...

5 views

தாய் சுமக்கும் கனவு....
அதிகாலை வெடவெடக்கும் குளிரில் கண்கள் செருகிக் கொள்ளும் தூக்கத்தை கிழித்தெறிந்து விட்டு அவன் பரக்க பரக்க  எழுந்து பின்னங்கட்டில் உள்ள பாத்ரூமுக்குள் ஓடினான்.
எல்லோரும் தூக்கத்தை சுவைக்கும் சாமத்தில் இவனுக்கு மட்டும் இறைவனுடன் கதைப்பதில் அவ்வளவு பிரியம்.
அன்றும் தொழுதான். அவன் அழுதான். தியானம் செய்தான். தன் மனக்கஷ்டங்களை இறைவனிடம் சமர்ப்பித்தான். தன் தேவைகளையும் ஆசைகளையும் முறையிட்டான். இறைதூதர் மீது ஸலவாத்துக்களையும் கூறி மகிழ்ந்தான்.

நாட்டுச் சேவல் தன் சேவையைத் தொடங்கியது.
பாங்கு சொல்ல முன்னே இறைவணக்கம் புரியும் மக்களை எழுப்பி மகிழும் அதன் சேவை மகத்தானது.
பிரதிபலன் எதிர்பார்க்காத ஒரு ஐந்தறிவு ஜீவனின்
உற்சாகமான சளைக்காத முயற்சி.

பள்ளியில் பாங்கு சொல்ல முன் பாராயணம் செய்யப்படும் ஸலவாத்து ஒலி கேட்டவுடன் அவன் ஸுப்ஹ் தொழுவதற்காக பள்ளி நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அந்தப் பள்ளிக்குள் ஸுப்ஹ் தொழுவதற்கு முதலில் வரும் மூவருக்கும் மோதினார் நறுமணம் பூசுவது வழக்கம் . அதைப் பெற்றுக் கொள்வதில் இவனுக்கு அலாதிப் பிரியம். அத்தனைக்கும் இவன் இருபது வயது அழகிய இளைஞன்.
எதிர்காலம் பற்றிய கனவுகளை எல்லாம் இறைவனின் அர்ஷ் வரை எத்தி வைத்து விட்டு அவன் அருளோடு சேர்ந்த ஒரு வாழ்வாதாரத்தை எதிர்பார்த்து முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் ஒரு வாலிபன்.

வழமை நாளை விட இன்று அவனுக்குள் ஒரு பரபரப்பு. "இன்று நான் பயணிக்கும் பயணம் வெற்றிகரமாக முடியனும் அல்லாஹ்வே!" என்று உள்மனசு தொடர்ந்து பிரார்த்தனையில் முனுமுனுத்தவாறு ஏங்கித் தவித்தது.

பள்ளியில் இருந்து வந்தவன் தாயின் ஸலாத்துடன் பரிமாறப்பட்ட டீயை ருசித்தவன் வாப்பா ஸுரத்துல் பகராவை ஓதி முடிக்கும் வரை காத்திருந்தான்.
இன்றைய பயணம் பற்றி கலந்துரையாடுவதற்காக.

சாதாரண நடுத்தர குடும்பம். அன்புள்ள பெற்றோர்.தோழமைமிக்க சகோதரங்கள். அவர்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற ஆவலில் இவன் மூத்தவன்.

சிறுவயது முதல் இவன் கோபக்காரன்.விளையாட்டு வீரன்.விளையாட்டில் மூழ்கி படிப்பில் கவனம் எடுக்க தவறிவிட்டான். அவனுக்குள் ஒரு கேள்வி.... "படித்தவர்கள் மட்டுமா நன்றாக வாழ்கின்றனர்?"
படித்தவர்கள் நன்றாக வாழ்கின்றனர்; ஆனால் மற்றவர்கள் பற்றி கரிசனை கொள்வது குறைவு.
கொஞ்சம் சுயநலம் மிக்கவர்கள் என்பது ஏனோ அவனுக்குள் பதிந்து போன உண்மைகளில் ஒன்று.

மெத்தப் படித்தவர்களில் சிலர் சரியான பொறாமை கொண்டவர்கள். தலைக்கணம் பிடித்தவர்கள் என்று தாயுடன் சிலநேரங்களில் வாதிடுவான்.
"ஏழைகளைப் பாருங்கள்! படிக்காதவர்களை பாருங்கள். அவர்களின் தேவைகள் கொஞ்சம் தான். அதனால் அவர்கள் பொறாமைப்படுவதுமில்லை. தலைக்கணம் பிடிப்பதும் இல்லை. "
"ஆனாலும் அவர்கள் தேவையை அவர்கள் வாயால் கேட்காமலேயே தேடியறிந்து பூர்த்தி செய்ய  யாரு இருக்காங்க ம்மா"
என்று ஒரே அங்கலாய்த்து கொண்டிருப்பான்.

ஏதோ நோன்பு காலத்தில் மாத்திரம் ஸக்காத் பெக்கேஜ் போகும். மற்ற பதினொரு மாதங்களில் யாரும் யாரையும் பார்ப்பதில்லை.
"நம்முடைய ஆசிரியர்களில் சிலர் கஷ்டவாளிங்க உம்மா "
"அவங்க வெளியே சொல்ல முடியாமல் எவ்வளவு தவிக்கிறாங்க தெரியுமா?"
" பாவம் உம்மா! நம்முடைய கணக்கு மாஸ்டர்ட மகன உயர்தரம் படிக்க வைக்க அவர் எவ்வளவு கஷ்டப் படுகிறார் தெரியுமா?"
" அவருக்கிட்ட படிச்சு இப்போது நல்ல நிலையில் உள்ள, நல்லா சம்பாதிக்கும் எவனாவது அவருக்கு மறைமுக உதவி செய்யனும் என்று நினைச்சாங்களா? " என்று உள்ளுக்குள்ளும் தாயுடனும் ஒரே கவலைப் படுவான்.

'எல்லோருக்கும் தேடிப் போய் தேவை அறிந்து உதவி செய்ய வேண்டும் என்ற அவனது எண்ணங்கள்  எப்படியாவது நிறைவேற வேண்டும் என அவனது தாய் ஒவ்வொரு தஹஜ்ஜத் தொழுகையிலும் வேண்டுவாள்.

இன்றும் அவன் தேடிச் செல்லும் பொருள் பாக்கியம் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்று அவளும் பிரார்த்தனை புரிந்தவாறு மகனை வழியனுப்பி வைத்தாள்.
அவள் கண்களுக்குள் ஆயிரம் கனவுகளைச் சுமந்தவாறு.......
அல்லாஹ் மிக்க கிருபையுடையவன்.
இந்த தாயின் தமையன் பற்றிய கனவுகளை இறைவன்  நிஜமாக்கி வைக்கட்டும் என்று அவர்களின் ஏக்கம் அறிந்த முற்றத்து செடிகள்
இறைவனிடம் யாசித்தன.

கனவுகள் உயிர் பெற்று நிஜமாகும் காலம் விரைந்து வரத் தொடங்கியது இந்த தாயின் மூச்சின் உஷ்ணத்தில்........

நன்றி.

~ சிரியஸ் ~
© siriuspoetry