...

9 views

01. இலியிச்
இது நாவலோ கதையோ அல்ல என்பதை வாசிக்கும்போதும் சிந்திக்கும்போதும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

புரிந்து கொள்வதாலும் அல்லது மறுத்து எதிர்வினை செய்வதாலும் என்னால் எந்த பதிலையும் இப்போது உடனடியாக சொல்லவும் முடியாது. காரணம் இதற்கான என் பயணம் அப்படிப்பட்டது.

நிற்கும் இடத்தில் இருந்து உடனே புறப்பட்டு தரை வழியாகவும் நீர்நிலை கடந்தும் எங்கெங்கோ நான் செல்வதற்கு ஆயத்தமாகி வருகிறேன்.

நான் இத்தனை வருடங்கள் கழித்து அவனை பற்றி கேள்விப்பட்டு விட்டேன். இப்போது எனக்கு அவன் இருக்கும் இடம் தெளிவாய் தெரிந்து போயிற்று.

தெளிவாய் தெரிந்தபின் உடனே கூடவே வரும் அதே குழப்பங்கள் எனக்கும் இப்போது வந்தது.

அவன் இன்னும் அங்குதான் இருப்பானா? அங்கு அவன் என்ன செய்கிறான்? எப்படி இருக்கிறான்? யாரோடு இருக்கிறான்?

அவன் பெயர் ராமசேஷன். நண்பர் வட்டாரங்களில் இலியிச் என்றுதான் அன்போடு அவனை அழைப்பார்கள்.

எனக்கு அவன் நண்பன். ஆனால் அவனுக்கு நான் நண்பனா என்பது இன்றுவரை தெரியவில்லை. சொல்லும்படி எதுவும் இல்லாத அவனிடம் நம்மைப்போல் துயரமும் மகிழ்ச்சியும் கூட அறவே இல்லாமல் இருந்தது.

அவனை பற்றியோ என்னை பற்றியோ பேசிக்கொண்டிருந்தால் அது சட்டென்று முடிந்து விடும். ஆக விஷயம் இனி அதுவாக இருக்க முடியாது.

மனிதரென்று யாரும் இல்லாத ஒரு தேசத்தில்தான் அவன் பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நான் நினைத்து கொள்வேன். ஆனால் அப்படி அவன் பிறக்கவில்லை. சதா மனதை உறுத்தி எடுக்கும் இந்த உலகில்தான் பிறந்தான்.

நாங்கள் பால்யத்தில் பழக்கம் இல்லை. இலியிச்'இன் பற்பல நண்பர்களில் மூன்று பேர் என் நண்பர்கள்.
அவர்கள் அவனைப்பற்றி பேசி விவாதிக்கும் நேரமெல்லாம் நான் கேட்டு கொண்டிருப்பேன்.

இலியிச் ஒருநாள் மதுரை புதூர் டீக்கடை ஓரமாய் தரையில் அமர்ந்து ஒவ்வொரு மாத்திரையாக இருபதுக்கும் மேல் சில மாத்திரைகளை விழுங்கி முடித்தபோது நான்கு டம்ளர் டீயை முழுக்க குடித்து முடித்திருந்தானாம்.

அன்றைய அந்த தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தபோது சபிக்கப்பட்ட வாழ்க்கையை மீண்டும் அவன் தொடர வேண்டி இருந்தது.

பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு மிகவும் பரிச்சயமான இன்னும் இலியிச்க்கு தொடர் சிகிச்சை அளித்து வரும் மனநல மருத்துவர்.

"நீ சாப்பிட்ட மாத்திரைகள் உடலில் பக்கவாதத்தை மட்டுமே உண்டாக்கும். இறப்பை அல்ல" என்று சொன்னபோது சிரித்தானாம்.

இப்படி என்னென்னவோ மனதுக்குள் இலியிச் பற்றி செதில் செதிலாக காட்சிகள் எனக்கு படமாய் ஓடும்.

ஒன்றுடன் ஒன்று எந்த தொடர்பும் இல்லாமல் சீர் இன்றி ஓட்டமும் நடையுமாக கற்பனையற்று இரைத்து பாயும் காட்சிகள்.

அவன் நூலகத்துக்கு ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது நான் எதிரில் வந்தேன். என் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். "வா போகலாம்" ஒரே வார்த்தைதான் என்னிடம் சொன்னான்.

இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.

"பாதைகள், வழிகள், இடங்கள், காட்சிகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. கடக்கிறோம் என்பதுதான் வாழ்க்கை".
இதை அவன் என்னிடம் சொன்னபோது மாலை ஆறு மணி இருக்கும். பதினேழு கிலோமீட்டர் தாண்டி நடந்து வந்திருந்தோம்.


பூமி சன்னமாய் தகித்து கொண்டிருந்த ஒரு மதியத்தில் "உன்னால் வெயிலை பிடித்து நசுக்க முடியுமா" என்று கேட்டான்.

அவனை அறிவுஜீவி என்றெல்லாம் சொல்ல முடியாது. இருந்தும் இலியிச் ஒரு கடுமையான எதேச்சாதிகாரத்தில் தன்னை குழப்பிக்கொண்டு இருக்கிறான் என்று அவன் நண்பர்கள் சொல்லிக்கொண்டனர்.


நான் அவன் பற்றிய எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அது எப்போதும் தேவையற்ற ஒன்று. எதையும் யாரையும் தீர்மானிக்க நான் யார்?



© sparisan