...

0 views

வாழ்நாள் ஆசை
வாழ்நாள் ஆசை....

ஒருநாளேனும் அந்த
ஐஸ்கிரீம் கடையின்
படி தாண்டி உள்ளே சென்று
பனிக்கூழ் உண்டிட வேண்டும்....

ஒருநாளேனும் கீர்த்தி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரின்
படி தாண்டி உள்ளே சென்று
அம்மாவுக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் வாங்கி வர வேண்டும்

ஒரு நாளேனும் அழகு நிலையத்தின் படி தாண்டி உள்ளே சென்று
முடி திருத்திக் கொள்ள வேண்டும்

ஒருநாளேனும் அந்த நான்கு வழிச் சாலையை நான் மட்டும் தனியாய்க் கடக்க வேண்டும்...

ஒருநாளேனும் அந்த பேன்சி ஸ்டோரின் படி தாண்டிச் சென்று வகை வகையாய் கைச் சங்கிலி வாங்கிக் கொள்ள வேண்டும்

ஒருநாளேனும் அந்தப் பேருந்தின்
படி ஏறி கூட்ட நெரிசலில் நசுங்கி நான் அமர்ந்திருக்கும் இருக்கையை அங்கே களைத்து நிற்கும் முதியவருக்கு விட வேண்டும்

ஒருநாளேனும் அந்தத்
துணிக் கடையின்
படி ஏறி எல்லாத் துணிகளையும்
பார்த்துப் பார்த்து துணி வாங்க வேண்டும்....

ஒருநாளேனும் ஒரு புத்தகக் கடையின் படியேறி புது நோட்டும் புது புத்தகமும் பிடித்த எழுதுகோலும் வாங்கிட வேண்டும்

ஒருநாளேனும் திரையரங்கின் படி தாண்டி திரைப்படம் பார்த்திட வேண்டும்....

ஒருநாளேனும் ஒரு ஹோட்டலின் படி தாண்டி உள்ளே சென்று வகைவகையாய் வாங்கி உண்டிட வேண்டும்....

ஒரு நாளேனும் ஒரு
திருமண மண்டபத்தின் படி ஏறிக் கலியாணத்திற்குச் சென்று மேடையிலேறி மணமக்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்‌‌.....

ஒருநாளேனும் எங்களூரின்
பால்கடையின் படி ஏறி
அங்கே நடக்கும் விவாதங்களைக் காண வேண்டும்...

ஒருநாளேனும் கோயிலின் படி தாண்டி உள்ளே சென்று கருவறையைத் தாண்டிட முடியாத கல்லின் கவலையையும் அதில் மிளிரும் சிற்பியின் கைவண்ணத்தைக் காண வேண்டும்....

ஒருநாளேனும் மெடிக்கலின் படியேறி சளிக்கு
மாத்திரை வாங்க ஆசை

ஒருநாளேனும் ரேசன் கடையின் படி தாண்டி வரிசையில் நின்று அரிசி வாங்க ஆசை....

ஒரு நாளேனும் அண்ணாச்சி கடையின் படியேறி ஆரஞ்சு மிட்டாய் வாங்கி வர ஆசை

ஒருநாள் என்னைப் பார்க்க வரும் எல்லாரையும் நான் போய்ப் பார்க்க ஆசை

ஒருநாள் இந்த உலகின் படிகளை எல்லாம் பார்த்து ஏங்காமால் எட்டி உதைத்து விட்டு சரளமாய் சரசரவென உள்ளே போக வேண்டும்!

ஒருநாளேனும் வெளியில் இருந்தே பார்த்து ஏங்காமால் வேண்டியதை எல்லாம் படியேறி படியேறி பார்த்துப் பார்த்து வாங்கிக் கொள்ள ஆசை எனக்கே எனக்காக....❤️

_ முத்துரம்யா

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #முத்துரம்யா #தமிழ்நிழல்