...

3 views

தண்ணீர்
"ப்ரியா இங்கே பார்! சாடியில் நட்டு வைத்த காசித்தும்பைச் செடியெல்லாம் வாடிப்போய் உள்ளதை....."

"ஐயோ! இதற்கு யாரும் நீர் பாய்ச்சவில்லையா?
எங்கே  இந்த மேரி? "..... கத்தினாள்.

மேரி அவர்கள் வீட்டு வேலைகளை பார்த்துப் பார்த்து செய்யும் அன்பான ஆயா. எவ்வளவு திட்டினாலும் சிரித்துக் கொண்டே தன் பாட்டில் வேலைகளைச் செய்யும் ஒரு இனிய தாய் போன்றவள்.

"இந்தா. அவசரமாக இந்த நீரை ஊற்று. சிறிது நேரத்தில் அவை நிமிர்ந்து விறைப்பான தோற்றம் பெறும்." சச்சின் தண்ணீர் போத்தலை நீட்டினான்.

ப்ரியா மெதுமெதுவாக தண்ணீரை சாடிக்குள் ஊற்றினாள். அதன் இலைகளை தன் கைவிரல்களால் தடவி விட்டாள்.

ப்ரியாவுக்கு மலர்ச்செடிகள் மேல் அலாதிப் பிரியம். அவள் மேல் மாடியில் அவள் அறைக்கு வெளியே உள்ள பல்கனியில் அழகான பூக்களை பூக்கும் விதவிதமான மலர்ச்செடிகளை சாடியில் நட்டு வளர்த்து வருகிறாள்.

அவள் இரண்டு நாட்கள் ஸ்கூல் டூர் போய் வந்ததில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றக் கிடைக்கவில்லை. வீட்டில் உள்ள ஏனையோருக்கும் அந்த விஷயம் மறந்து விட்டது.
"என்ன ப்ரியா! ஏன் கத்துகிறாய்? "அடுத்த வீட்டு நான்சி கேட்டுக் கொண்டே படிகளில் மேலே ஏறி வந்தபடி கேட்டாள். அவள் பின்னாலேயே அவள் தம்பி ஜேம்ஸ் உம் துருதுருவென்ற சுட்டித்தனமான பார்வையுடன்......பத்து வயதில் எதையும் அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ளும் துடிதுடிப்பான ஒரு கேரக்டர்.

இல்ல நான்சி, எனது மலர்ச்செடிகளுக்கு  நீர் ஊற்றாததால் எல்லாம் வாடிப்போய்விட்டது. கவலையும் கோபமும் கட்டுப்படுத்த முடியாமல்  கத்திவிட்டேன்.

"ஏன் ப்ரியாக்கா!  தண்ணீர் ஊற்றா விட்டால் செடிகள் வாடி விடுகின்றன?" ஜேம்ஸ் கேட்டான்.

"தாவரங்கள் விறைப்பான நிமிர்ந்த தோற்றத்தை பெற நீர் தான் காரணம். தாவரங்களின் உடலில் 90% நீர் காணப்படும். நீரின் அளவு குறையும் போது விறைப்பு தன்மை குறைவதால் வாடுகின்றன."

தாவரங்களின் உடலில் ஏன் நீர் குறைகின்றது?

"தாவரங்களின் உடலினுள் பல்வேறு அனுசேபத் தாக்கங்கள் நடைபெறும்.அதற்கு நீர் பயன்படுத்தப்படும். மற்றும் பகல் நேரத்தில் நீர் ஆவியாகி வெளியேறும். இதனால் தாவரங்களின் உடலில் உள்ள நீரின் அளவு குறையும்."

" ஆமாம். பகல் நேரத்தில் தாவரங்களின் உடலில் இருந்து நீர் ஆவியாகி வெளியேறும் செயற்பாடு 'ஆவியுயிர்ப்பு 'எனப்படும் ." என்றான் சச்சின்.

"எனக்கு ஒரு சந்தேகம். அப்போ பெரிய மரங்கள் ஏன் வாடுவதில்லை?" ஜேம்ஸ் கேட்டான்.

ஆமா!..... சச்சினும் ஆச்சரியம் காட்டினான்.

"சிறிய புல் பூண்டு மற்றும் செடிகள் நிமிர்ந்து விறைப்பான தோற்றம் பெற நீர் தான் காரணம்.
ஆனால் பெரிய மரங்களில் வன்மையான இழையங்கள் காணப்படுவதாலும் அவற்றில் இலிக்னின் படிவுகள் காணப்படுவதாலும் அவை எப்போதும் விறைப்பாக உள்ளன." நான்சி கூறினாள்.

" மற்றும் அவற்றின் வேர்த்தொகுதிகள் மண்ணினுள் ஆழமான நீர் காணப்படும் பரப்பு வரை ஊடுருவி இருப்பதால் அவற்றுக்கு நீர் எந்நேரமும் இயற்கையாகவே கிடைத்த வண்ணம் உள்ளது. எனவே அவற்றின் உடலில் உள்ள நீரின் அளவு ஆவியுயிர்ப்பு நிகழ்ந்தாலும் குறைவதில்லை." தொடர்ந்து விளக்கம் அளித்தாள் ப்ரியா.

"நீர் எதனால் ஆனது ? " ஜேம்ஸ் இன் தேடல் ஆரம்பமானது.

"சொன்னால் இவனுக்கு புரியுமா? " ப்ரியா தயங்கினாள்.

"சொல்லு சொல்லு. அவனுக்கு எல்லாம் புரியும். " நான்சி உற்சாகமூட்டினாள்.

"நீர் ஐதரசன் என்ற மூலகமும் ஒட்சிசன் என்ற மூலகமும் சேர்ந்து உருவாகியுள்ளது."

"அப்போ நீரின் பெயர் HO  வா?..." ஜேம்ஸ் இன் கேள்விக்கு நான்சிக்கு சிரிப்பு வந்தது.

"இல்லடா பையா! ஐதரசன் இரண்டு அணுக்களும் ஒட்சிசன் ஒரு அணுவும்  சேர்ந்து  உருவானதால H2O என்று சொல்வாங்க."  என்றாள் ப்ரியா.

"நீரின் இரசாயனப் பெயர்  Dihydrogen monoxide ஆகும்.  இதை நான் இணையத்தில் வாசித்தேன் "என்றாள் நான்சி.

"பனிக்கட்டியும் நீர் தானே? "மீண்டும் ஜேம்ஸ் வினவினான்.

"ஆமாம். அதிலென்ன சந்தேகம்? ஆனால் நீரின் திண்ம நிலையை நாம் பனிக்கட்டி என்கிறோம்."
சச்சின் கூறினான்.

"அப்போ நீர் என்ன நிலை?" குறுக்கு கேள்வி கேட்டான் ஜேம்ஸ் .

"நீர் திரவ நிலையில் உள்ளது. நீரின் வாயு நிலையை நாம் நீராவி என்று சொல்கிறோம். " என்றாள் ப்ரியா.

"நீரின் வாயு நிலையான நீராவியில் தான் இயக்கசக்தி அதிகம். " ....அதனால் தான் அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நீரைக் கொதிக்க வைத்து வெளியேறும் நீராவியின் சக்தி மூலம் டைனமோவின் சுழலியைச் சுற்றவைத்து மின் உற்பத்தி செய்கிறார்கள்."  நான்சி விளக்கம் சொன்னாள்.

"நீரின் கொதிநிலை என்ன? "சச்சின் கேட்டான்.

"100 °C ." ( பாகை செல்சியஸ்) என்றாள் ப்ரியா.

"அது கெல்வினில் 373.15K " என்றாள் நான்சி.

"அது என்ன கெல்வின்?" ஜேம்ஸ் முகத்தில் ஆவல்.

"வெப்பநிலையை அளவிட பயன்படுத்தும் சர்வதேச அலகு ( SI unit) கெல்வின் (Kelvin) ஆகும்." ப்ரியா சொன்னாள்.

"நீரின் உருகுநிலை 0°C தானே? "சச்சின் கேட்டான்.

"ஆமாம். பனிக்கட்டி உருகி நீராக மாறும் வெப்பநிலை. அது கெல்வினில் 273.15 K ஆகும்."
என்றாள் நான்சி.

"ஏன் நெருப்பின் மீது நீரை ஊற்றினால் நெருப்பு அணைகிறது? " ஜேம்ஸ் இன் வினாவைக் கேட்டு சச்சின் தடுமாறினான்.

" நீருக்கு சில இயல்புகள் உள்ளன. அதில் ஒரு இயல்பு தான் 'குளிர்த்தும் இயல்பு ' . அதனால் தான் நெருப்பின் மீது நீரை ஊற்றினால், நீரின் குளிர்த்தும் இயல்பு காரணமாக எரிபொருளின் சூடு தணியும். இதனால் நெருப்பு அணையும். "  ஜேம்ஸின் கேள்வி ஞானத்தை கண்டு புன்னகைத்தவாறே பதில் சொன்னாள் ப்ரியா.

"கொஞ்சம் பொறுங்கள். நான் ஒரு விஷயம் காட்டுகிறேன். " என்று சொல்லி விட்டு உள்ளே ஓடினான் சச்சின்.

கையில் ஒரு டிசு பேப்பரும்,  துளிசொட்டியும் ஒரு குவளையில் நிறமூட்டிய நீர் சிறிதளவும் எடுத்து வந்து மேசையில் வைத்தான்.

டிசு பேப்பரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறநீர் இரு துளிகளை துளிசொட்டியினால் (dropper ) இட்டு அவதானிக்கச் சொன்னான்.

சிறிது நேரத்தில் நிற நீர் அது இட்ட இடம் மட்டும் இன்றி ஏனைய இடங்களுக்கும் பரவியது.

"வெரி குட். நீர் பரவிச் செல்லும் இயல்பைக் கொண்டது என்பதை சுருக்கமாக ஒரு எளிய பரிசோதனை மூலம் காட்டி விட்டானே! இந்தப் பொடிப்பயல். உனக்குள் ஒரு ஆற்றல் உள்ளது." என்று மெச்சினாள் நான்சி.

நீரானது மீன்கள், ஜெலிபிஷ் , நட்சத்திரமீன்கள், திமிங்கிலம் நீர் நாய், கடல் சிங்கம், இறால், தயற்றங்கள், அல்காக்கள், நீரில் வாழும் தாவரங்கள் போன்ற அங்கிகளுக்கு வாழிடமாகவும் காணப்படுகிறது.

படிகளில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

மேரி இவர்கள் நால்வருக்கும் நீண்ட கண்ணாடிக் குவளையில் பனிக்கட்டிகள் மிதக்க மிதக்க ஆரஞ்சு ஜுஸ் கொண்டு வந்து மேசையில் வைத்தாள்.

அனைவரும் மேரிக்கு நன்றி கூறிவிட்டு தாகத்திற்கு நன்றாக உள்ளது என்றவாறு சுவைத்துப் பருகினர்.

ஜேம்ஸ் சிறிது உறிஞ்சி விட்டு, "ப்ரியாக்கா! பனிக்கட்டி ஏன் ஜுஸில் மிதக்கின்றன? பனிக்கட்டியும் நீர் தானே? ஜுஸிலும் நீர் தானே உள்ளது. " என்று இன்னும் ஒரு சந்தேகத்தை கேட்டே விட்டான்.

"ஆமாம். தண்ணீரில் பனிக்கட்டியை இட்டாலும் மிதக்கிறது. எனக்கும் அது ஏன் என்று தெரியாது . காரணத்தை இன்று தெரிந்து கொள்ளாமல் விடமாட்டேன். சொல்லு சொல்லு......" அவசரப்படுத்தினான் சச்சின்.

" எந்த ஒரு பதார்த்தத்திற்கும் அடர்த்தி என்று ஒரு இயல்பு உள்ளது. அதை பாரமானதன்மை என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். " என்று ஆரம்பித்து வைத்தாள் நான்சி.
"ஆமாம். அது பனிக்கட்டியை விட நீருக்கு அடர்த்தி அதிகம். பொதுவாக அடர்த்தி கூடிய திரவத்தினுள் அடர்த்தி குறைந்த பொருளை இடும் போது அது மிதக்கும்." என்றாள் ப்ரியா.

"ஏன் இரண்டும் நீர் தானே?  அதன் பௌதீக நிலை மட்டும் தானே வித்தியாசம்....? புரியவில்லை...."
ஜேம்ஸ் கேட்டான்.

"உங்களுக்கு புரியுமோ தெரியாது. பெரிய வகுப்பில் தான் இதையெல்லாம் பற்றி சொல்லித் தருவார்கள்.
ஆனாலும் சொல்கிறேன். நீர் திரவ நிலையில் உள்ள போது நீர் மூலக்கூறுகளுக்கிடையில் ஒரு வகை விஷேட பிணைப்பு ஒன்று உள்ளது. அதனை ஐதரசன் பிணைப்பு என்று சொல்வார்கள். அதன் காரணமாக நீரின் அடர்த்தி பனிக்கட்டியின் அடர்த்தியை விட அதிகமாக உள்ளது." சொல்லிவிட்டு சிரித்தாள் ப்ரியா இந்த விஷயம் இவர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது என்று எண்ணி.....

"நீரின் அடர்த்தி (density) எவ்வளவு?" சச்சின் கேட்டான்.

" 1000kgm-³  அதாவது ஒரு கனமீற்றர் நீரின் திணிவு 1000kg ஆகும் " என்று எடுத்துச் சொன்னாள் நான்சி.

"அப்போ பனிக்கட்டியின் அடர்த்தி எவ்வளவு?" ஜேம்ஸ் கேட்டான் .

எனக்கு தெரியாது. கொஞ்சம் இருங்கள்.  கூகுளில் ஸேர்ச் பண்ணி சொல்கிறேன். ஃபோனில் பட்டன்களை பட்பட்டென்று அழுத்தினாள் ப்ரியா.

கழுத்தை நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சச்சின் " 917kgm-³ " என்று கத்தினான்.

"யெஸ். 1000 ஐ விட 917 குறைவு தானே? கொஞ்சம் விளங்குகிறது. "ஜேம்ஸ் திருப்திப் பட்டுக் கொண்டான்.

"அப்பாடா! புரியாவிட்டால் விடமாட்டானுகள் இந்த வாலு இரண்டும். " பெருமூச்சு விட்டாள் ப்ரியா.

"எமது உடலில் ஓடும் குருதியில் அதிகளவு காணப்படுவது நீர் ஆகும். கிட்டத்தட்ட 55% காணப்படும் குருதித்திரவவிழையத்தில் 90% நீர் தான் உள்ளது. அதாவது வளர்ந்த ஒருவரின் உடலில் கிட்டத்தட்ட 5 L  குருதி காணப்படும். அதில் 2.475L  நீர் தான் உள்ளது. " நான்சி எமது உடலுக்கும் நீருக்கும் உள்ள தொடர்புகளை விபரிக்க ஆரம்பித்தாள்.

" நிறைய பதார்த்தங்கள் நீரில் கரைவதால் நீர் ஒரு சிறந்த கரைப்பான் என்றும் சொல்கிறார்கள்." என்றாள் ப்ரியா. 

"ஆமாம். சவர்க்காரம், கறியுப்பு, சாயங்கள், எண்ணெய் தன்மை அற்ற அழுக்குகள் என்பன நீரில் கரைகின்றன. " நான்சி நினைவுபடுத்தினாள்.

"ஆனால் தேங்காய் எண்ணெய் கரையாது. எண்ணெய் வகைகள் கரைவதில்லை." என்றான் ஜேம்ஸ்.

"அதற்கு பெரிய காரணம் உண்டு. அதை விளக்க முன் இரசாயனவியல்  பற்றி நீங்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாள் அதைப் பற்றி சொல்கிறேன்." என்றாள் ப்ரியா.

" ஏன் கண்ணு இம்பூட்டு நேரமும் நம்மட தாகத்த தீர்க்கிற தண்ணிய பத்தியா பேசிக்கிறீங்க? அது மூனு நாளைக்கு கிடைக்காட்டி நம்மோட உசிரு போயிடுமுல்ல "  வசந்தி டீச்சர் ஒரு நாள் சொல்லிச்சு"  என்று இவ்வளவு நேரமும் வாசலை 'மொப் ' பண்ணியவாறு இவர்களின் கதைக்கு காது கொடுத்துக் கொண்டிருந்த மேரி தனக்கு தெரிந்ததைச் சொன்னாள்.

"வாவ்! மேரிக்கும் நீரின் பயன்கள் பற்றி தெரியுமா? "
சச்சின் ஆச்சரியம் அடைந்தான்.

ஏன் கண்ணு! நாம தாகத்திற்கு குடிப்பதற்கு, துணி துவைப்பதற்கு ,  பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு,  அழுக்குகளை அகற்றுவதற்கு, ஏம்புள்ள! கரன்டு செய்யவும் தண்ணி வேணுமில்ல?  மேரியின் பேச்சில் மயங்கி ஆ.... என்று கேட்டுக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்.

"ஆமாம். ஓடும் நீரிலிருந்து நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் மொத்த மின் உற்பத்தியில் 31.5%  ஓடும் நீரிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளாவிய ரீதியில் 16 % மின்சாரம் ஓடும் நீரில் இருந்து  உற்பத்தி செய்யப்படுகிறது." என்றாள் ப்ரியா.

"ஓகே. பசிக்கிறது. வாங்க கீழே போவோம். அம்மா கட்லட் சுடும் வாசணை மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பி விட்டது. "என்று சொல்லியவாறு படிகளில் தடதடவென இறங்கி ஓடினான் சச்சின்.
பின்னால் அனைவரும் தொடர்ந்தனர்.

                                   *********************
© siriuspoetry