...

18 views

அன்புள்ள நட்பே
எனது ப்ரியமான..
பிரிய காரணமான நட்பே...

நண்பர்களுக்கான வாரமெனவும் அன்புள்ள நட்பே என்று அடைமொழியிட்டு கவிதையோ கட்டுரையோ தங்கள் அனுபவத்தை எழுதுங்கள் என்று ஒரு தளத்தில் சலுகைகளை அறிவித்திருந்தார்கள்....

"ஒற்றைத் தினத்தில் ஒற்றை பதிவில்
தின்று செரிக்கும் அளவா
நமது நட்பு.... மன்னிக்கவும்
இல்லை... நடப்பு!"

இருந்தும் முழுவதும் பகிரும் முன்பே துண்டித்து போன கடைசியாய் அமைந்துவிட்ட அன்றைய நாளின் அழைப்பை ஏற்கா அழைப்பென வழக்கம் போலவே பொய்யான நம்பிக்கையினை பூசிக்கொண்டு இதை எழுதுகிறேன்
என்னுள் சிறைப்பட்டு உன்னைத் தவிர்க்கும் உனக்காக....

"சொற்களின் சூட்சுமம் அறியாதவர்களுக்கு மௌனத்தின் மதிப்பு தெரிவதில்லை".

என் மௌனத்தினை உணர்ந்த உனக்கு என் சொற்கள் உரைப்பு தாளாமல் போனதில் வியப்பில்லைதான்‌. 

விலக்கி வைக்கின்றியோ அன்றி விலகி நிற்கின்றாயோ???

ஒன்றே ஒன்று உன்னிடம் கேட்கவா?

அந்த உறைநிலை மௌனத்தினை உடைக்க இருபது ஆண்டுகள் ஆனது எனக்கு...

ஆனால் என் நம்பிக்கையை உடைக்க நீ நொடிகளை கூட எடுத்து கொள்ள வில்லையே????

வருடத்தின் மூன்று நாட்களில் உன்னை தொந்தரவு செய்வது
நெருடலாகத்தான் உள்ளது.

இருந்தும் என்ன செய்ய? அன்றைய தினங்களில் எனது குறுஞ்செய்தியற்ற உனது புலன பக்கங்கள் வறண்டு போய்விடுமே...

எனக்கென யாருமில்லை என்று உள்ளுக்குள் புலம்பி தவிப்பாயே என்றே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்....

தொய்ந்து போன நம்பிக்கையை...
தொடர மறுத்த காலங்களை‌..
மறைந்து போன முகத்தினை... அனைத்தையும் காவு வாங்கி நகர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கை.

இன்னொரு கேள்வியும் கேட்காமல் இருக்க முடியாது...

உனது காதலை உரைத்தபோது...
உள்ளங் கனிந்து உதடுகள் விரிந்து வாழ்த்துகள் கூறினேன் அல்லவா??

ஆனால் எனது காதலை கூறும் விடத்து காது கொடுக்காமல் ஏன் செல்கிறாய்?

உன் காதலை நானும் என் காதலை நீயும் கொண்டாடி தீர்ப்பது தானே நட்பு???

அழகாய் காய்களை நகர்த்தி அகப்பட்ட என் ஈகோவை காயப்படுத்தி மனம் நிறைந்த வாழ்வினை ஏற்று கொண்டாய்.

ஒரு முறை கூட உனது தவறை நீ உணரவே இல்லையா?
இல்லை அந்த உணர்வே இல்லையா?

உன்னால் கவிதைகளை பிரித்தேன். பிச்சியென பிதற்றி திரிந்தேன். வாசிப்பை நிறுத்தினேன். வழக்கமாய் முறுக்கிக் கொள்ளும் குணத்தினையும் அதட்டினேன்.

இத்தனைக்கும் பிறகும் என்னை எதிர்நோக்க அஞ்சாது முன்னேறுகிறாய்???

விதியின் விளையாட்டில் கிழிப்பட்ட நினைவுகள் பொய் கோட்டைகளாகி நித்தமும் என்னை வதைக்கிறது..‌? அது உன்னை வதைக்கிறதா?

இல்லையெனில் வருத்தம் கொள்ளாதே!
வரம்பற்ற துவேஷம் ஒரு நாள் வரம் கொடுக்காமலா போய்விடும்...

🌷. இந்த ஒற்றை ரோஜா உனக்கானது...
இதை தொடர்ந்து வராதே தொட்டு விடாதே
நெருங்கி வந்தால் வரவேற்பது நெருஞ்சி முள்ளாய் கூட இருக்கலாம்???;
இப்படிக்கு
அக்கறையின் போர்வையில்
அதிகாரம் காட்டும்
நட்பு

©