...

9 views

02 இலியிச்
இலியிச் தன் மது அருந்தும் நேரத்தை திட்டமிடுவது மிகவும் நேர்த்தியான ஒன்று. அவன் நிச்சயமாக மாலையில்தான் குடிக்க துவங்குவான் என்பதை பைரவேல் சொல்லி இருந்தான். இறக்குமதி செய்யப்பட்ட நீர் நிறம் கொண்ட ஸ்வீடிஷ் வோட்கா அவனுக்கு பிரியம்.

"கற்பனை சுகத்தில் திரியும் ஆன்மா தன்னை மது மூலம் துலக்கி தூய்மை செய்வதை நான் எந்த இறை வழிபாட்டிலும் காண முடியவில்லை" என்பான்.

எப்போதும் இலியிச்சின் கண்ணீரை காண முடியாது என்றாலும் அவன் முன் நான் அடக்க முடியாத துக்கத்துடன் இருப்பேன் என்று பைரவேல் சொன்னபோது எனக்கு கொஞ்சம் துக்கமாக இருந்தது.

இலியிச் அப்போது என்னவெல்லாம் பேசுவான் என்று துளைத்து பைரவேலிடம் நான் கேட்பேன்.
"யாரிடமும் இருக்கும் தவிர்க்க முடியாத உன்னதமான அந்த ஒன்றுதான் கேட்பாரற்று மழுங்கி போய் இருக்கிறது. அதை மனிதன் தன்னைத்தவிர எல்லாவற்றிலும் தேடிக்கொண்டே இருக்கிறான்" என்பான். அது அறிவா மனசாட்சியா என்று கேட்க ஆசைப்படுவேன். கடும் போதையில் இருந்ததால் கேட்டேனா என்பதும் நினைவுக்கு தெரியவில்லை என்றான் பைரவேல்.

நான் கிடைத்தவரையில் யோசித்து பார்ப்பேன். இலியிச் ஒரு கனமான வார்ப்பு கொண்ட பாத்திரம் அல்ல.

நிறைய விரிசல் விட்ட ஒரு கண்ணாடி. அவன் தன்னை ஒரு புதிர் போல் பிறருக்கு காட்டி கொள்வதை ரசிக்க மாட்டாதவன்.
"புத்தகங்கள் வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும். ஆனால் வாழவிடாது" என்பதை சொல்லவே நான் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறான்.

'மனசாட்சி ஒரு புராதன குறியீடு. பற்றற்ற நம்பிக்கைகளை உதறிவிட்டு கீழ்த்தரமான ஆசைகளுடன் போராடிக்கொண்டே இருக்கும் பாஷை. நாம் அவைகளின் வெறும் இவர்கள் மட்டுமே' என்று பைரவேலுக்கு சொல்லி இருக்கிறான்.


ஒருநாள் மாலையில் வாடை காற்று வீசும்போது மது அருந்த சென்றேன். அன்று மெல்லிய தூறல். நான் "இலியிச் வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேட்டபோது 'வாழ்க்கை உன்னைப்பற்றி என்ன நினைக்கிறது' என்று கேட்டான்.

நான் மௌனமாகி குடிக்க ஆரம்பித்தேன். எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் அன்று காரணமின்றி அத்துடன் முடிந்தும் போனது.

பைரவேல் சென்னையில் ஓர் பேராசிரியர் பணியில் சேர்ந்த பின் இலியிச் ஒரு முறை போய் அவனை பார்த்து விட்டு வந்தான் என்றார்கள்.

© sparisan