...

11 views

ஜன்னல் ஓர ரோஜா செடி
எதிர்வீட்டில் முதல் மாடியின் கடைசி கதவு திறந்திருந்தது. நீண்ட நாட்களாக சாத்தியிருந்த கதவை திறந்து இருப்பது கொஞ்சம் ஆச்சரியம் தந்தது. யார் வந்திருப்பார். அவன் மனதில் இருந்த கேள்விக்கு விடை கிடைக்க அவன் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
ஒரு மாலை நேரத்தில் கையில் பையுடன் வெளியே வந்தாள் அந்தப் பெண்.
கழுத்தில் மெல்லிய சங்கிலி. சின்ன தோடு பழைய சுடிதார் துடைத்து வைத்த முகம் எந்த உணர்வையும் காட்டாமல் விரைந்து சென்று கொண்டிருந்தாள். ஒரு அரை மணி கழித்து மீண்டும் வந்த வழியே உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள் அதன் பிறகு அவன் எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணை மீண்டும் பார்க்க ஒரு வார காலம் ஆனது.

மீண்டும் அதே போல மாலை பொழுது கையில் பை, பொருட்கள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். இதுவே தொடர்கதையாக.

அந்த பெண் மீது பரிதாபம் ஏற்பட்டது. ஏதாவது செய்து அவளை சிரிக்க வைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவன் அமர்ந்த ஜன்னலோரத்தில் வண்ண வண்ண ரோஜா செடிகள்.

அவனுக்கு ஒரு சிந்தனை தோன்றியது. அடுத்த நாள் காலை அந்த பெண்ணின் வீட்டு வாசலில் ஒரு ரோஜா செடி இருந்தது. அன்று மாலை அவள் கதவை திறக்க வாசலில் இருந்த பூந்தொட்டி அவளுக்கு ஆச்சரியத்தை அதிர்ச்சியை தந்தது. அதை தாண்டி செல்ல முடிவெடுத்து கடந்தவளின் துப்பட்டாவை பிடித்து இழுத்தது செடியின் ஒரு கிளை.
அவசரமாக இழுத்தால் அந்த செடி பாதிக்கப்படுமோ என்று மெதுவாக தன் துப்பட்டாவை விடுவித்தாள்.
ஏனோ அந்த செடியில் பூத்திருந்த ஒற்றை ரோஜா அவளை கவர்ந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் தொட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்

சற்று நேரத்தில் அந்த வீட்டின் ஜன்னல் கதவு முதல் முறையாக திறக்கப்பட்டது. ஒரு பெரிய கூடையில் அடியில் வைத்து ஜன்னல் ஓரத்தில் அந்த தொட்டியை வைத்து விட்டு மீண்டும் கதவை பூட்டிக்கொண்டு கடைவீதிக்குச் சென்று விட்டாள்.

அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவள், சிறிய இடைவெளிக்கு பிறகு அந்த ஜன்னல் அருகில் வந்து நின்று கொண்டிருந்தாள். இவன் ரோஜாவையும் அந்த பெண்ணையும் ஒன்றாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு அந்த ஜன்னல் சாத்தப்படவில்லை. அவளது சின்னச் சின்ன நடவடிக்கைகள் அவன் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் வீட்டுக்குள் நடப்பது, தேநீர் அருந்திக்கொண்டே புத்தகம் படிப்பது என்று ஏதோ ஒரு வகையில் அவன் ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று முறையேனும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

நாட்கள் கடந்தன ரோஜா செடியில் புதிய துளிர்கள் புதிய மொட்டுக்கள் என நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. அதை பார்க்கும் போதெல்லாம் அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
அதுவரை வீதியையோ அதை தாண்டி எதிர்வீட்டையோ பார்க்காதவள். முதல் முறையாக பார்த்தாள்.

எதிர் மாடி வீட்டில் இதே போன்ற ரோஜா செடியும் அதன் பின்னால் ஒரு வாலிபனும் அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை முதல்முறையாக கவனித்தாள்.

சட்டென்று பயம் தொற்றிக்கொள்ள அங்கிருந்து விலகி விட்டாள். ஆனாலும் மீண்டும் மெதுவாக வந்து எட்டிப் பார்க்க அதே புன்னகையுடன் எதிரில் அவன் அமர்ந்திருக்க, இத்தனை நாட்களாக தன்னை யாரோ கண்காணிப்பது போன்ற உணர்வு இருந்தாலும் அதை பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது.

ஒருவேளை இந்த செடியை அனுப்பியதே அவன்தானோ‌ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் எப்போதும் அந்த வாலிபன் அங்கே அமர்ந்து இருப்பது அவளுக்கு ஆச்சரியம் தந்தது. அவளும் அவனை கண்காணிக்க ஆரம்பித்தாள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 மணி நேரமாவது அவன் அந்த ஜன்னல் அருகே இருந்தான்.

இவனுக்கு வேற வேலையே இல்லையா? நண்பர்களே இல்லையா? படிப்பு உத்யோகம் எதுவுமே இல்லையா? அவளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

அவள் தன்னை கவனிக்க தொடங்கிய பின் மெல்லிய புன்னகையுடன் நட்பாக பார்த்து சைகையால் நலமா என்றான். தன் புன்னகையால் பதில் தந்தாள்

பின் ஒருநாள் பையை எடுத்துக்கொண்டு கடை வீதிக்குப் புறப்பட்டவள் ஏதோ தோன்ற அவன் வீட்டுக்கு வந்தாள்.

அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் அவள் வருவதை‌ கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். அழைப்பு மணி அடித்தவுடன் ஒரு‌ முதியவர் வந்து கதவை‌ திறந்து அவன் ‌இருக்கும் இடம் அழைத்து சென்றார்.

நேராக உள்ளே செல்ல ஒரு அறைக்குள் அவன் அமர்ந்திருந்த நிலை அவளை அதிர்ச்சியில் உறைய வைத்தது...

இரண்டு கால்களும் இல்லாமல் ஒரு போர்வை போர்த்தி அமர்ந்து கொண்டு இருந்தான். ஆனால் அவன் சுவற்றில் இருந்த புகைப்படங்களும் அவன் ஓடுவதும், நடப்பதும், சிரிப்பதும் விளையாடுவதுமாக அமைந்திருந்தது.

அப்படியே நின்றவளை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்தில் என் கால்கள் பறிபோனது. உங்களைப் போல்தான் ஒரு வார்த்தை கூட பேசாமல் யாரிடம் பழகாமல் அப்படியே வாழ்ந்திருந்தேன். இந்த மனநிலை எனக்கு இந்த செடியை ‌என் நண்பர் பரிசளித்தார். இந்த செடி வந்ததிலிருந்து என் மனதில் மகிழ்ச்சியும் புன்னகையும் நிறைந்து இருந்தது.

உங்களை கண்டேன் நீங்களும் என்னைப் போலவே இருப்பதைக் கண்டேன் அதனால்தான் உங்களுக்குப் பரிசாக தந்தேன் இப்போது உங்கள் முகத்திலும் புன்னகை கண்டேன் என்றான்.

அவன் மீதிருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அதன் பிறகு அவள் அவனை மிக நல்ல நண்பனாக ஏற்றுக் கொண்டு தினமும் அவருடன் நேரம் செலவிடுவதும் பேசுவதுமாக இருந்தாள். காலமும், அந்த ‌ரோஜா செடிகளும் இவர்களிடையே ஏதோ ஒன்று மலர காத்திருக்கிறது

kumuda Selvamani

#கும்ஸ்
© Meera