...

9 views

என்னவனே...
மந்திரப் புன்னகை மன்னனே!- மலர்
மாலை தருவாய்‌ கண்ணனே!
எந்திர‌ உலகினில் என்னுயிர்
இருத்தலை உணர்த்திய கள்வனே!

மொட்டென இருந்ததென் உள்ளமே - அதை
முகிழ்ந்திட வைத்த என் தென்றலே!
சிட்டென என்மனம் பறந்திட - பூஞ்
சிறகினை அளித்த என் வள்ளலே!

கைதனைக் கோர்த்துஉடன் நடந்திட
கன்னியின் மனம்தினம் தேடுதே!
காற்றும் கூடச் சிலநேரம்
காதல் வாழ்த்துப் பாடுதே!
மெய்தனை விட்டுயிர் போனபின்
வேறுயிர் ஏற்றிடக் கூடுமா?
என்னுயிர் நீயென்று ஆனபின்
இளங்கொடி என்மனம் மாறுமா?

ஆசைகள் எனக்கும் அதிகமில்லை
ஆடை அணிகலன் தேவையில்லை
அன்பே உன்தோள் சாய்ந்துறங்கும்
அழகிய வரமது கிடைத்திடுமா?
மையல் கொண்ட மணிமகள் நான்
மார்பில் சாய்ந்திடும் நொடிகேட்டேன்
தையல் என்மனம் வேண்டுவதைத்
தந்திட‌ மனமது வரவில்லையா?

கொடியினை‌ விட்டுப் பிரிந்தமலர்
குலவிச் சிரித்தே மகிழ்ந்திடுமா?
உள்ளம் தன்னில் நிறைந்துவிட்டாய் -என்
உயிரே உனைமனம் மறந்திடுமா?
© த.கிருத்திகா