...

25 views

என்னுயிர் துணையே - 6 & 7
துணை - 6

அதே நேரம் விஜய்யின் அறையில் அவனோ தூக்கமின்றி அமர்ந்து இருந்தான். வித்யா தூக்கத்தில் திரும்பி படுத்தவள் அமர்ந்து இருக்கும் விஜய் மீது இடித்து விட, தூக்கம் கலைந்திருந்தாள்.

" என்னங்க தூங்காம ஏன் உக்கார்ந்து இருக்கீங்க? "

"தூக்கம் வரல டா, நீ தூங்கு நான் தூங்கிப்பேன். "

" என்னாச்சுங்க.."

"சத்யா.. ஆளே மாறிட்டான் இல்ல? அவன் பையன் துறுதுறுன்னு.. அந்த பொண்ணு அனு எப்படி? நல்ல குணமா? சத்யா சந்தோசமா இருக்கானா? அவனை பார்க்கிற வரை எதும் தெரியல, பார்த்த அப்புறம் விலகி இருக்க முடியல. கடந்த எட்டு வருஷம் எனக்கு நிறைய சொல்லி கொடுத்து இருக்கு. "

" அப்ப அண்ணா கூட பேசுங்களே, அவரும் கண்டிப்பா பேசுவார், அவருக்கு உங்களை தெரியாதா? "

" வேண்டாம் வித்யா.. என்னால அவனுக்கு நிறைய காயம்.. அவன் இப்படி பொண்டாட்டி குழந்தைன்னு சந்தோசமா இருக்கிறது போதும். அனு பத்தி சொல்லேன்.. "

" அனு அண்ணி பக்குவமான பொண்ணு, ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர். இன்னிக்கி டின்னர் அப்போ ரெண்டு பேரும் உங்களை தான் கிண்டல் பண்ணி சிரிச்சாங்க தெரியுமா?"

" என்ன தைரியம் அவனுக்கு என்னை கிண்டல் பண்ண? நீயும் கேட்டு சிரிச்சுருக்க இல்ல..? "

" விஜய் சொன்னா நீங்களும் தான் சிரிப்பீங்க.. கேளுங்க.. "

அனு சொன்னதை எல்லாம் வித்யா விஜய்யிடம் கூற, அவனும் கேட்டு சிரித்து இருந்தான்.

" ரெண்டும் வாலுங்க.. " விஜய் புன்னகையுடன் முணுமுணுக்க, வித்யா கை விரித்து அழைக்கவும் அவளின் கைகளுக்குள் நிம்மதியாய் அடைக்கலமாகி உறக்கத்தை தழுவி இருந்தான்.

காலையில் அனு எழுந்து பார்க்க, சத்யா அவளின் கைப்பிடித்து அமர்ந்தவாக்கில் கட்டிலில் தலை வைத்து உறங்கி இருந்தான். அனு மெல்ல அவன் கையை விட வியாஷ் எழுந்து இருந்தான். மீமீ என தேடி அவளை கட்டிக்கொண்டவன், அவளை விட்டு கட்டிலின் கீழ் பார்க்க அங்கே அவனின் தகப்பன் இல்லாது போக,

" மீமீ பாபா எங்க? " சிறுவன் கேட்டதும், அவனை தூக்கி அவளின் இடதுபுறமாக காட்ட, சத்யா அமர்ந்தவாக்கில் கண்ணுறங்கி கொண்டு இருக்க, மெல்ல அவன் கன்னத்தில் முத்தம் வைத்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.. நான்காம் முத்தத்தில் கண்களை திறந்தவன் மெல்ல கழுத்தை பிடித்துக்கொண்டு எழுந்து மகன் முகம் பார்த்து புன்னகைக்க, அவன் மடிக்கு தாவி இருந்தான்.

" நான் தூங்கினதும் பெட்ல படுத்து இருக்கலாம் இல்ல மயிலு.. கழுத்து பிடிச்சு இருக்கும். நீ ரெஸ்ட் எடு.. நாளைக்கு வெளிய போவோம்."

" அதெல்லாம் பெருசா வலி ஒன்னும் இல்லடி கியூடி பை.. நீங்க ரெண்டு பேரும் ரெடியாகுங்க அது வரைக்கும் நான் ரெஸ்ட் எடுக்கிறேன். "

" வெளிய போறோமா? " யாஷ் கண் விரிந்து ஆவலாக கேட்க,

" ஆமா ஷாப்பிங் போறோம். அப்புக்குட்டிக்கு பொம்மை வாங்கிட்டு வரலாம்."

" பாபா ஜிஷ்ணுக்கும் பொம்மை.. "

" அவனுக்கும் தான்.. "

" இப்படி குழந்தையாவே இருந்து இருக்கலாம் பேபி.. " அனு சொல்லவும்,

" ஆ.. காலையில சோக சீன் ஓட்டாம போய் குளிடி என் சீனிக்கட்டி.. "

அனுவும் அப்புவும் குளியல் அறைக்குள் செல்ல, சத்யா கீழ் உள்ள படுக்கையை மடித்து வைத்து, டாக்சிக்கு அழைத்து சொல்லி விட்டு, கழுத்துக்கு தலையணையை கொடுத்து படுத்து கொண்டான்.

குளியலறையும் க்ளோசெட் என கூறும் உடை மாற்றும் அறையும் ஒன்றாய் இருக்க, அனுவும் அப்புவும் தண்ணீரில் ஆடி, விளையாடி, குளித்து, உடை மாற்றி வர, சத்யா இங்கே உறக்கத்தில் இருந்தான். வியாஷ் அவனை எழுப்பி விட கழுத்தை அசைத்து கொடுத்து விட்டு குளிக்க சென்றான். காலை மணி எட்டை தொட்டிருக்க, மூவரும் கிளம்பி கீழே வர, அவனை சிவா அழைத்தார்.

" சொல்லுங்க பா.. "

" சத்யா நான் டெல்லி போகனும் நந்தா கூட போய்ட்டு வரேன் வந்து சொத்து விஷயத்தை பேசலாம். அப்பா வர வரைக்கும் பொறுமையா இங்கயே இருக்கனும் சரியா? உனக்கு துணையா நந்தா பையன் வாஞ்சிநாதன் இங்க இருப்பான். அவன்கிட்ட சொன்னா உனக்கு தேவையான உதவியை செய்வான்."

" அத்தை வராங்களா ப்பா.. இன்னிக்கி? "

" ராத்திரி வந்துடுவா.. நீ எதும் பேசாத.. என் நிலைமை உனக்கு புரியும் நினைக்கிறேன். "

" என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது பா நிம்மதியா போய்ட்டு வாங்க. காத்துதிருக்கேன். அப்புறம் அப்பா நாங்க கோவைக்கு போறோம் அனுக்கு ஷாப்பிங் பண்ணனுமாம்."

" போய்ட்டு வாங்க.. டேய் நந்தா இங்க வா.. சத்யா கையில் என் கார்டை கொடு. அவனுக்கு எக்ஸ்யூவி காரை எடுக்க சொல்லு.." சிவா பரபரப்பாக கூற,

" காசு, கார் எதும் வேண்டாம் பா.. என்கிட்ட இருக்கு.. " சத்யா கூறவும் மகனின் முகத்தையே சிவா பார்க்க,

" பிளீஸ் பா.. எதும் தப்பா யோசிக்காதீங்க.. சாரி பா.. " சத்யா மீண்டும் மீண்டும் அதையே கூற, சிவா அமைதியாய் அமர்ந்திருக்க, அப்பு அவர்களின் அருகில் வந்து தாத்தனின் கன்னத்தில் முத்தம் வைக்க, பேரனை கண்டதும் அவருக்கு கவலைகள் ஓடிப்போக, அவரும் பேரனுக்கு முத்தம் கொடுத்து புன்னகைக்க, அவனுக்கு இவரும் முத்தம் வைக்க, பேரன்கள் இருவரையும் கொஞ்சி விட்டு அனுவிடமும் கூறிவிட்டு கிளம்பி இருந்தார்.

இவர்களும் கிளம்ப வாசல் வரவும் ஜிஷ்ணு வந்து வியாஷ் முன் நிற்க, வியாஷ் தகப்பனை பார்க்க, ஜிஷ்ணு வியாஷ் தன்னுடன் இருக்க வேண்டும் என அடம் பிடிக்க தொடங்கி இருந்தான். அவர்கள் வெளியே செல்லும் விஷயத்தை சத்யா சொல்ல, அவனும் வருகிறேன் என கூறி அடம்பிடித்தான். அனு ஜிஷ்ணுக்கு சமாதானம் சொல்ல, அவனோ அடம்பிடித்து அழ, சத்யா ஜிஷ்ணுவை மடியில் அமர்த்தி,

" என் பப்புக்குட்டி சமத்து தானே? அழாம அமைதியா வீட்டுல இருப்பியாம். மாமா உனக்கு பொம்மை வாங்கிட்டு வருவேன்னாம்.."

" எனக்கு அப்பு தான் வேணும்.." சத்யா வியாஷை விட்டு செல்ல யோசிக்க, அனுவும் தயங்க, அப்போது அங்கு வந்த விஜய் அனைத்தையும் பார்த்துவிட்டு வித்யாவின் காதில் எதோ சொல்ல, அண்ணனை நோக்கி வந்தாள்.

" அண்ணா அப்புவை விட்டு போ, நான் கவனமா பார்த்துக்கறேன்."

" அது அத்தை வந்துருவாங்கன்னு சொன்னார் அப்பா.. அவங்க முன்னாடி இவன்… தேவை இல்லாத பிரச்சனை எதும் வேண்டாமே? "

" ராத்திரி தான் அண்ணா அத்தை வருவாங்க. அதுக்குள்ள நீ வந்துரு.. அப்புவை உன் கைக்குள்ள வெச்சுக்க.. "வித்யா சொல்ல,

" இல்ல வித்யா அவன் நாங்க இல்லாம தனியா இருக்க மாட்டான். நம்ம போ வேண்டாம் சத்யா இங்கேயே இருப்போம்.." அனு கூறவும்,

" ஏன் நாங்க எல்லாம் மனுஷங்க இல்லையா இங்க? இத்தனை பேரை நம்பி விட்டுப்போக மாட்டீங்களா? " விஜய் கோவமாக அனுவை பார்த்து கேட்க,

" ஏற்கனவே ஒரு கண்ணாடி பாத்திரத்தை உங்க கையில கொடுத்து, அதை நீங்க உடைச்சு போட்ட அப்புறம், எப்படி உங்களை நம்பி இன்னொரு பாத்திரத்தை தருவேன் சொல்லுங்க? முன்ன உடைஞ்சதே இன்னும் சரியாகல.." அனு கூறவும் சட்டென விஜய் கண் கலங்கி போக, சத்யா அனுவை பார்க்க,

" சாரி பேபி.. " அனு கூறிவிட்டு ஹாலை தாண்டி வெளி வராண்டாவில் போய் அமர்ந்து கொண்டாள். சத்யா மகனிடம் சென்றவன் அவன் அருகில் முட்டி போட்டு அமர்ந்து,

" வியாஷ் குட் பாய் தானே? பாபாவும் மீமீயும் வர வரைக்கும் சமத்தா மாமா கூடவும் அத்தை கூடவும் இருப்பீங்களா? "

" நானும் வரேன் ஷாப்பிங்.. " பாவம் சிறுவன் என்ன செய்வான்?

" ஜிஷ்ணு உன் பிரென்ட் தானே? அவ அழரான் பாரு உனக்காக, அவனை தனியா விட்டு வர போறியா? " சத்யா மீண்டும் கேட்க,

ஜிஷ்ணு முகத்தை பார்த்தவன், இரு நொடி அமைதியாக நிற்க, பின் மெல்ல தலை நிமிர்ந்து கூறினான்.

" ட்ரெஸ் மாத்தி விடு பாபா.. நான் ஜிஷ்ணு கூட விளையாட போறேன்." மகன் சொன்னதை கேட்டு சத்யா மகிழ்ச்சியில் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, அறைக்குள் சென்றவன் அவனுக்கு என உடையை எடுத்து வந்தான். அப்புவை தூக்கிக்கொண்டு விஜயை நோக்கி வந்தவன் மகனை அவன் கையில் கொடுக்க, விஜய் முகத்தில் புன்னகை வர, மகன் கையில் ஆடையை கொடுத்து,

" ட்ரெஸ் உன் மாமா மாத்தி விடுவான். பாபா மாதிரியே உன்னை நல்லா பார்த்துப்பான். எதுவா இருந்தாலும் மாமாகிட்ட கேளு சரியா? " சத்யா சொல்ல சரியென மகன் சொல்லவும் அனுவை நோக்கி வந்தான்.

" ஒய்.. சில்வண்டு.. வா போலாம்.. "

" அப்பு இல்லாம நான் வர மாட்டேன்."

" இப்ப தான் ஒரு பாப்பாவை சமாதானம் பண்ணேன். அடுத்து ஒரு பீப்பா இங்க அடம் பிடிக்குது. எழுந்திரு டாலு.."

" யாருடா பீபா? இந்த அனு ஹாசினி அழகி டா "

" ஆமாங்க அழகி.. வாங்க டாக்சி வந்தாச்சு.. " சத்யா அவளை கைப்பிடித்து அழைத்து செல்ல, அனு அவனோடு கோவைக்கு கிளம்பி இருந்தாள்.

இங்கே விஜய் அப்புவை வித்யா கையில் கொடுத்து விட்டு அறைக்குள் சென்று இருந்தான். என்ன முயன்றும் கண்ணீர் இமை தாண்டியிருந்தது. என்ன செய்து விட்டான் இந்த சத்யா? அனு சொன்னதை போல இல்லை என எத்தனை அழகாய் செயலில் பதில் கூறி இருக்கிறான்?

என்னை நம்பி அவன் மகனை கையில் கொடுத்து நம்பிக்கை போகவில்லையென, என்னை போலவே உன்னை இவனும் தாங்குவான் என சொல்லி நீயும் நானும் ஒன்று தான்னென மறைமுகமாக செய்தி கூறி சென்று இருக்கிறான். இவனை தானே விலக்கி வைத்தேன்? இவனை தானே துரோகி என்றேன்? இவன் நட்பை தானே அசிங்கம் என்றேன்? ஆனால் இப்போதும் அவன் எனக்கு கொடுத்தது என்ன? அன்பு. விஜய் மௌனமாக அமர்ந்திருக்க, அவன் கன்னத்தில் அழுத்தமாய் பதிந்தது வியாஷின் இதழ்கள். ஒற்றை கன்னத்து முத்ததிலேயே அனைவரையும் கட்டி இழுத்து விடுகிறான் இந்த அப்புக்குட்டி.

" மாமா.." அப்பு அழைக்கவும் அவனை அள்ளி மடியில் போட்டு கொண்டான் விஜய். மகனும் அவன் மாடிக்கு வர இருவரையும் அமர வைத்து அவர்களோடு கார்ட்டூன் பார்க்க தொடங்கி இருந்தான். வித்யா அறையை எட்டிப் பார்த்து புருவம் தூக்கி கிண்டல் செய்து சிரிக்க, விஜய் குட்டி தலையணை எடுத்து வீச, சிரிப்புடன் ஓடி இருந்தாள்.

சிறிது நேரம் டிவி பார்த்தவர்கள் எழுந்து வெளி வராண்டாவில் விளையாட போக கோகிலாவும், ஜோதியும் அங்கே அமர்ந்து கீரை கிள்ளி கொண்டு இருக்க, தேன்மொழி வாழைப்பூவை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள். சத்யா வீட்டில் இல்லை என்றதும் அறையை விட்டு வெளியே வந்தாள் அன்புச்செல்வி அவனின் மகனை காண எழுந்த ஆவலில் வெளியே வர, கோகிலா அப்புவை அழைத்து மடியில் அமர்த்தி வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் அறிமுகம் செய்து வைக்க, சித்தி, அத்தை என உறவுகள் படித்தான்.

" சரி அப்பு வீட்டில் யார் எல்லாம் இருக்காங்க? " வித்யா கேட்க,

" நானும் பாபாவும்.." அப்பு பதில் சொல்ல,

" வேற யாரும் இல்லையா? " கோகிலா கேட்க,

" இல்ல.. "

"அனு உனக்கு யாரு?" ஜோதி கேட்க,

" மீமீ " அப்பு கண் விரிந்து புன்னகையுடன் சொல்ல,

" என்னடி சொல்றான் இவன்? அவன்கிட்ட தெளிவா கேளு வித்யா.."

" உன் மீமீ உன்னோட, உங்க வீட்டில் இல்லையா? "

" மீமீ அவங்க வீட்டில் இருப்பாங்க."

" மீமீ தானே உன்னோட அம்மா?"

" ஆமா " அப்பு சொல்ல, வித்யா பெருமூச்சு விட்டு இருந்தாள்.

"என்னடி இவன் தெளிவா குழப்புறான்?" கோகிலா கேட்க,

" அத்தை.. சின்ன பையங்கிட்ட போய் இதெல்லாம் கேட்டா அப்படி தான் பதில் சொல்வான். உங்க மகன்கிட்ட கேளுங்க என்னடா இதெல்லாம்னு? " விஜய் கூறவும்,

" எனக்கு அந்த அனு மேல ஒரு பிடிப்பு வரல விஜய். அவங்களை பார்க்க புருஷன் பொண்டாட்டி மாதிரியே தெரியல. முக்கியமா சத்யா சொன்ன தான் எதையும் அப்பு கேக்குறான். அனுவை அவன் தேடுறதே இல்ல. இந்த சத்யா எதையும் மறைக்கிறானா? " ஜோதி கூற,

" என்ன அத்தை.. அவன் இருக்கிற இடம் லண்டன்.. அங்க ஆணும் பொண்ணும் குழந்தை ஒரே மாதிரி தான் பார்ப்பாங்க. அவங்க கலாச்சாரம் வேற.. நமக்கு வேற.. அப்புவை அந்த ஊர் வழக்கப்படி வளர்த்து இருக்காங்க. அப்படி தான் ரெண்டு பேரும் வாழ்வாங்க போல, அவ்ளோ சந்தேகம் இருந்தா சத்யாவை கேளுங்க.."

" அக்கா சொல்றது சரிதான் வரட்டும் கண்டிப்பா கேட்கனும். அவ கழுத்துல தாலி இல்ல. அப்பு சத்யா ஜாடையும் இல்ல, அனு ஜாடையும் இல்ல. கேட்டா அனு அப்பா மாதிரின்னு சொல்றான். கல்யாண ஃபோட்டோ காட்டு சொன்னா பதில் கிடைக்கும்." கோகிலா முடிவாக கூறவும்,

" அச்சோ கோகிமா.. வந்து ரெண்டு நாள் கூட முழுசா ஆகல அதுக்குள்ள எவ்ளோ சந்தேகம் உங்களுக்கு? " வித்யா கேட்க,

" எட்டு வருஷமா அவன் நம்ம கூட இல்ல தான் அதுக்காக எப்படியோ போகட்டும் விட முடியுமா? எல்லாம் சரியா இருந்தா எங்களுக்கும் சந்தோசம் தான். " ஜோதி கூற, அனைவரும் அவரின் கூற்றை சரியென ஏற்றுக் கொண்டனர்.

துணை - 7

கோவையில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் நுழைந்தவர்கள் முதலில் அப்புவுக்கு பொம்மை, இனிப்புகள், கொஞ்சம் அவனுக்கான உணவு என வாங்கியவர்கள், பின் அனுவுக்கு ஆடை எடுக்க, சத்யா அவளுக்கு என தேர்ந்து எடுத்து கொடுக்க, அப்புக்கு சில ஆடைகளும் அவனுக்கு என ஒ மெரூன், அடர் பச்சை நிறத்தில் இரு பட்டுச்சட்டையும் எடுத்துக் கொண்டான்.

" எதுக்கு அம்மு பட்டுச்சட்டை? "

" எதாவது இந்தியன் ஃபேமிலி வீட்டு விழாவுக்கு போனா போட்டு போக தான். "

" அப்போ நானும் பட்டுப்புடவை எடுக்கவா? "

" ஓ எடுக்கலாமே.. நானே எடுத்து தரேன் டியர் வா.. "

" பொன்னுக்குட்டி வீட்டுல உள்ள எல்லாருக்கும் எடுப்போமா? "

" ம்ம்.. எனக்கு தோணவே இல்ல பாரு.. வாங்குவோம் ஹனி வா.."

இருவரும் பிரபல பட்டுக்கடைக்குள் செல்ல, வித விதமாக பட்டை பார்க்க அனு முகத்தில் மகிழ்ச்சி,

" பொண்ணுகளுக்கு பட்டுப்புடவை மேல அப்படி என்ன ஆசையோ, கண்ணு விரியுது பாரு என் அம்முக்கு.. "

" பட்டுப்புடவை எல்லாம் எப்பவும் வாங்க மாட்டோம், அடிக்கடி கட்டவும் மாட்டோம். விஷேசம் வந்தா தானே பட்டு? அப்போ அதில் சந்தோசமும் இருக்கும் தானே? அதே போல ஒரு பொண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்து தரது அப்பாவும், அண்ணன் தம்பியும், புருஷனும் தான். மத்த சிலரும் எடுத்து தரலாம்.. ஆனா அதிகமா இவங்க தான் தருவாங்க, அவங்க தர பட்டில் அன்பு இருக்கும். சோ எல்லா பொண்ணுக்கு பட்டுப்புடவை ஸ்பெஷல் தான் எப்பவும்.. "

" அழகுடி குட்டிமா.. உனக்கு ரெண்டு புடவை எடுத்துக்கோ, வெயிட் அதிகம் சேர்க்காத, லண்டன் தூக்கிட்டு போக முடியாது.. "

இருவரும் பட்டை எடுக்க, அனு தேர்ந்து எடுத்த புடவையை அருகில் இருக்கும் இன்னொரு பெண் கேட்க, அனு ஒரு நிமிடம் தயங்க,

" எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் சிஸ்டர். அவரோட சட்டை நிறத்தில் இருக்கு அந்த பட்டு, கொடுத்தா எனக்கு உதவியா இருக்கும். பிளீஸ்.. " அந்த பெண் கேட்கவும், அவளின் அருகில் இருந்த அவனும் கேட்டான்.

" கொடு செர்ரி நம்ம வேற எடுத்துப்போம். " சத்யா காது கடிக்க, அவர்களின் கையில் புடவையை கொடுத்து இருந்தாள். அவர்கள் நன்றி சொல்லி வாங்கி கொள்ள, சத்யாவும் அனுவும் அவர்களை வாழ்த்தி இருந்தனர். அவர்கள் வேறு பக்கம் செல்ல அனு சில நிமிடம் கடந்து செல்லும் அவர்களையே பார்க்க,

" ஏய் கன்னுக்குட்டி எதையும் யோசிக்காதடி "

" எனக்கும் அந்த பொண்ணு மாதிரியே வெக்கப்பட்டு சிவந்து, ரகசியமா கண்ணுல பேசி, கை தொட்டு, தோள் உரச ஒன்னா நடந்து, ம்ம்.. பார்க்கவே ஆசையா இருக்கு செல்லம்.. "

"அப்ப இங்க இருந்து போறதுக்குள்ள ஒரு பையனை பிடிச்சிடு, அவனை உனக்காக கடத்திட்டு போய்டுவோம்.."

" போடா…" அனு சலிப்பாக சொல்ல,

" மீனுக்குட்டி புடவை எடுமா, அப்பு தனியா இருப்பான். எனக்கு வேற பசிக்குது.. சீக்கிரம் வீட்டுக்கு போலாம்.. "

அப்பு என்னும் மந்திர சொல் அவளை புடவையில் கவனம் செலுத்த வைக்கவும், பெண்கள் அனைவருக்கும் இவள் எடுக்க, இவளுக்கு மட்டும் சத்யா எடுத்தான். பில் தொகை செலுத்தி, உண்ண கடைக்கு சென்றனர். சத்யா சைவம் உணவாக கூற, அனு அசைவம் சொல்ல என கூறவும்,

" பட்டு எடுத்துட்டு கறி தின்ன கூடாது குரங்குகுட்டி.. நல்ல நாளுக்கு கட்டுறது இல்லையா சோ வேண்டாம். "

இருவரும் உணவை முடித்து இனிப்பு உண்ணும் நேரத்தில் கேட்டது ஒரு அதட்டல் குரல், ஒரு ஆண் ஒரு பெண்ணை காதில் கேட்க சகிக்காத வார்த்தைகளில் வசைமாரி பொழிந்து கொண்டு இருந்தான். அனு ஹாசினியின் கண்கள் கலங்க, சத்யா அவளின் கைப்பிடிக்க,

" போலாம் சத்யா.. என்னால முடியல.. பிளீஸ்.. " அவளின் பிளீஸ் என்ற உச்சரிப்பு முடியும் முன் நகர தொடங்கி இருந்தனர் இருவரும். அவளை டாக்சியின் உள்ளே அமர சொல்லிவிட்டு இவன் பில் செலுத்தி வர, இல்லம் நோக்கி கிளம்பி இருந்தனர்.

காரில் அமர்ந்து இருந்தவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் அழுத்தியது. அனு ஒரு சென்னைவாசி. சென்னையின் நவநாகரீக பெண் கட்டிட கலையின் மீது அவளுக்கு ஆவல் வர காரணம் அவளின் அப்பா ஜெயமோகன். அவரும் ஒரு கட்டிடகலை பொறியாளர். அவளுக்கு ஒரே தம்பி ஹரிஷ் பன்னிரெண்டாம் வகுப்பு, குடும்ப தலைவியாக அம்மா என அழகிய குடும்பம். இளங்கலை முடித்த மகள் மேல் படிப்புக்கு லண்டன் செல்ல வேண்டும் என்று கூற, அவளை திருமணம் முடித்து மாப்பிள்ளை உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்ற முடிவில் அவளுக்கு என தகப்பனாக அவர் பார்த்த மாப்பிள்ளை தான் அவினாஷ்.

லண்டனில் ஐடியில் வேலைப்பார்க்கும் அவனுக்கும் பெரிதாய் குறை ஒன்றும் இல்லை. திருமணம் முன்பு வரை, அல்லது அவனின் குறைகளை கண்டுபிடிக்க தெரியவில்லை என்று கூட சொல்லலாம். தகப்பன் பார்த்த வரன் என அனு மறுப்பு எதுவும் சொல்லாது ஏற்றுக்கொண்ட போதும், ஏனோ அவனிடம் இவளுக்கு ஒட்டுதல் ஏற்படவில்லை.

திருமணம் முடிந்து ஒரு மாத வாழ்வு இனிதாய் சென்றாலும், அவனிடமும் அவளுக்கான ஈடுபாடு எதுவுமில்லை. இருவருமே தேவைக்கு பேசிக் கொண்டதோடு சரி. லண்டன் வந்து இவள் கல்லூரி சேர, அங்கு சீனியராய், நண்பனாய் கிடைத்தவன் தான் சத்யா. இருவரின் விருப்பு வெறுப்பு, பாடம், மொழி, நாடு என ஒற்றுமை இருக்க பெரிய முயற்சிகளும் எதுவும் இல்லாமலே இயல்பாய் நட்பு பூத்து இருந்தது.

வீட்டில் கடமைக்கு என கணவன் இருக்க, அவனோடு எந்த தொடர்பும் இல்லாத திருமண வாழ்க்கை சலிப்பை கொடுத்தது. ஆண் அவனே நெருங்கி வரவேண்டும் என யோசிப்பது முட்டாள்தனம் என ஒரு கட்டத்தில் எண்ணி, அவளே அவனோடு நட்பாக நெருங்க முயற்சி செய்தாள். அப்படி ஒரு நாளில் தான் அவனின் சுயரூபம் அவளுக்கு தெரிய வந்தது.

அவனுக்கு பெடோபிலியா என கூறும் ஒருவகை மனநலக் கோளாறு. பருவம் முதிர்ந்த அல்லது முதிராத பருவ வயது குழந்தைகள் மீது வரும் பாலியல் ஈர்ப்பு அவனுக்கு, அடிக்கடி அவள் இல்லாத நேரத்தில் பதினான்கு வயது உடைய ரோசெல் இல்லம் வந்து செல்வது அவளுக்கு தெரியாது. அன்று கல்லூரியில் வகுப்பு சீக்கிரம் முடிய, சத்யாவுடன் கூட பேசாது வெறும் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு கணவனை காண இல்லம் வந்து இருந்தாள்.

திறந்து இருக்கும் கதவு அவளுக்கு ஆச்சரியம் கொடுக்க, அவினாஷின் அலுவலக அறையில் இருந்து எதோ சத்தம் வர, எட்டிப் பார்த்தாள். பார்த்தவளுக்கு உயிர் நின்று போனது ஒரு நொடி, ரோச்செல் ஆடையின்றி நிற்க, அவளை அவினாஷ் படம் எடுத்துக்கொண்டே புணர்ந்து கொண்டு இருந்தான்.

சின்ன பெண் அவள், புணர்ச்சி என்பதை சரியாய் உணராத வயதில் அவனின் கீழே வலியில் துடிக்க, இவனோ அதை ரசித்துக்கொண்டே புணர, கை நடுங்க அதை ஒரு புகைப்படம் எடுத்தவள், காலில் கிடந்த செருப்பை எடுத்து கொண்டு அறைக்குள் போய் அவனை செருப்பால் அடித்து இருந்தாள். எங்கிருந்து வந்தது அந்த வெறியென அவளுக்கு தெரியவில்லை. அவனை கை வலிக்க அடித்து ஓய்ந்திருந்தாள்.

ரோசெல் பயந்து விலக, அவளை ஹாலில் அமர சொல்லி உடைகளை எடுத்துக்கொடுத்தாள். அவினாஷ் எதையும் எதிர்பார்க்காததால் கொஞ்சம் தடுமாறி பின் சுதாரித்து கொண்டான்.

" என்னடி பிரச்சனை உனக்கு? என்னை செருப்புல அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சு இல்ல? போடி என் வீட்டை விட்டு வெளிய.. " கோவத்தில் இரைந்தான் அவினாஷ்..

" ஒரு சின்ன பொண்ணை போய் இப்படி பண்ணிட்டு இருக்க அசிங்கமா இல்ல.. "

" இல்ல.. எனக்கு சின்ன பொண்ணுகளையும் பசங்களையும் தான் பிடிக்கும். உன் மாதிரி வளர்ந்த யார் கூடவும் எனக்கு உணர்வுகள் வராது. புரியுதா? எனக்கு சின்ன பொண்ணுங்க தான் சுகம், சொர்கம் எல்லாம். ரோசெல் என்னோட விரும்பி தான் புணர்வில் இருந்தா, பதினாலு வயசில் இது இங்க சகஜம். அதனால உன் வேலையை பார்த்துட்டு போ.. இல்ல.. என் வீட்டை விட்டு வெளிய போ.. " அவன் சொன்ன விதத்திலும் விஷயத்திலும் அனு நொறுங்கி போய் இருந்தாள். புரிதல், நட்பு இல்லை என்று தானே இவள் நினைத்தால்? மனம் தளர புத்தி விழித்து கொண்டது.

" நான் எதுக்கு வெளிய போகனும்? தப்பு செஞ்சது நீ.. என்னை மிரட்டுட்டு இருக்கியா? நான் வீட்டுல சொன்னா என்னாகும் தெரியுமா? " அவளின் வீடு என்ற வார்த்தை அவனை எச்சரிக்கை செய்ய,

" ஹேய்.. அனு.. என்ன பாரு.. சாரி.. வீட்டுக்கு எல்லாம் இதை கொண்டு போக வேண்டாம். நான் எதோ புத்தி கெட்டு போய் இந்த மாதிரி.. இனி சத்தியமா செய்ய மாட்டேன். இதை யாருக்கும் சொல்லாத பிளீஸ்.. " அவினாஷ் கெஞ்ச,

" இது பெரிய தப்பு அவினாஷ்.. அவ தெரிஞ்சே வந்து இருந்தாலும் உன்னை விட சின்ன பொண்ணு இல்ல? அவளை போய்.. வீட்டுக்கு தெரிஞ்சா அசிங்கம் மட்டும் இல்ல. அத்தையும் மாமாவும் உன்னை நினைச்சு என்னாவாங்க சொல்லு? நான் உன்னோட வாழ பல கனவில் இருக்கேன். நமக்கு இது வேண்டாம்."

" வேண்டாம் அனு.. புரியுது இனி தப்பு பண்ண மாட்டேன். இந்த ஒரு முறை மன்னிச்சிடு என்ன.. பிளீஸ்.. இதை மறந்து புதுசா வாழ்க்கையை தொடங்குவோம்." அவினாஷ் கேட்கவும் சரியென கூறி இருந்தாள்.

மனநலம் பாதிக்கப்பட்ட அவனின் நிலை அறியாது அனு அவன் பேச்சை கேட்டு அமைதியாய் ரோசெல்லை அனுப்பி விட, அவினாஷ் சிரித்துக்கொண்டான். அன்று இரவு அவளுக்கு என காக்டெய்ல் தயார் செய்தவன் அதில் அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து இருந்தான்.

அனுவோ நண்பனிடம் எதையும் மறைக்காதவள், படத்தை சத்யாவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி, அதனோடு இன்று நடந்த பேச்சு வார்த்தையையும் அனுப்பி வைத்து இருந்தாள். சத்யா அன்று வேறு வேலையில் அதை பார்க்காது விட்டு இருக்க, அடுத்த நாள் காலை அனு எழ முயல அவளால் நகரமுடியவில்லை. கை கால்கள் கட்டிலில் கட்டி இருக்க, வாயையும் அடைத்து இருந்தான். அவளின் அலைபேசி லேப்டாப் அனைத்தும் அவனின் கையில், தப்பிக்க வலி இல்லாது செய்து இருந்தான்.

" நான் சின்ன வயசில் இருந்தே இப்படி தான் அனு.. எனக்கு என்னை விட சின்ன பொண்ணுங்க, பசங்க மேல காம ஈர்ப்பு. ஏன்னு தெரியலை இதான் பிடிச்சு இருக்கு. நான் சந்தோசமா இருந்தேன்டி, ரோச்செல் எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா.. அவ முன்னாடி என்னை.. தப்பு இல்ல நீ செஞ்சது? உனக்கு இதான் தண்டனை.. உன்னை கொன்னு போட்டு நீ காணாம போய்ட்டேன் சொல்லிடுவேன்."

" நான் உன்னோட வாழனுமா? என் மூச்சு காத்து கூட உன் வயசு உள்ள பொண்ணுகளை தொடாது.. உன் கற்புக்கு எந்த பாதிப்பும் இல்ல. ஆனா என்னோட வாழ உன் உடம்பும் உயிரும் வேணுமில்ல? அதை அழிக்க போறேன். என் விருப்பம் போல.. " அவினாஷ் சொல்லி சிரிக்க அனு பயந்து அழ, அவளின் கால்களுக்கு பெல்டை வைத்து அடி கொடுத்தான். வாய் விட்டு கதற கூட முடியாத நிலையில், அனு வலியில் துடித்து இருந்தாள்.

இதை எதையும் அறியாத சத்யா தோழிக்காக அன்று காத்திருந்து, வகுப்புகளை கவனித்து, தனியே தன்னை சுற்ற விட்டதற்கு அவளை திட்டி, மெல்ல இல்லம் வந்து சேர்ந்த பின் அவளோ அழைக்க, அலைபேசி அணைத்து இருப்பதாக தகவல் வரவும் நாளை கல்லூரியில் பார்த்து கொள்வோம் என்று விட்டு விட்டான்.

அடுத்த நாளும் தோழி வராதது அவனுக்கு உறுத்தல் கொடுக்க, அவனுள் கவலை சூழ்ந்தது. பொதுவாய் திருமணமான பெண் அவளை சத்யா அடிக்கடி அலைபேசியில் அழைத்து பேசுவதோ, அவளின் இல்லத்திற்கு செல்வதையோ செய்தது இல்லை. இன்று பல முறை முயன்றும் அவளின் அலைபேசி உயிர் பெறவில்லை. கவனம் வகுப்பில் இல்லாது போக, மெல்ல அலைபேசியை ஆராய்ந்து கொண்டு இருக்க, அவளின் மின்னஞ்சல் வந்து படிக்க மறந்ததை மூளை நினைவுக்கு கொண்டு வரவும் அதை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போய் இருந்தான். கணவன் மனைவி இருவருக்கும் சண்டை போல அதுதான் தோழி வரவில்லை என முடிவு செய்து கொண்டான். அன்றும் மனதிற்கு சமாதானம் சொல்லி கடந்து இருக்க, மூன்றாம் காலையில் எழுந்ததுமே அனுவை பார்க்க வேண்டும் என தோன்ற, கிளம்பி அவளின் இல்லம் சென்றான். அழைப்பு மணி கொடுக்க அவினாஷ் தான் கதவை திறந்தான்.

சத்யா இன்முகமாக பேசி, அனுவை பற்றி கேட்க, அவள் வீட்டுக்கு வந்து இரு நாட்கள் ஆகிறது என பொய் கூறினான் அவினாஷ். சத்யா அந்த நொடியே அதிர்ந்து இருந்தான். எதாவது நண்பர்கள் வீட்டுக்கு சென்று இருப்பாள். வந்ததும் தகவல் தருகிறேன் என அவினாஷ் கூறவும் சத்யா விடைபெற்றுக் கொள்ள, அவினாஷ் உள்ளே சென்று அவளை சத்யாவுடன் தகாத உறவில், முறையில் அசிங்கமாக திட்டி அவளை மீண்டும் மீண்டும் அடிக்க, அவளின் உயிர் சீக்கிரம் போய் விடுவேன் என்று கூற மயக்கமாகி இருந்தாள்.

சத்யா காவல் நிலையம் சென்று அனுவின் மின்னஞ்சல் காட்டி, விவரத்தை சொல்ல, அனுவின் வீட்டை சுற்றி போலீஸ் வர, அவினாஷ் தப்பிக்க முயல, போலீஸ் அவனை மடக்கி பிடிக்க, சத்யா அவளை தேடி, அவர்களின் படுக்கை அறை கண்டு அங்கே செல்ல, அனுவை பார்த்தவனோ ஐயோ என கதறி இருந்தான்.

© GMKNOVELS