...

18 views

ஒரு மிடறு பருகலாமா?!
குளிர்ச்சியான நவம்பர் மாத மழை பொழியா ஆனால் மேகமூட்ட காலத்தில் காலையில் எழுந்ததும் காப்பியோ டியோ குடித்தால் எப்படி இருக்கும்?!

விடிந்து விடியாத வெளிச்சத்தில் அதன் குளிர்ச்சியில் சுடச்சுட ஒரு கோப்பையை கையில் ஏந்தி குடித்தால் எப்படி இருக்கும்?

என் மனதிற்குள் நான் சொல்வதை நீங்கள் இப்பொழுது தாராளமாக ஒட்டு கேட்கலாம்.

நான் பருகும் எழுச்சி பானங்களுக்கான கோப்பை உருளையாக நேராக இருக்காது. முக்கால் வாசி வெட்டிய ஒரு ஆப்பிள் பழத்தின் வடிவத்தில் அதேபோன்று வழவழப்பாக மினுமினுப்புடன் தான் இருக்கும்.

அதில் சுட சுட காபியோ டியோ நிரப்பி வைத்து முதலில் பார்க்க பார்க்க அதன் வடிவமே ஒரு ருசியாக இருக்கும்.

விழிகளால் வாசித்து ரசிப்பில் வசித்தால் போதுமா?! வாசம் என்று ஒன்று உண்டல்லவா. மேல் மூச்சையும் கீழ் மூச்சையும் இணைத்து உள்நாசி வரை இழுத்து ரசித்தேன் அதன் வாசனையை!

பார்த்தேன் அழகை ரசித்தேன். சுவாசித்தேன் அதன் வாசனையை ருசித்தேன். பசிக்கு ருசியாற பழகிப் பார்க்க வேண்டாமா அதனோடு?!

வலது கையால் அதன் காதுகளை பிடித்து கையில் எடுத்து இடது கையோடு அனைத்தவாறே கொஞ்ச நேரம் பிடிக்க அதன் வழவழப்பும் சூடும் ஒரு விதமான கத கதகதப்பான இன்பத்தில் ஆழ்த்தியது.

அந்தக் கோப்பைகளின் வெளிப்புற கத கதப்பை இன்னும் கொஞ்சம் இசைவோடு உணர அந்த கோப்பையை எடுத்து இதயத்தின் அருகில் ஒற்றிக் கொண்டேன், தேகம் தொட்ட சூடு தாகம் தீர்க்க சொல்லியது.

கோப்பையை அங்கிருந்து கொண்டு வந்து கையில் ஏந்த தளும்பி தேனீர் திவலைகள் என்னை பார்த்து ஏக்கமாக கேட்டது…

"காதல் கண்ணனே, கவித் தாகனே உன் உதடுகளை தொட நான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது?!"

ரசிக்காமல் ருசித்தால் பசி அடங்காது என்று கண் சிமிட்டியபடி சொன்னேன்.

"என் கண்களின் வெட்கணே!
இந்த கண்ணியின் குறும்பணே!
ரசி ருசி ரசி ருசி இரண்டையும் மாறி மாறி செய்யலாமே" என ஏங்கி கேட்டது தேநீர்!

என்னை கொஞ்சம் அடைமொழிகளால் அழைத்தால், அந்தரங்கமாய் விளித்தால், ஆசையாய் உச்சரித்தால் மிடறு மிடறாக பருகி சுவைக்க சுவையும் கூடுமே என்றேன்.

சூடு ஆறி விடும் முன் நீ என்னை பருக வேண்டும். நீ கேட்டதை செய்கிறேன் என சொல்லத் துவங்கியது தேனீர்.

"காற்றின் ரசிகனே…!" அழகாக அழைத்தது.

வாசனையை ரசித்து ஒருமிடறுபருகினேன்.

"கடமையின் நிமிடனே…!"
கூடுதலாக கொஞ்சம் உறிஞ்சி இழுத்து இன்னொரு மிடறு பருகினேன்.

"காந்தத்தின் ஈர்ப்பணே!"
மெல்ல உறிஞ்சி உதடுகளில் கொஞ்சம் தடவி இன்னொரு மிடறு பருகினேன்.

"அலைகளின் துள்ளனே" …
சட்டென்று ஒரு மிடர் பருகி கோப்பையை பார்த்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் தீர்ந்தது திரவம்… மீண்டும் சந்திக்கலாம் என்று விடைபெற்றது தேநீர்!

இந்த தேநீர் கோப்பை தீர்ந்து விட்டது. அவளின் தேன் நீர் இதழ்கள் நினைவுக்கு வந்தது. வற்றாத கோப்பையாக அவளின் உதடுகள்….

பருக பருகத் தானே அங்கே தேன் நீரும், தெவிட்டாத நிகழ்வும்.

அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் "தேநீர் பருகலாமா!?"

#கனாகண்ணன்
##களவாடியகணவுகள்
#kanakannan
© kanakannan