த கௌதமனின் முகத்தில் அப்படியொரு சோர்வு.
உடல் சோர்வு மட்டும் இல்லை. அது முழுக்க முழுக்க மனச்சோர்வு வகையானது என்று இருவருக்குமே தெரியும்.

"உன் பேச்சை அப்பவே  நான் கேட்டிருக்கணும்டா. தப்பு பண்ணிட்டேன்" என்று வருத்தம் தெரிவித்த கௌதமனின் கரத்தினை அழுத்தமாக பற்றி இப்படி கழிவிரக்கம் கொள்ளாதே என்று ஆறுதல் அளித்தான் சிவா.

இதற்கு மேல் இங்கிருந்தால்  தாளாது என்று கிளம்புவதாக கண்ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான் சிவா.

சிவா சென்றதும் தன்னுடைய அலைபேசியை உயிர்ப்பித்து காணொளி தளம் சென்றவன் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை ஒலிக்கவிட்டு கண்களை மூடினான்...

"ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
தேசம் அளாவிய
கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே...

வரிகள் கூட கூட இறுகியிருந்தவன் உயிர் உருகி கன்னத்தில் வழிந்தோடியது...!

- தொடரும்