...

5 views

கவிஞர்களின் மனைவிகளே🖤
எப்படித்தான் நடிக்கிறீர்கள் எல்லாமே இயல்பா இங்கே?
கடந்தகாலத்தைக் காணும்போதெல்லாம் கண்ணீர் வருமே,துடைத்தெறிந்துவிட்டு துவண்டவரை தூக்குவீரோ?
கவிதைகளெல்லாம் உங்களுக்கில்லை என தெரிந்து தான் ரசிக்கிறீர்களா,இல்லை கணவர் உறவெனக்கு கவிதையெல்லாம் வேறொருவருக்கு என்ற தியாகத்தெளிவை பெற்றுவிட்டீர்களா! கனவுகளில் காதல் சுமந்து நினைவொதுக்கி உங்களை தீண்டும் வேளையில் நிலைகுலைந்து போவீர்களே எப்படித்தான் இருக்கிறீர்களோ எனக்கேதும் புரியவில்லை! வர்ணனைகள் அத்தனையும் வாக்கப்பட்டவளுக்கில்லை எனின் வாய்விட்டு அழத்தோன்றுமே என்னதான் செய்வீர்கள் அதுபோன்ற சமயங்களில்?எல்லாமே நடிப்புதான் "இவர் மனதில் நானில்லை"என இடைவிடாமல் தோன்றுமே எந்தக்கேள்வியும் எழுப்ப மாட்டீர்களா!தூய்மையை துணைகொண்டு வாழ்ந்து என்னத்த கண்டுவிட்டேன் என ஒருமுறையேனும் சலித்துக்கொண்டதில்லையா!ஒருவரைத்தானே ஒயாமல் நினைக்கிறீர்கள் அதை பரஸ்பரம் பெறவேண்டும் என்ற பகுத்தறிவு இல்லையா?சந்தேகப்பிறவி எனும் பட்டத்திற்கு பயந்தா இத்தனையும் அடக்குகிறீர்கள்,எப்படித்தான் முடிகிறதோ! உண்மைத்தன்மையை உரசிப்பார்க்க வேண்டுமென ஒருமுறைகூட உறுத்தவில்லையா?ஒருதலைக்காதலென உங்களுக்கும் ஏதேதோ இருந்திருக்குமே அதையெல்லாம் நினைத்தா இவருடன் இழைகிறீர்கள்
சீச்சீ நிச்சயம் இருக்காது நீங்கள் எல்லாம் வெண்மைகள்,இதையெல்லாம் அவரிடம் எதிர்ப்பார்க்கத் தோன்றவில்லையா,என்னதான் வாழ்க்கை இது என வசைப்பாடுவதுமில்லையே நீங்கள்!
உங்கள் காதல் உயர்வைக்காட்ட உன்னதமான ஒரே வழி இதுதானென உறுதிபூண்டுவிட்டீர்களா??
எவருக்கானதையோ உங்களுக்கென தரும்போது ஓ வென்று ஓலமிடும் இயல்பை எப்போது இழந்தீர்கள்?மாறாக புன்னகை வேடத்தைதான் புதிதுபுதிதாக பூணுகிறீர்கள்!
இதெல்லாம் தான் ரசனையென தவறான புரிதலை தலையெழுத்தாய் கொண்டுவிட்டீர்களா? நினைவுகளை அவர்களும் அவர்களை நீங்களும் நெஞ்சில் நிறுத்தி வைப்பதில் அப்படியென்ன நெகிழ்ச்சி உங்களுக்கு! இதையெல்லாம் பழக எத்தனைகாலம் எடுத்தீர்களோ
இந்நிலையில் இருப்தெல்லாம் பாவப்பட்டவர்களின் இருக்கைதானோ?இல்லை இல்லை ஏதோவொரு இன்பத்தை இதிலும் கண்டிருக்கக்கூடும் நீங்கள்!,ஆனாலும் உண்மையற்று உங்களிடம் நெருங்கும் போது ஒருமுறையேனும் கேட்டிருக்கலாம் என்பதே என்னுடைய வாதம்.இத்தகைய பொறுமையெல்லாம் தான் புனிதம் என்ற புரிதல் உங்களுக்கு!என்னால் முடியாதென எப்படிச் சொல்ல முடியும் நானும் வெற்றுப் பெண்ணியம் பேசும் நடைமுறை பாசக்காரி தான் , காதல்காரி என்ற பட்டம் வேறு கேட்காமல் வந்து ஒட்டிக்கொண்டது!
இருந்தாலும் எனக்கும் சொல்லிக்கொடுங்கள் எப்படித்தான் வாழ்கிறீர்களோ" #கவிஞர்களின் மனைவிகளே#!!!"