...

7 views

ஓர் பெண்ணின் வலி
பெண்ணாய் பிறந்தேன்
பெரும் மகிழ்வு அடைந்தேன்
மழலை மாறா பருவம் வரையே ?

உதிரம் சிந்தி
மறுமுறை பிறந்தேன்
மணமகளெனும் மதிப்பை
அடைந்தேன்

அரும்பும் மலரானது
மனைவியெனும் உறவானது
பறித்த மலர்கள்
பயன்படும் இடம் அறியாது அல்லவா ?

கருவறை சாமிக்கா ?
கல்லறை பூமிக்கா ?
காலம் தான் தீர்மானிக்கும் !

கணவனெனும் காப்புரிமைக்கொண்டு
களவாடபட்டது என் கற்பு
அவன் உடல் பசிக்கு
நான் இரையானேன்

காதல் கனிந்தால்
ஊடல் நிகழும்
கலவியின் கருத்து அறியா
காமுகனிடம் காதல் இருக்குமா ?

வெளியில் சொல்ல
வெட்கம் தடுக்குது
வேதனை மட்டும்
நெஞ்சை அறுக்குது

உடலின் காயமானால்
உடனே மறிவிடும்
உள்ளத்தின் காயங்கள்
உயிருள்ளவரை மாறாதே !

படைக்கும் கடவுளே
குறித்து வைத்துக்கொள்
பாவக்கணக்கு மனிதனுக்கு
மட்டும் அல்ல உனக்கும் உண்டு.

ஆரூர் பூ. மோகன்

Related Stories