...

5 views

தளைந்தேன் உன்னில் எம்மியிலே
மயில் 3

அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப   வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டிநறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,

-முல்லைக்கலி கலித்தொகை


அந்த இடத்தில் முழக்கமா, இடியா என்னும்படி பறைகள் முழங்கின. அது வழக்கத்துக்கு மாறாகப் போர்க்களம் போலக் காணப்பட்டது. காளைகளை வளர்த்த மகளிர் (நல்லவர்) மணக்கும் பொடித் துகள்களையும், மணக்கும் புகைகளையும் ஏந்திக்கொண்டு அணிவகுத்து நின்றனர். 




ஒரு கூடாரத்தில் ஒரு புறம் தண்ணீர் ஊற்றி கழுவிக்கொண்டிருந்தனர். மறுபுறம் மாட்டின் தேவையற்ற  கழிவுகளை அப்புறபடுத்திக் கொண்டிருந்தனர். அந்த இடமே இறைச்சி வாடை தான்... அதுவொரு மாட்டிறைச்சி விற்கப்படும் கசாப்புக்கடை.

ஆயிரம் கிலோ எடை வரையுள்ள மாடுகளின் கழுத்தை அறுத்து ரத்தம் வடிய வடிய தோலை உரித்து அங்கே தொங்கப் போட்டிருந்தனர். மாடுகளைத் தெய்வமாக பார்க்கும் ஊரில் சிலர் அதன் இறைச்சியை உண்ணவும் செய்கிறார்கள். சிலருக்கு அது தெய்வமென்றால் பலருக்கு அதுவும் உணவே

கடையின் ஓரத்தில் அங்கு அடிக்கும் நாற்றத்தையும் பொருட்படுத்தாது அந்த இறைச்சி வாடையோடு சாராயத்தையும் நுகரந்து குடித்து கொண்டிருந்தான் மகேந்திரன்..


அவனது மேசையில் சுட்ட மாட்டிறைச்சியும்  சாராயமும் ஊர்காயும் இருந்தன, மகேந்திரனின் இடத்தில் அவனது நண்பன் சையது மாட்டிறைச்சி கடையை வைத்திருக்கிறான். விசாலமான கடை என்பதால், உள்ளே மாடுகளை வெட்டும் பணியும் வெளியே விற்கும் பணியும் நடக்கும்.


அவ்வூரில், இந்துக்கள் சிலரைத் தவிர  மற்ற அனைவரும் மாட்டிறைச்சியை வாங்கி உண்பார்கள். ஊருக்கு ஒதுக்கு புறத்தில்  இருக்கிறது இந்தக் கடை.


தன் நண்பனை குடிக்க விட்டு வேறு  வேலையில் இருந்தான் சையது. மகேந்திரனின் காலுக்கடியில் அமர்ந்து ஊத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான் பச்சக்கிளி! மகேந்திரனின் வேலைக்காரன் , ஜால்ரா, ஜின்ஜாக் என்ன வேணாம் சொல்லுகிடலாம்.


"ஏணே! உன் கூட்டாளிக்கு மாட்டையும் எங்களுக்கு எப்ப  உன் கண்ணலாம் விருந்தையும் போட போற?" என நெகிழி கோப்பையில் சாராயத்தை ஊற்றியவாறு கேட்டான் ... மகேந்திரனுக்கு சாராயமொரு போதை என்றால், அவனை உசுப்பேற்றி கோபமடையச் செய்வது அவனது கூட்டாளிக்களுக்கொரு போதை. எப்படியாவது தன் மாமன் மகளை கல்யாணம் செய்தே தீரவேண்டும் என்பது மகேந்திரனின் தீராத ஆசை , வெறி எனலாம். ஆனால் அதற்கு தடையாக இருப்பது அழகு தான். அழகு என்னும் அழகேந்திரன் தான்.



ஆறு வயதுள்ள அந்த மாட்டை கண்டால் ஊர் சனத்தின் குலையும் நடங்கிப் போகும்.  மூன்று ஊர்களுக்கும் சென்று வீரர்களின் கையில் பிடிப்படாமல் பரிசுகளை வென்று வந்திருக்கிறது... அசராது நின்று விளையாடி தன்னை நெருங்கி வரும் வீரர்களுக்கு உயிர் பயத்தை காட்டி விட்டு வரும் மாடுகளில் அழகேந்திரனின் பெரும் இடம் பெற்றது.


வீட்டிலிருந்த கறவை மாட்டொன்று ஈன்ற காளை கன்று தான் இன்று அலங்காநல்லூரே நடுங்க வைக்கும் அழகேந்திரனாக வளர்ந்திருக்கிறது...


வீட்டில் ஒரு பிள்ளையாக வளர்ந்த அந்தக் காளையை வளர்த்தது எல்லாம் மயிலினி தான்... தன் தம்பியை போலவே எண்ணி வளர்த்தாள். விடியும் போதும் அடையும் போதும் அவனை கவனித்து விட்டுத் தான் அடுத்த வேலை அவளுக்கு.


காலங்காலமாக ஊர் தலைவராக இருக்கும் குடும்பம் தான் கார்மேகக்கோனாரின் குடும்பம்... பச்சையம்மாள் வாசுதேவ கோனாரின் புதல்வர்கள் தான் கார்மேகக் கோனார், கருப்பையா கோனார். ஒரு புதல்வி கண்ணம்மா.

கார்மேகம்,  மீனாட்சிக்கு பிறந்த மூன்று பிள்ளைகள் தான் திருமலை,  மாலினி, மயிலினி. கருப்பையா, பார்வதிக்கு பிறந்த பிள்ளைகள் மணிமேகலையும் பாண்டு ரங்கனும். கண்ணம்மா, கோபாலுக்கு  பிறந்த இரண்டு பிள்ளைகள் வாசுகி, மகேந்திரன்.

வாசுகியைத் தான் திருமலைக்கு கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். கண்ணம்மா, மகேந்திரனுக்கு  முதலில் மாலினியை தான் கேட்டது, ஆனால் அவனோ கட்டினால் மயிலினியை தான் காட்டுவேன் என்றிருந்திட, மகேந்திரனின் பெரியப்பா மகன் கஜேந்திரனுக்கு மாலினியை கட்டிக் கொடுத்தனர்.


கஜேந்திரன் சொக்க தங்கமென்றால், அதற்கு நேர் எதிர மகேந்திரன். கூட்டாளிகளோடு சேர்ந்து எல்லா கெட்ட பழக்கவழக்கங்களை கத்து வைத்திருக்கிறான்... கால் கட்டு போட்டால் சரியாகிடுவான் என்று சராசரி தாய்மார்கள் சொல்வது போலவே கண்ணம்மா சொல்ல மட்டும் செய்யாது  தன் அண்ணனிடம்  பெண் கேட்டு வந்து நின்றார்.

கார்மேகக்கோனாரோ யோசிக்கிலானார்.
மகேந்திரனை விடுது வெளியே பொண்ணைக் கொடுத்தால் நிச்சயம்  குடும்பத்தில் சண்டை சச்சரவு வருமென்தால் கொஞ்சம் தடுமாற்றத்தில் அவரிருக்க, மயிலினியோ தெளிவாக இருந்தாள்...

பெண்களிடம்  மட்டுமே வீரத்தை காட்டும் மகேந்திரனை தெரியாதவளா? தன் அழகுவை வைத்தே அவனை தட்டி கழிக்க எண்ணியவள், வரும் ஜல்லிக்கட்டில் அழகுவை யார் அடக்குகிறானோ, அவன் திருமணமாகதவனாக இருந்தால் கண்டிப்பா அவனை தான் கட்டிப்பேன் என்று சூளுரை எடுத்துக்கொண்டாள்.


மகேந்திரனும் அவள் பின்னே சுத்த, இவளோ காளையை காட்டி அவனையும் கல்யாணத்தையும்  தட்டிக்கழிக்கிறாள்...


" அந்தக் கறுத்த பிசாச பொலி போட்டாத்தேன், என் கண்ணாலமே நடக்கும்... நானும் அந்தப் பிசாச கொல்ல நேரம் பார்த்துட்டு தான் கெடக்கேன், சிக்க மாட்டேங்கிது..." என்றான் கடுப்பில்



"கூட்டாளி, பேசாம நீந்தேன், வர போற ஜல்லிக்கட்டுல, அழகன அடக்கி, அந்தப்புள்ளய கட்ட வேண்டியது தானே? ஏன் இங்கன வந்து புலம்பிட்டு கெடக்க? அந்தப் புள்ள சொன்னது போல அழகன இந்த ஊர் முன்னால, அடக்கி, அந்தச் சிறுக்கி கொட்டத்தையும் அடக்கு மாப்ள"
என்றான் சையது கணக்கு வழக்குகளை பார்த்தவாறு  அவனை ஏற்றிவிட்டான்.


"நீ வேற மாப்ள, அந்த பிசாசு, அடக்கறேனு என் குடல் குந்தானி எல்லாம் வெளிய எடுக்கவா,  மாப்ள அந்த மாட்டை பத்தி உனக்கு தெரியல, ஓடையில் ஒருநாளு அந்தப் புள்ள கையத்தேன் தொட்டேன்... என் மேல பாஞ்சுருச்சு மாப்ள  அன்னையில இருந்து அந்த பிசாசுனாலே எனக்கு பயம்..." என்றவன் அன்றைக்கு அடைந்த பீதியும் இன்றும் கண்களில் தென்பட,  சாராயத்தை ஊற்றி பயத்தைக் குறைத்தான்.


"சரி மாப்ள, அந்தப் பிசாசை என்னதேன் பண்ண போற?"


"மொதல்ல, அந்த பிசாச வாடிவாசலுக்கு போக விடாம தடுக்கணும் மாப்ள... எந்த ஊருக்கும் போய் அத விளாட  விடக்கூடாது...  ஒன்னுக்கும் ஒதவாத மாட்டுனு  அடிமாட்டுக்கு விக்க வச்சி, கழுத்தறுத்து, அதோட கறி நான் சாப்டனும் மாப்ள... அப்றம் என் ஆத்தாள விட்டு, அந்தச் சிறுக்கிய பொண்ணு கேட்டு கண்ணாலம் பண்ணனும் இதான் மாப்ள என் பிளானு..." என்று சாராயத்தை வாயில் ஊற்றியவாறு கூறினான்.



"ஏணே! இதெல்லாம் நடக்கற காரியமா?  அழகன எப்டிணே வாடிவாசலுக்கு போக விடாம தடுப்ப? அந்த மாட்டத்தேன் கருப்பனும் மயிலக்காவும் சும்மா சிங்க கணக்காக வளர்த்து விட்றுக்காகளே!  ஊர் தலைவர் மாட்டுனு சரியாதேன் இருக்கும் சான்றிதழையும்  டோக்கானையும் கொடுத்தா நீ என்ன பண்ணுவீயாக்கும்...?" பச்சக்கிளி! விவரம் கேட்க,


"டேய் பச்சக்களி! நீ சொல்றது நிசந்தேன்... ஆனா, நான் கட்சிக்காரன் சகவாசம் வச்சிருக்கேன்டா ... அங்க இங்க காசு போயி சில பல வேலை எல்லாம்  பார்த்திருக்கேன் டா... நாளைக்கு தெரியும் இந்த மகேந்திரனோட மவுஸ்...  நாளைக்கு பார்றீ, அந்த பிசாசுக்கு  சான்றிதழ் கிடைச்சிடுமா-ண்டு" காலரை பின்னுக்கு இழுத்து விட்டு வாக சாய்ந்து  கொண்டான்..
பச்சக்கிளியும் சையதுயும் 'இதெல்லாம் நடக்கற காரியமா?'   என்று கேலியாக சிரித்துக் கொண்டனர்.


ஓட்டை வெறித்த வண்ணம்  இருக்கைகளை தலைக்கு கீழ் முட்டு கொடுத்து கட்டிலில்  செழியனும் மாதவனும் படுத்திருந்தனர்.


"டேய் செழியா, அந்தப் பாட்டி சொன்னது நிஜமாடா, காளை அடங்கினவன தான் அவ கட்டிப்பாளா? " அவனை பாராமல் கேட்டான்.

"அந்தப் பாட்டி அப்படித்தான்டா சொல்லுச்சி...!  ஆனாலும் மச்சி, அந்தப் பொண்ணு தான் உனக்கு வேணுமா? ஊர்ல அம்மாகிட்ட சொல்லி சிட்டி பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோட, இந்தக் கிராமத்து பொண்ணு உனக்கு வேண்டாம் டா..." என்றான் பயத்தில்.


"பச்... நான் வேணா, அந்தப் பொண்ணு கிட்டயே  நேரா போய் இது உண்மையா இல்லயானு கேட்கவா?"  ஒருகையை தலைக்கு அண்டம் கொடுத்து  அவனை பார்த்து கேட்டான்.

"எதுக்கு ஊர்க்காரங்க ஒன்னு கூடி, நமக்கு சடங்கு சுத்தவா? வந்தோமா காளைய பார்த்தோமா, வேலைய முடிச்சோமா,  ஊர பக்கம் போனோமா இருக்கணும். ஆச அ சீனியரா சொல்லுறேன் மூடிட்டு படு!" என்று  போர்வை தலைக்கு வரை போர்த்தி கொண்டு.


"டேய் மச்சி கழுத்துக்கும் வயித்துக்கும் நடுவுல நின்னு உயிரை வாங்கறாடா? கண்ண மூடினா, அவ தான் மச்சி நிக்கறா"என்றவன் புலம்ப,


"எனக்கும் கூட வயித்துக்கும்  கழுத்துக்கும் நடுவுல இந்தக் ஊர்காரனுங்க தான் நிக்கறானுங்க, கண்ண மூடினா வெட்ற மாறியே வராணுங்க...உன் காதலுக்கு நான் ஏன்டா பலியாகனும்? அனத்தாம படுறா..." என்றான் கடுப்பில்.


பாவம் மாதவனுக்கு தான் தூக்கம் சிறிதும் கண்களில் இல்லை, கொட்ட கொட்ட முழித்தேயிருந்தான்... வெகு நேரம் கழித்தே இமைகள் ஒன்றுசேர, உறங்கியும் போனான்...


அழற்கதிரின் ஆட்சி தொடங்கும் முன்னே, அவ்வூர்  மக்களெழுந்து வேலைக்குச் சென்றிட, மெல்ல கண்விழித்த மயிலினி, சோம்பல் முறித்து, விறுவிறுவென காலை கடன்களை முடித்து விட்டு,  அழகேந்திரனை தேடிச் சென்றாள்..


அவளுக்காக காத்திருந்தவன் போல, அவளது வருகை அறிந்து தன் கழுத்தை அசைத்தான். அக்கழுத்தில் கட்டிருந்த மணியோ, ஓசையை எழுப்பியது


"இந்தா வந்துட்டேன் அழகு" என்று அதற்கு தீவனம் தயாரிக்க ஆரம்பித்தாள்... தவுடை தண்ணீரில் கொட்டு கலந்து, மாட்டின் கயிறை கழற்று தொட்டியின் அருகே சென்று நிற்க வைத்தாள்... அதுவும் அதை தன் நாவால் சுவைக்க ஆரம்பித்தது.


"என் அழகு ராசா!  அக்கா, உன்னைய இன்னைக்கு டெஸ்ட்க்கு கூடிட்டு  போறேன்... எப்படியும் உனக்கு ஒன்னுமில்ல சான்றிதழ குடுத்திடுவாய்ங்க... அப்றம் அப்பா உனக்கு டோக்கன  வாங்கிடுவாரு அடுத்து என்ன?  ஜல்லிக்கட்டுப் போறோம் பரிசத் தட்டி தூக்கிறோம்...
என்னையா நான் சொல்றது..

இங்க பாரு அழகு, நம்மல யாரும் தீண்ட விடக்கூடாது, நாமளும் யாரையும் தீண்ட கூடாது... யாரு கையிலும் சிக்காம, வந்துபுடனும்யா.. உன் மாட்டால தான் எனக்கு காயம்னு யாரும் வீட்டு வாசல் முன்னாடி வந்து நிக்காம விளாடுயா? அக்கா சொல்லுறது அதேன், நம்மால அழிஞ்சவன் எவனும் இருக்கக் கூடாது... சரிதானே!" என்றவள் கேட்க, மீண்டும் தலையை ஆட்டி மணியோசையை எழுப்பியது. "என் சமத்துயா நீயி!"  என்று முத்தம் வைத்தாள்.

"என்னத்தா, என்ன பேசுக்கிறீங்க, நீயும் உன் அழகும்?" என்று கேட்டு கார்மேகம் அவர்கள் அருகில் வந்தமர்ந்தார்.


"இல்லப்பா, யாரையும் கஷ்டபடுத்தாம ஜெயிச்சிட்டு வாயா சொல்லிட்ருக்கேன் பா... என்னதேன் இது நம்ம பாரம்பரிய விளாட்டா இருந்தாலும், உயிர பணயம் வச்சு விளாடுற விளாட்டு,  சிலருக்கு கொம்பு கிழிச்சி உயிர் போயிருக்குல, அதெல்லாம் ஒரு பக்க நெனக்க பயமா இருக்குப்பா...!


ஒரு  பொண்ணு தன் பெண்மையை நிரூபிக்க, தன் உயிரையும் நெனச்சு பார்க்காம பத்துமாதம் குழந்தைய சுமந்து பெத்தெடுகறா, அதே போல, இந்த மண்ணோட வீரத்தையும் பாரம்பரியத்தையும் காக்கவும் நிரூபிக்கவும் ஒவ்வொரு ஆண்மகனும் உயிருக்கும் மேலாக நெனைக்கற இந்த வீர விளாட்டுல தன் உயிரையும் பணயம் வச்சு  விளாடுறாங்க, அவங்களுக்கு எதுவும் ஆகிட கூடாதுல பா, அதான் இவன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்... யாரையும் காயப்படுத்தாதனு..." 


அவ்வாறு சொல்லும் தன் மகளை பார்த்து பிரமித்து போனார் கார்மேகம்... அவள் தலையை ஆதுரமாய் வருடியவர், "நீ சொல்றது நிசந்தேன் கண்ணு... நம்ம அழகனால ஒருத்தன் உயிருக்கும் ஆபத்து வரக்கூடாது... அதே சமயம் நம்ம அழகும் யார்கிட்டயும் தோற்கவும் கூடாது..." என்று மீசையை நீவி கொண்டு பெருமையாகச் சொல்ல, அவளும் தலையை ஆசைத்தாள்...


"கண்ணு,  அண்ணனுக்கு டவுன்ல வேலையாம், அதுனால நீயும் கருப்பனும் அழகன கூடிட்டு போய் சான்றிதழை வாங்கிட்டு வாங்க, அப்றம் அப்பா போய் டோக்கன வாங்கிப்புடுறேன்..." என்றார்."சரிப்பா..." என்றாள் தண்ணீயை கலக்கி விட்டவாறே.


தாமதமாக எழுந்த மாதவனும் காலை கடன்களை முடித்துவிட, பெரிய வீட்டிலிருந்து வந்த காலை உணவை  முடித்து விட்டு, செழியனும் மாதவனும் விரைந்தனர்.

இவர்களுக்கு முன்பாகவே மாட்டுக்காரர்கள் தங்கள் மாடுகளை வரிசைகட்டி அழைத்து வந்திருந்தனர்...


காளை மாடுகளை பரிசோதனை செய்து கொடுக்கும் சான்றிதழும் மேலும் ஜல்லிக்கட்டு டோக்கன் பெற கொடுக்கும் பாரம் இரண்டிலும் கால்நடை மருத்துவரின் கையெழுத்து இருக்கவேண்டும்...

மேலும் கால்நடை மருத்துவர்கள்,  மாட்டின் எடை , உயரம், பற்கள் மட்டும் மேலும் உடம்பில் ஏதேனும் காயங்கள் தழும்புகள் இருக்கிறதா என்று சரி பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள்..

மாட்டின் உயரம் 120 இருக்கவேண்டும், பற்கள் கண்டிப்பா ஆறு இருக்க வேண்டும்... இதெல்லாம் சரி பார்த்த பின்பே சான்றிதழ்களை வழங்குவார்கள்.


மாதவன், செழியனை தவிர்த்து மேலும்  மூன்று பேர்கள் வந்திருந்தனர். மேலதிகாரி சரவணனனும் வந்திருந்தார்.


காளை மாடுகள் வரிசை கட்டி நிற்க, பெண்ட்  கழன்றது   ஆறு பேருக்கும்... வரிசையில் வரும் மாடுகளை பரிசோதனை செய்த வண்ணம்  இருந்தான் மாதவன்... 


மயிலினியும் அழகனை அழைத்து வந்தாள். அவளது காளையையும் ஒருவன் பரிசோதனை செய்தான்... அவன் மகேந்திரன் அனுப்பிய ஆள் என்பதால்,  மாட்டை பரிசோதனை செய்தவன்,

" உயரம் சரியா இல்லை...  தழும்பு வேற இருக்கு... இந்த மாடு ஜல்லிக்கட்டுக்கு ஃபிட் இல்லை...."என்றான்
மயிலினியும் கருப்பனும் அதிர்ந்தனர்.

"என்ன சொல்றீங்க டாக்டரே! ஏன் ஏன்  அழகு ஃபிட் இல்ல? இது புளியங்குளம்  காளை கொஞ்சம் குட்டையாதேன் இருக்கும், ஆனா, இரண்டு அடிக்கு சரியா இருக்கும். இது தழும்பு இல்ல மாட்டோட நிறம்.. என்ன சார் நீங்க? சரியா எதையும் பார்க்காம நீங்களா ஃபிட் இல்லைனு சொல்றீங்க...? " என்று கத்த ஆரம்பித்தாள்.


"உள்ளத தானே மா சொல்ல முடியும், மாடு ஜல்லிக்கட்டுக்கு ஃபிட் இல்ல, கூடிட்டு போமா..." அவனும் அதிலே நின்றான்.


"எங்கூர் தலைவர் மாடுங்க, அதெப்படிங்க சரியில்லமா போகும்... நல்லா பாருங்க..." என்று கருப்பனும்  கூற,


"யோவ், தலைவர் மாடுன்னா நாலு கொம்பா இருக்க போகுது. எல்லா மாடும் ஒன்னுதான்யா எங்களுக்கு. இந்த மாடு ஃபிட் இல்ல, கிளம்புங்கயா..." மீண்டும் அதயே  சொல்ல,
ஊர்காரர்கள் ஒன்னு கூடி சத்தம் போட ஆரம்பித்தனர்.


சத்தம் கேட்டு, அங்கு விரைந்தனர் சரவணனும் செழியனும் மாதவனும்... " என்ன ராஜா என்ன பிரச்சனை?" அங்கு வந்தவர் விசாரிக்கவும்

" சார் மாடு ஃபிட் இல்லனு சொல்றேன் கேட்க மாட்டிக்கிறாங்க... ஊர் தலைவர் மாடுன்னு சொல்லிச் சத்தம் போடுறாங்க" என்றான்.

"வளர்கிற எங்களுக்கு தெரியாதா சார், காளை ஜல்லிக்கட்டு சரியா இருக்குமா? இருக்காதானு?  பார்த்து பார்த்து வளர்கிறோம் சார், சும்மா ஒன்னும் இல்ல, ஆண்டாண்டு காலமாக, ஜல்லிக்கட்டுக்கு மாட்டை அனுப்புறவிங்க நாங்க,  சும்மா இன்னைக்கு வந்திட்டு ஃபிட் இல்லங்கறாரு.. இவர் சரியா பார்க்கல சார்... நீங்க வேணா  மறுபடியும் சோதித்து பாருங்க..., ஃபிட் இல்லேன்னா நான் கூட்டி போயிடுறேன் ..." தைரியமாக பேசும் மயிலினி மேல் மேலும் மையல் கொண்டான் மாதவன்.


அவளது பேச்சு , திமிர் ,தைரியம் அவனை மேலும் கவர்ந்தது அவளை பார்த்திருந்தவன், சரவணனின் அழைப்பில் மீண்டான், "சார்..."என்று அருகில் சென்றான். "டெஸ்ட் பண்ணுங்க மாதவன்..." என்றார்.


அவனும் மாட்டின் அருகில் சென்று பரிசோதனை செய்தான்... எல்லாம் சரியாக இருந்தது... "சார் மாடு ஃபிட் தான் ..." என்றான். சரவணன் ராஜாவை முறைக்க, அவனோ தலைகுனிந்து நின்றான்.

"சாரிமா, இதுபோல இனி நடக்காது,  மாட்டுக்கு சான்றிதழ் வாங்கிட்டு போமா..." என்று ராஜனை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். செழியனும் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்... 


சான்றிதழில் கையொப்பமிட்டு மயிலினியிடம் கொடுத்தான்..."  ரொம்ப நன்றிங்க, அந்தப் பெரிய சார் கிட்டையும் நன்றி சொன்னேன் சொல்லிடுங்க..." என்று அங்கிருந்து கிளம்ப,

"ஒரு நிமிஷங்க..." என்றதும் திரும்பி அவனை பார்த்து புருவங்கள் உயர்த்தி என்னவென்று கேட்க,

"உங்க காளை அடக்கறவன தான் நீங்க கட்டிப்பீங்களாமே உண்மையாங்க..."  என்று கேட்டவனை வித்தியாசமாக பார்த்தவள், "ஆமாங்க, என் அழகன யார் அடக்கறாங்களோ அவங்களை தான் கட்டிப்பேங்க..." என்றாள்.


"ஏங்க உங்க உறுதி மொழியை மறுபரிசீலனை செய்யக் கூடாதா? "பட்டென்று கேட்க,"ஏன்?" என்பது போல அவனை பார்த்தாள்.


"உங்கள எங்க அம்மாக்கு மருமகளாக்கலாம் தான். கொஞ்சம் உங்க முடிவை எனக்காக மாத்திகலாமே!" வெளிப்படையாக அவன் தன் காதலைச் சொல்ல, கண்கள் இடுங்க அதிர்ச்சியுடன் பார்த்தாள் மயிலினி..

© All Rights Reserved