...

0 views

உன்னோடு நான் இருப்பேன்
அத்தியாயம்-8

ப்ரியாவின் சம்மதம்

காலை எழுந்து அலுவலகம் செல்ல தயாரானவள் அறையில் இருந்து வெளியேறிபடி ஹாலில் அமர்ந்திருந்த மோகனை பார்த்து"குட் மார்னிங்ப்பா என்றாள்.

மார்னிங்டா என்று புன்னகைத்தவர் அவளை அழுத்துமாக பார்க்க... நேற்று போல உதிர்ந்த முகம் இல்லை தெளிவாகவே இருந்தது...

அம்மா டிஃபன் என்று ப்ரியா கிச்சனை பார்த்து கூற இரண்டு நிமிடத்தில் தோசையோடு வந்திருந்தார் ஜானகி டிஃபனை பறிமாறி விட்டு... அவள் எதிரில் அமர்ந்தவர்... ப்ரியா என்று அழைக்க...ம்ம்...என்றாள்...

அது வந்து காலையில விஷ்வா அங்கிள் ஃபோன் பண்ணிருந்தாறு

அதுக்கு என்ன?

இல்ல நீ சரினு சொன்னா அவங்கள பொண்ணு பாக்க எப்ப கூப்டலாம்னு என்று நிறுத்த...

ப்ரியா மோகனை பார்த்தாள்... அவர் இதற்கும் தனக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பது போல இருக்க...

ப்ரியாவும் அமைதியாக உணவை உண்ண ஆரம்பித்தாள்...

நீ என்ன சொல்ற ப்ரியா? ஜானகி கேட்க...

அம்மா தோசைய வை என்றாள் கேட்ட கேள்விக்கே சம்மதம் இல்லாமல்..

அவரும் பரிமாறியபடி... ஒருதடவை பய்யன மட்டும் பாரு ப்ரியா பிடிச்சுருந்தா பேசலாம் இல்லனாலும் பரவால்ல... அவர் சொல்லி விட்டு பதிலை எதிர் பார்க்க...

அம்மா சட்னிய வை என்றாள் நக்கலாக..

அதில் கடுப்பான ஜானகி ஏன்டி நான் என்ன பேசிட்டு இருக்க? நீ என்ன சொல்லிட்டு இருக்க? இந்த சட்னி இப்ப ரொம்ப முக்கியமா?கோபத்தில் சிடுசிடுக்க...

அம்மா தோசை மட்டும் கொடுத்தா எப்படி சட்னியும் வேணுமில்ல ப்ரியா நக்கலாக கூற

ப்ரியா விளையாடாதடி ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு

அப்போதும் ப்ரியா மோகனை பார்க்க...

மோகனை முறைத்த ஜானகி"ஏங்க நீங்களாச்சு ஏதாவது பேசுங்களே இப்படி அமைதியா இருந்தா எப்படி?

நான் என்ன சொல்ல ஜானு ப்ரியாக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான் மோகன் சிரித்து கொண்டே சொல்ல...

அப்பா நீங்க விஷ்வாவோட பய்யன பாத்துருக்கீங்களா? ப்ரியா கேட்க

இல்லடா என்றார் மோகன்

சரி அப்ப கூப்டுங்க பாத்தரலாம் என்று சொல்லி விட்டு அவள் பாட்டிற்கு உணவை உண்ண...

முகம் மலர்ந்த ஜானகி நிஜமாவா ப்ரியா என்க...

அம்மா இப்ப எதுக்கு இவ்வளவு குஷியாகுற நான் பய்யன பாக்கதான் சம்மதிச்ச கல்யாணம் பண்றதுக்கு இல்ல

இதுக்கு ஓகே சொல்லிட்டல்ல அதுக்கும் ஓகே சொல்லுவ என்றவர் அடுத்த நொடியே தொலைபேசியை நோக்கி ஓடினார்

என்னப்பா ஓகேதன ப்ரியா மோகனை கேட்க

ம்ம் ஓகேதான் ப்ரியா... ஏதோ டைம் கேட்டுருந்த அதுதான் நீயே சொல்ற வரைக்கும் வெயிட் பண்ணுன

இவ்வளவு டைம் போதும்ப்பா என் உணர்வுகள மதிச்சு டைம் கொடுத்தீங்க... அதே மாதிரி நானும் உங்க உணர்வுகள மதிக்க வேண்டாமா? எனக்கு தெரியும்ப்பா உங்களுக்கும் இந்த சம்மந்தம் பிடிச்சுருக்குதன என்று ப்ரியா கேட்க

ஆச்சரியமாக அவளை பார்த்தவர்... உனக்கு எப்படிடா தெரியும்? என்க

லேசாக புன்னகைத்தபடி தெரியும்ப்பா... உங்களுக்கு பிடிச்சுருக்கு அதனாலதான் அமைதியா இருந்தீங்க இல்லாட்டி அம்மாவ நீங்க இவ்வளவு பேசவே விட்டுறுக்க மாட்டிங்களே என்று கூற

விஷ்வா என் ஃப்ரெண்ட்ம்மா அது மட்டும் இல்லாம உன்னை யாரோ ஒரு தெரியாத குடும்பத்துக்கு கட்டி கொடுக்குறத விட விஷ்வா வீட்ல கொடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்ன்டா என்று சொல்ல...

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்... உங்களுக்கு எது சரினு படுதோ அதையே செய்ங்கப்பா நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகேதான் என்றவள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.

💕💕💕💕💕

அதே நேரம் ஆதியின் வீட்டில் தொலைபேசி ஒலிக்க விஜயா எடுத்தபடி ஹலோ என்றார்...

எதிர் முனையில் இருந்து ஹலோ நான் மோகனோட மனைவி ஜானகி பேசுற விஷ்வா அண்ண இருக்காருங்களா? என்ற அழைப்பு வர...

ப்ரியா என்ன சொல்லி இருப்பாளோ என்ற பயமே விஜயாவுக்கு வந்தது... "ம்ம் சொல்லுங்க ஜானகி நான் அவரோட மனைவி விஜயாதான் பேசுற என்று இவர் பதில் கூற

ஜானகியின் பேச்சே எழவில்லை... ப்ரியா சரி என்று கூறியதும் ஏதோ ஒரு உணர்ச்சி வசத்தில் அழைத்து விட்டார்... மற்றபடி தங்கள் பெண்ணை பாரக்க வாருங்கள் என்று தானே அழைக்க சங்கடமாக இருந்தது ஜானகிக்கு...

அவரின் மௌனம் விஜயாவிற்கு இன்னும் பயத்தை கூட்டியது... ஒருவேளை ஆதியின் மேல் உள்ள கோபத்தில் என் மருமகள் கல்யாணத்தையே வெறுத்து விட்டாளோ? என்ற எண்ணமும் வந்து போக

ச்சே ச்சே அப்படி ஏதும் இருக்காது என்று தன்னை தேற்றியவர்... "சொல்லுங்க ஜானகி ப்ரியா சம்மதிச்சுட்டாளா? என்று விஜயா கேட்க...

ம்ம் என்றார் ஜானகி..

விஜயாவின் சந்தோஷத்திற்குதான் எல்லையே இல்லை "நிஜமாவா சொல்றீங்க என்னால நம்பவே முடியல என்று சந்தோஷத்தில் சத்தமாகவே கத்தி பேச

அங்கே நாழிதல் படித்தபடி அமர்ந்திருந்த விஷ்வா "என்னாச்சு விஜி யார் ஃபோன்ல? என்று கேட்க

அது ப்ரி என்று சொல்ல வர படியில் வந்து கொண்டிருக்கும் ஆதியை கண்டதும் நிறித்தி விட்டார்...

சரிங்க அப்ப நாங்க சன்டே வரோம் என்று ஃபோனில் சொல்லி விட்டு வைத்தவர் அமைதியாக செல்ல பார்க்க...

சன்டே எங்கம்மா போறீங்க என்றான் ஆதி...

வேற எங்க உனக்கு பொண்ணு பாக்கதான் என்றதும்... அவனும் ஏன் கேட்டோம் என்றபடி உணவு மேஜையில் சென்று அமர்ந்து விட

விஜி ஓகேவா என்று விஷ்வா மெல்லிய குரலில் கேட்க...

ஆம் என்பது போல தலை ஆட்டியவர் ஆதிக்கு உணவு பரிமாற சென்று விட்டார்...

இப்போது மோகனும் ஆதியின் எதிரில் அமர்ந்தபடி"என்னடா சன்டே ஓகேதன என்று கேட்க

ம் என்றான்....

பொண்ணு சம்மதம் சொல்லிட்டானா அன்னிக்கே தட்ட மாத்திரலாம் சரியா விஜி...விஷ்வா கேட்க... அதற்குள் இடையிட்டவன் சம்மதிக்கலனா? கேள்வியை எழுப்பினான் ஆதி

சம்மதிக்கலனா வேற பொண்ண பாக்கலாம்...

இப்படி பொண்ணு பாத்துட்டே இருந்தா உங்க ஆப்ரேஷன் எப்ப நடக்குறதான்?

சரிடா இந்த பொண்ணு சம்மதிச்சாலும் சம்மதிக்கிலனாலும் நான் இந்த ஆப்ரேஷன பண்ணிக்கிற போதுமா? என்று கேட்க

லேசாக கள்ள புன்னகை ஒன்றை சிந்திய ஆதி விஜயாவை பார்த்து"அம்மா அப்பா சொல்றத நல்லா கேட்டுக்கோங்க நீங்கதான் அதுக்கு சாட்சி என்று நக்கலாக கூற

விஜயாவுக்குதான் ஒரு நிமிடம் வேர்த்து வடிந்தது...." இவர்க்கு எதுக்கு இந்த தேவையில்லாத வாய்... இவன் வேற இப்ப கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுனு ப்ளான் பண்ணுவானே... என்று மனதிலே புலம்பியபடி விஷ்வாவை பார்த்து முறைத்து கொண்டிருந்தார்...

ஆனால் ப்ரியாவை பற்றி நன்றாக அறிந்த விஷ்வாவுக்கு எந்த குழப்பமும் இல்லை...

விஜி முறைப்பதை பார்த்து சிரித்தவர்... விஜி ஸ்ட்ராங்கா ஒரு டீ கொண்டு வாயே என்று சொல்ல

ம்க்கூம் டீ ஒன்னுக்குதான் இப்ப கொறச்சல் என்று முணுமுணுத்தபடி கிச்சனுக்குள் நுழைந்தார்...

ஆதிக்கு விஷ்வா சொன்னது ஒரு ஓரத்தில் சந்தோஷமாக இருந்தாலும் அந்த பெண் சம்மதம்தான் சொல்லுவாள் என்ற நம்பிக்கை அவர் பேச்சிலே தெரிந்தது... அவள் யாராக இருக்கும் என்ற எண்ணம் ஆதியின் மண கண்ணில் வந்து போனது....

💕💕💕💕💕

பெண் பார்க்க செல்லும் தினமும் வந்தது...விஷ்வா பரபரப்புடன் செயல் பட்டு கொண்டிருக்க விஜயா அறையில் இருந்தே வெளியே வரவில்லை "விஜி விஜி என்று அழைத்தபடியே அறையில் நுழைந்த விஷ்வா என்னடி பண்ற டைம் ஆச்சு இன்னும் ரெடி ஆகலயா? என்று கேட்க

ரெடியெல்லாம் எப்பவோ ஆயிட்டங்க... ப்ரியாவுக்காக வாங்கி வெச்சுருந்த வளையல்தான் எங்க போச்சுனே தெரியல...

நான் தேடி பாக்குற நீ போய் முதல்ல உன் பய்யன பாத்துட்டு வா... ஆஃபிஸ்க்கு போற மாதிரி இல்லாம வயசு பய்யன் மாதிரி தயாராக சொல்லு போ...என்க

சத்தமாக சிரித்த விஜயா... பொண்ணு இவன முதல் தடவ பாக்க போறாளா என்ன? இவன் தூங்குன ட்ரெஸ் போட்டுட்டு போனா கூட அவளுக்கு ஓகேதானா நக்கலாக கூற...

விஷ்வா சீரியஸாக பேசினார்"விளையாட்டுக்கு இல்ல விஜி மோகனுக்கும் ஜானகிக்கும் எதாச்சு தப்பா பட்டுச்சினா கூட இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க... பாத்து நடந்துக்கனும் முக்கியமா ஆதி எதும் ஏடாகூடாமா பண்ணாம பாத்துக்க...

அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க... எல்லா நல்லதே நடக்கும் என்று சொல்லி விட்டு ஆதியின் அறையை நோக்கி சென்றார் விஜயா....

இங்கே பால்கனியில் நின்று கடலையே வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தான் ஆதி

உள்ளே நுழைந்த விஜயா ஆதி நீ இன்னும் ரெடி ஆகல என்று கேட்டு கொண்டே வந்து அருகில் நிற்க அவன் பதில் ஏதும் கூறாது நின்றிருந்தான்... அவனின் உதிர்ந்த முகம் பார்த்தவருக்கு மனம் கனமானது இருந்தும் இதெல்லாம் ஒருநாள் இல்லை ஒருநாள் சரி ஆகும் ப்ரியா சரி ஆக்குவாள் என்று நிச்சயமாக நம்பினார் விஜயா...

ஆதியின் கரம் பற்றியபடி உள்ள வாடா என்று அழைக்க அவன் நகராது நின்றவன் அம்மா என்று அழைத்தான் தாப குரலில்....

அவரும் என்னப்பா என்று கேட்க...

தூரத்தில் அலைபாயும் கடலை விரல் கொண்டு காட்டியவன்... அதோ அந்த கடல் இருக்கே அதுல எது கடல் துளி எது மழைத்துளினு பிரிக்க முடியுமாம்மா?

அவன் கேள்வி நோக்கத்தை புரியாதவர்" அது எப்படி முடியும்ப்பா? இரெண்டும் ஒன்னோட ஒன்னா கலந்திருக்கே...என்று சொல்ல...

அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் அதே மாதிரிதாம்மா என்னோட கடந்த காலத்தையும் என் வாழ்க்கையில இருந்து பிரிக்க முடியாது என்று கூற

ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை விஜயாவுக்கு

அங்கு மௌனமே நெகிழ... ஆதி விலக பார்த்தான் அவன் கரம் பற்றி நிறுத்தியவர் "ஆதி முடியாதுனு எதுவுமே இல்லப்பா... மனுஷங்களோட குணமே எது கிடைக்காதோ அதுக்கு ஆசை படுறதுதான்... நினச்சதெல்லாம் கிடைச்சிட்டா வாழ்க்கை ரொம்ப ஈஸி ஆகிறும் ஆதி... நமக்கு ஒரு விஷயம் கிடைக்கலனா அது நமகானது இல்லப்பா... அதே மாதிரி நமக்குனு ஒன்னு இருந்தா அது கண்டிப்பா ஒருநாள் நம்மல வந்து சேந்தே தீரும்...

உனக்கு பிடிச்சவங்கள விட உன்னை பிடிச்சவங்க கூட வாழ்ந்து பாரு அந்த வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்... இது உனக்கு இப்ப புரியாது ஆதி போக போக புரியும்...

தேவை இல்லாம மனச போட்டு குழப்பிக்காம ரெடி ஆகு வா என்று உள்ளே அழைத்து சென்றவர் கபர்டில் இருந்து நீல வண்ண சட்டையை எடுத்து அவன் கையில் வைத்து விட்டு சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா ஆதி அப்பாவும் நானும் வெயிட் பண்ணிட்டு வரோம் என்று சொல்லி விட்டு வெளியேறினார்.

💕💕💕💕💕

இங்கே ப்ரியாவோ கட்டிலில் படுத்து தன் டைரியை மார்போடு அணைத்து கண்ணீர் வடித்து கொண்டிருக்க. கதவை திறந்த உள்ளே வந்த மது ப்ரியாவை பார்த்து திட்ட ஆரம்பித்திருந்தாள்

அத்தியாயம்-9

பிடிச்சுருக்கு

ஏய் ப்ரியா நீ பண்றதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல... இப்ப எதுக்கு உக்காந்து அழுதுட்டு இருக்க? நீ இப்படி அழறதால கல்யாணம் பண்ணிக்கபோற பொண்ண விட்டுட்டு இங்க வந்து உன்னை கூட்டிட்டு போக போறானா என்று கேட்க

ப்ரியாவின் அழுகை இன்னுமே கூடியது...

பெரும் முச்சை இழுத்து விட்டபடி அவள் அருகில் வந்த மது "ப்ரியா எழுந்திரி என்றாள் அதட்டலாக

ப்ரியாவும் எழுந்து அமர... அவள் பக்கத்தில் அமர்ந்தபடி கண்களை அழுத்து துடைத்து விட்டவள்... தன் தோழியின் முகத்தை கரம் கொண்டு ஏந்தியபடி

இங்க பாரு ப்ரீ... நீ இப்படி அழக்கூடாதுடா ....உன்னை தொலச்சுட்டு நிக்கிறான் பாரு அவன்தான் அழனும்... நீ இவ்வளவு காதலிச்சும் கிடைக்கலனா அவன் உனக்கானவ இல்ல ப்ரீ அதை தயவ செஞ்சு புரிஞ்சுக்க... இத்தனை வருஷம் அவனையே நினச்சு வேஸ்ட் பண்ணிட்ட இனியும் வேணா ப்ரீ... உனக்காக இல்லனாலும் அங்கள் ஆன்டிக்காக யோசி... என்று அவள் கையில் இருந்த டைரியை பிடுங்கியவள்"போ ப்ரீ முகம் கழுவிட்டு வா என்று அனுப்ப... அவளும் அமைதியாக எழுந்து சென்று விட

ஜானகி கதவை தட்டினார்.... மது கதவை திறக்க மல்லிகை பூவை நீட்டியபடி"மது இத ப்ரியாவுக்கு வெச்சி விடு நீயும் வெச்சிக்கோ சரியா

சரி ஆன்டி என்று வாங்கி கொள்ள...

பய்யன் வீட்ல இருந்து வர நேரம் ஆச்சி ப்ரியாவ கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணிரு

ஓகே ஆன்டி டோன்ட் வரி என கதவை சாத்தி விட்டு திரும்ப ப்ரியா வாஷ்ரூமில் இருந்து வெளியேறி இருந்தாள்...

ப்ரீ சாரி எங்க? மது கேட்க

கபர்டை திறந்தவள் ஒரு மயில் வண்ண சாரியை எடுத்து மதுவிடம் கொடுத்து விட்டு கபர்டை மூட போக அவள் கண்களில் ஒரு பிங்க் வண்ண புடவை பட்டது....அதை எடுத்து மார்போடு அணைத்து கொண்டாள்(அந்த புடவை ப்ரியா முதல் முறை ஆதிக்காக கட்டியது).

அவளை பார்த்த மது ப்ரீ என்று அதட்ட தன்னிலை அடைந்தவள் அவசரமாக புடவையை கபர்டில் வைத்து பூட்டி விட்டு மதுவின் அருகில் வந்து நின்றாள்...

💕💕💕💕💕

விஷ்வாவும் விஜயாவும் வாசலில் காத்திருக்க ஆதி வீட்டில் இருந்து வெளியேறினான்... விஜயா புன்னகையோடு அவனை வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டிருக்க...

உன் பையனுக்கு நீயே கண்ணு வெச்சுராதடி என்று விஷ்வா விஜயாவின் காதில் மெதுவாக கூற செல்லமாக முறைத்தார் விஜயா.

ஆதி அருகில் வந்து நிற்க... அவன் கண்ணத்தை வருடிய விஜயா... லேசாக புன்னகை ஒன்றை புரிந்தவர் அப்பா சொன்ன மாதிரி என் கண்ணே பட்டிடும்போல என்று திருஷ்டி கழித்தார்...

விஜி டைம் ஆச்சு கிளம்பலாம் என்று விஷ்வா சொல்ல... ம் கிளம்பலாங்க என்று ஆதியை அழைத்து கொண்டு காரில் அமர விஷ்வாவும் அமர்ந்தபடி ஓட்டுனரை பார்த்து கதிர் மைலாபூர்க்கு போ என்றார்...

மைலாப்பூர் என்றதும் ஆதிக்கு ஏனோ ப்ரியாவின் நினைவே வந்து போனது... " நான் பாக்க போற பொண்ணு ப்ரியாவா இருக்க கூடாதா? என்னோட பிரச்சனைய எடுத்து சொன்னா கண்டிப்பா எனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பாங்க என்று பார்க்க போகும் பெண்ணிடம் என்ன சொல்லி இந்த திருமணத்தை நிறுத்துவது என்ற எண்ணங்களை ஓட்டியபடியே அமர்ந்திருக்க....மைலாப்பூரும் வந்தது...
"கதிர் இங்கிருந்து மூனாவது தெரு என்ற விஷ்வானின் குரலில் தன்நிலை அடைந்த ஆதி ஜன்னலை திறந்து வெளியே நோட்டமிட... கார் ப்ரியாவின் வீட்டை நோக்கியே சென்றது...

கடைசியாக அவள் வீட்டின் முன்பே நிற்க... ஆதியின் சந்தோஷத்திற்குதான் எல்லையே இல்லாமல் போனது... சிறு புன்னகை ஒன்றை சிந்தியபடியே விஜயாவை பார்க்க

பாவம் அவர்தான் குழம்பி போனார்... இவன் புன்னகைக்கு அர்த்தம் என்ன? என்று

மூவரும் காரில் இருந்து இறங்க ஜானகியும் மோகனும் காரின் சத்தம் கேட்டு வாசல் வந்திருந்தனர்... ஆதியையும் விஜயாவையும் பார்க்க இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம் சிறு புன்னகையுடன் ஒருவர் ஒருவரை பார்த்தவர்கள் வந்தவர்களை வரவேற்க ஆரம்பித்தனர்....

விஷ்வாவும் மோகனும் கட்டி அணைத்து கொள்ள... விஜயாவும் ஜானகியை அணைத்து கொண்டார்...

உள்ள வாங்க தம்பி என்று ஜானகி ஆதியை பார்த்து அழைக்க... மோகனோ ஒரு படி மேலே சென்று உள்ள வாங்க மாப்பிளை என்று கூற விஷ்வாவுக்கு ஹப்பாடா என்று இருந்தது... மோகனுக்கு ஆதியை பிடித்து விட்டது இனி ப்ரியா எப்படியும் திருமணத்திற்கு சம்மதித்து விடுவாள் என்று...

எல்லோரும் உள்ளே நுழைய கதிர் மட்டும் வெளியே நிற்பதை பார்த்த மோகன்... தம்பி நீங்களும் உள்ள வாங்கலே என்று அழைக்க... அவன் பரவால்ல சார் என்று மறுத்தான் "அட வாங்க தம்பி இதுல என்ன இருக்கு உள்ள வந்து எதாச்சு சாப்டுங்க என்று சொல்ல.... அவன் மறுபடியும் வேண்டாம் என்றே மறுத்தான்...

மோகனின் இந்த செயல் ஆதிக்கு மிகவும் பிடித்திருந்தது என்றே சொல்லலாம்... பிரியாவுக்கு எல்லோரிடமும் இயல்பாக பழகும் குணம் எப்படி வந்தது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டான்...."கதிர் அங்கள் அவ்வளவு சொல்றாறே உள்ள வாங்க என்று ஆதி அழைக்க அவனும் சரி சார் என்று அவர்களோடே உள்ளே நுழைந்தான்.

எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க ஜானகியும் விஜயாவும் கிச்சனுக்கு நுழைந்தனர்.

என்ன மோகா? பய்யனோட ஃபோடோ கேட்ட இப்ப அவனையே கூட்டிட்டு வந்திருக்க எப்படி இருக்கான் விஷ்வா நக்கலாக கேட்க

நீ கூட்டிட்டு வரது முன்னாடியே என் பொண்ணே உன் பய்யன கூட்டிட்டு வந்துட்டா... "இல்ல மாப்பிளை என்று ஆதியை கேட்க

அவனும் என்னதான் சொல்வான் "ம்ம்"என்று தலை அசைத்தவன் மனதில் புலம்ப ஆரம்பித்தான்..."நானே என்ன சொல்லி இந்த சம்மதத்தை நிறுத்தலாம்னு இருக்க... இவர் வேற நேரம் காலம் தெரியாம இப்பத்தில இருந்தே மாப்பிளனு கூப்ட ஆரம்பிச்சிட்டாரு...

ஜானகியும் விஜயாவும் திண்பண்டாரங்களை எடுத்து வந்து அணைவருக்கும் வழங்கினார்கள்...

ஜானகி ப்ரியாவையும் கூப்டுங்களே பாக்கலாம் விஜயா சொல்ல

சரிங்க என்று புன்னகைத்தவர்... ப்ரியாவை அழைக்க சென்றார்... கதவை தட்ட மது திறந்து பார்த்தாள்

"மது ப்ரியாவ கூட்டிட்டு வாம்மா

ஓகே ஆன்டி என்றவள்... ப்ரியாவின் அருகில் வந்தவள் ப்ரீ வா போலாம் என்று அழைக்க

அவளோ நகருவேனா என்று அமர்ந்திருந்தாள்

ம்ச் வா ப்ரியா என்று இழுத்து கொண்டு அழைத்து சென்றாள் மது... கதவு திறந்து வெளியே வர அணைவரின் கண்கள் ப்ரியாவின் மீதே சென்றது.

"நம் ஆதியின் கண்களும்தான்"

ப்ரியாவோ குனிந்த தலை நிமிராமலே வந்து நின்றாள்... யாரையும் பார்க்கவில்லை... வெட்கத்தில் அல்ல பாரக்க பிடிக்காமல்...

ஆனால் ஆதியின் கண்களோ என்றும் இல்லாமல் இன்று ப்ரியாவின் அழகை ஆராய்ந்து கொண்டிருந்தது... எப்போதும் பார்த்தவள் போல தெரியாது மிகவும் வித்யாசமாக தெருந்திருந்தாள்...

மயில் வண்ண புடவையில் அழகு தேவதையாக அவன் முன்னே வந்து நின்றவளை இன்ச் பை ஈன்சாக அவன் கண்கள் ஆராய்ந்தது... அழகான சிறிய முகம்... பால் நிற வண்ணம்... அடர்த்தியான கார் கூந்தல் அதை பிண்ணி ஜடையிட்டிருந்தாள்... பிண்ணிய கூந்தலை மறைக்கும் வரை மல்லிகைப்பூ சூடி இருந்தாள்.

நெற்றியில் சிறிய கருப்பு நிற பொட்டு வைத்திருந்தாள்... அழகான முல்லை மொட்டு போன்ற கண்கள்.... கூர்மையான நாசி அதின் வலது புறத்தில் சிறு கல் பதித்த மூக்குத்தி ஜொலித்து கொண்டிருந்தது... இதற்கு முன் இதை கவனித்து கூட இருக்க மாட்டான்.

காதில் சிறிய ஜிம்க்கிகள்... சிவந்திருக்கும் கண்ணங்கள்... சாயம் பூசாத செவ்விதழ்... அதற்கு கீழ் ஓரத்தில் அவள் முகத்திற்கே திருஷ்டி கழிப்பது போன்ற சிறிய மச்சம்...

கழுத்தில் மெல்லிய செயின் அணிந்திருந்தாள்.பெண்களின் அழகை கூட்டும் பூரிப்பான மார்பகங்கள்... புடவையால் மறைத்தும் கொஞ்சமாக தெரிந்திருக்கும் அவளது கொடி இடை... ஒரு கரம் முந்தாணையை பிடித்திருக்க மறு கரம் அதில் விளையாடி கொண்டிருந்தது...

கையில் ஓரீரு வளையல்கள் அணிந்திருந்தாள்... விசிறி வாழை போன்ற அழகான புடவையின் மடிப்பு... அந்த மடிப்பின் நுணியில் எட்டி பார்த்த கால் விரல்கள்

இப்படி ஒரு இடம் கூட விடாமல் அவனது கண்கள் அவளை பார்க்க... ஆனால் இவளோ நான் யாரையும் பார்க்க மாட்டேன் என்று முரடு பிடித்தபடி தலை குணிந்தே நின்றிருந்தாள்...

ஆதியை கண்ட மதுவுக்கு முதலில் நம்பவே முடியவில்லை"இது நிஜமாவே ஆதி சாரா இல்ல நாஏதும் கனவு காணுகிரேனா? என்று கண்களை கசக்கி பார்க்க... அது நிஜமாகவே ஆதிதான் என்று உறைத்தது..

மெதுவாக ப்ரியாவின் காதருகே சென்றவள்... ப்ரீ மாப்பிளைய பாரேன்செம ஹேன்ஸமா இருக்காருப்பா... என்று சொல்ல ப்ரியா கோபத்தில் பல்லை கடித்தபடி நின்றிருந்தாள்....

உக்காரு ப்ரியா ஜானகி சொல்ல.... தலை குணிந்தபடியே மோகனின் அருகில் அமர்ந்து கொண்டாள்

என்ன இவ எப்பவும் இல்லாம இவ்வளவு சீன் போடுறா... மத்த நேரத்துல வெச்ச கண்ணு வாங்காம சைட் அடிப்பா ஆனா வேணுன்ற போது பாக்காத மட சாம்பிராணி மது மனதிலே திட்டி தீர்த்தவள் மனம் கேட்காமல் மீண்டு அவள் காதோரம் குணிந்தபடி "ஏய் ப்ரீ இதெல்லாம் ரொம்ப ஓவர்டி... ஒரு தடவை நிமிர்ந்துதான் பாரேன் மது கெஞ்சலாக கூற

அதில் இன்னும் கடுப்பானவள் மதுவின் வயிற்றில் முழங்கையாலே விட்டாள் ஒரு குத்து அவ்வளவுதான் இதற்குமேல் இங்கு நின்றாள் எங்கெங்கு அடி விழுமோ என்று நினைத்தவள் "நீ பாத்தா பாரு பாக்காட்டி போடி என முணங்கி கொண்டே நகர்ந்து விட்டாள்...

இவர்களின் செயலை எல்லாம் விஜயா எதிர் முனையில் இருந்து புன்னகையோடு பார்த்தபடி இருந்தவர்... எழுந்து சென்று ப்ரியாவின் அருகில் அமர்ந்தார்.

ஆவலாக அவள் கரத்தை பற்றியவர் "ப்ரியா" என்று அழைக்க

கேட்ட குரல் போல இருக்க பட்டென நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் விஜயாவை கண்டு விரிந்து போனது...

"இனி ஆன்டி இல்ல அத்தைனு கூப்டனும் சரியா என்று கிண்டலாக கூற...

அவ்வளவு நேரம் வாடிய மலராய் இருந்த முகம் இப்போதுதான் புன்னகையில் மலர்ந்தது...

தன் பார்வையை அங்கும் இங்கும் அலைய விட்டவள் தன் காதலனை வலை வீசி தேடினாள்... அவள் காதலனோ அவளது அழகில் மூழ்கி மீள முடியாமல் அவளை பார்த்தபடியே எதிரில் அமர்ந்து கொண்டிருந்தான்.

💕💕💕💕

உன்னோடு நான் இருப்பேன்❤️











© All Rights Reserved