...

18 views

பொய்....(நன்றி... குமுதம்)
இது... குமுதம் இதழில் நான் எழுதிய சிறுகதை....
சுருக்கமாகத் தருகிறேன்...

அந்த பத்தாம் வகுப்பு ஆசிரியர் பெரிய பக்தி மான்....
கோயில்
குளம் என்று சொன்னால் கண் மூடித்தனமாக நம்பக் கூடியவர்...

அதைத் தமக்கு சாதகமாக
பயன்படுத்தி வெளியூர் கோயிலுக்குப் போவதாகச் சொல்லி மாணவர்கள் பலரும் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள்...

அதேபோல் செய்ய எண்ணி
ஒரு மாணவன் பழனிக்குப் போவதாகச் சொல்லி விடுமுறை கேட்க..
ஆசிரியர் சம்மதித்து விட்டார்...

சில விநாடிகள் கழித்து...
அந்த மாணவனை அழைத்தார்...

அவன் கையில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் கொடுத்தார்...

" இந்தக் காசுல... ஒரு விபூதி பாக்கெட்... ஒரு பஞ்சாமிர்தம் டப்பா வாங்கு... மிச்சத்தை உண்டியல்ல போட்ரு..."
என்று சொல்லி நிறுத்தியவர்...
சற்றே குரலை உயர்த்தி
அதிகார தொனியில்..........
ஆணையிடும் பாணியில் இப்படிச் சொன்னார்

"டேய்.... வாங்குறது சரி ...
ஆனா... ரெண்டுமே தேவஸ்தானக் கடைல வாங்கணும்...வேற...வெளிக்கடைல வாங்கிட்டு வந்த....அப்ப நா என்ன செய்வேன் னு எனக்கே தெரியாது "...

அவர் சொல்லச்சொல்ல...
இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்...

"என்னடா...நா சொல்றது...புரிஞ்சதா?

அவர் குரலில் இருந்த கடுமை
அவனை நிஜமாகவே பயமுறுத்தி விட்டது...
தேவையில்லாமல் பொய் சொல்லி மாட்டிக் கொண்ட பீதியில் அவன் முதுகுப்பக்கத்தில் சட்டை வியர்வையில் நனைந்து கொண்டிருந்தது...

"புரியுது சார் " என்றான்
மெலிதான குரலில்...
அவனனையுமறியாமல் 'முருகா'.. என்று அரற்ற....
முருகன் அவனைப் பார்த்து
கேலியாய்ச் சிரிப்பது போல் உணர்ந்தான்...

© வேல்முருகன் கவிதைகள்