...

9 views

என்னவனின் அந்த ஒரு நாள்
முதல் நாள் வேலை முடிந்து வீடு
திரும்ப கொஞ்சம் தாமதம்தான்
ஆகியிருந்தது அவனுக்கு.அதனால்
அப்படியொரு கோபம் விரக்தியுடன்
உறங்க சென்றிருந்தான்..

குளிர் ஊட்டப்பட்ட அறையில் அமர்ந்து
பார்க்கும் வேலைதான் அவனுக்கு.
முழுவதுமாய் கணிணியிலே
இருந்தபடியான வேலை..

மாத இறுதி நாளில் எவ்வித
தாமதமும் இல்லாமல் வங்கி
கணக்கில் சம்பளம் வரும் வேலை..

என்றாவது ஒரு நாள் மட்டும்
வேலை முடிய தாமதமாகிடும்
அவ்வளவே.அதுவும்கூட அவன்
சோம்பேரித்தனத்தால் வந்திருக்கும்..

அப்படிப்பட்ட ஒரு நாளை கடந்தே
விரக்தியின் உச்சம் வரை சென்று
உறங்கி எழுந்திருக்கிறான் இன்று..

இன்றே அலுவலகம் சென்று
வேலையை ராஜினாமா
செய்வதென்று யோசித்தபடி
நடைப்பயிற்சி தொடங்கினான்..
அதிகாலை ஐந்து மணிக்கு..

சற்று தூரத்தில் எதிரில் ஒரு
இளைஞன் தன் சைக்கிளில்
நாளேடுகளுடன் சுறுசுறுப்பாய்
வேகமாய் சென்றிருந்தான்..

எப்படிப்பார்த்தாலும் இருபதை
தாண்டியிருக்கும் அவனுக்கு..
இந்த வேலையில் தினமும் நூறு
ரூபாய் தாண்ட வாய்புமில்லை..

இருந்தாலும் அவன் செல்லும்
வேகமும் அவன் கொண்டிருந்த
புத்துணர்சியும் இவனுக்குள்
பல கேள்விகளை கேட்டது...

இந்த கேள்விக்கே விடையின்றி
நடந்திட அடுத்ததாய் கண்டது
கேனில் தேநீர் வைத்தபடி
விற்றுக்கொண்டிருந்த அந்த
நாற்பது தாண்டிய நபரை..

அவன் முகத்திலும் அப்படியொரு
உற்சாகம்.குளித்து முடித்து
முகத்தில் திருநீறும் கூட..

ஒவ்வொரு குவளை
தேநீரை வாடிக்கையாளருக்கு
கொடுக்கும்பொழுது கூடவே
இலவசமாக புன்னகையையும்
சேர்த்தே கொடுத்திருந்தார்..

அவரை கவனித்தபடி சென்றிட
இவனுடைய நடையிலும்
உற்சாகம் கூடி வேகமாக
நடக்கத்தொடங்கினான்..

அடுத்ததாக அவன் பார்த்த
காட்சி இவன் மீது கேள்வி
அம்பை மேலும் கூர்மையாக்கி
வீசியிருந்தது..

ஆம் அந்த நடைமெடையில்
கடை விரித்து காய்கறிகளை
விற்றிருந்தனர் அந்த வயதான
மூதாட்டியும் அவள் கணவனும்..

அந்த கணவனை முதுமை
முழுவதுமாய் ஆட்கொண்டிருக்க
அந்த மூதாட்டியே பம்பரமாய்
சுழன்று வியாபாரம் செய்தாள்..

அந்த கிழவனால் ஒன்றும் செய்திட
முடியாத வேளையிலும் அங்கு
வந்து அமர்நதிருக்க இருந்த
அந்த ஒற்றை காரணம் யாதெனில்
" நானிருப்பேன் எங்கும் எப்பொழுதும்
உன்னுடனேயே..."

ஆனால் இவனோ எப்பொழுதெல்லாம்
அலுவலகத்தில் வேலைப்பளு கூடுகிறதோ
அப்பொழுதெல்லாம் அந்த வெறுப்பை
காட்டுவதே வீட்டில்தான்..

இப்படியே அவன் செல்லும் வழி
நெடுகிலும் கண்ட ஒவ்வொருவரும்
இவனுக்குள் ஒவ்வொரு கேள்விகளை
கேட்காமல் கேட்டு கடந்தனர்..

பேருந்து / ஆட்டோ ஓட்டுனர்,
இளநீர் வியாபாரி,தள்ளுவண்டி
கடை போடுபவர்,கூழ் விற்பவர்
என்றந்த கேள்வி கேட்பவரின்
எண்ணிக்கை நீண்டது..

இறுதியாய் நடைபயிற்சி முடிந்து
வீடு வந்து சேர்ந்தான் ஒரு வித
மனஅமைதியோடு.கூடவே அவனுக்கு
எழுந்த கேள்களுக்கும் விடையை
அறிந்தவன் போல..

தான் இருக்கும் நிலையின் அருமை
புரிந்திட இத்தனை பேரின் நிலையை
கண்டுணர்ந்த அந்த நாள் அவன்
வாழ்க்கையையே மாற்றிவிட்டது..

என்றெப்போதும் இல்லாத
உற்சாகத்துடன் கூடவே முகம்
முழுக்க புன்னகையுடன் அன்று
அலுவலகம் கிளம்பினான்..

வீட்டில் உள்ள அனைவரும் இவனை
பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.முன்பு
எப்போதும் இப்படியெல்லாம்
இவன் இருந்ததில்லை அல்லவா..

முதல்நாள் இரவு அலுவலகத்தில்
தான் கடிந்துகொண்டவர்களிடம்
மன்னிப்பு கேட்கும் முடிவுடன் தன்
காரை இயக்கினான்..

போகிற வழியில் அந்த கிளவனும்
கிழவியும் அதேயிடத்தில் இருந்து
காய்கறி விற்றிருந்தனர்..

தேவையில்லை என்றபோதும்
இறங்கி சென்று கொஞ்சம்
காய்கறி வாங்கி ஒரு ஐநூறு
ரூபாய் தாளை நீட்டினான்.
சில்லறை இருக்காது என்பதை
நன்கு அறிந்தும்..

சில்லறையை பிறகு வாங்குவதாய்
கூறி அவன் காரை இயக்கினான்..

தனக்கான குழப்பங்களை தீர்த்த
குருவுக்கு கொடுத்த தட்சனையாய்
சில்லறை பாக்கியை விட்டுச்சென்றான்..

© பினோய் பிரசாத்