...

2 views

வேலி காத்தான்

அத்தியாயம் : 122

காரிருள் விண்ணை கவ்விக் கொண்டிருந்த நேரம். நிலவு பயத்தில் மேக கூட்டங்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது. நிசப்தம் குடி கொண்டிருந்த அந்த வேளையில் வீரகேசர நாட்டின் தளபதி உதிரனின் மாளிகை வெளிச்சத்தில் விழித்திருந்தது. எடுபிடி இரு கைகளையும் கட்டிக் கொண்டு பவ்வியமாக நின்று கொண்டிருந்தான். உதிரன் குறுக்கும் நெடுக்குமாக கோபா வேஷத்துடன் நடந்து கொண்டிருந்தான். அவன் முகம் கொதித்துப் போயிருந்தது. கண்கள் எரிமலைக் குழம்புகளாய் சிவந்து போயிருந்தன. எடுபிடி பயம் கலந்த தொனியில் உதிரனை நெருங்கி தளபதியாரே என்று இழுத்தபடி ஆரம்பித்தான். உதிரன் போதும் நிறுத்துடா என்று கோபத்தில் கொந்தளித்தான். எடுபிடி தலையை சொறிந்தவாறே தளபதியாரே! நாகன் இப்படி பழிவாங்குவான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எப்படியும் மல்யுத்தத்தில் அவனை வீழ்த்தி விடுவான் என்றே எதிர்பார்த்தேன். இப்படி வேரற்ற மரம் போல் சாய்ந்து விடுவான் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. நாகன் மட்டும் இப்போது என் கையில் கிடைத்தால் அவனை கண்டம் துண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இறையாக எறிந்து விடுவேன். அவன் மீது நான் வைத்திருந்த அத்தனை நம்பிக்கையையும் பொய்யாக்கி விட்டான் மூடன் என்றான் உதிரன். ஆவேசப்படாதீர்கள் தளபதியாரே நாம் ஒன்று நினைக்க நடந்தது வேறு ஒன்றாகிவிட்டது. மலை போன்ற நாகனை விண்ணிலே தூக்கி எறிந்து மண்ணிலே சாய்த்து விட்டான் அந்த பொடியன். உண்மையில் அவன் பலம் பொருந்தியவன் தான் தளபதியாரே. என்னடா சொல்கிறாய்? என் எதிரியை எனக்கு எதிரிலேயே புகழ்கிறாயா? உன்னை என் வாளுக்கு இறையாக்கி விடுவேன். ஆவேசமாக கத்தினான் உதிரன். கோபப்படாதீர்கள் தளபதியாரே! அவனது வீரத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவன் தங்கள் கையால் மடிய வேண்டும் என்பது விதியானால் யார் என்ன செய்ய முடியும்? என்னடா சொல்கிறாய்? ஆம் தளபதியாரே! அடுத்து அவன் வாள் சண்டையில் தங்களை அல்லவா சந்திக்க இருக்கிறான். செறிந்த வீரமும் சிறந்த விவேகமும், அனுபவமும் உள்ள தங்கள் முன் அவன் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்க போவது உறுதி. உதிரன் கண்களில் தீப்பொறி பறக்க, எடுபிடி! நானும் அந்த நாளை தான் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அவனது தலையை பனங்காய் சீவுவது போல் சீவி விடுகிறேன். எனது கூர்மையான வாள் அவன் நெஞ்சை பிளப்பது உறுதி என்றான்.

தொடரும்..
© VIGNU GHOUSIKA