...

3 views

சா(ஸ்)திரமும் சடங்குகளும்…
வேகாத வெற்றுச் சடங்கு
ஆகாத அத்தனையும் அரைக்கும் கிடங்கு
நோகாமல் நொங்குதிங்க
சாகாத வரம் தேடும் சம்பிரதாய சடங்குகள்…

எச்சமயமும் நிச்சயமாக அச்சமயமும்
இச்சமயமும் அச்சமின்றி
வாழவே அள்ளித்தந்த அறத்துறைகள்
ஆயிரமாயிரம் ஆயினும்,

அருளார்ந்த அத்தனையும் மூட்டைகட்டி
இருளார்ந்த இன்னல்களையே
இனிக்கும் சடங்காக மாற்றியமைத்த
மடையர்கள் யாமன்றோ?

பாரிலே பாராதோர் பசிபட்டினி
தேரிலோ தெய்வத்திற்குத் திருவிழா
கூரிலார் குன்றுமே குணத்தை,

குபேரனாயினும் வாரியிறைப்பார்
வறுமைக்கு நேரிலிருப்பார்
நிஜமான தெய்வ மங்கே...

பருவமெய்த பெண்ணுக்கு
பாவாடை கட்டி நீராடவைக்கச் சடங்கு
இயல்பான முதிர்ச்சிக்கு இல்லத்தில்
இரைபோட்டு இன்னலைத் தேடுவீரோ?

கடல் நுரையில் கரைக்கு வந்து
கறைபடிந்த ஆறறிவு இதிகாச பிறவிகளே!
பேரறிவால் பேரழிவை
தேடிக்கொள்ளும் துறவாத துறவிகளே!

மனிதன் பிறந்தாலும் சடங்கு,
இறந்தாலும் சடங்கு,
இன்னும் எத்தனையெத்தனையோ
விளங்காத சடங்குகள்…

சுட்டெரிக்கவேண்டிய
சுய அறிவில்லா சடங்குகளை
விட்டொழிக்கவே
வெளிச்சம் பிறக்கும் நாள்தான் என்றோ?

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #Tamil quotes

© aV ​✍🏾