...

22 views

கவிஞனை காதலிக்காதே

கல்லை கூட காதலித்துக்கொள்..
ஆனால் கவிஞனை காதலிக்காதே..

பொய்களுக்கான ஒரு உருவத்தை
தேடிடாதே,உன் முன்னே ஒரு
கவிஞன் நிற்கும்பொழுது..

அழகான கவி எழுதி உனக்கென்று
கூறி வெகுமதி பெறுவான்,அவன்
மட்டும் அறிவான் கவிதை நாயகியை..

ஒருத்தியை பிடித்தால் அவளைப்பற்றி
எழுதிடுவான் அவள் அனுமதியின்றி..
சற்று கண்டிக்கதக்கதே..

அவன் எழுதும் பல கவிதைகளில் சாத்தானும் அவனே..வெகுசில கவிதைகளின் தேவனும் அவனே..

அவன் ரசிக்கும் எதையும் நீ தெரிந்து கொள்ளாதே..இதையா ரசிக்கிறான் என்று நீ அவனை ரசிப்பதை நிறுத்திடுவாய்..

எல்லை துளியும் இல்லாதது அவன்
ரசனை..அதை நீ அறியாத வரை மட்டுமே
அவனை உன்னால் ரசிக்க முடியும்..

உன் தோழியின் பிறந்தநாளுக்காய் அவனிடம் கவி கேட்டால் எழுதி முடிக்கும் வரை உன் தோழியை காதலிப்பான்..

சாக்கடையைக்கூட அவன் பார்வையால்
அழகாக்கி அதற்கே கவி எழுதுகையில்
உனக்கு இல்லாமலா போய்விடும்..

உன் முகத்தின் அழகை பார்த்து கவிதை
எழுதுவதாய் ஏமாராதே,கற்பனையில்
கரைகடந்து எங்கோ சென்றிருப்பான்..

உன்னை பார்த்தபடி அவன் எழுதும்
எல்லாம் உனக்கானதல்ல..அவன்
பார்வை கண்ணில் மட்டுமல்ல..

அவன் எழுத்தி்ல் தேர்ந்தவன் எனும்
பட்சத்தில் ஒவ்வொரு கவிதையும்
பற்பல பெண்களுக்கு பொருந்திவிடும்..

உனக்கானதென நீ கொண்டாடும்
கவிதையை,தனக்கானதாய் பல
பெண்கள் கொண்டாடக்கூடும்..

கற்பனை கவிதையென்று அவன்
கூறும் கவிதை யாவிலும் ஒரு பெண்
ஒளிந்திருப்பாள்,அவளை அவன் மட்டுமே அறிவான்..

கலவி கொள்ள உன் உடலை கேட்டிட மாட்டான்,அதை தாண்டி சேர்ந்திடுவான் அதுவும் நீ அறியாமல்..

அவன் மனதை படிக்கும் வாய்ப்பு வருமெனில் நிராகரித்துவிடு.. இல்லையேல் அவனை நிராகரிக்க நேரிடும்..

ஒவ்வொரு கவிதையிலும் இருபொருள் இருக்கக்கூடும்,ஒன்று அனைவருக்கும் மற்றொன்று ஒருவருக்கும் புரியும்..

இரட்டை அர்த்த கவிதையோடு உன்னை சேர்கையில் கவனம் தேவை..இரண்டாம் அர்த்தமே அவனுக்கு பிரதானம் அங்கே..

எழுதுவதற்கு முடிவெடுத்தால் எதையும்
எழுதிடுவான்,எதுகை மோனை வரும்வரை
எல்லாம் காத்திருக்கமாட்டான்..

அடிக்கடி உனக்கு கவிதை கொடுக்கிறான் என்றால் தெளிவாக படித்துப்பார், அனைத்து கவிதையும் ஒரு பொருள் தரும்..

காதல் கவிதை உனக்கு தர முடிவெடுத்தால் காதலென்ற வார்த்தை இல்லாமலே எழுதுவான்,கவனமாய் இரு..

இத்தனையும் கூறிவிட்டேன்
கவிஞனை பற்றி..
இதற்குமேலும் அவனையே
காதலிப்பதே முடிவென்றால்..

கவிஞனையே காதலித்துக்கொள்..
அவனை ஆராய்ச்சி
செய்யாதவரை ஆனந்தமே..


© பினோய் பிரசாத்