...

9 views

முகநூல் காதல்
அவனும் அவளும் ஒரே வகுப்பென்றபோதும் அவளிடம் பேசிட அவ்வளவு தயக்கம்தான் அவனுக்கு.இல்லாமலா இருக்கும்,முதன்முதலாக காதலெனும் உணர்வை அவனுக்குள் உணரச் செய்தவளாயிற்றே..

ஒரு நாள் கூட விடுப்பெடுக்காத மாணவிகள் மட்டுமே இருக்கும் நடைமுறையில் சிறியதொரு மாற்றமாய் இந்த ஒரு மாணவனும் இணைந்து கொண்டான்.ஆம் இது ரிமோட் காரின் தத்துவமே.அவள் வருகைபதிவின் பயனாய் இவனுமங்கே..

பற்பல வித வெளிப்பாடாய் இவன் காதலை புரிய வைப்பதன் முயற்சியில் மற்றுமொறு முயற்சியாய் உதித்தது உடையின் நிறம்.அவள் இன்று அணியும் சுடிதாரின் நிறத்தில் மறுநாள் அவன் சட்டையை உடுத்திக்கொள்வது.

ஏதாவது நிறத்தில் சட்டையில்லாத நாட்களில் அவன் நண்பர்களில் எவனாவது ஒருவன் சிக்காமல் போய்விடுவதில்லை.இத்தனை போராடி செய்த வேலை சிறிதும் அவளால் கவனிக்கப்படாதது வேதனையே..

ஒரு நாள் ஒட்டுமொத்த தைரியத்தையும் வரவழைத்து அவளிடம் சென்று,"எழுத பேனா கெடக்குமா""என கேட்டு வாங்கி முதல் முறை பேசிய பெறுமையுடன் அன்று கல்லூரியை வலம்வந்து நண்பர்களுக்கு சிறிய ட்ரீட் வைத்ததெல்லாம் ஒரு பெருங்கதை..

இந்த பேனா வாங்கிய திட்டமும் பெரிதாய் கைக்கொடுத்ததாய் தெரியவில்லை. பலரும் இப்படி பேனாக்களை வாங்கியும் கொடுத்தும் கொண்டிருந்ததால்..

இப்படியே வறண்டு போய்கொண்டிருந்த அவன் வாழ்க்கை எனும் பாலைவனத்தில் பெருமழையாய் வந்தது முகநூல் எனும் அந்த பேஃஸ்புக்..அதுவே முகநூல் கொஞ்சம் கொஞ்சமாய் மாணவர்களிடம் பிரபலமாகி கொண்டிருந்த காலகட்டமும் கூட..

வழக்கம்போல திட்டம்போட்டு உறுப்பினர் ஆகிக்கொண்டு மற்றுமொரு உறுப்பினருக்காக காத்திருக்க தொடங்கினான்..மாதங்கள் கடந்ததேயன்றி உறுப்பினர் சேர்ந்தபாடில்லை..

சரியாக கணக்கிட்டு சொன்னால் இவன் சேர்ந்து பதினான்காவது மாதம் இவன் திட்டம் மீண்டும் உயிர்பெற்று அவளும் உறுப்பினர் ஆனாள்,ஒரு ரோஜா பூ பிடித்திருக்கும் குழந்தை புகைப்படத்துடன்..

அடுத்தகட்ட நடவடிக்கை வேறென்னவாக இருக்க முடியும்..அதேதான் நண்பர் கோரிக்கை..புரியும்படி கூறிட வேண்டுமெனில் பிரண்ட் ரெக்குவஸ்ட்..

அடுத்து இன்னும் பத்து நாட்கள் இடைவெளி முடிந்து ஏற்றுக்கொள்ளப்பட பேனா வாங்கிய அந்த நாள் போலவே ஒரு மினி ட்ரீட்டுடன் அழகாய் கடந்தது அந்த நாள்..

அன்றிரவே அவள் கணக்குக்குள் புகுந்து பதிவேற்றபட்ட பூக்களுக்கு பறவைக்குமென அனைத்து புகைப்படத்திற்கும் பாரபட்சமின்றி லைக்குகளை அள்ளியிட்டு அமர்களப்படுத்தி இனி பதிவேதும் இல்லையெனும் நிலையில் உறங்க சென்றான்..

அடுத்தடுத்த நாட்களில் அவன் புகைக்படத்தை தினமும் பதிவேற்றப்படுவது வாடிக்கையாக்கி கொண்டான்,என்றேனும் ஒரு நாள் லைக் பொத்தானில் அவள் விரல் படுமென்று..

எதிர்பார்த்த அந்நாளும் விரைவில் வந்திட அந்த ஒரே நாளில் மொத்த பதிவேற்றத்திற்கும் லைக்கிடப்பட்டது.இது போதுமே.அன்றைய மனநிலையில் அவன் சொத்து முழுவதையும் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பான் போல..

அன்றிரவே ஒரு குட்நைட்டும் அதற்கான மறுபடியும் வந்துவிட,வளரும் ஒரு அழகிய குழந்தை போல குட்மார்னிங்களும்,என்ன பன்னுறிங்க வகை கேள்வி பதில்களும் தொடங்கி பல துணை கேள்வி பதிலென வளர்ந்தது..

சில இரவுகள் முழுவதும் உறங்கா இரவாகி முகநூல் முதலாளி மார்க்கை விட இவர்களது உழைப்பே முகநூலின் முன்னேற்றத்திற்கு காரணமாகிடும் அளவுக்கு போய்கொண்டிருந்தது..

கைப்பேசி எண் பரிமாரிக்கொண்ட சில நாட்களுக்கு பிறகு..இறுதியில் வந்தேவிட்டது அந்த நாள்..ஏதோ வாட்ஸ்அப் செயலியாம்..

கொஞ்சம் கொஞ்சமாய் இவர்களை கட்டியிழுத்தது அந்த வாட்ஸ்அப்..கேட்பாறற்று இருக்கும் பழங்கால கோவில் சிற்பம் போலானது இவர்களது முகநூல் கணக்கும்..

பேசிக்கொள்ள ஆளில்லாமல் மெல்ல மெல்ல உயிரற்று மறைந்தே போனது அவனுக்கு ஒளியேற்றிய அந்த முகநூல்..

அதெல்லாம் சரிதான்..
இன்னும் காதலை சொன்னதாக தெரியவில்லையே..

சரிதான்..அதையெல்லாம் இனி வாட்ஸ்அப் வசம் விட்டுவிடுவோம்..

© பினோய் பிரசாத்