...

4 views

அம்முவின் அழகான உலகம்
காலை முதல் மாலைவரை வேலை
பார்த்து வீடு திரும்ப ஆயத்தமாகும் சூரியனும்,இரவுப்பணிக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் சந்திரனும்..

இருள் தன்னை தானே மெல்லமாய்
படரவிட்டபடி தன் வேலையை தொடங்க
அந்நேரம்தான் அம்முக்குட்டி பள்ளி
முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தாள்..

அந்த நொடிப்பொழுது வரை மட்டுமே
அந்த வீடு அமைதிப்பூங்கா.அவள்
வருகைக்கு பிறகெல்லாம் அவள்
குரல் எங்கெங்குமாய் பரவிடும்..

உயிரற்ற அந்த செங்கல் சுவராலான
அந்த வீடும்கூட அம்மு உள்ளே வரும்
அந்த பொழுதில் சற்று சிரிக்கும்..

அதெப்படி என்றுதானே கேட்கிறீர்கள், அவள் வந்தபின் மெல்ல தன்னை தாண்டி தென்றலை வீசவிடும் அம்முவிடம் கொஞ்சி விளையாட..

உள்ளே வரும்பொழுது அவள் கால்களால்
வீசி எறியும் அந்த காலணி கூட அழகாக தனக்கான இடத்தில் சென்று அமர்ந்து அம்முவிற்கான தன் காதலை காட்டும்..

காலை முதல் மாலைவரை செய்த
வேலைகளால் கலைத்த அம்முவின்
அம்மாவுக்கு,அவள் வந்து அம்மாவென
எழுப்பிய ஓசை களைப்பையெல்லாம் தலைத்தெரிக்க ஓடிவிட்டது..

அந்த நொடி தொடங்கி இரவுவரை
அம்மா தொடங்கி பாட்டி தாத்தா வரை இயங்க வைக்கும் ரிமோட் வந்தாகிவிட்டதால் அனைவரும் சுழல தயாராகிவிட்டனர்..

கைக்கால் முகம் கழுவிவிட அம்முவுடன்
குளியலறை சென்று தானும்
முக்கால்வாசி நனைந்து வெளியே வந்தாள் அம்முவின் அம்மா..

அடுத்ததாக பிஸ்கட்டுடன் ஓட்டபந்தயம்
ஓடிட முதன்மை வீராங்கனை
அம்முவுடன் சகபோட்டியாளர்களான தாத்தாவும் பாட்டியும்..

வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்
சாலையிலும் என அம்மு முன்னே
ஓடிட பின்னே அவர்கள் ஓடி அவளுக்கு
கொடுக்க முடிந்தது ஐந்து பிஸ்கெட்டும்
அதோடு அரை டம்ளர் பாலும்..

அடுத்ததாக கொஞ்சநேர விளையாட்டு,
அதற்கும் சகபோட்டியாளர்கள் பாட்டியும்
தாத்தாவுமே பெரும்பான்மை நேரத்தில்..

சில நேரங்ளில் அம்மு டீச்சர் அவதாரம் எடுத்திருப்பாள்..அந்நேரத்தில் அவளிடம்
சிக்கும் மாணவர்களின் நிலை சற்று
பரிதாபமானதே ஆகும்..

நீட் கோச்சிங் வகுப்பு ஆசிரியர் கூட
இத்தனை கண்டிப்புடன் இருப்பாரோ
என்னவோ..இவள் அவ்வளவு கண்டிப்பு..
அதிகநேர மாணவர் அவள் தாத்தாவே..

சில நேரங்களில் அம்மாவாக மாறுவாள்
எங்கள் அம்மு..அந்நேரத்தில் அருகில்
இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள்..

அவளுடைய பிஞ்சு கைகளால்
கொஞ்சல் வாங்கிட யாருக்குத்தான்
பிடிக்காது..அவ்வளவும் கபடமற்ற
அன்பல்லவா..மெய் மறக்க வைத்திடுவாள் அந்த மாயக்காரி..

அம்முவின் வருகைக்கு பிறகு உடற்பயிற்சிக்கு என்று தாத்தா பாட்டி நேரம் ஒதுக்கிட தேவைப்படவில்லை..
இவளுடன் ஓடியாடும் பயிற்சி போதுமானதாக இருந்தது..

அடுத்ததாக படிக்கும் படலம்..ABC யும் அஆஇ யும் அவள் வாயில் படாதபாடு
படும்..கூடவே அந்த 123 யும்..

படிப்பை திணித்தல் கூடாதென்ற
உறுதிகொண்டதால் அழுகையற்றே
பெரும்பாலும் காணப்படுவாள்
எங்கள் அம்மு அந்நேரத்தில்..

அதுமுடிந்து இரவு உணவு நேரம்
வரை அட்டவனை வைத்ததுபோல்
ஒவ்வொருவரிடமும் சென்று ஏதோவொரு
குட்டி கலாட்டா செய்தபடி இருப்பாள்..

யாராவது டிவி பார்த்தால் அப்பொழுதே
அவளுக்கும் தேவைப்படும்,சரியென்று
அவளிடம் கொடுத்து சென்றால் பின்னே
இவளும் சென்றிடுவாள் சேட்டைக்காரி..

அடுத்ததாக கைப்பேசி..பெரும்பாலும்
கொடுத்து பழக்கவில்லை.என்றேனும்
ஒருநாள் அதிகமாக அடம்பிடித்தால் கொடுப்போம்.அது எங்கள் தவறே..

எல்லாம் முடிந்து இரவு உணவுக்கு
மாலை நேர ஓட்டத்தின் பாதி
தேவைப்படும்,ஆனால் சகபோட்டியாளரில் ஒருவர் அதிகம்,அது அம்முவின் அப்பா..

இதற்கெல்லாம் இடையில் அம்முவின்
அப்பா வேலை முடிந்து வருவதை பற்றி
சொல்லியாகவே வேண்டும்..அது வேறு
யாரும் இல்லை.நானே..நானே..

தெரு முனையில் அப்பாவி(எ)ன் வண்டி
சத்தம் கேட்டுவிட்டால் போதும்,என்ன
செய்தாலும் அப்படியே விட்டபடி வாசல் நோக்கி பாய்ந்திடுவாள்..

எத்தனையோ வண்டி அந்நேரம் வரை
அங்குமிங்கும் சென்றாலும் அவள் அப்பா
வண்டி வருவதை அவள் தனித்து
உணர்வது விலகாத மர்மமே..

இறுதியாய் அவளது ஒரு நாள்
முடிவதற்காய் படுக்கையறை
வந்துசேரும்.அங்கு வந்து அவள்
கண்ணை உறக்கம் வந்து
சேரும்வரை நமக்கான உறக்கம்
நம்மை வந்து சேர்ந்திடாது..

கொஞ்சம் கதைகள்
கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் விளையாட்டு

இறுதியாய் அம்மு
உறங்கிடுவாள்..
அவளுக்கே அறியாமல்..

மெல்லமாய் அவள்
கைகளையும் கால்களையும்
அமர்த்தி விடும் அந்த அனுபவம்
எழுத்தில் என்னால் எழுதிட
நிச்சயமாய் முடியாது தோற்பேன்..

உணர்ந்து உணர்ந்து
உள்ளத்தால் மகிழ்ந்திடுவேன்..

உறங்கிடும் எனது அம்மு..
எவ்வளவு அழகு..
அழகென்ற வார்த்தையில்
பொருளும் அவள் தானே..

இவ்வளவு சேட்டை செய்பவளின்
முகமா என யோசிக்கவைக்கும்
அவளது உறங்கும் முகம்..

அப்படியும் லேசாக எட்டிப்பார்க்கும்
குறும்பு அவள் முகத்தில்..

அப்படியே அவளை ரசித்தபடி
உறங்கிய நேரம் அறியாது..

மீண்டும் மறுநாள் விடிந்து
அம்முவை அழைத்திடும்
அவளது பள்ளிக்கூடம்..

மீண்டும் மாலைவரை மாறிவிடும்
அந்த வீடு,ஒரு நூலகத்தை போன்ற அமைதியுடன்..

வருவாள்..
மிண்டும் மாலையில்..
அந்த சந்திரனை அழைத்தபடி..



© பினோய் பிரசாத்