...

31 views

ஜிகுஜிக்காஞ் ஜிகுஜிக்கஞ்...ஜிக்ககாஞ்...ஜிக்கு...
(குறிப்பு: இந்த கதையை எழுதி மணிவேல் என்னிடம் கொடுத்து என் பெயரில் போட்டு கொள்ள அனுமதித்தான். இனி கதை.)

🎵 🎵 🎵 🎵 🎵

பள்ளிப்பிராயத்தில் இந்த ஜிக்கு பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது.

இவை 1980களில்...

எனக்கு அப்போது இளையராஜா பாடல்கள் கூட புரியாத ஒற்றைப்படை வயது. ஆனால் இந்த சந்த வரிகள் மட்டும் மனதில் சுகமாய் நின்று பரவியது.

இந்த வரிகள் முடிந்து ஒரு அழகான தெம்மாங்கு பாடல் கிளம்பி வரும். இன்று யோசித்தால் அது என்ன பாடல் என மனதில் தோன்றவில்லை. அன்றொடு அது எனக்கு மறந்தும் போனது.

காரணம் உண்டு.

எண்பதுகளில் இந்த ஸ்வரத்துக்கு அப்பால் (?) வேறு புனை பாடல்கள் அசை மாறாது வந்தன. அந்த வரிகளை அப்படியே இங்கு நான் எழுத முடியாது.

அப்போது ராதா அம்பிகா ஸ்ரீப்ரியா ஸ்ரீதேவி அனைவரும் பூப்போட்ட லுங்கி கட்டி சார்மினார் ஊதிக்கொண்டிருந்த இளவட்டங்களை தங்கள் கட்டுக்குள் வைத்து மயக்கி இருந்தனர்.

இந்த நடிக நடிகையர் பெயரை வரிகளில் சொருகி கண் சொக்கினர். மேலும் அன்றைய அரசியல்வாதிகளுக்கும் தலா ரெண்டு பாட்டுக்கள் வீதம் இந்த ஜிக்கு ஜிம்கானாக்கள் ஊரில் உலா வந்தன.

வீட்டில் நானும் வாய் விட்டு இந்த ஸ்வரம் போட்டு அதன் பின்னால் வரும் வரிகளை மனதுக்குள் பாடி பரவசம் கொள்வேன்.

அப்போது நான் ஆம்பிளை அல்ல.

எண்பது கடைசிகளில் வசனமே புரியாத படத்துக்கு நண்பர்களோடு போகும் போதுதான் இந்த பாடலின் வரிகள் அரசல் புரசலாக புரிய ஆரம்பித்தது.

ஒரு இங்கிலிஷ் படம் பார்த்து விட்டு வந்தபோது ஒரு பெரிய மௌனம் எங்களிடம் கொதித்து கிடந்தது.

மணிவேல்தான் சொன்னான்...
"வெள்ளைக்காரிக்கு சோப் ரொம்ப செலவாகும் போல் இருக்குடா"...

அப்போதுதான் நான் வாய் விட்டு விஸிலோடு பாட ஆரம்பித்தேன். இட்டுக்கட்டிய அந்த பாடலின் ஸ்வரம் ஜிகுஜிக்கான்ஞ் ஜிகுஜிக்கான்ஞ்.... இப்படித்தான் கவிதை எழுத ஆரம்பித்து இருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஒருநாள் அந்த தியேட்டர் ஆப்ரேட்டர் "என்னிடம் தம்பி வோணும்னா ஒரு சீசன் டிக்கெட் எடுத்து வச்சிக்க" என்று பரிவாய் நக்கலாய் சொன்ன போதும் சிரித்து கொண்டுதான் நின்றேன். அவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம்.

அந்த காலத்தில் இரவில் புருஷன்கள் காதலிக்கும் போது மனைவியிடம் இந்த பாடல்கள் பாடுவார்கள் என்று தங்கம் ஒருநாள் என்னிடம் சொன்னாள்.

சகலகலா வல்லவன் படத்தை நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தவர்கள். எங்களை குழந்தைகள் என்று ரெண்டு குடும்பமும் நம்பியது. நாங்கள் அப்படித்தான் இருந்தோம். இருந்தாலும் எங்களுக்குள் என்னமோ இருந்தது.

அப்பறம் என்ன ஆவும்? என்று நான் அவளிடம் கேட்ட நினைவு நன்றாக இருக்கிறது. தங்கம் அதன் பின் பேசவில்லை. பெரியவள் ஆகி விட்டாளாம்.

அவள் ஜாதி வழக்கப்படி சடங்கு சுத்த என்னை கூப்பிட்டு கையில் ரெண்டு எள்ளு உருண்டை கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

இப்போது இரண்டு கல்யாணம் முடித்துவிட்டு திருப்பூர் பக்கம் டீக்கடை போட்டு இருக்கிறாள் என்று கேள்வி.

இந்த ஆய்வுகளில் அதென்ன வெட்கம் மானம் என்றெல்லாம் சொல்வார்களே அது எனக்கு கிடையாது. அப்படியே சூடு, சுரணையும் சேர்த்துதான் சொல்கிறேன்.


தொண்ணூறுகளில் வேலைக்கு போகும்போது எனது நட்பு வட்டாரம் படை போல் இருந்தது.

அந்த கூட்டத்தில் உற்சாகம் மிகும்போது பாடல் ஒன்றை நான் இந்த மெட்டில் இட்டு கட்டுவேன். கூட்டம் மெய் சிலிர்க்கும்.

அவரவர் விட்டுப்போன காதலியின் நினைவில் இந்த இசை வசையாய் மாறி பீரில் நுரைத்து விஸ்கியில் கொந்தளித்து உளறலில் பிணைந்து கண்ணீராய் கொட்டினால்...

மறுநாள் பொழுது விடிந்திருக்கும்.

ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்ததே தவிர எங்கள் வாழ்க்கை ஒருபோதும் விடியவில்லை.

தொழில் சரிந்தால் அரசியல் சரி இல்லை.
அரசியல் சரிந்தால் ஊழல் பெருகிற்று.
விலை ஏறியது போல் வேலை கிடைக்கவில்லை. ஒன்றுக்கு ஒன்று காரணம் சரியாய் இருந்தது. ஜாதி கலவரம் உள்ளூரில் ஒரு பொழுது போக்காகவே மாறியது.

அப்போது பல முதலாளிகள் ரத்த வெறியுடன் அலைந்த காலம். ஒவ்வொரு ஓநாயிடமும் விஷயமுள்ள நூறு நூறு ஆட்டுக்குட்டிகள் இருந்தன.

தேர்தல் மட்டும் தப்பாது வந்தது. இந்தியா உலகமயமாக்கலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டதும் கம்யூனிஸ்ட் மட்டும் எதிர்குரல் கொடுத்து கொண்டே அடுத்த தேர்தலில் காங்கிரசோடு இணைந்தனர்.

எல்லாம் முடிந்தது. காலம் மாறின.

🖥️🖥️🖥️🖥️🖥️

கம்ப்யூட்டர் வந்ததும் தியேட்டர்களில் பதினோரு மணி காட்சி நின்று போனது. எம்ஜியார் இருந்த போது இந்த பிரச்சனை இல்லை சாராயமும் செக்ஸ் படமும் தாராளமாய் இருந்தது என்று பெருசுகள் புலம்பின. எம்ஜியாரோடு அவர்களும் நிம்மதியாக போய் சேர்ந்தார்கள்.

இப்போதும் டிவியில் பழைய எம்ஜியார் படம் பார்க்கும் போது பாடல் காட்சிகளில் அவர் தன் முழங்கையால் நடிகைகளின் முலையை உரசும் காட்சிகளில் காலமான எங்களூர் பெருசுகள் காம வேதனை முகத்தில் அறைவது போல் வந்து போகும்.

அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இன்டர்நெட் வந்தது. கூகிள் கேட்டதெல்லாம் கொட்டும் என்றார்கள்.

திரையில் பெருக்கல் குறியில் மௌஸின் அம்புகுறியை ரெடியாய் வைத்து கொண்டு அலுவலகத்திலும் வீட்டிலும் இந்திய ஆண்களும் பெண்களும் ஒளிந்து ஒளிந்து வெள்ளைக்காரிகளும் சேச்சிகளும் இனச்சேர்க்கையில் துன்புறும் பிரேம வேட்டையை பயந்து பயந்து அரைக்கண்ணால் ஓரக்கண்ணால் கடைக்கண்ணால் பார்த்து பார்த்து அவஸ்தைப்பட்டபோது ஸ்மார்ட் மொபைல் போனும் வந்தது.

மொபைல் வந்தபோது நான்
அரைக்கிழவனாகி விட்டேன் என்றதால் நரை பூக்க ஆரம்பித்து விட்டதால் போனில் அடிக்கடி பேட்டரி வாட ஆரம்பித்ததால் இந்த உலகம் நாசமாய் போகட்டும் என்ற ஒரு சாபத்தை கையால் ஆகாத மற்றவர்கள் போலவே வழக்கம் போல வழங்கி விட்டு அந்த சப்ஜெக்ட்டில் இருந்து வெளியேறினேன்.

இன்டர்நெட் ஜித்தர்கள் பலரும்
20kids என்று ஒன்றை நெட்டில் கிளப்பி விட்டு அவர்களை பற்றி இந்த மீம்ஸ்காரன் மட்டுமே கவலைப்படுவது போலவும் ஒரு பிம்பம் உண்டாக்கி உருவாக்கி பரப்பியும் வைத்தனர்.

அப்போதுதான் இந்த வாட்ஸாப் வந்தது.

அந்த காலத்து பிட் படமெல்லாம் பிச்சை வாங்கும் அளவு இதில் உலக விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்தது என்றார்கள்.

மீசை நரைத்தாலும்.... எனவே நான்...

காமாட்சியை நாடினேன். அவனுக்கு ஏதேதோ க்ரூப்பில் இருந்து 2K தரத்தில் ஒளிர ஒளிர வெள்ளைக்காரிகள் சேஷ்டை செய்து காண்பித்தனர்.

எனக்கும் அவனே வாட்ஸப் பொறுத்தி கொடுத்து ரெண்டு குட்டிகளை இலவசமாய் அனுப்பியும் விட்டான்.

முதலில் அவன் dp யைத்தான் பார்த்தேன்.
தூக்கி வாரி போட்டது எனக்கு.

ஒரு சிவனை ஏறத்தாழ ஆலிங்கனம் செய்து கொண்டு நவீன நசிகேதனாய் ஒரு போஸ் கொடுத்து இருந்தான்.

போன் செய்து இது நியாயமா என்றேன்.

கல்யாணம் ஆயிடுச்சு மணி. உனக்கு ஆவலை. இப்படி சாமி பாப்பா குடும்ப போட்டோ வச்சா பொண்டாட்டிக்கு சந்தேகம் எப்பவும் வராது.சொன்னா எப்பவும் உனக்கெல்லாம் புரியாது.

போனை வைத்து விட்டான்.

🎸🎸🎸🎸🎸

நானும் வாட்ஸாப்பில் நங்கையர் பேசவும் காட்டவும் ஆட்டவும் வருவார்கள் என்று நம்பி இறுதியில் ஒன்றும் ஆகாது போகவே திரும்பி ஒரு உலகத்துக்கு ஒரு சாபம் கொடுத்துவிட்டு கடுப்பில் அதை அன்இன்ஸ்ட்டால் செய்தேன்.

சொக்கலால் பீடியோடு பட்டினத்தாரை போல் அலைந்து கொண்டிருந்தேன்.
என்ஜினீயரிங் தவிர மற்ற படிப்புகள் அனைத்தும் குப்பைக்கு சமமாய் போனது.

வரலாறு, தத்துவம், இலக்கியம் படித்து இருக்கிறேன் என்றால் அவனை அவளை பீயை பார்ப்பது போல் பார்த்தார்கள்.

எழுபதுகளில் பிறந்தவர் வாழ்க்கை உச்ச கேவலமாக மாறியதை எந்த அரசும் வெளியில் சொல்லவில்லை. மாறாக பொறியியல் விஞ்ஞானம் முதலீடு ஈர்ப்பு என்று விதம் விதமான கதைகள் விட்டார்கள்.

எல்லாவற்றையும் கோழி இறகால் காது குடைந்து கேட்டு கொண்டு டீவி மொபைலில் படம் பார்த்தபடி நம் மக்கள் வரப்போகும் வைகாசி கொடைக்கு காத்திருந்தனர்.

பொறியியல் படிப்பு சந்தி சிரிக்க ஆரம்பித்தபோது மக்கள் வாட்ஸப் மூலம் கிசுகிசுப்பில் தன்னை மறந்து ஓங்கி உலகளந்து கொண்டிருந்தனர்.

வசனம் படம் என்று 20kids எக்கச்சக்கமாய் போய் விட்டார்கள் என்று ஏதேதோ ஆய்வு அறிக்கைகள் வந்தன. படித்தனர். பின் விவாதித்தனர். பின்னரும் ஆய்வு அறிக்கைகள் வந்தன. அனைத்தும் குப்பைக்கு போய் சேர்ந்தன.

அங்கே மாட்டிக்கொள்ளாத வரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மங்களகரமாய் போகிறது என்றுதான் இப்போதும் கேள்விப்படுகிறேன்.

வாழ்க ஜனநாயகம். வளர்க உலக தொழில் புரட்சி.

📲📲📲📲📲

காமாட்சி நேற்று வந்திருந்தான்.

போன் புதுசுடே... பார்த்தியா...

சாம்சங் கெலெக்சி. வெர்சன்...

சரி அதுக்கென்ன?

பாருடா என்றான்.

ஆன் செய்ததும் சனியன் பிடித்த வாட்ஸாப்பில் தகவல் இசை வந்தது.

வெடுக்கென்று என்னிடமிருந்து பறித்து அவன் பார்க்க இயங்க ஆரம்பித்தான்.

கோழியை போல் நானும் தலையை சாய்த்து கொண்டு இங்கிதம் இல்லாமல் நோட்டம் விட்டேன்.

இரண்டு வெள்ளைக்காரிகள்...

இவ ஜெர்மன்காரி என்றான்.

அடப்பாவி...தோலை பார்த்தே நாடு என்ன னு கண்டுபிடிக்கரே என்றேன்.

ஷ்...பேசாம இரு...

டேய்... சிவன் படம். பட்டை விபூதி... உன் dp... நீ கல்யாணம் ஆனவண்டா... என்று அவனிடம் நான் என்னென்னவோ சொன்னேன்.

போனை ஆஃப் செய்தான்.

நேரே நிமிர்ந்து பார்த்தான்.

மணி, படிச்சு படிச்சி நீ என்ன கிழிச்சே? இனிமேல் நீயும் சாகிற வரைக்கும் லைப்ரரி போகப்போறே வரப்போறே. இதை விட்டா வேற என்ன தெரியும்?

ஒண்ணும் இல்லைடா. நான் தலையை குனிந்தேன்.

வேலைக்கு போய் நானும் ஒண்ணும் கிழிக்கலை. பணம் அந்தஸ்து பேரு எல்லாம் இருக்கு. ஆனா என்னமோ இல்லை. மனசு அலையுது. பயப்படுது. என்னமோ எதுவோ சரியா இல்லை னு சொல்லிட்டே இருக்கு. ஸோ எங்கேயோ தப்பு நடக்குது. நல்லா சிக்கிக்கிட்டோம்.

அதுக்கு...

யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை என்றான் காமாட்சி.

சற்று யோசித்து அதானே என்றேன் நான்.

இப்போ என்ன செய்ய நான் என்றான்.

பிளே பட்டனை அமுக்கு என்றேன் நான்.

ஜிகுஜிக்கான்ஞ் ஜிகுஜிக்கான்ஞ் ஜிக்கான்... ஜிக்கு...

🎷🎷🎷🎷🎷

படைப்பு ஸ்பரிசன்
© sparisan