...

10 views

தளைந்தேன் உன்னில் எம்மயிலே
மயில் 1


தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;மணி புரை உருவின காயாவும்; பிறவும்;   5அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,

-முல்லைக்கலி 101, கலித்தொகை

கார் மழை பொழிந்து ஈரம் பட்டிருக்கும் நிலத்தில் முன்பு காய்ந்திருந்த புதர்களில் அரும்பு விட்டுப் பூத்த பிடவம், கள்ளுண்டு கிடப்பவன் போல நிலத்தைத் தடவிக்கொண்டு துடுப்புப் போன்ற இதழ் கொண்டதாய் முறுக்கிக்கொண்டு பூத்திருக்கும் கோடல், மணி நிறத்தில் பூத்திருக்கும் காயா, மற்றும் சில வகைப் பூக்களையும் கண்ணியாகக் கட்டித் தலையில் அணிந்துகொண்டு மைந்தர் புகுந்தனர். 


******************************************************


தனது பெட்டியில், ஒரு வாரத்திற்கு தேவையான ஆடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவன் வெளியே தன் அன்னையின் குரலை புறக்கணித்து விட்டு, அவர் பேச்சுக்கு மதிப்பளிக்காமல் தன் வேலையில் கண்ணாக இருந்தான் மாதவன்.


"ஏங்க நான் இவ்வளவு பேசிட்டு இருக்கேன், இவன் பாட்டுக்கு துணி எடுத்து வச்சிட்டு இருக்கான்... அப்ப போகணும் முடிவு பண்ணிட்டானா? இவன் எப்போ கால் நடை டாக்டரா ஆனானோ அப்போ இருந்து பொங்கலுக்கு வீட்லே இருக்கிறது இல்ல. குடும்பமா குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வச்சிட்டு வரலாம் பார்த்தா, இவன் பிடியே கொடுக்க மாட்றான். நீங்களாவது ஏதாவது சொல்வீங்க பார்த்த, அமைதியாக  இருக்கீங்க... குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்தால் கண்டிப்பா இவனுக்கு ஒரு நல்லது நடக்கும்ங்க... நீங்களாவது  பேசி லீவு போட சொல்லுங்க... "  இந்த  முறையாவது பொங்கலுக்கு குடும்பத்தோடு சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வந்தால், மாதவனுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் கத்திக் கொண்டும்  கெஞ்சிக் கொண்டும் இருக்கிறார் காமாட்சி. ஆனால் அப்பனும் மகனும் பாவம் அவருக்கு பிடியே கொடுக்காமல் தன் போக்கில் இருக்கின்றனர்


"என்ன புள்ள நீயி, சும்மா கத்திட்டு இருக்க?அவன் என்ன கூட சுத்தற பசங்க கூட ஊர் சுத்தவா போறான்.  என் மவன் அரசாங்க, வேலை பார்க்கிறான் டீ, அவன பிடிச்சி லீவு போட சொல்ற, 
நம்ம குல தெய்வ கோவிலுக்கு தானே இன்னொரு நாள் போயிக்கலாம், இப்ப அவனை போவ விடு, சும்மாத்தேன் கத்திட்டு இருக்க..." என்றார் சலிப்பாக,


"அதானே, உங்க டாக்டர் பிள்ளைய விட்டு கொடுக்க மாட்டீங்களே, என்னமோ போங்க " என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டார் காமாட்சி.


தன் அறையிலிருந்து பொட்டியை  நகர்த்திக் கொண்டு வந்தவன்... தன்  தாயை பார்த்து பெரு மூச்சு விட்ட படி தன் தந்தையை பார்க்க, அவரோ மீசையை நீவி விட்ட படி சிரித்து கொண்டிருந்தார்.


"காமு, ப்ளீஸ் இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காத, அப்றம் என்னால்  ஒர்க்ல கான்சென்ரெஷன் பண்ண முடியாது... இது கவர்மெண்ட் ஆடர், நான் போய் தான் ஆகணும்... ப்ளீஸ் புருஞ்சுக்கோ. என் வேலை சீக்கிரமா முடிஞ்சதுன்னா, பொங்கலுக்குள்ள
வர பார்க்கிறேன், ப்ராமிஸ் ..." என்று அவர் முன் அமர்ந்து சமாதானம் செய்தவன்,  தலைக்கு மேல் கையைவைத்து சத்தியம் செய்ய,  அதனை எடுத்து விட்டவர், "பொய் சத்தியம் பண்ணாதடா எனக்கு பிடிக்காது..." என்றார் உடனே சிரித்து விட்டான்.

தன் பிள்ளையை அறியாதவரா? பொங்கலுக்கு பத்து நாள் முன் செல்பவன், பொங்கல் முடிந்தது தான் வருவான்...  ஜல்லிக்கட்டிற்காக  தயாராகும் காளைமாடுகளை எல்லாம் பரிசோதித்து விட்டு, சரியான மாடுகளுக்கு மட்டுமே சான்றிதழ்  கொடுக்கும் வேலை அவனுக்கு...  அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில், உள்ளூர் மாட்டுகளை
எல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும், அந்தக் காளைகளுக்கு சான்றிதழ் வழங்கவேண்டும்... அதை வைத்து கொண்டு தான் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று டோக்கன் வாங்க முடியும் இந்த மாட்டுகார்கள்... இந்த முறையில் மதுரையில் அலங்காநல்லூரில்  நடக்கும் ஜல்லிகட்டிற்கு  செல்ல இருக்கும் காளைகளை  பரிசோதிக்க செல்லவேண்டும். மதுரையில்  அரசு கால்நடை மருத்துவமனையில் வேலை செய்வதால் மாதவன் செல்ல வேண்டிய கட்டாயம்... ஜல்லிகட்டு முடியும் வரை அங்கு தான் இருக்கு வேண்டும்  அரசாங்க ஆணை.


"சரி மா பொய் சத்தியம் பண்ணல...  ஆனா பொங்கல் முடிஞ்சு வந்ததும்  குல தெய்வ கோவிலுக்கு போகலாம், உன் இஷ்டப்படி பொங்கலும் வைக்கலாம் ... அப்ப நான் எதுவும் சொல்ல மாட்டேன். டீலா?"அவர் முன்  கட்ட விரலை நீட்டிக் கேட்க, அவரும் அதற்கு சம்மதமாய் கட்ட விரலை காட்டினார்.


"மை செல்ல காமு... " என்று நெற்றில் இதழ் பதித்தான்... " சித்தப்பா, மாடு பிடிக்க போறீயா?" உள்ளிருந்து வந்தான் சர்வேஷ், மாதவனின் அண்ணன் மகன்.

"யாரு உன் சித்தப்பன்னா? அப்டியே பிடிச்சிட்டாலும்... பேராண்டி, உன் தாத்தனுக்கு இருக்க வீரம் கூட உன் அப்பனுக்கும் சித்தப்பனுக்கும்  இல்லடா.
நானுந்தேன் சொல்லிட்டுகிடக்கேன் ஜல்லிக்கட்டுல கலந்துட்டு ஒரு மாட்டையாவது அடக்குங்கடான்னு பயலுக கேக்குறாய்ங்களா? உன் தாத்தன் எல்லாம் எம்முட்டு காளைகளை
அடக்கிருக்கேன் தெரியுமா?"  என்று மீசையை பெருமையாக  முறுக்கி கொண்டார்.

அவர் மடியிலிருந்த சர்வேஷ் குட்டியும், அவரது மீசையை இழுத்து விளையாடினான்.

"இவருக்கு வேற வேலை இல்ல, காளை அடக்கு கன்ற அடக்குன்னு...  காளையோட கொம்பு  வயித்த கிழிச்சு எத்தனை பேர் உயிருக்கு போராடிட்டு  இருந்தாங்க தெரியுமா சிலர் செத்தும் போயிருக்காங்க... அப்டி உயிரை கொடுக்கிற இந்த விளையாட்டு தேவையா?  இதுல தமிழ் நாட்டு பாரம்பரிய விளையாட்டு வேற கொடி பிடிக்க ஒரு கூட்டம்... உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுப்பா..." என்று சலித்து கொண்டான்.

"மாதவா,  நீ ஒரு டாக்டராக இருக்கனால, மாட்டை பத்தியும் மனுஷனை பத்தி படிச்சவன்றனால அப்படித்தான் பேசுவ. நான் நம்ம பாரம்பரியத்தோடு ஒன்றி வாழ்ந்தவேன் அந்த விளையாட்டோட முக்கியத்துவத்த  தெரிஞ்சத்தினால பேசறேன்... ஐந்திணையில் முல்லை நில மக்கள், ஆயர்கள் சொல்லுவோமே அவங்க உருவாக்கிய விளையாட்டு தான் இந்த சல்லிக்கட்டு


காளையை அடுக்கிற வீரனை தான் அந்த ஆயர் குல பெண்கள் கல்யாணம் செய்வாங்க. "ஏறுதழுவுதல்"  பெயரில இந்த வீர விளையாட்டு வச்சு காளை அடக்கறவன் தான் ஆம்பளைன்னு  ஆயர்குல பெண்கள் நம்புவாங்க..

அதே போல சிறந்த காளை எது தேர்ந்தெடுத்து பசு மாட்டோடு ஓட விட்டு,  நல்ல ஆரோக்கியமான கன்று குட்டிகளை ஈன்ற வைப்பாங்க .. நீ மாட்டு டாக்டர் தானே, மாட்டை பத்தி படிச்சா மட்டும் போதுமா? பாரம்பரியம் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா? அப்றம் இந்த விளையாட்டுல  மட்டும் தான் உயிர் போகுமா? மத்த விளையாட்டு எல்லாமே பாதுகாப்பான விளையாட்டா? நீ  தெனமும் குத்துச் சண்டை பார்க்கிறீயே! அது என்ன பாதுகாப்பான விளையாட்டா? அது அவிங்களுக்கு வீர விளையாட்டுன்னா, இது நம்மூர் வீர விளையாட்டு டா" என்றவரை பேசி ஜெயிக்க முடியாது என்று எண்ணி,

"சரி சரி போதும் உங்க பிலாசபி,நான் கிளம்பிறேன் .. பை மா, பை பா, பை சர்..."  தன்பெட்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.


வேதநாயகம் காமாட்சி தவப்புதல்வர்கள் தான் மதுசூதனன் , மாதவன்... மதுசூதனன் தனியாக கண்ஸ்டருக்ஷன் கம்பெனியை நடத்திக்கொண்டு வருகிறான். அவனது மனைவி சினேகா இல்லத்தரசி, மகன் சர்வேஷ் எல்.கே.ஜி படிக்கிறான். மாதவன்,  அரசு கால்நடை மருத்தவர். அளவான அன்பான குடும்பம்.  இருபத்தாறு வயது நெருங்கி தன் இரண்டாவது மகனுக்கு காமாட்சி  வரன் பார்க்க,  எல்லாம் தட்டி கழிந்து கொண்டே போனது... அதற்காக தான் குல தெய்வ கோவிலுக்கு சென்று  பொங்கல் வைத்தால் அவனுக்கு நல்லது நடக்கும் என்று எண்ணம்  கொண்டார் காமாட்சி. ஆனால் அவன்தான் பிடிக் கொடுக்காமல் வேலை வேலை என்று வேலையை கட்டி அழுகிறான்... இந்த முறை  அலங்காரநல்லூரில்  வேலை என்பதால் கிளம்பிவிட்டான்.


"கருவா பயலே!  என் அழகன வச்சிட்டு பொம்பல புள்ள முன்னாடி சீன போடுறீயே நீயி?  சீக்கிரம் மேட்டுக்கு கூடிட்டு வா டா... எவ்வளவு நேரம் நீச்சல் அடிக்க விடுவ? " கரையில் நின்றவாறு கத்திக் கொண்டிருந்தாள் மயிலினி. நம் கதாநாயகி.


"யக்கோ, இந்த வருசமாச்சி,  உன் அழகு புண்ணியத்துல ஒரு கல்யாணத்த பண்ணிபுடலாம் பார்த்த விட மாட்றீயே நீயி... உன் அழகன என்ன பண்ணிப்புட்டோம் கரையில் நின்னு இந்தக் குதி குதிக்கிற நீயி..." என்று அழகேந்திரன் என்னும் காளையை, மூக்கணங்கயிறை பிடித்து இழுத்து குளத்திலிருந்து வந்தான் கருப்பன்.

ஜல்லிக்கட்டுக்கு செல்ல இருக்கும் நம் அழகேந்திரனுக்கு, குளத்தில் நீச்சல் பயிற்சியும் மண்ணை முட்டும் பயிற்சியை கொடுப்பது வழக்கம்...

"ஏன்டா, உனக்கு அந்த ஆசை வேற இருக்கா? தெனமும் இவன நீ இங்க கூடிட்டு வரும்போதே நெனச்சேன், ஏதோ இருக்குமு-ண்டு. ஆமா யாருடா அந்தப்புள்ள? "  என்று கேட்டவாறே கயிறை அவனிடம் வாங்கியவள், துணி துவைத்து கொண்டிருக்கும் மகளிர் கூட்டத்தை காட்டி கேட்டாள்.

அவனும் தலையை சொறிந்தவாறே "அந்தச் சிவப்பு பாவாடைக்காரி அக்கா..." என்று வழிந்தான்.

"யாருடா, நம்ம கறிக்கடை செந்தில் மாமா பொண்ணு மாதிரி தெரியுது... அந்த புள்ளயாடா ?" என்றவள் உற்று நோக்கியவள் கேட்க, "ஈஈஈஈ.... ஆமா அந்தப் புள்ளதேன்க்கா..." என்று அப்பட்டமாக  வழிந்தான் கருப்பன்.


"சரித்தேன், நீ காதலிக்கிறது அந்தப் புள்ளைக்கு தெரியுமாடா? " காளையின் மூக்குணாங்கயிறை நன்கு கையில் சுருட்டி கொண்டாள். "அந்தப் புள்ளையும் என்னைய விரும்புதுக்கா..."

" எவனாவது ஊர்கார பயலுக, பார்த்து அவ அப்பாக்காரன் கிட்ட சொல்லிட போறாய்ங்கடா, அப்றம் என் கறிக்கடை மாமன் உன் தோலை உறிச்சி ஊருக்கு படையல் போட்டுவாரு. சட்டு புட்டுன்னு வீட்ல பேசி கண்ணாலத்தை முடி ..." என்று அவன் காதலுக்கு  அறிவுரை கூறினாள்.

"ஐயா கிட்ட சொல்லித்தேன் பேச சொல்லனும்க்கா, ரெண்டு பேரும் ஒரே சாதின்றனால மாமா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரு-ண்டு நம்பிக்கையில தான்க்கா, நானும் அவளும் இருக்கோம் " என்றான் பெருமூச்சு விட்டபடி.

"டேய் கருப்பா, சாதிய மட்டும் நினைச்சிட்டு பொண்ணு கொடுபாரு- ண்டு கிடக்காத, மொதல்ல நல்ல வேலைக்கு போயி சம்பாரி டா, அப்பத்தேன் என் மாமன் உனக்கு பொண்ணு கொடுப்பாரு..." என்று முன்னே நடந்தாள்.

"சரித்தேன் கா, நானும் பக்கத்துல இருக்க, பேக்டரில வேலைக்கு கேட்டிருகேன்கா, இரண்டு நாள் கழிச்சி வர சொல்லிருக்காய்ங்க,  போகணும் கா..." அவனும் பின்னே நடந்தான்.

"கையில சோலி இருந்தா போதும் டா,  தைரியமா போயி பொண்ணு கேட்கலாம்... மொதல்ல வேலய கையில் வாங்கு, நானும் அப்பாகிட்ட சொல்லி பேசுறேன்..." இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர். 


அவர்கள்  பின்னே டுபு டுபு டுபுவென வண்டி சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். அங்கே பத்து விரலிலும் மோதிரங்களை மாட்டிக் கொண்டு, கழுத்தில் தடித்த செயினை போட்டுக்கொண்டு வெள்ளை வேட்டி அணிந்து, இரண்டு பட்டனை கழற்றி விட்டு,  மைனர் கணக்காக, புல்லட்டில் வந்து கொண்டிருக்கும் மகேந்திரனை கண்டு  முகம் சுளித்தாள் மயிலினி. அவளுடன் வரும் கருப்பனை ஒரு பார்வை பார்க்க, அப்பார்வைக்கு பயந்து பின்னால் ஒதுங்கி நின்றான்.


"ஏன் டீ , மாமன் கூட ஊர் சுத்தாம, சல்லி பயிலோடேல்லாம்  ஊர் சுத்திட்டு கிடக்க, மாட்டை அவன்கிட்ட கொடுத்து வாடீ மாமன் உன்னை ஜம்மு-ண்டு வண்டியில் இறக்கி விடறேன்..." அவளிடம் கேட்டவாறே,  அவளது வேகத்திற்கு ஈடாக வண்டியை ஓட்டி வந்தான்.


"ஜம்மு-ண்டு  உன் வண்டியில வர, நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல, பேசமா போறீயா..." பதிலளித்து விட்டு வேற புறம் திரும்பி கொண்டாள்.

"என் அயித்த மக, எனக்கு பொண்டாட்டி இல்லாம வேற என்னவாம்? கண்ணாலம் பண்ணாதேன் பொண்டாட்டி எவன் டீ சொன்னான்? மாமன் உன்னை பொண்டாட்டி யா நெனச்சி உள்ளாற வாழ்ந்திட்ருகேன் டீ... உம்மு- ண்டு மட்டும் சொல்லு, சீர் செனத்தோட வந்து பொண்ணு கேக்க வாறேன் டீ... " என்று திமிரோடு பேசும் அவனை கண்டு எரிச்சலுற்றவள் அவன் புறம் திரும்பி, " சீர் செனத்தொட வரது இருக்கட்டும், மொதல்ல இதோ நிக்கிறானே என் அழகேன் அழகேந்திரன வடிவாசல்ல அடக்கி ஜெய்ச்சிட்டு வா,  அப்றம் உன் வண்டியில் பொண்டாட்டியா ஜம்முண்டு வாறேன் மாமோய்..."  என நக்கல் சிரிப்பில் மொழிபவளை கண்டு கடுப்பானவன்,

" என்ன டீ நக்கலா? ஏன் என்னால உன் அழகன அடக்க முடியாதுங்கறீயா?" என்று காலரை தூக்கி விட்டு கேட்டான்.

"போன முறை வாடிவாசலுக்கு போவேன் பார்த்தா, நீ சோலிண்டு  டவுனுக்குள்ள  மறைஞ்சுது எனக்கு தெரியாது நெனக்கிறீயா? பயந்தாங்கோழியாட்டம்  என் அழகன பார்த்து பயந்துபுட்டு, இப்போ என்னை பார்த்ததும் வீரமா பேசறீயா நீயி?"
 

"வாய் கொழுப்பு கூடிருச்சு டீ உனக்கு,  உன்னை கல்யாணம் பண்ணிட்டு அடக்கிறேனா?  இல்லையா-ண்டு பார்றீ..." என்று பல்லை கடித்து வண்டியை முறுக்கினான் " மொதல்ல என் அழகன அடக்கு, அப்றம் என் வாய் கொழுப்ப அடக்கு மாமோய்..." எனக் கேலி செய்து சிரித்து கொண்டே முன்னே நடந்தாள்.


"அடக்கிறேன் டீ, மொதல்ல இந்த கறுத்த பிசாசை கசாப்பு கடைக்கு அனுப்புச்சிட்டு உன்னை அடக்கிறேன் டீ..." என்று கொரூரமாய் எண்ணிக் கொண்டு பறந்து விட்டான்.


"யக்கா, இதுவும் உன்னை கட்டிக்க ரொம்ப காலமா  உன் பின்னாலே அலஞ்சுட்டு கிடக்கு. ஆனால் நீ அதுக்கு  மசியிற மாதிரி தெரியலயே...!"

"நான் ஏன் டா இந்தாளு கிட்ட மசியனும்? என் அழகன எவன் அடக்குறானோ , அவன் கிட்ட தாண்டா  நான் மசிவேன்... என் அழகன அடக்கிறவன் தான் என் வீரன். அவனை தான் டா கண்ணாலம் பண்ணிப்பேன்... அந்த வீரனை என் அழகேந்திரன் தான் எனக்கு காட்டுவான்" என்று நெற்றியை வருடிக் கொடுத்து முத்தம் வைத்தாள்.

அதுவோ அப்டி யாரும் என்னை அடக்க வரப்போவதில்லை என்பது போல  கெத்தாக, அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்தது  புளியங்குளம் வகையை சேர்ந்த அழகேந்திரன்...

© All Rights Reserved