...

12 views

உனக்கென இருப்பேன்
'ம்மா' செல்லமாய் சிணுங்கி அழைத்த மகனின் குரலுக்கு இவளுக்கு மட்டுமே அர்த்தம் தெரியும். கவனிக்காதது போல் மாலில் மறுபுறம் இருந்த கடை நோக்கி சென்றேன். செல்ல வேண்டிய கடை இருக்கும் திசைக்கு எதிர்ப்புறம் நான் நடக்க காரணம் அந்த மீன் தொட்டி கடை.

அதுவரை மகிழ்ச்சியுடன் கரம் கோர்த்து வந்த சுதிர் வாடிய மலர் போல் முகம் கொண்டு அமைதியாக பின்னே வந்தான்.

ஒருவகையில் அவன் செயலில் என் தாய்மை பூரிப்படைந்தது. எதையும் வேண்டுமென்று அடம் பிடித்து சாதிக்கும் குணம் அவனுக்கில்லை

மகனின் முகம் கண்டால் மனம் மாறிவிடும் என்ற‌ பயத்தில் எதையோ வாங்குவது போல் துணிக்கடையில் நுழைந்து அவனிடம் சில ஆடைகள் குறித்து பேசி பின் எதுவும் வாங்காமல் வெளியேறினேன். மால் விட்டும்..

நீண்ட நேர காத்திருப்பிற்கு வந்த பேருந்தில் நல்லவேளை அவ்வளவு கூட்டம் இல்லை இரண்டு ஸ்டாப்பில் எனக்கும் அவனுக்கும் இடம் கிடைத்து விட. அமைதியாக என் அருகில் அமர்ந்தான்.

மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தேன். அதில் வருத்தத்திற்கான சாயல் சிறிதும் இல்லை. அவன் கேட்டு நான் மறுத்த தங்க மீன் தொட்டியை இப்போது பெரும் பாரமாக என் இதயத்தை அழுத்தி சில ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி கொண்டிருந்தது.

'அந்த gold fish என்ன விலை' இரண்டு கரங்கள் ஒரே தொட்டி நோக்கி நீள கடைக்காரர் சற்றே திகைத்து போய் பார்த்தார். ஆறடி உயரமும் அகன்ற தோள்களும் கோதுமை நிறமும் ராணுவ விரனின் மிடுக்கில் நின்றவனுக்கு சொந்தமான கரம் ஒன்று.

நீண்ட கூந்தலுக்கு ஆர்ப்பாட்டம் இல்லா அலங்காரமும் உறுத்தாத அழகும் கொண்ட இவளுக்கு சொந்தமான குரல் மற்றொன்று.

மீன் தொட்டி எங்கே மற்றொருவருக்கு போய் விடுமோ என்ற பதட்டம் இருவர் முகத்திலும் தெரிந்தது.

அவசரமாய் அவன் ஓரடி முன் வந்து. மன்னிக்கவும் இந்த தொட்டியை நான் வாங்கி கொள்ளவா என் தங்கையின் பிறந்த நாள் இன்று. இப்போது தான் ராணுவ விடுமுறையில் வருகிறேன் வேறு எதுவும் வேண்டாம் தங்க மீன் தொட்டி தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாள்‌ நீங்கள் கொஞ்சம் விட்டு தந்தால்... "

அவன் உருவத்திற்கும் அவனின் அந்த பணிவுக்கும் சற்றும் பொருந்தாத நிலையில் இவள் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தர. அவன் மகிழ்வுடன் அதை வாங்கி புறப்பட்டான்.

தோழிக்கு வேறு பரிசு பொருள் வாங்கி அன்று மாலை மற்ற தோழிகளுடன் அவள் வீட்டுக்கு செல்ல அங்கே அவளை முதலில் வரவேற்றது காலை தங்க மீன் வரம் கேட்ட பக்தன்.

ஆம் தோழிகளிடம் நடந்ததை அவள் அப்படித்தான் சொல்லி இருந்தாள். அவனை பார்த்த மாத்திரத்தில் இவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவனோ உடனே சுதாரித்து அனைவரையும் வரவேற்று உபசரித்தான்.

கிடைத்த இடைவெளியில் "ஓ.... ஒருவேளை நான் வாங்க தவறியிருந்தாலும் மீன் தொட்டி என் தங்கைக்கு தான் வந்திருக்கும் போல" என்றதும் இவள் சிரித்து ஆமோதித்து சகஜமாய் பேசத்துவங்க.

அந்த மூன்று மாத விடுமுறையில் அவனும், அவளும் அவர்களாக மாறினார்கள். எல்லோருக்கும் பிடித்து திருமணம் நிச்சயம் செய்து அழகாய் மணமுடித்து அன்பாய் வாழ்ந்து மகன் பிறந்த செய்தி அறிந்து. அடுத்த விடுமுறையில் வருவதாக அவன் அனுப்பிய கடிதம் வாங்கி படித்து அந்த மீன் தொட்டி அருகில் வைக்க போகும் போது தான் கவனித்தாள். மீன்கள் உயிரற்ற சடலமாய் மிதப்பதை.

மனதை ஏதோ பிசைய பாலுக்கு அழும் மகனை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தவளை தடுத்து நிறுத்தியது தொலைபேசி அழைப்பு.
எதிரி முகாமின் தாக்குதலில் இவளின் அன்பான கணவன் காணமல் போன விபரம். மயங்கி சரிந்தவளின் வாழ்க்கை இன்னும் தெளிவில்லை.

இந்த ஏழு ஆண்டுகளில் மீண்டும் அவன் வரப்போவதில்லை என்ற முடிவுக்கு அனைவரும் வந்த போதிலும் அதை தெரிவிக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

மகனின் உருவில் கணவனை கண்டு போராட்டமான வாழ்க்கையை கடந்த போதிலும் சுதிர் சமீபகாலமாக இந்த தங்க மீன் வளர்க்க ஆசைப்படுவது அவள் மனதில் இனம் புரியாத கலக்கத்தை உண்டாக்கி வருகிறது.

அன்று சுதிர் பிறந்த நாள் அவனை அத்தையிடம் விட்டுவிட்டு அவன் பிறந்தநாளுக்கு பரிசுகள் வாங்கி கொண்டு ஆனது ஆகட்டும் என மீன் தொட்டி வாங்க கடைக்கு வர. அங்கே தங்க மீன் தொட்டியின் அருகில் கண்கள் பலபலக்க நின்று கொண்டிருந்தான் அவளின் அன்பானவன்.

நொடிப்பொழுதில் அனைத்தும் இருளாக. தாவி வந்து அவளை தாங்கி பிடித்தவன் ஓரிடத்தில் அமர வைத்து அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டே மீண்டு வந்த விபரம் சொன்னான்.

பெரிய விபத்தில் சிக்கி அனைத்தும் மறந்து எல்லையில் ஒரு பெரிய மனிதர் வீட்டில் பணிபுரிந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் திரும்பப்பெற்று இன்று வீடு வந்தால் நீ மகனுக்கு பரிசு வாங்க சென்றதாக கூறினார்கள் ‌." நீண்ட நாட்களாக அவன் மீன் தொட்டி கேட்டதும் நீ வாங்கி தர மறுத்ததும் தெரிந்தது அதனால் தான் இங்கே வந்தேன். "

மீண்டும் நாம் சந்தித்த அதே நிகழ்வில் நம் வாழ்க்கை தொடங்குகிறது இந்த முறை உன்னை விட்டு நொடி நேரமும் பிரியமாட்டேன் என்று சுற்றம் மறந்து அணைத்துக்கொண்டான் அவன்...

#கும்ஸ்
kumuda Selvamani
© Meera