...

25 views

தெய்வம் தந்த சொந்தமா - 6
அத்தியாயம் - 6

ஒன்றரை வருடம் கழித்து, சர்வேஸ்வரன் முகத்தில் தெளிவு பிறந்து இருந்தது. அன்று எழுதவன் நண்பன் விமலை அழைத்து, சென்னை செல்ல போவதாக கூறிவிட்டு, சுந்தரை அவனுக்கு பயண பைகளை அடுக்க உதவ சொல்லி இருந்தான். சுந்தர் முகத்தில் விளக்க முடியா உணர்வு. ஒரு பக்கம் அவன் கிளம்பி செல்வதில் நிம்மதி தான் என்றாலும், இனி யாருக்காக சமைக்க? வேலையில் இருக்கும் அவர்கள் நால்வருக்கு என சுந்தர் வித விதமாய் என்ன சமைத்திட முடியும்?

“சுந்தர்…” சர்வா அழைக்க,

“சொல்லுங்க தம்பி.”

“உங்க மன சங்கடம் எனக்கும் புரியுது. நான் இனி இங்க வரது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா உங்களை சீக்கிரமே வந்து என்னோட கூப்பிட்டு போய்டுவேன்.”

“ விமல் தம்பி எதுவும் சொல்ல போறார்..”

“ஓ அப்ப விமல் தம்பி எதுவும் சொல்வாரா? அவன் என்ன சொல்றது? உங்க இடத்துக்கு வேற ஆள் பார்க்க சொல்லி சொல்லிட்டேன். அவன் என் விருப்பம் போல வந்து கூப்பிட்டு போக சொல்லிட்டான். உங்களுக்கு என்னோட வர சம்மதமா? என்ன சென்னை சுடும் அவ்ளோ தான் மத்தபடி சகல வசதியும் உங்களுக்கு என் வீட்டில் கிடைக்கும்.”

“தனி ஆளு எனக்கு என்ன தம்பி இதில் மறுப்பு இருக்க போகுது? எனக்கு சமைக்கிற வேலை இருக்கிற எந்த இடமா இருந்தாலும் சரி தான்.”

“நீங்க ஏன் சுந்தர் கல்யாணம் செய்துக்கல?”

“அதெல்லாம் பார்த்து கல்யாணம் பண்ண எனக்கு தாய் தகப்பன் இல்ல தம்பி. நானா எனக்காக பொண்ணு கேட்க சங்கடமா இருந்தது. அதான் தனியாவே இருந்துட்டேன்.” சுந்தர் கூற சர்வா அமைதியாய் அதை கேட்டு இருந்தான்.

அன்று பதினொரு மணிக்கு கிளம்பியவன். சென்னை சென்று சேர்ந்ததும் சர்வா செய்த முதல் வேலையே, வில்லியமும் முகிலும் செய்யும் மின் வேலையை பற்றிய விவரங்களை திரட்டி தர சொன்னது தான். மகன் மனம் மாறி வந்ததை கண்ட தாரிணி மகனை அளவில்லா மகிழ்வோடு அரவணைத்து இருந்தார். அவனுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் சமைத்து கொடுத்தார்.

“அம்மா நான் இனி இங்க தான் இருப்பேன். பொறுமையா தினம் ஒன்னு சமைக்கலாம். ஏன் இப்படி ஒரே நாளில் இத்தன செய்து வைச்சு இருக்கீங்க?”

“என் பையன் என் கையில சமைச்சதை சாப்பிட்டு ஒன்றரை வருஷமாச்சு, எனக்கு சந்தோசம் தாங்கல, அதான் பைத்தியக்காரி போல செய்துட்டு இருக்கேன்.”

“அம்மா… உங்களுக்கு எதுக்கு சிரமம் தான் கேட்டேன். உடனே வார்த்தையை விடாதீங்க.”

“அவ ஆசைக்கு சமைச்சு இருக்கா, உனக்கு பிடிச்சது தானே எல்லாம்? சாப்பிடுப்பா.” தனபால் கூறவும் உண்ண அமர்ந்து இருந்தான்.

பார்த்து பார்த்து பரிமாறிய தாயை கண்டு சர்வேஸ்வரன் நெஞ்சில் குற்ற உணர்வு ஏழ, உண்டு முடித்தவன், இருவரின் கையையும் பிடித்து மன்னிப்பு கேட்டு இருந்தான்.

“ஏன் சர்வா நாளையில் இருந்து ஆஃபீஸ் வந்துருவ தானே?”

“வந்துருவேன் அப்பா.. நீங்க ஓய்வா வீட்டில் இருங்க.”

“கண்ணு.. உன் மனசு மாறிடுச்சா? அம்மா உனக்கு பொண்ணு பார்க்கட்டுமா?” தாரிணி தயங்கி தயங்கி கேட்க,

“ம்ம்.. பாருங்க. ஆனா இந்த முறை பொண்ணை பத்தி தெளிவா எல்லா விவரமும் கேட்டு முடிவு செய்யுங்க. என்னால மறுபடியும் மாப்பிள்ளை வேஷம் போட்டு ஏமாற முடியாது.”

“இது போதும் கண்ணு. அம்மா உனக்கு இந்த முறை எந்த குறையும் நடக்க விட மாட்டேன். உங்க அப்பா சொன்ன வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவரை முழுசா நம்பி, உனக்கும் விருப்பம் இருக்கவும் தான் நான் நிலாவை உனக்கு கட்டி வைக்க சம்மதம் சொன்னேன். இந்த முறை நான் யாரையும் நம்ப போறது இல்ல. நானே விசாரிச்சு என் மனசுக்கு நிறைவான பொண்ணை தான் உனக்கு கட்டி வைக்க போறேன். நீ எந்த கவலையும் இல்லாம சந்தோசமா இருப்பா, அதுவே அம்மாக்கு போதும்.” தாரிணி கண் கலங்க கூறவும் தாயை தோளோடு அணைத்து கொண்டான்.

“அம்மா… அப்பாக்கு மட்டும் இல்ல, பத்மா அத்தைக்கும் எங்க நிச்சயம் முன்னாடி தான் உண்மை தெரியும். அவங்களும் பெத்த பிள்ளையா, வளர்த்த பிள்ளையான்னு யோசிச்சு இப்படி செய்துட்டாங்க. அப்புறம் நிலா… அவ நம்மை ஏமாத்த நினைக்கல மா. ஒரே நாளில் சட்டுன்னு அவ அடையாளமே மாறி போனா அவளும் என்ன செய்வா சொல்லுங்க? பாவம்மா… நிலா மேல வருத்தத்தை வளக்காதீங்க. நல்ல பொண்ணுமா, என்மேல உள்ள பாசத்தில் அவளை சபிக்காதீங்க.”

“ அவளுக்கும் உனக்கும் கல்யாணமாகி இருந்தா, இந்நேரம் நம்ம வீட்டில் தொட்டில் கட்டி இருப்போம். பெத்தவளுக்கு இருக்கிற ஏக்கம் இது, உனக்கு புரியாது. நிலா இதான் விஷயம்னு சொல்லி இருந்தா, அவளை என் மருமகளா உலகத்துக்கு அடையாளம் காட்டி இருப்பேன் கண்ணு. யார்கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு வெளிய போய் எத்தனை கஷ்டம். என்ன தான் அந்த பையன் முகில் அவளை நல்லா பார்த்துக்கிட்டாலும், வசதியா வாழ்ந்த பொண்ணு இப்ப இருக்கிற இடமும் வசதியும் மனசுக்கு சங்கடத்தை கொடுக்குது. இவளுக்கு இது தேவையான்னு மனசுல ஆதங்கம். என்னவோ கடவுள் இன்னாருக்கு இன்னாருன்னு தான் எழுதி இருப்பான் போல…”

“அதுக்கு தான் நான் கோவையில் நம்ம சப்ளை யூனிட் தொடங்கலாம்னு இருக்கேன். நிலாவை அங்க நிர்வாகம் பண்ண சொல்ல போறேன்.”

“நீயும் எத்தனை முறை நிலாவை கேட்டுட? ஏன் முருகன் எத்தனை முறை கேட்டான்? நிலா தான் எந்த பொறுப்பும் வேண்டாம்னு சொல்லிட்டா இல்ல. இப்ப மட்டும் எப்படி கோவையில் நிர்வாகம் பண்ண வருவா?” தனபால் கேட்க,

“இத்தனை நாளும் அவளுக்கு உதவ கூப்பிட்டோம். இப்ப நிலாவை எனக்கு உதவி செய்ய கூப்பிட போறேன். எனக்கு உதவின்னு கேட்டா கண்டிப்பா நிலா செய்து தருவா? அவளுக்கு இளகிய மனசு.” சர்வேஸ்வரன் கூறவும், தனபால் முகத்தில் புன்னகை.

“ சரிப்பா நான் போய் என் வேலையை பாக்குறேன். நாளைக்கு ஆஃபீஸ் வரேன்.” சர்வா கூறவும், அவரும் சரியென கூறி கிளம்பி இருந்தார்.

சர்வேஸ்வரன் அடுத்து முகிலுக்கு உதவ என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்க, சட்டென அவன் மூளையில் அதற்கான வழி பிறக்கவும், சபாஷ் என்று புன்னகைத்து கொண்டான். அதன் பின் வேலைகள் மின்னல் வேகத்தில் நடக்க தொடங்கி இருந்தது. கோவையில் விநியோக சேவையை தொடங்க இடம் பார்த்து, அதை பதிவு செய்து, பூமி பூஜைக்கு நாளும் குறித்த பின்பு, நிலாவை காண கிளம்பி இருந்தான்.

கோவை வந்து நிலாவின் வீட்டு முகவரியை செந்தில் முருகனிடம் கேட்டு அறிந்து, அவளின் இல்லம் வந்து இருந்தான். ஊரின் புறநகர் பகுதி என்றாலும், அங்கே சகல வசதியும் இருந்தது. முகிலும் வில்லியமும் இன்னும் வேலைக்கு தான் சென்று கொண்டு இருக்கின்றனர். ஆனால் உடன் வீடுகளுக்கு வயரிங் செய்யும் தொழிலையும் சேர்த்து செய்துக்கொண்டு இருந்தனர்.

வருமானம் கொஞ்சம் பெருகி இருக்க, ஒரே வீட்டில் ஒன்றாய் குடியேறி இருந்தனர். நிலா பிள்ளை பெற்ற பின் அடிக்கடி அழும் குழந்தையை சமாதானம் செய்ய கலை அங்கும் இங்குமாக அலையவும் முகிலன் தான் இந்த யோசனையை வில்லியமிடம் கூறி இருந்தான். நண்பனுக்கு உதவ கசக்குமா அவனுக்கு? அவனும் சரியென கூறவும் இரு படுக்கை அறை கொண்ட தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருந்தான்.

முகில் காலை உணவை செய்ய, நிலா மதிய சமையலை பார்க்க, கலை இரவு உணவை பார்த்துக் கொண்டாள். வில்லியம் எப்போதும் மருமகனை கவனித்து கொள்வான். முகம் காட்டாது தன் மகனை தாங்கும் வில்லியம் மீதும், கலை மீதும் நிலாவிற்கு அன்பு பெருகி இருந்தது.

கலை படிப்பை முடித்து வேலையும் பெற்று இருக்க, குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி நிலா அவர்களை வற்புறுத்த தொடங்கி இருந்தாள். அவளின் அன்பு மிரட்டல் கண்டு கலையரசி சிரிக்க, நிலா நேராய் சென்று முகில் முன் நிற்க, முகிலன் வில்லியமின் காதில் விஷயத்தை சேர்த்து இருந்தான். சில மாதங்கள் வேலைக்கு சென்ற பின் அவர்களின் விருப்பம் போல அனைத்தும் நடக்கும் என வில்லியம் பதில் அளித்து இருந்தான்.

வாசல் கதவை அடையும் முன்பே சர்வேஸ்வரனை வரவேற்றது வெற்றியின் அழுகுரல். உடன் நிலா சமாதானம் செய்யும் குரல் கேட்டு சர்வாவின் முகத்தில் புன்னகை விரிந்தது. இவன் கதவை தட்டவும், வரேன் என்ற குரலோடு கதவை திறந்த நிலா சர்வேஸ்வரன் நிற்பதை பார்த்து இன்பமாய் அதிர்ந்து இருந்தாள்.

“ஹேய்… வாங்க வாங்க… சொல்லவே இல்ல? நேரா ஊட்டியில் இருந்து வரீங்களா சர்வேஷ்?”

“இல்ல நிலா சென்னைக்கு வந்து ஒரு மாசமாகுது. கோவையில் சிலபல வேலையா வந்தேன். கோவை வந்துட்டு உங்களை எல்லாம் பார்க்காம போக முடியுமா?”

“உண்மையாவே சொல்றீங்களா சர்வேஷ்? உங்களை இப்படி பார்த்து எத்தனை நாள் ஆகுது? அப்படியே கையோட அத்தை சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிடுங்க. அவங்களுக்கு நிம்மதி கிடைக்கும். எங்களுக்கும் குற்ற உணர்வு குறையும்.”

“பொண்ணு பார்க்க சொல்லி இருக்கேன் நிலா. சீக்கிரமே என் கல்யாண அழைப்போட வரேன்.”

“சர்வேஷ் இன்னிக்கி என்ன இத்தனை இன்ப அதிர்ச்சி தரீங்க? அச்சோ.. நீங்க உக்காருங்க. குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்.”

“சரி அதுவரை வெற்றியை என்கிட்ட தரலாம் இல்ல?”

“இவனுக்கு நேத்து தடுப்பூசி போட்டு வந்தோம் சர்வேஷ், அதில் இருந்து அழுதுட்டே இருக்கான். வில்லி அண்ணா கைக்கு கூட போக மாட்டேன்னு அழுகை. இப்ப தான் அழுகை விட்டு இருக்கான். கை மாத்தினா மறுபடியும் அழுவான்.”

“வீட்டுல யாரும் இல்லையா? எப்ப வருவாங்க நிலா?”

“ இதோ சாப்பிடற நேரம் தானே வந்துட்டே இருப்பாங்க.”

“எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் சர்வேஷ். முகில் சொந்தமா தொழில் தொடங்கி இருக்கார். ரெண்டு பசங்களை வயரிங் வேலைக்கு போட்டு இருக்கார். அதோட அவர் பழுது பார்க்கிற கடையும் நல்லா போகுது.” நிலா சொல்லவும் சர்வேஸ்வரன் முகத்தில் சாந்தமான புன்னகை.

“ என்னடா இவ இதை போய் பெரிய விஷயமா சொல்றான்னு தோணுது தான?” நிலா கேட்கவும்,

“எந்த தொழிலும் உயர்ந்ததும் இல்ல, தாழ்ந்ததும் இல்ல. எனக்கு ஆச்சரியம் எல்லாம் உன் பக்குவம் பார்த்து தான். எப்படி நிலா இத்தனை பக்குவம் வந்துச்சு?”

“என் அடையாளமே ஒரு மணி நேரத்தில் மாறி போன அப்ப வந்த பக்குவம் சர்வேஷ் இது. சட்டுன்னு இந்த உலகத்தில் தனியா நிக்குறோம்னு ஒரு உணர்வு. எந்த உணர்வு பகிரவும் ஆள் இல்லாம தவிச்ச அப்ப, என்னை எந்த கேள்வியும் இல்லாம, என்னை எனக்காக மட்டுமே நேசிக்கிற முகிலன் கிடைச்ச நிமிஷம் போன உயிர் திரும்பி வந்து கூட்டில் சேர்ந்த உணர்வு. பணம், அந்தஸ்து, பகட்டு இதெல்லாம் வாழ்க்கை இல்ல. அன்பும் அரவணைப்பும் தான் வாழ்க்கைன்னு…”

“உன்னை செல்வசெழிப்பில் பார்த்த எங்களுக்கு இப்படி பார்க்க கஷ்டமா இருக்கே நிலா, அது உனக்கு ஏன் புரியல?”

“புரியாம எல்லாம் இல்ல. ஏன்னா இது உங்க குற்ற உணர்வு. அச்சோ செல்வ செழிப்பில் இருந்த பொண்ணை, இந்த நிலையில் கொண்டு வந்து விட்டோம்னு உங்களுக்கு எல்லாம் குற்ற உணர்வு. அதை போக்க தான் சென்னை வர சொல்றீங்க. ஆனா எனக்கான சந்தோசமான வாழ்க்கை இதான். நான் முகிலன் பொண்டாட்டியா ரொம்ப நிறைவா சந்தோசமா இருக்கேன். உங்க குற்ற உணர்வை எல்லாம் விட்டுட்டு நீங்களும் சந்தோசமா இருங்க.” நிலா சொன்னவள் அவனுக்கு என்று பருக எலுமிச்சை சாறு கலந்து கொடுக்க, அமைதியாய் அதை எடுத்துக் கொண்டான்.

சர்வேஷ்வரன் குடித்து முடிக்கவும், வாசலில் பைக் வந்து நிற்கும் ஒலி கேட்டது. முகிலன் முன்னே வீட்டின் உள் வர, பின்னே வந்த வில்லியம் சர்வேஸ்வரனை வரவேற்று இருந்தான். சர்வா புன்னகையுடன் முகில் முகம் பார்க்க, அவன் முகத்தில் அத்தனை கசப்பு. சர்வா முகிலனை முறைத்து பார்க்கவும் சட்டென அவனின் அறைக்குள் சென்று மறைந்து இருந்தான் முகிலினியன்.

© GMKNOVELS