...

2 views

காற்றுக்கென்ன வேலி
வி.எம்.எம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி..... திருச்சி நகரத்தில் முக்கியமான பகுதியில் நடைபெற்று வரும் பிரசித்திப் பெற்ற பள்ளி..... அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் பெருகி விட்ட தனியார் பள்ளிகளுக்கு மத்தியில்..... நடுத்தர வர்கத்தை சேர்ந்த மாணவிகளின் அறிவுத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது இப்பள்ளி.... சாயங்கால நேரம் கடைசி பாடவேளையில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.... மாணவிகளின் முகத்தில் ஒரு உற்சாகம் மின்னிக் கொண்டிருந்தது... கடைசி பாடவேளையல்லவா.... வீட்டிற்கு செல்லும் நேரம் என்றால்..... வேலை செய்பவர்களிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் வரை அனைவரையும் பாகுபாடின்றி உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.... இன்றும் மாணவிகள் உற்சாகமாக பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தனர்....

மிதுளா, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியை. பெரும்பாலான மாணவிகளால் தாயாக மதிக்கப்படும் இளம் ஆசிரியை. இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பள்ளியிலேயே தைரியத்துக்கு பெயர் போன ஜான்ஸி ராணி இவர் தான். அங்கு படிக்கும் மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருந்து வருபவர். கடைசி பாடவேளையில் அவருக்கு வகுப்புகள் இல்லாததால். ஆசிரியைகளுக்கான ஓய்வு அறையில் இருந்தார் மிதுளா. பள்ளி நிறைவடையும் முன் கழிவறைக்கு சென்று வந்து விடலாம் என்று எண்ணியவர் கழிவறையை நோக்கி சென்றார். கழிவறையினுள் நுழைந்த மிதுளா, சிறிது நேரத்தில் வெளியே வந்தார்  .தனது கை கடிகாரத்தில் நேரம் பார்த்தவர், பள்ளி நிறைவடைய இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதை அறிந்தவராய் மெதுவாகவே தனது அறையை நடக்க துவங்கினார். பெரிய பள்ளி என்பதால் அங்கு நிறைய கழிவறைகள் கட்டப்பட்டிருந்தன. மிதுளா அந்த இடத்தை விட்டு வெளியேறும் நேரம் யாரோ ஒருவரின் தேம்பல் சத்தம் கேட்கவே, மெதுவாக தனது நடையை நிறுத்தினார். அவரது செவிகள் கூர்மையாய் சத்தம் வந்த திசையை ஆராய்த்தொடங்கியது. சத்தம் வந்த திசையை கண்டறிந்தவர், சத்தம் வராமல் மெதுவாக தனது காலடிகளை எடுத்து வைத்து அந்த சத்தம் வந்த இடத்தை நோக்கி நகர்ந்தார். அவருக்கு தெரிந்தது அது நிச்சயம் ஒரு மாணவியின் சத்தம் தான். அவரது மனதினுள் பல கேள்விகள் எழுந்தது. ஏன் அந்த பெண் அழ வேண்டும் ? உடல் உபாதைகள் காரணமாக அழுகிறாளா? என்று பல கேள்விகள் அவரது மனதினுள் எழ, அதை எல்லாம் புறம் தள்ளி அந்த மாணவி இருந்த அறையை நோக்கி நடந்தவருக்கு, அந்த சிறுபெண் அழுகையுனூடே பேசுவது எல்லாம் தெளிவாக செவியில் விழுந்தது.

ஏன் இப்படி பண்ணுற, என்னால நீ சொல்லுற மாதிரில்லாம் செய்ய முடியாது.

.....

எனக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு. என்ன விட்டுடு ப்ளீஸ். உன்ன கெஞ்சி கேட்குறேன்.

....

வேணாம் வேணாம், அப்படி மட்டும் பண்ணிடாத என் லைஃபே போய்ட்டும்.

....

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை. ஆனால் அந்த பக்கம் கூறப்பட்ட வார்த்தைகளால், அந்த மாணவியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. விம்மி விம்மி அழுதவள் சத்தம் வெளியே கேட்க கூடாதென எண்ணி தன் கையால் வாயை அழுத்தி மூடிக் கொண்டாள். சில நிமிடங்கள் அழுகையில் கரைந்தவள், பள்ளியில் இறுதி மணி அடிக்கவே, வேகமாக முகத்தை கழுவி விட்டு கதவை திறந்து வெளியே வந்தாள்... வெளியே வந்த மாணவியின்  முன் கையை கட்டியாவாறு நின்று கொண்டிருந்தார் கணித ஆசிரியை மிதுளா. அவரை அங்கு எதிர்பார்க்காத அந்த மாணவி திடுக்கிட்டு அதிர்ச்சியில் உறைந்தாள். மிதுளா சாந்தி நிறைந்த முகத்தோடு  கணிவான குரலில்,

நம்ம இரண்டு பேரும் வேறு எங்கேயாவது போய் பேசலாமா?  என்று கேட்க, அந்த மாணவியும் பொங்கி வந்த கண்ணீரை அடக்கி கொண்டு, சரி என்பது போல் தலையை அசைத்தாள்.

பள்ளிக்கு அருகே இருந்த பூங்காவில் ஒரு கல் இருக்கையில் மிதுளாவும் அவர் அருகில் அந்த மாணவியும் அமர்ந்திருக்க, மெதுவாக மிதுளா அவளிடம் பேசத் தொடங்கினார்.

உன் பேரு என்ன? என்ற மிதுளாவின் முகத்தில் கோபமோ வெறுப்போ இல்லை. கணிவு மட்டும் தான் இருந்தது. மிதுளாவை ஏறிட்டுப் பார்த்த அந்த மாணவி, அவரது முகத்தில் இருந்த கணிவால் கொஞ்சம் பலமடைந்தவளாய்,

ஆதிரா மிஸ்,  10 அ பிரிவு . என்று பதிலளித்தவளின் முகத்தை பார்த்து நன்றாக திரும்பி அமர்ந்த மிதுளா,

இங்க பாரு ஆதிரா, நீ ஏதோ ஒரு பிரச்சனைல இருக்கன்னு எனக்கு தெரியும். அந்த பிரச்சனையால உன்னோட படிப்பும் நிம்மதியும் பாதிக்கப்படுதுன்னும் எனக்கு தெரியும். நீ என்னோட வகுப்புல படிக்கா விட்டாலும், நான் வேலை செய்யுற பள்ளியில படிக்குற எல்லா பிள்ளைகளும் என்னோட பிள்ளைங்க தான். இது உன்னோட பிரச்சனை. இதுல நான் உனக்கு உதவி செய்யனும்ன்னு ஆசைப்படுறேன். ஆனால் நீ அனுமதி தராமல், எனக்கு ஒத்துளைக்காமல் என்னால் உனக்கு உதவி செய்ய முடியாது. என்று நிறுத்தியவள் ஆதிராவின் முகத்தைப் பார்க்க, அவள் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. மிதுளா ஆதரவாக அவளது கையை பிடித்துக் கொள்ள, ஆதிரா கமறிய குரலில்,

நீங்க என்னை நம்புவீங்களா மிஸ்?

கண்டிப்பா. நீ என்னிடம் உண்மையை மட்டும் தான் சொல்லுவன்னு நம்புறேன் ஆதிரா. என்றதுமே ஆதிரா விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அவளை ஆதரவாக தன் தோளோடு அணைத்துக் கொண்ட மிதுளா, அவள் அழுது தீர்க்கும் வரை பொறுமையாக இருந்தாள். ஆதிராவின் அழுகை மட்டுப்படவே, அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார் மிதுளா.

நான் சொல்லுறேன் மிஸ். என்னோட க்ளாஸ் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் பேஸ்புக் யூஸ் பண்ணுறாங்க .....எனக்கும் அதை யூஸ் பண்ணனும்னு ரொம்ப ஆசை ....அதை யூஸ் பண்ணினா ,அவங்கதான் பெரியவங்க, பணக்காரங்க என்று என் பிரெண்ட்ஸ் சொன்னாங்க .....அதனால எனக்கும் அதை யூஸ் பண்ணனும்னு ஆர்வம் வந்தது. நானும் அதுல ஒரு கணக்கு திறந்து அதை பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ரொம்ப நல்லா இருந்தது. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. அதுல அறிமுகமானவன் தான் விக்ரம்.... ஆரம்பத்துல ரொம்ப நல்லா தான் பேசினான். எனக்கு நல்ல நண்பனாக இருந்தான்.  என் அம்மா கிட்ட சொல்லாத பல விஷயங்களை கூட அவனுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  சில மாதம் கழித்து என்னோட போட்டோ கேட்டார். நானும் நல்லவனா தானே இருக்கிறான் என்று எண்ணி போட்டோ எல்லாம் அனுப்பினேன். மாதங்கள் கடந்தது, இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக மட்டும்தான் இருந்தோம். திடீரென அவன் தப்பு தப்பா பேச ஆரம்பிச்சான். அதுக்கு மேல அவர் கிட்ட பேச எனக்கு பிடிக்கல நான் அவனை விட்டு விலக முடிவு எடுத்தேன். அப்போதுதான், அவன் அவன், என்று தேம்பி தேம்பி அழுதவளின் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தார் மிதுளா.

அவன் என்னோட ஃபோட்டோவ தப்பு தப்பா மார்ஃப் பண்ணி, அத எனக்கு அனுப்பினான். அவன் சொல்ற மாதிரி செய்யாட்டா, அத நெட்ல ரிலீஸ் பண்னீடுவேன்னு சொல்லி, என்ன அவன மீட் பண்ண வர சொன்னான். நானும் வேறு வழி தெரியாமல் போனேன். ஆனா... ஆனா அங்க இருந்தது என்கிட்ட ஸ்கூல் ஸ்டுடெண்ட் மாதிரி பேசின விக்ரம் இல்ல. அவனுக்கு 30 வயசுக்கு மேல இருக்கும். தினம் தினம் ரொம்ப டார்சர் பண்ணுறான் மிஸ். நான் அவன் சொல்லுற மாதிரி செய்யாட்டி அவன் என்னோட ஃபோட்டோஸ் எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணிருவான். அப்றம் என் அப்பா அம்மாக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். அவங்க என்ன வெறுத்துடுவாங்க. அப்றம் நான் எங்க போவேன். சாகுறத தவிர வழி இல்லயோன்னு தோனுது மிஸ். என்றவள் குமுறி குமுறி அழுதாள்.

அம்மா அப்பா என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தாங்க. எல்லாத்தையும் நான் வீணாக்கிட்டேன். என்று அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார் மிருதுளா .அந்த பார்வையில் இருந்த மென்மையும் கனிவும் ஆதிராவை அமைதியடைய செய்தது....

இங்க பாருமா ஆதிரா....  எல்லாருமே கெட்டவர்களா இருப்பதால் தவறு செய்வது இல்லை. சிலர் சூழ்நிலையாலும், சிலர் கவன குறைவினாலும் கூட தவறு செய்கிறார்கள். அந்த விக்ரம் செய்தது கெட்ட எண்ணத்தால் விளைந்த தவறு. ஆனா நீ செய்தது கவனக்குறைவினால் செய்த தவறு. இப்படிப்பட்ட கவனக்குறைவுகளை தவிர்க்க தான் பெற்றோருடைய துணை நமக்கு தேவைப்பகுகிறது. இந்த தவறு நடந்ததற்கான காரணம் உன்னோட பெற்றோர்களோடு நீ கலந்தாலோசிக்காதது தான். ஒருவேளை நீ உன் பெற்றோர்களிடம் கேட்டிருக்கலாம், இந்த பிரண்ட்ஷிப் அவசியம்தானா என்று. அவர்கள் கண்டிப்பாக ஒரு நல்ல ஆலோசனை தந்திருப்பார்கள் . உனக்கு சரி எது தவறு எதுவென்று ஆராய்ந்து பார்த்து, சரியான முடிவெடுக்குற பக்குவம் வருகிற வரைக்கும் நீ உன்னோட பெற்றோர்களை சார்ந்து முடிவெடுக்குறது தான் சரி. அதை விடு. நீ செய்தது கவனக்குறைவினால் வந்த தவறு. அதை சரி பண்ணிடலாம் நீ கவலப்படாத . தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த தவறு உணர்ந்து திருந்துவது தான் நல்ல  மனிதனோட இயல்பு. என்ற மிதுளாவைப் பார்த்த ஆதிராவின் கண்களில் ஒரு தெளிவு பிறந்தது ஆனால் இன்னும் அவளது பயம் நீங்கவில்லை.

மிஸ், விக்ரம் என்னோட ஃபோட்டோஸ வச்சி மிரட்டுறானே. அவன் அப்படி எதாவது செய்து விடுவானா? என்று பயந்து கொண்டே கேட்க

இங்க பாரு ஆதிரா,  இணையம் வாயிலாக செய்யப்படும் குற்றங்கள் அனைத்துமே சைபர் கிரைம். இந்த மாதிரியான குற்றங்களை விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவங்கள பாதுகாக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும், புகார்களை தெரிவிக்கவும் CID துறை நம்ம  இந்தியாவில் பிரதானமான மாநிலங்களில் சைபர் கிரைம் பிரிவை (cyber crime cell ) செயல்படுத்துறாங்க . தகவல் தொழில்நுட்ப உரிமை சட்டப்படி நம் மாநிலத்தில் உள்ள பிரிவில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை . இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் சைபர் கிரைம் பிரிவிலும் புகார் கொடுக்கலாம். அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் 18 வயதிற்கு கீழ் இருந்தால் அவர்களின் பெயர் முகவரி, படம் ஆகியவை வெளியிடக்கூடாது என சட்டப்பாதுகாப்பு இருக்குது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூட சட்டப்பாதுகாப்புகள் இருக்குது. பெயர்கள், படங்கள் வெளியிட அப்பெண்கள் விரும்பாத பட்சத்தில் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. எனவே நீ கவலை பட தேவை இல்ல.... என்றதும் ஆதிராவின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது, அதைப் பார்த்த மிதுளாவுக்கும் ஒரு மனநிறைவு வந்தது. இனி அவள் எந்த தவறான முடிவுக்கும் செல்ல மாட்டாள் என அவள் மீது நம்பிக்கை வந்தது.

தேங்க் யூ மிஸ். நீங்க மட்டும் இல்லாட்டா நான் கண்டிப்பா தற்கொலைதான் செய்து இருப்பேன். என்றவளை லேசாக முறைத்த மிதுளா,

தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவாகாது. எந்த ஒரு வேதனையால நீ தற்கொலை செய்ய துணிந்தாயோ அதை விட வேதனையை நீ உன் பெற்றோருக்கு கொடுத்துட்டு போய்விடுவாய். காலமெல்லாம் அவர்கள் உன்ன நினைச்சி கவலைப் படுவாங்க. உன்னோட இலட்சியமும் கனவும் அழிந்து போய்விடும். இந்த உலகத்தில் ஓடுறவன் இருக்கும் வரை தான், விரட்டுபவனும் இருப்பான். தங்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்க்க தைரியம் இல்லாமல் முடங்கிகிடப்பவர்கள் இருக்கும் வரை, இந்த மாதிரியான குற்றங்கள் தொடர தான் செய்யும்..... உன்னை மாதிரி ஒவ்வொருவரும் எழுந்தால், இன்றைக்கும் சைபர் குற்றங்களால் பதிக்கப்படுகிற அப்பாவிகளுடைய தற்கொலையை முற்றிலுமாக தடுக்கலாம்.... அதற்கான ஆரம்ப புள்ளி நீயாக இருக்கலாமே ஆதிரா....   என்றவர் தன் கையை அவள் முன் நீட்டி,

எனக்கு சத்தியம் பண்ணி கொடு ஆதிரா. இதைப் போன்ற முட்டாள்தனமான முடிவை எப்போதும் எடுக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணி கொடு. என்றவரின் கையில் தன் கையை வைத்த ஆதிரா, மலர்ந்த முகத்துடன்

நான் உங்களுக்கு சத்தியம் பண்ணி கொடுக்குறேன் மிஸ். எந்த ஒரு தோல்வியும் குழப்பமும் என்னோட இலட்சிய பாதைக்கு தடை போட விடமாட்டேன். தற்கொலை என்கிற வார்த்தைய நான் நினைத்து கூட பார்க்க மாட்டேன். என்றவள் மிதுளாவை பார்த்து தன்நம்பிக்கையுடன் புன்னகைக்க, இருவரும் காற்றை கிழித்து மிதுளாவின் ஸ்கூட்டியில் பறந்தனர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க.

வீசுவது தென்றாலோ புயலோ,
எதுவாக இருப்பினும்
காற்றுக்கென்ன வேலி.


அன்புடன்,

எபின் ரைடர்
© All Rights Reserved