...

25 views

என்னுயிர் துணையே - 15 & 16
துணை - 15

சத்யா, லண்டன் செல்ல ஒரு மாதம் இருந்த நேரத்தில், மகன் பெயரில் அவரின் சொத்துகளை மாற்றி கொடுத்தார். நிறைய பழைய கதைகளை பேசி சிரித்தார். மகனுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தார். சத்யாவும் அவனுடைய படிப்பு, கனவு என்று நிறைய பேசி பகிர்ந்து கொண்டான். இடையில் ஜோதி இருவரையும் வந்து பார்த்து சென்றார். சூர்யாவிற்காக சத்யாவிடம் மனதார மன்னிப்பு கேட்டார். சிவா மனைவியோடு பேசினாலும் மகனிடம் பேசாது தவிர்த்தார்.

அன்று இரவு மகனை மடியில் படுக்க வைத்து தலை வருடி, நீண்ட நேரம் மகனின் முகம் பார்த்து விழித்து இருந்தார்.

" அம்மா.. என்னாச்சு..? "

" கவனமா இருக்கனும் சரியா? "

" ம்மா.. "

" லண்டன் போற இல்ல? தனியா இருக்கனும் இல்லையா அதான் சொன்னேன்."

" அதெல்லாம் சத்யா பத்திரமா இருப்பான். படிச்சு முடிச்சு வேலை கிடைச்சதும் உங்களையும் என்னோட லண்டன் கூப்பிட்டு போய்டுவேன்."

" கண்டிப்பா.. அம்மா எப்பவும் உன்னோட தான் இருப்பேன் சத்யா. தூங்கு பா.." சத்யா உறங்கிய பின் மகனை பார்த்திருந்தவர் நடுஇரவில் தான் படுக்கைக்கு சென்றார்.

காலையில் சத்யா துயில் எழ, அவனின் தாயோ மீளா துயிலுக்கு சென்று இருந்தார். நந்தாவிடம் அழைத்து விவரம் சொன்னவன், பொள்ளாச்சிக்கு தன் தாயின் உடலை அனுப்ப மறுத்து விட்டான்.

கோவையிலேயே அவர் உடலை அனைவரின் பார்வைக்கும் வைத்து இருக்க, சத்யா வாய் விட்டு கதறி அழ, குற்றவாளியை போல நின்று இருந்தான் சூர்யா. தெளிந்து போய் இருந்தான் அன்றே, சுந்தரியின் முகம் பார்க்கவும் தான் தாயாய் தாங்கிய அவரின் பாசம் புரிந்தது. ஆனால் இனி அவரை பார்க்க முடியாதே..

அப்பா, தம்பி, தங்கை, தோழன், காதலி என அனைவரும் கண் எதிரில் இருந்தும் அனாதை போல உணர்ந்தான். அவன் மனமே வலியில் இறுகிப்போய் விட்டது. எத்தனை மன அழுத்தமோ? எத்தனை கவலையோ? நான் உடைந்து போனதில் அவரும் உடைந்து விட்டாரோ? அல்லது என் தாயை நானே உடைத்து விட்டேனோ? தகாத வார்த்தை கேட்டு உயிர் துடித்து போனாரோ? என்னை தேற்ற தான் இத்தனை நாளும் உயிரை பிடித்து வைத்து காத்து இருந்தாரோ? நான் தெளிந்து விட்டதும் உத்தமியின் உயிர் பிரிந்து போனதோ?

இறுதி சடங்கு முடிந்திருக்க, சத்யா பதினாறாம் நாள் காரியம் முடித்த கையோடு அன்று இரவே லண்டன் கிளம்பி விட்டான். இனி இந்த இந்திய மண்ணை உயிர் உள்ளவரை தொட கூடாது என்ற எண்ணத்துடன், பெற்றவள் கொடுத்த பணமிருக்க, தந்தை தன்னை தொட முடியாத இடத்தை நோக்கி சென்று இருந்தான்.

ஆனால் மகனின் முயற்சியை முறியடித்து மூன்று மாதத்தில் அவரோ கல்லூரி முன் வந்து நிற்க, அடுத்த ஆண்டு கல்லூரியை மாற்றி கொண்டான். அப்படி தான் அனு பழக்கமானால், கோடீஸ்வர வீட்டு வாரிசு மனதை சமன் செய்ய பாத்திரம் கழுவி தரவும், வெயிட்டராகவும் வேலை பார்த்தான். பொறுமை, பக்குவம், இரண்டும் கிடைக்க, பண்பான ஒரு வாழ்வை அமைத்து கொண்டான்.

வலைத்தளத்தில் கிடைக்கும் செய்தியின் மூலம் விஜய், சூர்யா, அன்பு, ஹரி என அனைவரின் திருமணத்தையும் பார்த்துக் கொண்டான். சிவா நினைத்தால் அவரின் செல்வ நிலைக்கு சத்யாவை கண்காணித்து அவரின் பார்வையிலே வைத்து கொள்ள முடியும் தான். ஆனால், மகனின் நிம்மதிக்காக அவனை இத்தனை வருடமும் தொடராது அவன் போக்கில் விட்டு விட்டார். சிவா மொத்தமாய் தொழிலிருந்து ஓய்வுக்கு செல்ல முடிவு செய்ததும் மகனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம். அதுதான் மகனை சொத்து பிடிப்பதாக கூறி அழைத்து கொண்டார். ஆனால் அவன் மீது அவருக்கு பெரிய சந்தேகம்.

கட்டிய மனைவிக்கு கூட தன் குடும்பத்தை பற்றிய விவரங்களை கூறாத மகனின் மீது சந்தேகம் கொண்டு, அவனை பற்றி அறிந்து வர ரகசிய குழுவை தகப்பன் அனுப்பி வைத்து இருக்கிறார். நிச்சயமாக சத்யா இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவனை பற்றி அறிந்து கொண்டால் என்னாகும் தந்தையின் உள்ளம்?

ஹரி அனைத்தும் சொல்லி முடிக்க, அனைவரும் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர்.

" இந்த சூர்யாக்கு அறிவே இல்ல, கொஞ்சம் நிதானமா யோசிச்சு இருக்கலாம். " ஆதிரா சொல்லிவிட்டு அழ,

" நான் சொல்றேன் யாரும் கோவப்படாதீங்க அறிவு சித்தி உண்மையில மோசம். ஒருத்தர் மேல பாசம் இருக்கலாம் அதுக்காக இப்படியா அடுத்தவங்களை காயப்படுத்தி பார்க்கனும்? எத்தனை கடுமையான வார்த்தை? " தேன் மொழி கேட்க,

" சுந்தரி ஜோதி அக்காகிட்ட வீட்டு சாவியை தரும் போது கூட நான் நினைக்கல.. அவளுக்கு முன்னாடியே தெரியும் போல இனி இங்க வரமாட்டோம்னு. மகராசி புருஷனுக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டா.. " கோகிலா சொல்லி அழ,

" சத்யா அண்ணாக்கு இது எவ்ளோ பெரிய இழப்பு? அண்ணா கண்ணும் உதடும் சிரிக்கும், துறுதுறுன்னு இருப்பாரு, எதை கேட்டாலும் இதுக்கு ஏன் தயங்குற அப்பா முன்னாடியே கொண்டு போய் நிறுத்தி அவர் கண்ணுக்கு நேரா பார்த்து பேசி செய்து கொடுப்பார். சூர்யாவும் நானும் அப்பா முன்னாடி நின்னதும் இல்ல, இப்படி எதையும் பேசினதும் இல்ல. காரணம், எங்களுக்கு அப்பாவா, நண்பனா, அண்ணா இருந்தார். அப்பாகிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது. சத்யா அண்ணா போனதுக்கு அப்புறம் தான் இழப்பு என்னன்னு புரிஞ்சுது.. " ஹரி கூறவும் வித்யாவும் அதை ஆமோதித்து கண்களை துடைத்துக் கொண்டாள்.

" அட பிள்ளைகளா போதும் அழுதது. ஆதி விளக்கு வைக்கிற நேரமாச்சு எழுந்து போய் முகம் கழுவி, தலைவாரிட்டு வா, தேனு, வித்யா போங்க நீங்களும்.. " ஜோதி அதட்ட அனைவரும் எழுந்து சென்று இருந்தனர்.

" எப்படி அத்தை நீங்க இத்தனை திடமா இருக்கீங்க? " தேன் அவரின் இயல்பான பேச்சை பொறுக்காது ஜோதியிடம் கேட்டு வைக்க, அவளை கண்டு அவரோ சிரித்து இருந்தார்.

" நாங்க மூணு பேரும் எப்படி வாழ்ந்தோம் எங்களுக்கு தெரியும். சுந்தரி எனக்காக என்ன விட்டு கொடுத்தா, கொடுக்கல எல்லாம் எனக்கு தெரியும். சண்டை போட வேண்டிய நான் அமைதியா இருக்கேன். இதுங்க எல்லாம் சண்டை போடுதுங்க. எனக்கு எல்லாரையும் தெரியும். அறிவு என் மேல வெச்சு இருக்கிற பாசமும் தெரியும், சுந்தரி என் மேல வெச்சு இருந்த அன்பும் தெரியும்."

"அறிவு என் மேல பாசம் சொல்லிட்டு, நான் பாசம் வெச்சு இருந்த சுந்தரியை கஷ்டப்படுத்தி பார்த்தா, ஆனா சுந்தரி ஒரு நாளும் அறிவை எதிர்த்து ஒரு பார்வை கூட வீசினது இல்ல. சுந்தரிக்கு தெரியும் புருஷனுக்கு அறிவு தான் முதல் குழந்தைன்னு, அவ மேல அவர் உயிரா பாசம் வெச்சு இருக்காருன்னு, எங்க அண்ணன் இல்லாம அவ இங்க வந்த அப்போ அவளை தனியா வைக்க சொன்னது நான். நம்ம கூட இருக்கனும் சண்டை கட்டினது சுந்தரி."

" சத்யாவை விட சூர்யா தான் செல்லம் அவளுக்கு, சூர்யா வீட்டுக்கு வந்தா நெய்யா போட்டு சமைக்க சொல்வா, தினம் அசைவம் வைக்க சொல்வா, வித்யாக்கு ஒரு நாளும் நான் தலைவாரி விட்டது இல்ல, ஹரிக்கு ஒரு நாளும் எண்ணெய் தேய்ச்சு குளிப்பட்டினது இல்ல, ஏன் விஜய், அன்பு கூட படிச்சா சுந்தரி மா தான் கத்துவாங்க. என் புருஷனுக்கு அத்தனையும் செய்தது நான். மனைவியா என்னை இருக்க சொல்லிட்டு, ஆறு பிள்ளைக்கும் அம்மாவா அவ தான் இருந்தா, இதெல்லாம் எனக்கு தெரியும், என் புருஷனுக்கும் தெரியும். யாருக்கு எதை சொல்லி நிரூபிக்கனும் நாங்க? எதுக்கு கவலைப்படனும் நான்? அப்பா அம்மா வாழ்க்கையை பார்த்து பாடம் கத்துக்காத பிள்ளைங்களே கவலைப்படாத போது எனக்கு என்ன? " ஜோதி புன்னகை முகமாக கூற, அனைவருக்கும் உண்மை உரைத்தது.

" சரி நான் போய் அந்த அனு பிள்ளையை பார்க்கிறேன். காலையில இருந்து கீழ வர காணோம்.." கோகிலா சொல்லிவிட்டு எழ, அனு மாடியில் இருந்து இரவு உடையோடு இறங்கி வந்து கொண்டு இருந்தாள்.

" அத்த சத்யா எங்க? " ஒன்றும் அறியாத பிள்ளை போல வந்து கேட்கும் அண்ணியை கண்டு ஹரிக்கு சூழ்நிலை மறந்து சிரிப்பு வந்தது.

" அவன் வெளிய போய் இருக்கான்."

" அப்போ அப்பு? "

" அவனையும் கூட கூப்பிட்டு போய் இருக்கான். ஆமா.. புருஷன் எங்க போறான், வரான் கூட தெரியாத மாதிரியா தூங்குவ? " கோகிலா குத்தலாக கேட்டு வைக்க,

" நானே துக்கமா இருக்கேன் அத்தை. என் வாயை புடுங்காதீங்க சொல்லிட்டேன். ஃபோன் பண்ணேன் போகல, அதான் கேட்டேன். " அனு குரல் தழுதழுக்க கூறிவிட்டு செல்ல,

" அனு.. நில்லு.. ஏன் அழற? " ஜோதி கேட்கவும்,

" சத்யா வேணும்.. பார்க்கனும்.. முடியல அதான்.. " அனு உடைந்து அழ,

" வந்துருவான் மா ஏன் அழற? எதும் சண்டையா? " ஜோதி பதறிப்போய் கேட்க,

" சண்டை இல்ல.. காதல்.. உங்களுக்கு புரியாது.. நான்.. நான்.." அவள் மீண்டும் அழ,

" அண்ணி நீங்க ரூமுக்கு போங்க, நான் அண்ணனை வர சொல்றேன்." ஹரி சிரிப்பை அடக்கி கூறவும், அனு சரியென கூறி அறைக்கு செல்ல, கோகிலாவும் ஜோதியும் அறைக்குள் செல்ல,

" ஏன்டா பாவம் அண்ணி.. அவங்க அழறதை பார்த்து உனக்கு என்ன சிரிப்பு? " வித்யா கடிந்து கொள்ள,

" இங்க பக்கத்துல வா சொல்றேன்." ஹரி அழைக்க,

வித்யாவுடன் தேனும் அருகில் வந்து நிற்க, ஆதிராவும் பக்கம் வந்தாள். ஹரி நேற்று நடந்த அனைத்தையும் கூற, பெண்கள் மூவரும் விழி விரிக்க,

" போதை.. அண்ணிக்கு இன்னும் இறங்கல போல.. அதான் அவங்க சின்னப்பிள்ளை போல அழவும் எனக்கு சிரிப்பு வந்துருச்சு. "

" இதுக்கு பேர் தான் குடியும் குடித்தனம் போல " தேன்மொழி சொல்ல அனைவரும் சிரித்து இருந்தனர்.

" சரி சத்யா மாமாக்கு கால் பண்ணி சொல்லுங்க ஹரி.. அக்கா பாவம்.. மாமாவை தேடுவாங்க போல " ஆதிரா கூற, ஹரி அலைபேசியை எடுக்க சென்றான்.

அண்ணனை அழைத்து விவரம் கூற, அவனோ அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று கூறினான். சரியாய் சொன்னது போலவே இல்லம் வந்ததும் சேர்ந்து இருந்தான். ஆதிரா ஹாலில் இருக்க,

" ஆதி இங்க வா.. " சத்யா அழைக்கவும் அவளுக்குள் பதட்டம்..

" சொல்லுங்க மாமா.. "

" மாசாணி அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வந்தேன். அர்ச்சனை பண்ண பிரசாதம் இருக்கு எல்லாருக்கும் கொடுத்துட்டு, நீயும் எடுத்துக்கோ. அப்பு தூங்கிட்டான் நான் ரூமில் படுக்க வெச்சுட்டு வரேன். " சத்யா அவளிடம் நீட்டிய பையை வாங்கிக்கொண்டாள்.

சத்யா அறைக்குள் வந்து மகனை படுக்க வைத்து விட்டு அனுவை தேட, பாத்ரூம் உள்ளே இருந்து வாந்தி எடுக்கும் சத்தம் வந்தது. பாத்ரூம் கதவை திறந்து உள்ளே சென்று அவளின் தலையை இவன் பிடித்துக்கொள்ள, வயிற்றில் உள்ளதை எல்லாம் வெளியே கொட்டினாள். அயர்ந்து போய் நின்றவளின் முதுகை தடவி, வாய் கழுவ உதவி செய்தான்.

" குளிச்சுட்டு வந்துரு அம்மு மா.. அப்ப தான் நல்லா இருக்கும்."

" சரி.. "

சத்யா வெளியே வர குளித்து உடை மாற்றி வரவும் அவளுக்கு என்று ப்ளூபெர்ரி வாழைப்பழம் போட்டு ஸ்மூதீ செய்து எடுத்து வந்து இருந்தான்.

" இதை குடி தங்கம்.. ராத்திரிக்கு நல்லா சாப்பிட்டா சரியா போய்டும்."

" கோவமா பேபி? "

" எதுக்காம்? "

" நேத்து நான் சொன்னது கேட்டு தான்.. "

" நேத்து அப்படி கோவப்படற மாதிரி நீ எதும் சொல்லலையே சீனிக்கட்டி"

" விளையாடாத சத்யா.. "

" சரி நேத்து என்ன சொன்னேன் சொல்லுடி லட்டு, எனக்கு ஞாபகம் இருக்கான்னு பார்ப்போம்.."

" ஐ.. நான்..."

" சொல்லு டார்லி.. " சத்யா சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டே கேட்க,

" நான் உன்னை காதலிக்கிறேன் சொன்னேன். "

" ஹேய் ஸ்வீட்டி உண்மையாவா? " பொய் ஆச்சரியமும் வியப்பும் முகத்தில் காட்டி சத்யா கேட்க, அனு அவனை அடிக்க ஆரம்பிக்க,

" ஐயோ.. ஐயோ.. ராட்சஸி அடிக்காதடி.. "

" நடிக்கிறியா.. ஒன்னும் தெரியாத மாதிரி.. ஏன்டா விட்டு போன? எங்கடா போன.. உன்னை காணாம பயந்துட்டேன் தெரியுமா.. " அடித்துக்கொண்டு இருந்தவள் சரிந்து அமர்ந்து அழ,

" அப்பு தூங்குறான் மீனுகுட்டி.. இங்க பாரு அழாத.. நான் அம்மாகிட்ட சொல்லிட்டு தானே போனேன்? நம்ம வீட்டுல என்ன பயம்? "

" என் மேல கோவமா சத்யா? என்னை பிடிக்கலையா? நான் வேண்டாமா டா உனக்கு? ப்ரெண்ட்னு சொல்லிட்டு இப்படி எல்லாம் பேசிட்டேன் தப்பா நினைக்குறியா? ரொம்ப இடம் கொடுத்துட்டதா நினைக்குறியா? "

அனு கேள்வியாக கேட்டு வைக்க சத்யா இட வலமாக தலையை ஆட்டிக் கொண்டான்.


துணை - 16

" வேற எதும் கேள்வி இருக்கா என் பாப்புகுட்டிக்கு? லிஸ்ட் எதும் போட்டு வெச்சு இருக்கியா? முதல இதை குடி, அழாத தல வலிக்கும். அப்புறம், கொஞ்ச நேரத்தில் சாப்பிட்டு தூங்கலாம். நாளைக்கு நம்ம மூணு பேரும் கோயம்புத்தூர் போக போறோம் அங்க போய் இதை பத்தி தெளிவா பேசலாம். இங்க எதையும் பேச வேண்டாம்." சத்யா கூறவும் சரியென அதை வாங்கி குடித்து இருந்தாள்.

" என்னை இங்க விட்டு நீயும் அப்புவும் எங்க போனீங்க பேபி?"

" கோவைக்கு போனோம் குட்டிமா, சின்ன டூர் போவோம் பிளான் போட்டேன். வீட்டுல சும்மா தானே இருக்கோம். அதுவும் இல்லாம அப்பு இங்கேயே இருந்தா, ஊருக்கு போனதும் இவங்களை தேடி ஏங்கி போவான். அதான் அவன் கவனத்தை திருப்ப முயற்சி பண்றேன். "

" நான் பயந்துட்டேன்.. "

" ஏய்.. அம்மு.. அப்படி உன்னை விட்டு போவேனா நான்? கோவமா இருந்தாலும் உன்னை விட்டு நான் எங்கடி போவேன்? எனக்கு உன்னையும் அப்புவையும் விட்டா யார் இருக்கா? "

" தெரியல.. எழுந்ததும் உன்னையும் அப்புவையும் காணல, சட்டுன்னு யாரும் இல்லாத தீவுல நிக்கிற மாதிரி ஆகிடுச்சு. "

" பைத்தியம்.. "

" நீ தான்.. போடா லூசு.. "

" மூஞ்சியை பாரு முயல்குட்டி.. " சத்யா காதை செல்லமாக பிடித்து சொல்லி விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, இவளோ அப்புவின் அருகில் படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை கோவை இல்லத்திற்கு அழைத்து வந்து இருந்தான். பெரிதாய் பிரம்மாண்டமாக ஒன்றும் இல்லை. இருபது வருட பழைய இல்லம், நேர்த்தியான பராமரிப்பில் அழகாய் இருந்தது. வீட்டை சுற்றி புல்வெளி, இரண்டு கார் நிறுத்தும் அளவுக்கு போர்டிக்கோ, எட்டு அறைகளே கொண்ட சிறிய இல்லம். ஆம் சிறிய இல்லம் தான் அவர்களின் சொத்து மதிப்புக்கு இது சிறியது தானே?

சமையலுக்கும், மற்ற உதவிக்கும் இருவர் இருந்தனர். அப்பு வீடு முழுவதும் சுற்றி பார்த்து அவனின் பிடித்ததை கூறி இருந்தான். அப்புக்கு என்று விளையாட பொம்மைகளை வாங்கி வந்து இருந்தனர். சத்யா தரை தளத்தில் இருக்கும் ஒரு அறைக்கு அனுவை அழைத்து சென்றான். அங்கே செல்வசுந்தரியின் புகைப்படம் சுவரில் மாட்டி இருந்தது.

" என் அம்மா.. " சத்யாவின் குரல் தழுதழுக்க கூறினான். அனு புகைப்படத்தின் முன்னே சென்று நின்றவள்,

" நீ அப்படியே உன் அம்மா மாதிரி டார்லி.. ஜெராக்ஸ் போட்டு இருக்க உன் அம்மாவை.."

" ஆமா.. அப்பாக்கு அதிகம் என்னை பிடிக்கவும், அத்தைக்கு என்னை பிடிக்காம போனதுக்கு காரணமும் அதான். "

வீட்டை சுற்றி பார்த்து, சிறிது நேரம் ஓய்வு எடுத்து, மதிய உணவை உண்டு ஓய்வாக அமர்ந்தனர். அப்பு சத்யாவின் மடியில் படுத்து உறங்க, அனுவை அழைத்துக்கொண்டு மீண்டும் அம்மாவின் அறைக்குள் வந்தான். மகனை அம்மாவின் படுக்கையில் படுக்க வைத்தவன், அனுவின் அருகில் வந்து அமர்ந்தான்.

" நீ முந்தின நாள் காதல் சொன்ன அப்போ எனக்கு பெருசா எந்த அதிர்ச்சியும் இல்ல. ஏன்னா உன் கண்ணுல காதலை பல முறை நான் பார்த்து இருக்கேன். அப்போ எல்லாம் என் பிரம்மைன்னு தோணும். தப்பா நினைக்காதேன்னு என்னை நானே திட்டி இருக்கேன். ஆனா நான் பொண்டாட்டியா நடிக்க சொன்னதும் உன் கண்ணில் தெரிஞ்ச மின்னல், உன் உற்சாகம், உன் அப்பாகிட்ட என்னை புருஷன் சொல்வேன் சொன்ன தைரியம் எல்லாமே சந்தேகத்தை தூண்டி விட்டு இருந்துச்சு.. "

" சத்தியமா எப்போ, எப்படின்னு தெரியல தங்கம்.. ஆனா என் காதல் உண்மை.. "

" உன்கிட்ட கள்ளம் கபடம் இருக்குமா அம்மு? இப்படில சொல்லி பிளீஸ் என்னை சங்கடப்படுத்தாத.. நம்ம ஷாப்பிங் போனோம் இல்ல ரெண்டு நாள் முன்னாடி அன்னிக்கு நீ அந்த கல்யாண ஜோடி போல இருக்கனும் கேட்டதும், எதோ ஒரு வேகத்துல ஒரு பையனை பிடின்னு சொல்லிட்டேன். ஆனா ஹோட்டலில் நீ கலங்கி நின்ன நிமிஷம், அதையே நினைச்சு ராத்திரி நீ தூங்காம இருந்தியே அப்போ தோணுச்சு, வேற ஒருத்தன் கூட உன்னை அனுப்பிட்டு நான் என்ன செய்வேன்? நீ எப்படி இருக்க, அவன் உன்னை என்ன செய்வான்னு எனக்கு எப்படி தெரியும்? உனக்கு எப்போ என்ன வேணும்ன்னு புரிஞ்சு நடப்பானா? பத்திரமா பார்த்துபானா? இப்படி எல்லாம் கேள்வி வரவும் உன்னை யார் கூடவும் அனுப்பிட கூடாதுன்னு தோணுச்சு. "

" எங்க அம்மா இறந்து போன அந்த கடைசி நாள் என்கிட்ட சொன்னாங்க, உனக்குன்னு ஒருத்தி வருவா சத்யா, உன் அறிவு அத்தையையே உனக்காக எதிர்த்து நிப்பா, வாயை அடக்குவான்னு, அப்போ சிரிப்பா இருந்துச்சு.. ஆனா பாரு.. இப்போ அது உண்மைன்னு தோணுது எங்க அம்மா தீர்க்கதரிசி போல அன்னிக்கே சரியா சொல்லிட்டாங்க பாரேன்.."

"ம்ம்.. அம்மு.. உனக்கு இருக்கிற காதல் உணர்வு எனக்கு இல்லடி. எனக்கு என் அனு இல்லாம எதுமே இல்ல. அவளை விட்டு எல்லாம் என்னால வாழ முடியாது. நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிக்க கூட எனக்கு தைரியம் இல்ல. என் உலகத்தில் நீயும் அப்புவும் தான் எனக்கு எல்லாம். "

" ஆனா நீ நினைக்கிற காதலனா நான் இருப்பேனா தெரியலடி, நிறைய வலி அனுமா எனக்கு.. என் அன்பு, பாசம், ஆசை, நேசம், நம்பிக்கை, எல்லாத்தையும் உடைஞ்சு போட்டா ஒருத்தி.. அவ குடுத்த ஏமாற்றம், அவமானம், இழப்புன்னு வலி.. தீராத வலி இன்னும் எனக்குள்ள இருக்கு. நான் இன்னுமே சரியாகல, என் சொந்த ஊரு, என் சொந்த வீடு அங்க ரெண்டு நாள் கூட முழுசா தங்க முடியாம இங்க ஓடி வந்துட்டேன். பயமா இருக்கு.. மறுபடியும் ஒரு வலியை தாங்க என்னால முடியாது. உன்னையும் அப்புவையும் யாரும் காயப்படுத்தி பார்த்தா மறுபடியும் மிருகமா மாறிடுவேன் நான்.. "

" எதுக்கு சத்யா வீணா இந்த கவலை? யாரும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது, நான் அதுக்கு அனுமதிக்க மாட்டேன். நமக்கு எதும் வேண்டாம் சத்யா. ஊருக்கு போய்டுவோம் வா.."

" எனக்கு இந்த வீடு வேணும். என் அம்மா கூட அவங்க கடைசி நாட்களை கழிச்சது இங்க தான். அப்பாகிட்ட இதை கேட்டு வாங்கனும். வாங்கிட்டு போவோம் அனுமா.. நம்ம இங்கேயே இருந்துடுவோம். டூர் போய்ட்டு வந்து கூட இங்கேயே இருப்போம். லண்டன் போற வரைக்கும் பொள்ளாச்சி பக்கம் போக வேண்டாம்."

" போக வேண்டாம் சத்யா.. உன்னை காயப்படுத்துற எதுவும் வேண்டாம் நமக்கு.. "

" உண்மையாவே காதலாடி டார்லி என் மேல? என்னோட உன்னால சந்தோசமா இருக்க முடியாது. என்னால உன்னை சந்தோசமா வெச்சுக்க முடியும்னு தோணல, நமக்கு இதெல்லாம் வேண்டாமே மனசை மாத்திக்கோ செல்லம்.. நம்ம இப்படியே ப்ரெண்ட்சா காலம் முழுக்க இருந்திடலாம். "

" எனக்கு புரியுது சத்யா உன் வலி. கண்டிப்பா அது பெருசு தான். நான் உன்கிட்ட காதலை தான் கேட்டேன். காமம், பொண்டாடின்னு உரிமை, குழந்தை, எதுவும் வேண்டாம் எனக்கு, உன்னை காயப்படுத்தி வருத்தி எதையும் நான் வாங்க மாட்டேன் சத்யா. ஒரு பெண்ணோட பெண்மைக்கு பாதுகாப்பு தந்து அவளை எந்த சலனமும் இல்லாம தாங்க எல்லா ஆம்பளையாலும் முடியாது. என்னோட உயிருக்கும், உடலுக்கும், ஏன் உன் உணர்வுக்கு கூட நீ தான் பாதுகாப்பு. அதே பாதுகாப்பு உணர்வை தர தான் வாய்ப்பு கேக்குறேன் நானும் என் சத்யாவை யாரும் என்னை மீறி தொட முடியாதுன்னு இந்த உலகத்துக்கு சொல்ல ஒரு அங்கீகாரம் வேணும் எனக்கு, ஆண் கிட்ட எந்த கேள்வியும் கேட்காத உலகம் பொண்ணுக்கிட்ட மட்டும் அவனோட என்ன உறவு, உரிமைன்னு கேள்வி கேட்குதே அதுக்காக.. "

" நான் மட்டும் தான் வேணுமா? அப்பு? "

" நான் தானே அவன் அம்மா. அப்பு இல்லாம நீயும் நானும் எப்படி குடும்பமாவோம் சத்யா? என்ன கேள்வி கேட்கிற நீ?.."

" அனு.. அப்பு.. என்.."

" அப்பு உன் பையன் இல்லன்னு எனக்கு தெரியும் சத்யா.. "

" அவன் நம்ம சஞ்சய் பையன் அனுமா.. நீ ஊருக்கு போன அப்புறம் உனக்கு கூட தெரியுமே? ஆக்ஸிடென்ட் அவன் மனைவி உயிரை காப்பாத்த முடியாம, அப்புவை மட்டும் ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க. சஞ்சய் என்கிட்ட கடைசியா கேட்ட உதவி அப்புவை பார்த்துக்க சொல்லி கேட்டது தான். நாங்க சஞ்சய் வீட்டுக்கு தகவல் சொன்னோம்

‘வெளிநாட்டுகாரியை கல்யாணம் பண்ண அவன் எனக்கு மகன் இல்லன்னு ’ சொல்லி அவன் அப்பா அவனோட உடலை கூட வாங்க வரல. நாங்க தான் பொறுப்பை எடுத்து அவனுக்கு இறுதி சடங்கு செய்தோம். அப்பு பிறந்த நாளும் எங்க அம்மா பிறந்த நாளும் ஒன்னு. எனக்கு அப்புவை பார்க்கும் போது எல்லாம் என் அம்மா என்கிட்ட வந்த உணர்வு. என்னால அப்புவை யாருக்காகவும் இழக்க முடியாது அனுமா.. "

" யார் இழக்க சொன்னாங்க சத்யா உன்னை.. அப்பு எப்பவும் நம்ம பையன் தான். அதை யாராலும் மாத்த முடியாது. "

" அப்பாக்கு உண்மை தெரிஞ்சா அப்புவை ஏத்துக்க யோசிக்கலாம். என்னையே உறவு இல்லன்னு சொன்ன அத்த, அப்புவை என்ன எல்லாம் சொல்வாங்க? அவன் மேல யாருக்கும் ஒட்டுதல் இல்லாம போய்டும். இதெல்லாம் அப்புக்கு வேண்டாம். "

" ஏன் சத்யா வேற எதாவது சொல்லனுமா? நம்ம சேர வேற எதும் தடை இருக்கா? என் கேள்விக்கு பதில் சொல்லலையே இன்னும்..?"

" ஒரு வேண்டுகோள் இருக்கு, அது என் மனைவியான அப்புறம் நீ உன் அப்பா, அம்மாவை பார்க்க சம்மதம் சொல்லனும். அவங்க உன் மனசு புரியாம நடந்து இருக்கலாம். ஆனா அவங்க பயம் உண்மை. ஒரு மனநலம் இல்லாதவனை கல்யாணம் பண்ணது உன் தப்பு இல்ல, அவன் அப்படி தான் கண்டுபிடிக்க முடியாம போனது உன் அப்பா தப்பும் இல்ல. ஆனா இந்த சமூகம் வாழாம வந்த உன்னை கேள்வி கேட்கும். "

" உன் பெண்மையை சோதிக்கும். அதோட வசதிக்கு உன்னை இழுக்க முயற்சி செய்யும். பாதுகாப்பை, உன் ஒழுக்கத்தை, நடந்ததை கேள்விக்குறியாக்கும் இதுக்கு பயந்து தான் உன்னை ஒருத்தன்கிட்ட முறையா கட்டிக்கொடுக்க நினைச்சாங்க. நீ கேட்கிற நேரத்துக்குள்ள உனக்கு எதும் ஆகிடும் பயம். சாதாரண அப்பா அம்மாவா ஒரு பொண்ணு மேல இருக்கிற அன்பு அவ்ளோ தான். அப்போ நீயும் யோசிக்க முயற்சி பண்ணல உன் மனநிலை அது.. அவங்களும் உன் நிலையை யோசிக்கல.. "

" நான் இதை பேச வந்த அப்போ எல்லாம் நீ தடுத்த, இப்போ நீ இதை மறுக்க கூடாது. கண்டிப்பா உன் அப்பாவையும் அம்மாவையும் பார்க்கனும். ஹரிக்கு கல்யாணம் அனுமா. அவன் மெயில் பண்ணி உன்னை கூப்பிட்டு வர சொல்லி இருக்கான். முந்தின நாள் ராத்திரி இதை தான் சொல்ல வந்தேன். நீ சரக்கு அடிச்சு வேற பேசி இதை மறக்க வெச்சுட்ட.. போலாமா? உன் வீட்டுக்கு என்னையும் அப்புவையும் கூப்பிட்டு போவியா? " சத்யா பெரியதாய் பேசி கேள்வியில் முடிக்க, அனு அவளின் உள்ளங்கைக்குள் முகம் புதைத்துக் கொண்டு அழுது இருந்தாள்.

" என்னால முடியாது சத்யா.. அப்பாவை.. அவர் எதிரில் நிக்கிற போய் நிக்கிற தைரியமே இல்லப்பா எனக்கு.. நீ சொல்றது சரின்னா அவரை நான் புரிஞ்சுக்கவே இல்லையே? அவர் மனசு எவ்ளோ தவிச்சு இருக்கும்? "

" என்னை பாரு.. என் செல்லம் இல்ல.. இங்க பாரேன்.. நீ தான் புருஷன், பையன் குடும்பமா தானே போய் நிக்க போற? அதெல்லாம் மன்னிச்சுடுவார். அவரும் இதை தானே உன்கிட்ட கேட்டார். ஒரு வேளை நான் உன் அளவுக்கு அழகா இல்லன்னு ஃபீல் பண்றியா? என்ன பண்ண இந்த சுமார் மூஞ்சி சத்யாவை தானே உனக்கு பிடிச்சிருக்கு? " சத்யா சிரிப்படக்கி அனு முகத்தை பார்க்க, அவள் முகத்திலும் சிறிய புன்னகை எட்டிப்பார்த்தது.

‘ சோகங்களை அவனுள்ளே அடக்கி வைத்து விட்டு தனக்காக சிந்திக்கும், சிரிக்கும் இவனின் உள்ளத்து அழகு போதாதா? இந்த அன்பிற்கு தானே மனம் இவனிடம் சரணடைய காத்து நிற்கிறது? ’ அனு அவனை பார்த்து சிந்தித்து கொண்டவள்,

" போலாம் டா குட்டி பையா.. மூணு பேரும் போய் ஷாக் கொடுப்போம்." அனு கூறவும், சத்யா அவளின் கண்களை துடைத்து விட்டான்.

" அப்ப கல்யாணம் பண்ணிபோம் அனுமா.. எனக்கு சம்மதம்.. "

© GMKNOVELS