...

6 views

புது மலரோடு புது வாழ்வு
வானிலே உலாவும்
நிலாவை சிறிதாக்கி
நெற்றி பொட்டாக வைத்தவள்

மணம் வீசும்
தன் கூந்தலோடு
மலர் மாலையை சூடிக்கொண்டவள்

மாலையில் விளக்கேற்றும்
இளம்பிறையை போல்
ஒளிரும் நெற்றியழகு உடையவள்

நாணேற்றி
அம்பு விடும் வில்லினை போல்
தன் புருவத்தால் வசப்படுத்துபவள்

காந்தம் வைத்த
தன் கண்களின்
பார்வையால் மயங்கிட வைப்பவள்

அரும்ப காத்திருக்கும்
மலருக்குள் சிவந்திருக்கும்
இதழை போல் தன்னிதழ் உடையவள்

இனிமை கூட்டும்
தித்திக்கும் கரும்பினை போல்
தன் சொல்வளம் கொண்டவள்

கடல் அலைகளில்
கரைசேரும்
வெண்முத்துகள் போல் பல்லழகு கொண்டவள்

எழில் கொஞ்சும்
தன் மேனியெங்கும்
பொன்னகையால் அலங்கரித்தவள்

பேடை யன்னத்தின்
நடையழகை போல்
மெல்ல நடந்து அருகில் வந்தாள்

இருள் சூழ்ந்த
அகன்ற வானில்
ஒளியேற்றும் வெண்ணிலவு போல் நின்றாள்

வயதோ பதனெட்டு
பூத்து காத்திருக்கும் மொட்டு
பாவையின் மனதை தொட்டு
பரிசம் போட வந்தான் நல்லநாள் பார்த்து

கண்ணிலே காந்தம் வைத்தவள்
கண்டவுடன் தவிக்க விடுகிறாள்

தூண்டி அழைக்கும் வனப்புப் பெற்றவள்
எழில் கொஞ்சும் மேனியால் ஏக்கமூட்டுகிறாள்

வெட்கம் பேசிடும் விழிகளில்
மௌனம் பேசி
கனவுகள் அத்தனையும் ஏறிட்டு பார்க்கின்றாள்

வந்து இருப்பவன் தனக்கு
பொருத்தமா என்று
தன் இதயத்திடம் கேட்கின்றாள்

கனவில் வந்தவனா
மனசுக்கு பிடித்தவனா
இனிமையாய் பழகுவானா
தன் மனதோடு புலம்புகிறாள்

இன்பம் தரும் மன்னவனா
தனக்கு மாலையிடப் போகும்
மன்மதன் இவன் தானா
ஆசையாய் நினைக்கின்றாள்

ஏதேதோ
எண்ணி எண்ணி பார்க்கின்றாள்
குமரி தன் உள்ளத்தோடு பேசுகிறாள்

கட்டழகியை காண வந்த
வாலிபனை தன் தலைநிமிர்ந்து மெல்லப் பார்க்கின்றாள்

பட்டாடை உடுத்தி வந்த பச்சைக்கிளியவள்
தளிர்விட்டு வளரும் பூங்கொடியவள்

வானில் ஒளிரும்
மின்னலை போன்றவள்
காலைத் தென்றலோடு தலையாட்டும் தாமரையவள்

நாணல் தலைசாய்த்து
வசந்தத்தை வரவேற்பதை போல்
தானும் தலைசாய்த்து
தலைவனுக்கு வரவேற்பு தந்தாள்

இயல்பானது பெண்ணழகு
இவளோ பேரழகிக்கெல்லாம் அழகி
பேரழகிக்கு முன் மயங்கி நின்றான்

பெரும் தவம்
புரிந்தது போல் பூரித்தான்
புது மலரோடு
புது வாழ்விற்கு பரிசமும் போட்டான்

வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
- சங்கத்தமிழன்