...

7 views

மணமாற்றம்
நீல நிற சட்டையை டக்கின் செய்தவாறே கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்த இன்பன் சிறு புன்முறுவலுடன் வரவேற்பரைக்குள் நுழைந்தான்

 

 

மெல்லிய கீர்த்தனை ஒலியோடு மைதிலி அத்தை கோவிலில் இருந்து வந்தவள் இன்பனைக் கண்டதும் அவன் அருகில் வந்து கண்களாலேயே இரு வருகிறேன் என கூறிச் சென்றாள்

 

 

விரைந்து வந்தவள் கைகளில், காலை சிற்றுண்டி தட்டிலும் மதியத்திற்கான உணவு ஒரு பையிலும் இருந்தது. இன்பன் எதுவும் பேசவில்லை. சிற்றுண்டி சாப்பிடும் வேளையில் மாமா காலை வாக்கிங் முடித்து உள்ளே நுழைந்தார்.

 

 

இன்பா, முதல் முதலாக வேளைக்கு செல்கிறாய், பார்த்து, உனக்கு மேல் உள்ளவர்களிடம் மரியாதை செலுத்தவும் உனக்கு கீழ் உள்ளவர்களிடம் நட்பு பாராட்டவும் தயங்காதே.

 

இது தான் மாமா, தேவையான நேரத்தில் தேவையான அறிவுரைத் தர தவறமாட்டார். உற்று பார்த்து கொண்டிருந்தவருக்கு தனது தலை -அசைவில் ஒப்புதலை தெரிவித்து புறப்பட யத்தனித்த போது அத்தையின் குரல் புஜை அறையில் இருந்து கேட்டது.

 

காரணம் புரிந்த போது மனசு லேசாக வலித்தது. தயக்கத்தோடு பூஜை அறைக்குள் நுழைந்தவன் அங்கு பிறக்கும் போதே இழந்த தந்தையின் புகைபடமும், வாழ்க்கையில் தான் தொலைத்த இன்பத்தை தன் மகனுக்கு சூட்டியவள் அவன் வளர்சியைப் பார்க்க  கொடுத்து வைக்காத தாயின் புகைப்படத்தையும் வணங்கி விட்டு கண்களாலேயே அத்தையிடம் இருந்து விடைபெற்றான்.

 

வாழ்த்துக்கள் அத்தான் என்று வசுமதியின் குரல் தோட்டத்தின் பக்கம் கேட்டது. தாங்க்ஸ் என்ற வார்தையோடு தனது இருசக்கர வாகனத்தை கிளப்பினான்.

 

அலுவலகதின் குளிர்ச்சி முகத்தில் அறைந்தது.. புது இடம், புது சூழ்நிலை மகிழ்ச்சியைத் தந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பணிக்கு வந்த கண்ணணின் நட்பு கிடைத்தது. கண்ணண் தன் தாய் மற்றும் தன் தங்கையுன் வசிப்பதாக தெரிவித்தான். இன்பன் மெல்ல மெல்ல தன்னைப் பற்றிய தகவல்களை கண்ணணோடு பகிர்ந்து கொண்டான். இருவருக்கும் ஒரு பலமான நட்பு உருவானது.

 

 

கண்ணண் இன்பனை பற்றி நிறைய தெரிந்து கொண்டான். இன்பன் மனதில் தன் அத்தையும் மாமாவும் தங்களின் ஊணமுற்ற மகள் வசுமதியை தன் தலையில் கட்டத்தான் தன்னை வளர்த்து வருவதாகா நம்பினான். இன்பனின் கருத்தில் கண்ணணுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இதை பற்றி நண்பனிடம் எதையும் கூறவில்லை.

 

 

அன்று இன்பனின் 25வது பிறந்த நாள். கண்ணண் வீட்டில் மதிய உணவு என்று அத்தையிடம் போகிறபோக்கில் சொல்லி இருந்தான். காலை முதலே அத்தையும், மாமாவும் பரபரப்பாக காணப்பட்டனர். இன்பனின் மனதில் அச்சம் குடி கொண்டது. ஒருவேளை இன்று திருமண பேச்சை ஆரம்பித்து விடுவார்களோ என்ற சிந்தனை அவனை கவலை கொள்ள வைத்தது.

 

மாமா இன்பனிடம் “புறப்படு புறப்படு மணியாச்சு” என்றார். இன்பனுக்கு ஒன்றும் புரியவில்லை தன்னை ஒரு பலி ஆடாக எண்ணிக்கொண்டு அத்தை, மாமாவின் பின் சென்றான்.

 

அவனை அழைத்து சென்ற இடம் ரெஜிஸ்டர் ஆபீஸ், இன்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்று நேரத்தில் ரெஜிஸ்டரர் வந்ததும், அத்தை பெயரில் உள்ள பரம்பரை சொத்தில் பாதி இன்பன் பெயருக்கு மற்றப் பட்டது. இன்பன் மனதில் தன் வாழ்க்கை தன்னிடம் இருந்து பறிபோன ஒரு உணர்வு உண்டானது.

 

கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்து இருந்த இன்பனை பார்த்து கண்ணண் குழப்பம் அடைந்தான். இன்பன் இந்த சொத்து பரிமாற்றத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக கண்ணணுக்கு தோன்றியது.

 

நாட்கள் நகர்ந்தன இன்பன் கொஞ்ச கொஞ்சமாக இருக்கமான மனநிலைக்கு தள்ளப்பட்டான். கண்ணண் எவ்வளவோ முயன்றும் இன்பனை தெளிவு படுத்த முடியவில்லை

 

அன்று,  சில  நாள் அலுவலக விஷயமாக ஊருக்கு சென்று இருந்த இன்பன் தனது வீட்டிற்கு வந்தவுடன் ஒரு பெரிய மாற்றத்தை உணர்ந்தான். வீட்டில் கொஞ்சம் நெருங்கின உறவுகளின் நடமாட்டம் தெரிந்தது. இன்பனுக்கு புரிந்து போனது. திருமண பேச்சை ஆரம்பிக்க போகின்றனர் என்று.

 

உள்ளே நுழைந்த இன்பனின் கைபிடித்து மாமா  “இன்பா வசுமதிக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது” என்று கூறினார். இன்பனுக்கு மனதுக்குள் ஒராயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது. வெகுகாலமாக அனுபவித்து வந்த வேதனை மறைந்தது. அன்று மாலை நிச்சயம் என்ற தகவல் தவிர இன்பனுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை.. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. தன் வாழ்க்கை தப்பியது என்ற மகிழ்ச்சி மட்டுமே அவனிடம் இருந்தது.

 

ஆனால் மாலை மணமகனாக அவன் நண்பன் கண்ணணை கண்டதும் இன்பன் செயலற்று நின்றான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாமல் குழம்பினான். கிடைத்த இடைவெளியில் கண்ணண் இன்பனிடம் தான் வசுமதியை விரும்பித்தான் திருமணம் செய்வதாகவும். வலைதளம் மூலம் ஊனமுற்ற பெண் வேண்டும் என தேடிய போது வசுமதி பற்றிய விவரம் பெற்று, தன் தாயுடன் வந்து சம்மந்தம் பேசி முடிவு செய்ததை மகிழ்சியோடு தெரிவித்தான்.

 

இன்பன் அதிர்ச்சியில் உறைந்தான்.. நிச்சயம் நல்ல முறையில் முடிந்தது. விருந்துக்குப்பின் இன்பன் அறைக்கு வந்த கண்ணணிடம் இன்பன் கேட்ட முதல் கேள்வி “உன்னிடம் உள்ள குறையென்ன?’ என்பது தான். 

கண்ணன் அமைதியாக பதில் கூறினான். “இன்பா நீ என் தாயை பார்த்து இருக்கிறாய். ஆனால் என் தந்தையை பார்த்தது கிடையாது. என் தந்தை உடல் ஊனமுற்றவர். என் தாயார் அவரை விரும்பி மணம் புரிந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தார். அவர்களைப் போன்ற ஒரு அன்யோன்னியமான தம்பதியை நான் கண்டதில்லை. அதனால் தானோ என்னவோ திருமண எண்ணம் வந்த நாள் முதல் எனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் பெண் ஒரு மாற்றுத் திறனாளியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என் தாயரும் என் எண்ணத்திற்கு முழுமனதாக சம்மதம் தெரிவித்தார்கள்” கண்ணணின் இந்த வார்தைகள் இன்பன் மனதில் கண்ணண் பற்றிய மதிப்பை மேலும் உயர்த்தியது.

 

கண்ணண் மெதுவாக இன்பா என்றழைத்தான். “ இன்பா நான் உன்னிடம் இன்னொரு முக்கியமான விஷயம் கூற வேண்டும் என கூறினான். இன்பன் இதற்கு மேல் என்ன என்பது போல பார்க்க. கண்ணண் “இன்பா, திருமண பேச்சுவார்தையின் போது என் தாயார் உன் அத்தையிடம் உங்கள் அண்ணண் மகனுக்கு உங்கள் பெண்ணை மணம் முடிக்க எண்ணம், இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டு உள்ளார்கள். அதற்கு உன் அத்தை மன்னிக்கவும் அவன் என் அண்ணண் மகன் அல்ல என் மகன் என் மகளின் அண்ணண் என கண்ணிரோடு கூறியுள்ளார். இன்பா இப்போதாவது உன் அத்தையின் எண்ணத்தைப் புரிந்து கொண்டாயா?

இன்பன் கண்களில் அவனை அறியாமல் கண்ணிர் வழிந்தது. “இன்பா இந்த சந்தர்ப்பதில் நான் உன்னிடம் மேலும் ஒன்று சொல்ல வேண்டும். உன் மனதில் என் தங்கையை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  இருப்பதை நான் அறிவேன்.” இன்பன் தலைக்குனிந்து நின்றான். நண்பனின் நிலைக்கண்டு கண்ணன் மனதுக்குள் சங்கடப்பட்டப் போதும் தான் நினைத்ததைக் கூறுவதில் உறுதியுடன் இருந்தான். “இன்பா நீ எப்படி ஒரு ஊணமுற்ற பெண்ணை மணமுடிக்க விரும்பவில்லையோ அதே போல் நானும் என் தங்கைக்கு ஒரு ஊணமுற்ற மணமகனை நிச்சயிக்க விரும்பவில்லை.”

 

இன்பன் அதிர்ச்சியோடு கண்ணனைப் பார்த்தான்.

 

“இன்பா உன் உடலில் எந்த ஊணமும் இல்லை ஆனால் உன் மனதில் உள்ள ஊணத்தை நான் மட்டுமே அறிவேன்.” கண்ணன் கூறியது இன்பனுக்கு நன்றாகவே புரிந்தது. மறுத்து பேச வார்த்தை இன்றி அவ்விடம் விட்டுச் சென்றான்.

 

அடுத்து வந்த தினங்களில் இன்பனின் போக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. வசுமதியின் திருமணத்தில் ஒரு மகனாகவே இருந்து காரியங்களை கவனித்தான்.

 

விடுமுறை முடிந்து அலுவலகம் வந்த கண்ணன் திருமண வலைத்தளத்தில் தனது பதிவை நீக்க முயன்ற போது தற்செயலாக இன்பனின் பதிவைக் கண்டான். அதில் இன்பன் “மணப் பெண் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் பரவாயில்லை” என்று பதிவு செய்திருந்தான். இன்பனின் மனமாற்றத்தைக் கண்ட கண்ணன் பெருமகிழ்ச்சி அடைந்தான். மாலை வீட்டுக்குச் சென்றதும் தாயிடன் இன்பன் மற்றும் தன் தங்கையின் திருமண விஷயம் பற்றி பேசவேண்டும் என்று மகிழ்ச்சியோடு முடிவுச் செய்தான்.

kumuda Selvamani

 #கும்ஸ்

 


#WritcoStoryPrompt118
Why do we often look for someone to blame when there is a problem? Tell us in story writing what you think about it.
© Meera