...

17 views

மரணம்
நால்வர் வந்து சுற்றி நின்று
திட்டமிடும் வேளையிலே
எழுந்து செல்ல வாய்புமில்லை
முயன்றபோது முடியவில்லை..

நாற்பதாண்டு இணைந்திருந்த
என்னவளோ என் அருகில்,அடங்காத
அழுகையோடு கிடக்கின்றாள் என்மீது..

இன்னும்கூட நன்கவளை புரிந்து
இருக்க வேண்டுமோ என்ற எண்ணம்
என் மனதில்,காலம் சென்று இப்போது..

செல்ல மகள் கண்களிலே கண்ணீரும்
வந்திடுமோ என்பதை போல் இருக்கிறது
என் மகளின் கண்ணீரும்..

எழுந்து சென்று துடைத்துவிட முடியாத
நிலையாக,வழியேதும் இல்லாமல்
காணுகின்றேன் வலியோடும்..

தூரமாக நிற்கின்றான்,என்னையொத்த
என் உருவம்..என்னை போல அழுகை
அடக்கும் வித்தை அதை செய்தபடி..

வித்தைகளின் ஆசான் நான்,எனக்கு
மட்டும் நன்கு கேட்கும்,உள்ளுக்குள்
கதறும் கதறல் அதை நானும் கேட்டபடி..

அழுதிடவும் வலிமையின்றி,எழுந்து
போக மனமுமின்றி,என் நண்பன்
அமர்ந்திருந்தான் அமைதியாய் ஓரமாய்..

கடந்த வாரம் கண்டபோதும் அமைதியான
அவனுமல்ல..கடந்த கால கதைகள்
கூறி சிரித்திருந்த நினைவுமாய்..

எதற்கான சண்டையென்றே மறந்து
வருடம் பல போக,உறவெல்லாம்
இன்று வந்து நிற்கிறது அழுதபடி..

சண்டைகள் எதற்கென்று யோசித்து
பதிலுமில்லை,பதிலற்ற சண்டைகளா
என எண்ணி நானும் சிரித்தபடி..

ஊர் முழுக்க கூடிநின்று என் அருமை
கூறிடவே,என்னை நானும் காண்பித்த
பிம்பத்தை யோசித்தேன்..

ஊர் அறியா இன்னொரு நான்,அந்த
என்னை பிடித்தவரும்,பிடிக்காத ஒரு
சிலரும் வந்ததையும் கவனித்தேன்..

ஏதேதோ வார்த்தைகள் என் உள்ளே
தவித்திடவே,இருந்த போது கூறிடவே
தோண்றியதும் இல்லையே..

இன்று நானும் எத்தனித்து பேசிவிட
தோண்றினாலும்,என் வாக்கை
கேட்டிடவும் செவியேதுமில்லையே..

இறுதியாக ஒரு வாரத்தை என்
மனதில் தோண்றுவது:
"மரணங்களுக்கு தெரிவதில்லை,நாம்
செய்த நன்மையும் தீமையும்"

போய்வரவா...

போய் வரவா...
© பினோய் பிரசாத்