...

3 views

அழகான ஆன்மா ஒன்று....
ஒரு விலை மதிப்பிட
முடியாத தொப்புள் கொடி
பாசமொன்று பறந்து
செல்கின்றது....
பரிதவிக்கும் நேசங்களின்
பார்வைகளின் எல்லையெல்லாம்
கடந்து படைத்தவனின்
அர்ஷ் நிழலை நோக்கி.....
எட்டுக் குடம் பாலூட்டியவள்
எட்டாத தேசத்துக்கு
ஏக்கத்தை மிச்சப் படுத்தி விட்டு
அமைதியகப் போகிறாள்.....
அம்மாவும் அமுதும்
அற்புதங்கள் என்று
அரவணைத்து சொன்னவள்
ஆழமான நினைவலைகளை
அர்ப்பணமாக்கிவிட்டு
பயணித்து விட்டாள்....
ஓ விலையுயர்ந்த தாயே!
உன் இறுதிப் பிரிவின்
கீறல்கள் நெஞ்சைக் கிழிக்க
வழிந்தோடும் குருதியில்
இருந்து பிரிந்து வரும்
உன் சேய்களின் கண்ணீரில்
உன் பால் வாசம் இன்னும்
மணக்குதம்மா.....
உங்கள் கை மணக்கும்
ஒரு பிடிச் சோற்றில்
நா நனைத்தவர்களில்
நானும் ஒருத்தி தானம்மா .....
எனக்குள்ளும் ஒரு காலம்
உங்கள் தாய்ப்பாசம்
தென்றல் போல்
தழுவிய கணங்கள்
இன்று தொண்டைக்
குழிக்குள் உருண்டையாய்
வந்து வந்து போகுதம்மா....
நாளைய பொழுதுகளில்
அலங்கரிக்கப்பட்ட
உயர் சுவனத்தின்
சோபாக்களில் சாய்ந்த வண்ணம்
உங்கள் நேசங்களுக்காக
நீங்கள் செய்யும்
பிரார்த்தனைகளில்
என்னையும் கொஞ்சம்
நினைவு படுத்திக்
கொள்ளுங்களம்மா!

~ சிரியஸ் ~




© siriuspoetry