...

5 views

குடை ரெடி, மழை ரெடியா?
வானில்  வட்டமிட்ட கார் மேக கூட்டத்தை முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் அஜய்.... அஜய் ஒரு அரசாங்க பள்ளி மாணவன்...  எட்டு வயதேயான சிறுவன்...  ஒட்டி வெட்டப்பட்ட தலை முடி.... வெயில் காய்ந்து கருத்த தோல்.... காலில் காலணிகள் இல்லை... மழைக்காலத்துக்கு அது தேவையில்லை என்று எண்ணி விட்டான் போலும்.... தோளில் ஒரு பை... அதற்குள் பத்திரமாக இருந்தது அவனது பாடப்புத்தகங்கள்....

அவன் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.... அவனது பார்வையிலும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்தது......

வீட்டின் வாசலில் நின்றவன்... நடு வானில்....  யுத்தம் செய்ய களமிறங்கிய வீரர்கள் அணி அணியாய் நிற்பது போல்...... தன்னோடு மல்லுக் கட்ட வந்திருக்கும் கார்மேக கூட்டத்தைப் நிமிர்ந்து பார்த்தான்.... தன் ஒரு விரலை எச்சிலால் நனைத்து தன் தலைக்கு  மேல் உயர்த்தினான்.... காற்று வடக்கிலிருந்து  தெற்கு நோக்கி வீசிக் கொண்டிருந்தது.....

நான் நினைச்சது சரி தான்...... வடக்கு திசையில தான் அதிகமான கார் மேகங்கள் இருக்கு... காற்றுல அடிபட்ட மேகங்கள் எல்லாம் தெற்கு திசையை நோக்கி தான் நகரும்...  இன்னும் கொஞ்ச நேரத்துலயே இங்கேயும் மழை வந்துடும்..... அதற்குள்ள  நான் பள்ளி கூடத்துக்கு போயிடனும்.... இல்லாட்டி என்னோட சேர்ந்து என்னோட புத்தங்கங்களும் நனைஞ்சிடும்..... என்று தனக்கு தானே வெகு தீவிரமாய் சொல்லிக் கொண்டான்.,... அவன் குரலில் தான் எத்தனை தீவிரம்..... !

அவனது கண்ணில் நினைத்ததை வென்று விடும் உத்வேகம் தெரிந்தது...... இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு ஏகே47 ஐ கையில் ஏந்திக் கொண்டு செல்லும் வீரன் போல்.... தன் தோளில் புத்தக பையை சுமந்தவாறு நின்றிருந்தான் அஜய்....

வானின் களமிறங்கியிருக்கும் கார்மேகங்களை நிமிர்ந்து பார்த்தான் அஜய்.... தன் ஆள்காட்டி விரலை கார்மேகங்களை நோக்கி நீட்டியவன்...

இன்னைக்கு நானா நீயான்னு பார்த்துடலாம்.... என்று கூறியவாறே... ஒரு காலை தரையில் உதைத்தான்.... புத்தக பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்....

ரெடி..... ஸ்டார்ட்.... ஒன்.... டூ.... த்ரீ.....

அடுத்த நொடி வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடத் துவங்கி இருந்தான் அஜய்...... கல், புல், முள் என பாதையில் வரும் அனைத்து தடைகளையும் தாண்டி ஓடினான்.... சாலையின் திருப்பங்களில் கூட ....அவனது கவனம் அதிகரித்ததே தவிர, அவனது வேகம் குறையவில்லை...

அந்தோ பரிதாபம்.... பாதி வழியிலேயே மழை வேகமாக பூமியை நனைக்க தொடங்கி விட்டது.... மழை துளிகள் நனைத்து பூமியை மட்டுமல்ல... அதனுடன் சவால் விட்ட அஜயையும் அவனது புத்தங்களையும் தான்....

பள்ளிக் கூட கட்டிடத்தை அடையும் முன்னமே... தொப்பலாக நனைந்திருந்தான் அஜய்...

அவனுக்குள் ஒரு கோபம்.... மழையுடம் தோற்று விட்ட கோபம்... ஓடி வந்ததால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறே.... நெற்றியில் வழிந்த மழை நீரை எல்லாம்..... கைகளால் வழித்து எரிந்தான்...... ஈரம் சொட்டும் உடையோடு.... கருமை படர்ந்த வானத்தை முறைத்துப் பார்த்தான்.....

என்னையே சீண்டிப் பார்த்துட்ட.... நான் ஒத்துக்குறேன்..... நீ பெரிய டான் தான்... ஆனால் நான் டானுக்கே டான்... டண்டனக்கா டான்.... நீ பார்க்க தானே போற....... என்று மிரட்டும் தொனியில் கூறி விட்டு..... நனைந்த புத்தகங்களோடு வகுப்பறைக்கு சென்றான் அஜய்.... தன் இலட்சியத்தை எப்படியாயினும் அடைந்து விடுவது என அன்று முடிவெடுத்தான் அஜய்....

அன்றிலிருந்து....... மிட்டாய் கடையை வெறுத்தான்...... போண்டா , பஜ்ஜி போடும் கடை பக்கமே போக மாட்டான்.... திருவிழா கடைகளை திரும்பி கூட பார்க்கவில்லை... அவனுக்கு பிடித்த புளிப்பு மிட்டாயையும், பொறி உருண்டையையும் கூட துச்சமாய் எண்ணினான்.... தன் இலட்சியத்திற்காக இடைவிடாமல் போராடினான்..... தியாகங்கள் இல்லாமல் சாதனைகள் விளைவது இல்லையே...... நாட்கள் வாரங்களாகின.... வாரங்கள் மாதங்களாகின..  மாதங்கள் வருடமாய் மாற.... அஜயும் மாறியிருந்தான்....

தற்போது அஜய்க்கு ஒன்பது வயது..... அவன் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.... செயல்களில் காரிய சித்தியும், வார்த்தகளில் உறுதியும் இருந்தது..... பார்வையில் ஒரு கூர்மை இருந்தது....

இந்த வருடத்தின் மழைக்காலமும் துவங்கியது..... அதே பள்ளி, அதே கார்மேக கூட்டம், அதே புத்தகபை , அதே காலணிகள் இல்லா கால்கள்... ஆனால் இந்த அஜய் மட்டும் மாறுபட்டவன்.....

வானத்தைப் பார்த்தான்.... அன்றொரு நாள் மழையிடம் தோற்றுப் போனது அவனது நினைவுக்கு வந்தது..... அன்று அவனிடம் தோற்று விட கூடாது என்ற பயம் இருந்தது.... ஆனால் இன்று என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சல் இருந்தது.... அன்று அவனது ஓட்டத்தில் வேகம் இருந்தது... இன்று அவனது நடைகளில் விவேகம் இருந்தது...   அன்று காற்றின் திசையை வைத்து வானிலையை கணித்தது போல் இன்று கணிக்க வேண்டிய அவசியம் இல்லை.....

கார்மேகத்தைப் பார்த்து ஒரு நமட்டு புன்னகையை சிந்தியவன்.... வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தான்..... பாதி தூரம் கடக்கும் முன்னமே..... மழைத் துளிகள் பூமியை நனைத்தது.... ஆனால் அந்த மழைத் துளிகள் அஜயையும் அவனது புத்தகங்களையும் நனைக்கவில்லை..... காரணம் அவன் கையில் ஒரு குட்டி குடை இருந்தது.....

ஒரு வருடமாக மிட்டாயை தவிர்த்து, போண்டா மற்றும் பஜ்ஜியை பார்த்து தடுமாறாமல், திருவிழா கடைகளின் பக்கம் கூட திரும்பாமல்... அவனுக்கு திண்பண்டம் வாங்க கிடைக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து.... அவன் வாங்கிய 50  ரூபாய் குடை அவன் கையிலிருந்தது.... பெற்றோரின் ஏழ்மை நிலை குடை வாங்கி தர மறுத்த போதும்.... தன்னுடைய இலட்சியமான குடையை வாங்கி விட்டான் அஜய்..... ஏழ்மை நிலையால் மறுக்கப்பட்ட குடையை... தன் முயற்சியால் வாங்கி விட்டான் அஜய்...

குடையின் கீழ் அஜயும் அவனது புத்தகப்பையும் நனையாமல் பத்திரமாக இருந்தன..... வானை மறைத்து நின்ற கார்மேகங்களை பார்த்து பழிப்பு காட்டியவாறே பள்ளி கூடத்தை நோக்கி நடந்தான் அஜய்.....

தனக்கு பழிப்பு காட்டிச் செல்லும் அஜயிடம் பேச தொடங்கியது மழை....

குட்டி பையா....உன் குட்டி குடையை பறித்துக் கொள்ள எனக்கு எவ்வளவு நேரமாகும்..... உன் குட்டி குடையை தாண்டியும் என்னால் உன்னை நனைக்க  முடியும்.... என்பது உனக்கு தெரியுமா!.... உன்னால் என்னை ஜெயிக்க முடியாது.... ஆனால் உன்னை ஜெயிக்க விடாமல் தடுக்க முடியும்.... ஆம் உன்னால் முடியும்.... என்றாவது ஒரு நாள் உன்னையும் ,உன் புத்தகத்தையும் என்னிடமிருந்து நீ பாதுகாக்க வேண்டுமென்பதற்காக தான்..... ஒவ்வொரு முறையும் உன்னையும் உன் புத்தகங்களையும் நான் நனைத்தேன்..... இப்போது தான் எனக்கு மகிழ்ச்சி... நீ என்னை ஜெயிக்க விடாமல் தடுத்திருக்கிறாய்....

உனக்கு தெரியுமா குட்டி பையா..... என் மழை துளிகள் மூலம்.... எத்தனை பேருக்கோ மகிழ்ச்சியை தந்திருக்கிறேன்.... ஆனால் முதல் முறையாக நீ எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறாய்.... உன் நம்பிக்கையின் மூலம்....

இப்படிக்கு....

மழை...

அன்புடன்.....

எபின் ரைடர்....


© Ebinrider