...

13 views

பிரதோஷ வழிபாடு


புதன்... பிரதோஷம்... நரசிம்மர் வழிபாடு..!!


பிரதோஷம் என்பது சிவ வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான நாள். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்னதாகவும், பௌர்ணமிக்கு முன்னதாகவும் திரியோதசி திதியானது வரும். இந்த திரியோதசி திதி நாளையே பிரதோஷம் என்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷம் ஆதி பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வார பிரதோஷம் என்றும், புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவார பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவார பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வார பிரதோஷம் என்றும், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி (நாளை) புதன்கிழமையும், பிரதோஷமும் இணைந்திருக்கும் புதவார பிரதோஷத்தில் என்னென்ன செய்யலாம்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு கிழமைகளில் வருகிற பிரதோஷமும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவு செல்வம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்களும் பெருகும். அந்த 16 செல்வங்களையும் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.

பிரதோஷத்தில் சிவனாருக்கும், நந்திதேவருக்கும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும் விமர்சையாக நடைபெறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்த நேரத்தில் அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் மாலை வேளையான பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில், பிரதோஷத்துக்கு தொடர்பு கொண்ட அவதாரமாக திகழ்வது ஸ்ரீநரசிம்ம அவதாரம். காலையும் இல்லாமல், இரவும் இல்லாமல் இருக்கும் நேரத்தில்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. மனித உருவாகவும் இல்லாமல், மிருக உருவாகவும் இல்லாமல், மனித உடலும் சிங்க முகமும் கொண்டு நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம்.

அப்படி சில மணித்துளிகளில் நிகழ்ந்த அவதாரம் ஒரு பிரதோஷத்தில், பிரதோஷ வேளையில் நிகழ்ந்தது என்கிறது புராணம்.

எனவே, பிரதோஷம் என்பது சிவனுக்கு முக்கியமான பூஜைக்கு உரிய நாள் என்பது போலவே, நரசிம்ம மூர்த்திக்கும் முக்கியமான நாள். ஆகவே, பிரதோஷத்தின் போது சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது போல, நரசிம்மருக்கும் பு+ஜைகள் நடைபெறும். நரசிம்மரை பிரதோஷத்தன்று தரிசிப்பது இன்னும் மகத்தான பலன்களைத் தரும்.

குறிப்பாக, புதன்கிழமை நரசிம்மருக்கு விசேஷம். புதன்கிழமை அன்று வரும் பிரதோஷம் என்பது இன்னும் மகத்துவம் மிக்க நாள். புதன்கிழமையும், பிரதோஷமும் இணைந்திருக்கும் நாளில் நரசிம்மரின் சன்னதிக்கு சென்று துளசி மாலை சார்ற்றி வேண்டிக்கொள்ளலாம். முடிந்தால் பானக நெய்வேத்தியம் செய்து வணங்கலாம்.

புதவார பிரதோஷத்தில் நரசிம்மரையும், எம்பெருமானையும் வழிபட 16 வகையான செல்வங்களும் பெருகும்..!!