...

7 views

என்னவன்
அன்றும் சூரியன் வழக்கம் போலதான் உதித்தது. ஆனால் ஜனனி சற்று முன்னரே விழித்துக்கொண்டாள். வழக்கம்போல தொற்றிக்கொண்ட பரபரப்பு ஏனோ அவளுக்கு வழக்கத்துக்கு மாறாக தோன்றியது. புன்னகை பூத்த முகத்துடன் குளிர்ந்த நீரில் முகம் அலம்பி வெதுவெதுப்பான நீர் அருந்தி புறப்பட ஆயத்தமானாள். அன்றாடம் அணியும் பருத்தி புடவை இன்று டிராக் சூட்டாக மாறி இருந்தது. காலுக்கு அணியும் மெட் ப்ளஸ் செப்பல் இன்று ஸ்போர்ட்ஸ் ஷூவாக அவள் கால்களில் பொருந்தியது. எப்போதும் கட்டும் டைட்டன் வாட்ச் ஃபிட்னஸ் வாட்ச் ஆனது. மொத்தத்தில் அன்று ஜனித்த சூரியன் மட்டுமே அதே சூரியன், ஜனனி புது ஜனனி.

புறப்பட்டு வெளியே வந்தவள் ஒரு வினாடி கார் பைக் இரண்டு சாவியையும் உற்று பார்த்தாள். ஏதோ நினைத்தவளாக பைக் சாவியை எடுத்துக் கொண்டு சத்தமின்றி தன்னிடம் இருந்த இன்னொரு சாவி கொண்டு வீட்டை பூட்டி புறப்பட்டாள். அதிகாலை நேரம் ஆள் ஆரவாரமற்று ஒரு சில வாகனங்கள் மனிதர்கள், சில நாலு கால் பிராணிகள் தவிர அவள் பயணத்துக்கு இடையூறாக எதுவும் இல்லை.

கடற்கரை சாலையை நெருங்கும் போது கொஞ்சம் கை விட்டு வாகனத்தை ஓட்டும் ஆசை எட்டிப்பார்த்தது நல்ல வேலையாக பக்கத்தில் இன்னொரு வாகனம் வந்து அந்த ஆசையை தற்காலிகமாக தள்ளிப்போட்டது. நடைபாதை தாண்டி ஜனனி தனது வாகனத்தை உட்புறசாலையோரம் நிறுத்தியவள், உடனே நடக்க துவங்காமல் அங்கிருந்த கல் நாற்காலியில் அமர்ந்தாள். தூரத்தில் அலைகள் அவளை கண்டு சற்று உற்சாக மிகுதியில் துள்ளி குதிப்பது போல் இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது தேர்ச்சி அடைந்ததாக செய்தி வந்ததும் அவள் அந்த அலை போல் தான் துள்ளினாள். இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. மற்ற பெண்கள் மதிப்பெண் கண்டு கண்ணீர் வடிக்க இவளோ தேர்ச்சி பெற்றதையே கொண்டாடினாள்.

ஆரஞ்சு நிறத்தில் கதிரவன் மேலெழும்பி நின்ற போதும் அவளுக்கு நடைபயிற்சி தொடங்க தோன்றவில்லை. பக்கத்தில் கேட்ட அலைபேசி குரல் கல்லூரி நண்பன் விதர்வாவை நினைவுபடுத்தியது. விதர்வா வேற்று மொழி மாணவன் கொஞ்சம் அதிக அறிவு, அடக்கம், ஆற்றல், பேச்சுத்திறன் மிக்கவன். ஜனனி விதர்வாவின் பரம ரசிகை. ஒருநாளிலும் அவனுடன் சேர்ந்தார் போல் இருவார்த்தை பேசியதில்லை ஆனாலும் அவனை பற்றிய அனைத்து விவரங்களும் அவள் விரல் நுனியில். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவில் அவனை கண்டபோது அடக்கமாட்டாமல் அவனிடம் போய் பழங்கதை பேசத்துவங்க அவனோ இவளை பற்றி எதுவுமே தெரியாதவன் போல் விழித்து பார்க்க அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் பாதி விழாவில் திரும்பி விட்டாள். விதர்வா இவளை அறியாதவன் போல் நடிக்கவில்லை உண்மையில் அவனுக்கு இவளை பற்றி தெரிய வாய்ப்பில்லை அப்படி ஒரு சூழ்நிலை இவர்களிடையே உருவாகவும் இல்லை.

மெல்ல தலையை சிலுப்பி ஒரு பெருமூச்சுடன் விதர்வாவின் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தாள். தன் மனநிலையை சமன் செய்ய சுற்றிலும் நடக்கும் விஷயத்தில் அவள் கவனத்தை செலுத்த அவள் பார்வை வட்டத்தில் வந்து நின்றான் ‘ஸ்ரீ’ என்று அவள் வாழ்கையில் அதிகம் அழைத்த ‘ஸ்ரீராம்’. அதுவரை உறங்கி கிடந்த அவள் உடலின் அத்தனை செல்லும் பரபரப்பாக வேலை செய்யத்துவங்கியது. அங்கிருந்து அதிவேகமாக நகரத்துவங்கிய அவள் கால்கள் தன்னால் நின்றது. காரணம் அவள் ஸ்ரீ, இரண்டு தேனீர் கோப்பைகளுடன் அவள் எதிரில் நின்றுகொண்டிருந்தான். உடலின் மொத்த வலுவும் இழந்தவளாய் துவண்டு அந்த கல் நாற்காலியில் அமர அவனும் ஒன்றும் சொல்லாமல் அவள் அருகில் அமர்ந்து கோப்பையை அவளிடம் நீட்டினான்.

சற்று தயக்கத்திற்குப் பின் அந்த கோப்பையை வாங்கி சுவைத்தவள் அவளுக்கு மிகவும் பிடித்த இஞ்சி டீ கொஞ்சம் சர்க்கரை தூக்கலாக. “அதிர்ச்சிக்கு சர்க்கரை நல்லது அதனால் கொஞ்சம் அதிகம் போடச் சொன்னேன்’ என்றான். அவன் வார்த்தைகளில் இருந்து அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை அவளால் உணர முடியவில்லை.

அவள் தேனீர் பருகி முடிக்கும் வரை காத்திருந்தவன் போல் அவள் கோப்பையை கீழே வைத்ததும் “கடமைகள் அனைத்தும் முடிந்ததா என்றான்” அவளிடமிருந்து பதில் வராது போகவும் மெல்ல அவள் பக்கம் திரும்பியவன் அவள் கண் கலங்கி அமர்ந்திருப்பதை காண சகிக்காமல் தன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

கல்லூரி முடித்து வீட்டுக்கு நுழைந்தவுடன் அவள் ஜாதகம் தூசு தட்டப்பட்டது வந்த முதல் வரன் ஸ்ரீராம். ஜானகி போல் ஜனனிக்கும் ஸ்ரீராம் மை கண்டதும் பிடித்திருந்தது. அதற்கு தோதாக இருவர் ஜாதகமும் பொருந்தி போக அடுத்த முகூர்த்தம் திருமணம் ஆனது, வெளியே அவனை மரியாதையுடன் அழைத்தாலும் அவர்களுக்குள் பேசும் போது அவள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்று மந்திரம் போல் உச்சரிப்பாள். ஒரு நல்ல அலுவலகத்தில் அவளுக்கு வேலை கிடைக்க, குழந்தை என்று ஒன்று வரும் வரை வேலை. பின்னர் வேலையை விட்டுவிடுவது அதுவரை அவளின் சம்பளம் அவளின் பிறந்தவீட்டுக்கு தருமாறு அவன் பெருந்தன்மையுடன் சொன்னது அவர்கள் வாழ்க்கையில் புயல் வீச காரணம் ஆனது,

மருமகன் அல்ல என் மகன் என்று மாமியார் புகழ, மைத்துனர் மைத்துனி நீங்கள் எங்கள் தந்தை போல என்று இன்னும் ஒரு படி மேலே சென்றார்கள். எல்லாம் நன்றாகத்தான் சென்றது. அவன் அவளின் அலமாரியில் கருத்தடை மாத்திரை பார்க்காதவரை. காணாமல் போன கைக்கடிகாரம் தேடி அவளின் தனிப்பட்ட அலமாரியை அவன் புரட்டிப்போட அவன் காலடியில் வந்து விழுந்தது அந்த மாதம் வாங்கப்பட்ட ரசீதுடன் அந்த மாத்திரை அட்டை.

அன்று மாலை ஒரு அழுத்தத்துடன் அமர்ந்த கணவன் தோளை அவள் ஸ்ரீ என்று தொட முயல அவள் கண் முன் நீட்டப்பட்டது அந்த மாத்திரை அட்டை. சில நொடிகள் திகைத்தவள் சொன்னால் புரிந்து கொள்வான் என்று நினைத்து தம்பி தங்கை வாழ்க்கைக்காக என்று சுருக்கமாக சொல்ல. ஒன்றும் பேசாமல் தன் துணிகள் அடங்கிய பெட்டியுடன் புறப்பட்டு சென்றான். கணவன் தன்னை பிரிந்து செல்கிறான் என்பதை அவள் உணரவே அவளுக்கு சற்று நேரம் பிடித்தது. அதன் பின் பலமுறை முயன்றும் அவன் அவளுடன் பேசவில்லை. சமரசம் செய்யச்சென்றவர்களுடனும் அவன் பேசவில்லை. சில மாதங்கள் கழித்து அவன் வேறு நகரத்திற்கு மாற்றலாகி சென்ற விபரம் மட்டும் கிடைத்தது.

தன் வாழ்க்கை இனி அவ்வளவே என்ற முடிவிற்கு வந்தவள் தன் தம்பி தங்கைக்காக வாழ துவங்கினாள். இதோ இப்போது ஐம்பதை தொடும் வரை ஓட்டம் ஓட்டம் ஓட்டம் தான் . நேற்று விருப்ப ஓய்வு தந்து இன்று முதல் கொஞ்சம் சுதந்திர காற்றை சுவாசிக்க வந்தவள் முன் வந்து நிற்கின்றான் ஸ்ரீ.

விதர்வா தன்னை யார் என்றே தெரியாது என்று சொன்னது போல் இன்று ஸ்ரீ சொல்லி இருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது. ஆனால் அவன் அவளுக்கு பிடித்ததை வாங்கி தந்து அவள் அருகில் அமர்ந்து பேசிகொண்டிருக்கிறான்.

சற்று இயல்பு நிலைக்கு திரும்பியவள் அவனிடம் தன் தம்பி வெளி நாட்டியில் பணிபுரிவதும் தங்கை திருமணமாகி இருபிள்ளைகளுடன் இருப்பதையும் தன் தாயார் மறைந்து ஒரு சில மாதங்கள் ஆனதையும் தெரிவித்தாள். மிக சாதாரணமாக கேட்டுக்கொண்டிருந்தவன் “நீ” என்றான். அதுவரை விழி விளிம்பில் அடங்கி இருந்த கண்ணீர் துளிகள் ஒரு சின்ன கேவலுடன் வெளியே வந்து விழுந்தது. அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

வரும்போது இருந்த மகிழ்ச்சியில் ஒரு துளி கூட இல்லாமல் வடிந்துவிட. எப்படியோ தன் இருசக்கர வாகனத்தை வாசலில் விட்டு வீட்டுக்குள் செல்லாமல் தோட்டத்தில் சென்று அமர்ந்தாள். ஒரு கல் போல் மாறிய இதயம் இன்று அவனை கண்டு கரைந்து கண்ணீர் சிந்தியதை அவளால் நம்ப முடியவில்லை. புதிதாக மொட்டுவிட்ட ரோஜா அவளை பார்த்து புன்னகை பூத்தது. மனதின் பாரம் குறைந்தது போல இருந்தது. சட்டென்று அவளுக்கு தான் ஸ்ரீ குறித்து எதுவும் தெரிந்து கொள்ளவில்லையே என்று தோன்றியது. நிச்சயம் வேறு திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். அந்த நினைப்பே கசப்பாக இருந்தது.

கதவை திறந்து வெளியே வந்தாள் அந்த வீட்டின் நிரந்தர பணியாள் கற்பகம். “அம்மா தேனீர் சாப்பிடுங்க” வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி சுவைத்தவள் அப்படியே அதிர்ச்சியில் எழுந்து நின்றாள். இது ஸ்ரீ போடும் தேனீர் சுவை. வேகமாக கற்பகத்தை தள்ளி உள்ளே சென்றவள் அங்கே புன்னகையுடன் நிற்கும் கணவனை கண்டதும் இடம் பொருள் பார்க்காமல் கட்டி அணைத்துக்கொண்டாள். பின் தொடர்ந்து வந்த கற்பகம் தலை குனிந்து உள்ளே செல்ல, ஜனனியை சற்று நேரம் ஆறுதல் படுத்தி, ஸ்ரீ பேசத்தொடங்கினான். “ ஒரு கோபத்தில் தான் இங்கிருந்து கிளம்பிச் சென்றேன். பின்னர் யோசித்து பார்த்தபோது நானாக உனக்கு கொடுத்த சுதந்திரத்தை நீ கொஞ்சம் அதிகமாக உபயோகப்படுத்திக்கொண்டாய் என்று தோன்றியது, மனதில் பிளவுடன் இருவரும் சேர்ந்து வாழ்வதை விட உன் கடமைகள் முடியும்வரை காத்திருக்க முடிவு செய்தேன். கற்பகம் அவளாக இங்கு வேலைக்கு வரவில்லை அவளை இங்கு உனக்கு காவலாக அனுப்பியது நான் தான். உன் தாயார் இறந்தவுடன் வர நினைத்தேன் ஆனால் நீ பணியில் இருந்ததால் என் வரவு உனக்கு பிடிக்காமல் போகலாம் என்று தோன்றியது. நீ விருப்ப ஓய்வு பெற்றதும் தாமதிக்காமல் வந்து சேர்ந்தேன்” என்றான்.

தனக்காக இத்தனை ஆண்டுகள் தன் நினைவுகளுடன் வாழ்ந்து தன்னை பற்றியே யோசித்து வந்தவனை அவள் மலைப்புடன் பார்த்தாள். இனி நமக்கு எந்த தடையும் இல்லை வா உலகம் சுற்றி வரலாம். ஏழை குழந்தைகளுக்கு இலவச பாடம் சொல்லலாம், முதியவர்களுக்கு சேவை செய்யலாம் உன் ஆசைகள் என்னென்னவோ அனைத்தையும் வாழ்ந்து பார்க்கலாம் என்று அவன் உற்சாகத்துடன் பேசிகொண்டே போக அவனின் தோள்களில் சாய்ந்து கண்மூடி கிடந்தாள் அவள். இப்போது இது மட்டுமே போதும் என்ற மன நிலையில்.

kumuda Selvamani
#கும்ஸ்
© Meera

Related Stories