...

5 views

அப்பாவின் ஹீரோ சைக்கிள்
அப்பாவின் ஹீரோ சைக்கிள்:

வருடம் 70களை முடித்துக்கொண்டு
80களில் அடிவைத்திருந்த காலம்
அது.அந்த கிராமத்தில் செல்வ
செழிப்போடு வாழும் குடும்பங்களில்
எங்கள் குடும்பமும் ஒன்று..

செல்வசெழிப்பென்றால் அந்த நாட்களில்
கணக்குபிள்ளை வைத்து வீட்டுகணக்கு
பார்க்கும் வெகுசிலர் இருந்த எங்கள்
கிராமத்தில் நாங்களும் ஒருவர்..

என்னுடன் உடன் பிறந்தவர்கள்
இரண்டு அண்ணனும் ஒரு
தம்பியும் தான்..நான்கு ஆண் என்ற
கர்வம் இல்லாமலில்லை அப்பாவுக்கு..

மாட்டுவண்டிகளும் குதிரை வண்டியும்
அதிகமாய் தென்படும்..கூரையற்ற
வண்டி வறுமையையும் கூரை வைத்த
வண்டி செழிமையையும் குறித்தது

எங்களிடம் இருந்ததோ மூன்று
இரண்டாம் ரக வண்டி..நன்றாக
போய்கொண்டிருந்த வாழ்க்கையில்
ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்தது..

1980 டிசம்பர் 20ம் தேதி..

ரஜினிகாந்த் நடிப்பில் முரட்டுக்காளை
திரைப்படம் வெளியானது.எனது அப்பா
ரஜினியின் ரசிகனில்லை.ரஜினியெனும்
தெய்வத்தின் பக்தன்..

அன்றைய தினம் எங்கள் கிராமத்து
திரையரங்கில் வெளியாகவிருந்த
முரட்டுகாளை வெளியாகவில்லை..

அதற்கு பதிலாக முதல் மாதம் அதாவது
நவம்பர் மாதம் வந்திருந்த மூடுபனி
திரைப்படமே ஓடிக்கொண்டிருந்தது..

உச்சகட்ட கோபத்தில் இருந்த அப்பா
அன்றைய மாலை நேர காட்சிக்கே
எங்கள் நால்வரையும் அம்மாவையும்
அழைத்து டௌனுக்கு சென்றார்..

வெற்றிகரமாக படத்தை கூச்சலிட்டு
பார்த்து திரையரங்கை விட்டு
வெளியேறிய அந்த நொடி..

இருபதடி உயர சுவர் ஒன்றில்
வரையப்பட்டிருந்த அந்த ஹீரோ
சைக்கிளின் அழகான ஓவியம்..

அதுவரை திரைப்படத்திலெல்லாம்
கண்டிருந்த சைக்கிலை முதல் முறை
இப்படி பிரம்மாண்டமாய் கண்ட
அந்த நொடியில் தொடங்கியது
அப்பாவின் சைக்கிள் பித்து..

அன்று முதல் அடிக்கடி டௌனுக்கு
வந்து அந்த சுவரை வெறித்து
பார்ப்பது வாடிக்கையானது..

அப்படி ஒருமுறை பார்க்க சென்றபோது
அந்த சுவரில் சைக்கிள் மறைந்து
காஜா பீடி கட்டுகள் கம்பீரமாய் இருந்தது..

அன்று முதல் அடுத்த பத்து நாட்கள்
எதையோ பறிகொடுத்தது போல
இருந்தார் அப்பா..இதற்கு முன் அவர்
அப்பா இறந்த வேளையில் இழைந்தோடிய
சோகத்தை மீண்டும் காணமுடிந்தது..


பதினொன்றாம் நாள்
விலை சரியாக நினைவில்லை..
ஆனால் அந்தசைக்கில் வாங்க
தேவையானதைவிட
கொஞ்சம் அதிகமாகவே எடுத்துக்கொண்டு
கிளம்பிவிட்டார் அப்பா..

மாலை ஒரு 05:40 இருக்கும்.முகம்
முழுக்க புன்னகையுடன் சைக்கிளை
மிதித்துக்கொண்டு வீடு வந்தார்..

அந்த கம்பீர தோற்றம் இ்ன்றும்
மனதில் அப்படியே இருக்கிறது..

அன்று தொடங்கி அடுத்த ஒரு மாதம்
ஊரின் மொத்த பேசுபொருள்
அப்பாவும் அவர் சைக்கிளும்..

அடுத்த ஊருக்கே நடந்து செல்லும்
குணம் கொண்ட அப்பா அன்று
முதல் அடுத்த தெருவிற்கு போகக்கூட
சைக்கிள் எடுக்க தொடங்கினார்..

தினமும் காலையில் குறைந்தது
ஒருமணி நேரம் சைக்கிளை துடைக்க
ஒதுக்கினார்.தொட்டு துடைப்பது
அவர் மட்டும்தான்..நானும் எனது
உடன்பிறந்தவர்களும் எடுபிடிகளாய்..

யாராவது உதவியாய் சைக்கில்
கேட்டால் கூட அவர்களை அமரவைத்து
இவரே அழைத்து சென்றார்..

எங்களையும் பெரிதாய் ஓட்டிட
கூறியதில்லை..அவர் அறியாமல்
சிலமுறை ஓட்டி ஒருமுறை விழுந்தும்
சில ரகசிய பக்கங்கள் உண்டு..

அந்த சைக்கிளில் அம்மாவை
அமரவைத்து அழைத்துசெல்லும்
அந்த காட்சி...அப்பாவின் கம்பீரமும்
அம்மாவின் வெட்கமுமென அவ்வளவு
அழகாக இருக்கும்..

"பார்த்த முதல் நாளே" என்று இப்பொழுது
கமல் பாடியதை 80களிலேயே அப்பா
அம்மாவை சைக்கிளில் உட்கார
வைத்து பாடியிருந்தார்..

ஒருமுறை அம்மை போட்டு வீட்டில்
படு்த்திருந்தார் அப்பா.ஊரில்
ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வர
சைக்கில் கேட்கப்பட்டது..

மறுத்திட முடியாத சூழ்நிலையில்
முதன்முறை வேறொருவர் ஓட்டியபடி
சைக்கில் சென்றது.இது அந்த
சைக்கிளுக்கே ஆச்சர்யம்தான்..

அதற்கு அடுத்தபடியாக அந்த ஊரில்
ஓவ்வொரு முக்கியமான தேவைக்கும்
எடுத்து செல்லப்பட்டது..

என்ன இருந்தாலும் புதுமணப்பெண்
போற்றே வைத்திருந்தார்.ஒருநாள்
தவறாமல் துடைத்தபடி...

அந்த சைக்களில் அவர் கட்டியிருந்த
தோரணம்,டைனமோ வைத்த அந்த
லைட் என அமர்க்களபட்டிருந்தது..

இப்படித்தான் ஒரு முறை மாட்டுப்பொங்கல்
வந்தபொழுது மாட்டுடன் சேர்த்து அந்த
சைக்கிளுக்கும் பூஜை போட்டார்..

இப்படியே காலங்கள் உருண்டோட
90களை தொட்டது வருடம்..அப்பொழுது
ஒரு புல்லட் வாங்கப்பட்டது...
அதுமுடிந்து 2000வது வருடம் வீட்டில்
அம்பாசிட்டர் வாங்கப்பட்டது..

எத்தனை பிள்ளை பெற்றாலும் முதல்
பிள்ளைக்கு கொடுக்கப்படும்
முக்கியத்துவம் அதிகம்தான்..

அப்படிப்பட்டதுதான் அந்த
சைக்கிளுக்கும் எங்கள் வீட்டில்..

2022
அப்பாவுக்கும் சைக்கிளுக்கும்
வயதாகிவிட்டது,இருந்தாலும்
அந்த கம்பீரம் குறையவில்லை..

இந்த வரலாற்று கவிதை எழுத
தொடங்கும் முன் அப்பா வீட்டில்
சண்டை போட்டுக்கொண்டிருந்தார்..

70களை தாண்டிய அவர் ரஜினி நடிப்பில்
வெளியாகவுள்ள ஜெய்லர் திரைப்படத்தை
தன் சைக்கிளில் சென்று பார்க்க வேண்டுமாம்...

இத்துடன் முடித்துக்கொள்வோம்..

நான் சென்று என் அப்பாவை
சமாதானப்படுத்த முயற்சிக்கிறேன்..

அன்புடன்
பினோய் பிரசாத்




© பினோய் பிரசாத்