...

5 views

விட்டு விடுங்கள்!
மொத்தமாக உடைத்துவிட்டு
சாவுசெய்தி கொணர்பவனை
நலம் விசாரிப்பது போல
எத்தனை நைச்சியமாக ஆரம்பிக்கிறார்கள் எப்படி இருக்கிறாய் என்று...

அடக்கி வைத்த வைராக்கியத்தோடு
நலத்துக்கென்ன கேடு வந்துவிட போகிறதென வழக்கமான எள்ளலாய் இப்போதெல்லாம்
கூறிட இயலுவதில்லை

எனக்காக நான் வாழ எத்தனித்த அந்த ஒரு நாளிலிருந்து சொல்லெறிந்து கொண்டேதான் இருக்கிறார்கள்
ஒரு நாள் என் தோற்றத்தில்
ஒரு நாள் என் பழக்கவழக்கங்களில்
ஒரு நாள் என் நடத்தையில்
ஒரு நாள் என் ஆசைகளில்
ஒரு நாள் என் கனவுகளில்
இப்படி எத்தனையோ ஒரு நாள்களில்
மௌனியாகவே கழிந்து போனது
நரை அறிமுகம் ஏற்பட்ட
இன்று வரை...

யாருமற்ற ஏதுமற்ற சூழலை
கடினமென அங்கலாய்க்கிறார்கள்
இருந்தும் ஏதுமற்றதாய் கடத்திக் கொண்டிருக்கும் இந்த வெறுமையின் கனம் அறியாதவர்கள்..

உடல் தளர்ந்து மனம் முறிந்து போன இத்தனைக்கும் பிறகும்
கல்லெறிந்து உரியவர்களென நினைப்பவர்கள் செய்யும் துரோகங்களையும் உடைந்த நம்பிக்கைகளையும் விழுங்கி
கடந்து விட வேண்டும் தைரியமாக....

அதன் தோற்றுவாயாக
இப்போது எனக்கு எங்கேனும் சென்று ஓவென வாய் விட்டு கதறியழ வேண்டும் !
© மதிஒளி