...

4 views

தமிழ் மக்களின் மனமும் அழகு
அட்சய பாத்திரம் போல்
தித்திக்கும் இனிமைகளை
வாரி வழங்கும் தமிழ் அழகு

அழகிற்கு அழகெனும்
வார்த்தையை வழங்கிய
செந்தமிழ் அழகு

இரு கண்களாய்
யாவரையும் வழி நடத்தும்
இலக்கிய தமிழ் அழகு

அழகென்ற வார்த்தைக்கு
அங்கீகாரம் கொடுக்கும்
தமிழச்சிகள் அழகு

கரிய மேகங்களை
மிஞ்சி கருத்து இருக்கும்
தமிழச்சிகளின் கூந்தலும் அழகு

குற்றம் இழைக்காத
கற்பு நெறியை போற்றும்
தமிழ் மகளிர் அழகு

அரும்பும் போதே
அ ஆயென தமிழ் உச்சரிக்கும்
மழலைகள் அழகு

மார்கழி திங்களில்
மதி விளையாடும்
தமிழர்களின் வீட்டு வாசல்கள் அழகு

தமிழர் நிலத்தில்
தன் கதிர் விரித்து
புது நாள் படைக்கும்
செஞ்சுடரின் ஒளி அழகு

தோகை விரித்து
மனதை கவர்ந்துயிழுக்கும்
இலக்கிய தமிழ் புகழும்
மயில்கள் அழகு

துள்ளி திரிந்து
வனமெல்லாம் ஓடியாடும்
இலக்கிய தமிழ் புகழும்
மான் இனங்கள் அழகு

வானுயுரம் வளர்ந்து
இதமான தென்றலை வழங்கும்
தமிழ் நில மரங்கள் அழகு

மழையில் நனைந்து
கிளையில் அமர்ந்துகீச்சிடும்
தமிழ் நில பறவைகளின்
சத்தமும் அழகு

சின்ன சின்ன
மழைத்துளிகளில் குளிக்கும்
தமிழ் நில செடிகளின்
இலை முகம் அழகு

இதழ் விரிந்து
மனதை கொள்ளையடிக்கும்
தமிழ் நிலத்தின்
வண்ண வண்ண பூக்கள் அழகு

கண்கவரும் பசுமைகளை
மனதிற்கு வாரி வழுங்கும்
தமிழர்களின் நெல் வயல்கள் அழகு

வளங்களால் செழித்து
பூத்து மலர்ந்திருக்கும்
தமிழ் நில இயற்கைகளின் அதிசயங்கள் அழகு

முகில்களை பிடித்து
தன்னுடல் நனைத்து
அருவிகளை படைக்கும்
தமிழ் நில மலைகள் அழகு

சோலைகளில் புகுந்து
மலர்களின் வாசனை முகர்ந்து
ஆறுகளை உருவாக்கும்
தமிழ் நில அருவிகள் அழகு

ஏரிகளில் வழிந்து
குளங்களை நிரப்பி
தான் நடக்கும் இடமெங்கும்
வளங்களை வழங்கும்
தமிழ் நிலத்தின் ஆறுகளும் அழகு

இயற்கையை வழிபட்டு
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ வழிவகுத்து
அறவழியில் வாழும்
தமிழ் மக்கள் அழகு

புன்னகை பூத்து
இருப்பதை பகிர்ந்து
நல்லவற்றை செய்து
சான்றோர்களாய் திகழும்
தமிழ் மக்களின் மனமும் அழகு.
- சங்கத்தமிழன்.