...

2 views

ஏன் என்னை பிரிந்தாய்?
இது ஒரு கதை இல்ல. இன்னும் சொல்ல போனா இது ஒரு கதையான்னு கூட எனக்கு தெரியல. ஆனா என் மனசுல இருக்குற ஒரு வலியை என்னோட எழுத்துக்களால கரைக்கனும் போல இருக்கு. அப்படி என்னை வலின்னு கேட்குறீங்களா? வாங்க சொல்லுறேன்.

பொதுவாகவே எனக்கு செல்ல பிராணிகள்ன்னா ரொம்ப இஷ்ட்டம். ஆனா நாய்களை தவிர வேறு எந்த செல்ல பிராணிகளையும் எனக்கு வளர்க்கவோ பராமரிக்கவோ தெரியாது. அதனால நான் நாய் வளர்க்குறேன். எனக்கு நாய்களை பிடிக்குற மாதிரி, என் அம்மாக்கு கோழிகள் ரொம்ப பிடிக்கும். அதனால எங்க வீட்டுல நிறைய கோழிகள் வளர்க்குறோம். எனக்கு அவ்வளவா கோழி வளர்ப்பில் ஆர்வம் இல்லை தான். ஆனால் என் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால தானோ என்னவோ, அம்மாக்கு பிடிச்ச கோழிகளையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவைகளை பராமரிக்குறது எல்லாமே அம்மா தான் பண்ணுவாங்க.

ஒரு நாள் அம்மா ஒரு பத்து கோழி முட்டையை எடுத்துட்டு கோழி கூடு பக்கமா போனாங்க.

"அம்மா இதெல்லாம் எங்க எடுத்துட்டு போறீங்க?" என்று கேட்டவாறே, நானும் அம்மாவை பின்தொடர்ந்து போனேன். அம்மா சரியா எந்த பதிலும் சொல்லாம,

"நீயும் என் கூட வா" அப்படின்னு சொல்லிட்டு ஒரு சின்ன ப்ளாஸ்டிக் டப்பில் கொஞ்சம் மணல் எடுத்து, அதுல பத்து முட்டையையும் வரிசையை மெல்லமா அடுக்கினாங்க. ஒரு அடை கோழியை தூக்கிட்டு வந்து, முட்டை எதுவும் அசையாத மாதிரி அதுக்கு மேல வச்சாங்க.

அது தான் எங்க வீட்டுக்கு முதல்ல வந்த கோழி. அதுக்கு பெயர் கூட வச்சிருக்கோம். அதுக்கு பெயர் "ஹேனா". அத தான் அந்த முட்டைகள் மேல வச்சோம். ஹேனா கொஞ்சம் குண்டா இருப்பா. அவளோட பல்க் பாடியால தான் அத்தனை முட்டையையும் பாதுகாக்க முடியும்ன்னு அம்மா சொன்னாங்க. ஆமா அம்மா சொன்னதும் சரி தான். எல்லா முட்டையையும் பாதுகாப்பா தனக்கு கீழே வச்சிட்டா. ஒரே ஒரு முட்டை மட்டும் கொஞ்சம் வெளியே தள்ளி இருந்தது. அதையும் தன் கழுத்த வளைச்சி, தன் அலகால இழுத்து தனக்கு கீழே வச்சிட்டா ஹேனா. அத பார்க்கவே எவ்வளவு அழகா இருந்துச்சி தெரியுமா? நிஜம்மா சொல்லுறேன். எனக்கு புல்லரிச்சிடுச்சி. பக்கத்துல நின்ற என் அம்மாவோட கழுத்தை கட்டிகிட்டு அம்மா கிட்ட கேட்டேன்.

"அம்மா ஹேனாவுக்கு அவளோட குழந்தைகள் மேல எவ்ளோ பாசம் பார்த்தீங்களா? நானும் உங்க வயிற்றுல இருக்கும் போது இப்படி தான என்னை கண்ணே மணியேன்னு ஆசையா தடவி பார்ப்பீங்க."

"ஆமா.... ஆமா..... புள்ளைன்னு நினைச்சி எருமை மாட்டை போட்டு பெத்து வளர்த்துருக்கேன்." என்று என் அம்மா செல்லமா என்னை திட்டிட்டு, வேலையை பார்க்க போய்ட்டாங்க. ஆனா நான் எங்கேயும் போகல, ஹேனாவையும் அவ மறைச்சி வைச்சிருந்த முட்டையையும் பார்த்துட்டு கொஞ்ச நேரம் அங்கேயே நின்றேன்.

"இயேசப்பா, எல்லா முட்டையும் நல்ல முட்டையா இருக்கனும். ஒன்னுமே கூமுட்டையா போக கூடாது. இதுல இருந்து வெளியே வரும் கோழி குஞ்சு எல்லாம் பெருசா வளரனும். வளர்ந்து நிறைய முட்டைகளை கொடுக்கனும்." என்று இறைவனிடம் வேண்டுதல் வச்சிட்டு, அப்புறம் நானும் என் வேலையை பார்க்க போய்ட்டேன்.

அன்னைல இருந்து 21 வது நாள் வரை, தினமும் போய் ஹேனாவை பார்ப்பேன். அவ சாப்பிட வெளியே வரும் போதெல்லாம் அவளுக்கு தண்ணியும் சத்தான கோழி தீவனமும் கொண்டு போய் வைப்பேன். அவளும் சமத்தா சாப்ட்டுட்டு, மறுபடியும் போய் முட்டைகள் மேல உட்கார்ந்துடுவா.

நாட்கள் ஓடியது. நான் ரொம்ப எதிர்பார்த்த நாளும் வந்தது. ஆமாங்க, இன்னைக்கு தான் 21 வது நாள். எல்லா கோழி முட்டைகள் பொறிக்க வேண்டிய நாள் இது. காலையிலேயே போய் கோழி பக்கத்துல ஒரு சேர் போட்டு உட்கார்ந்துட்டேன். அடிக்கடி கோழி கூட்டுல காதை வச்சி பார்ப்பேன். கோழி குஞ்சு வெளியே வந்ததும் "கீச்...கீச்..... கீச்..." ன்னு சத்தம் போடும்.

ஆறு மணியில இருந்து காத்திருந்த எனக்கு எட்டு மணியளவுல மெல்லமா, ரொம்ப மெல்லமா,

"கீச்....கீச்....கீச்...." ன்னு ஒரு கோழி குஞ்சோட சத்தம் என் காதுல கேட்டுச்சி, சேர்ல இருந்து துள்ளி எழுந்து அந்த கோழி கூட்டுக்குள பார்த்தேன்.

அண்டங்காக்கா கலருல ஒரு கோழி குஞ்சு, ஹேனாவோட காலுக்கு இடையில நின்றதை பார்த்ததும், எனக்கு செம ஜாலி. இப்போ தான் முட்டையில இருந்து வெளியே வந்திருக்கும் போல. அதோட முடிகள் காயாம, குளிப்பாட்டி வச்ச குழந்தையோட தலை முடி மாதிரி அதோட உடம்புல ஒட்டிட்டு இருந்துச்சி. மெதுவா அதோட குட்டி காலால, எழுந்து நிற்க முயற்சி பண்ணி, ஒரு வழியா எழுந்து நின்றது.

அது மேல ஒட்டியிருக்குற ஈரம் காய்ந்தால், இன்னும் நல்லா இருக்குமேன்னு எனக்கு தோனிச்சி. ஆர்வ கோளாறுல கோழி கூடுக்குள்ள தலையை விட்டு,

"உஃப்......." ன்னு ஊதுனேன் பாருங்க. அங்க தான் காமெடியே.

நான் ஊதுனதுல அதோர ஈரம் காய்ந்ததோ என்னவோ, அந்த கிராதகி ஹேனா என் நெற்றியிலேயே ஒரு கொத்து கொத்திட்டா. வலிச்சிதுன்னு சொல்ல கொஞ்சம் ஒரு மாதிரியா தான் இருக்கு. ஆனா அது தான் உண்மை. அதோட புள்ளையை நான் ஏதோ செய்ய போறேன்னு நினைச்சி என் நெற்றியிலேயே கொத்தி வச்சிட்டா அந்த ஹேனா. எனக்கு கொஞ்சம் கோபம் தான்.

"லூசு ஹேனா, உனக்கு போய் விழுந்து விழுந்து சேவகம் பண்ணினேன் பாரு." என்று பொய்யாய் அவளை திட்டி விட்டு, என் அம்மா கிட்ட நியூ பார்ன் கோழி குஞ்சு பற்றி சொல்ல போய்ட்டேன். அம்மாவும் வந்து பார்த்துட்டு போனாங்க.

சாயங்காலம் வரை, கோழி கூடு பக்கத்துல தான் கடையை போட்டுட்டு உட்கார்ந்துட்டேன். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. பத்து முட்டை வச்சோம். ஆனா ஏழு முட்டைல இருந்து தான் குஞ்சு வந்திருக்கு. இன்னும் மூனு முட்டை அப்படியே தான் இருந்தது. அது எப்பதான் பொறிக்கும்ன்னு காத்திருந்தேன். அன்னைக்கு முழுசும் காத்திருந்தேன். அது பொறிக்கவே இல்லை. அம்மா ஒரு டார்ச் லைட் எடுத்துட்டு வந்து, அந்த மூனு முட்டைகளையும் செக் பண்ணினாங்க. கடைசி பார்த்தா அந்த மூனு முட்டையும் கூமுட்டையாம். அத கேட்டதும் எனக்கு ரொம்ப கவலையாகிட்டு. ஆனாலும் குட்டி குட்டி டென்னிஸ் பால் மாதிரி இருந்த ஏழு குஞ்சுகளை பார்த்ததும் அந்த கவலை காணாம போய்டுச்சி.

புள்ளைங்க பிறந்தது என்னவோ ஹேனாக்கு தான். ஆனா அவளை விட எனக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருந்தது. கருப்பு, மஞ்சள், சாம்பல், வெள்ளைன்னு நாலு கலர்ல இருந்த கோழி குஞ்சுகளை பார்க்க பார்க்க திகட்டல எனக்கு. அதுலயும் இந்த ஹேனா இருக்காளே!

நான் வந்தாலே அவளோட குஞ்சுகளை எல்லாம், அவளோட இறக்கைகளுக்குள்ள மறைச்சி வைச்சிப்பா.

"அடியே குண்டம்மா, என்ன பார்க்க திருட்டு பய மாதிரி இருக்கா" அப்டின்னு அவ கூட சண்டை போட்ட நேரமும் உண்டு.

அம்மா கோழி குஞ்சுகளை ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க. அதுங்களுக்கு கரையான் இன்னும் என்னலாம் கொடுக்கனுமோ அதையெல்லாம் கொடுத்தாங்க.

ஒரு வாரம் கடந்தது, இப்போ கோழி குஞ்சுகள் கொஞ்சம் வளர்ந்திடுச்சி. அதோட இறக்கைகள் கூட அழகா வளர்ந்திடுச்சி. அவ்வப்போது அதை வெளியிலே மேய்ச்சலுக்காக விடுவோம். அப்படி தான் ஒரு நாள் ஹேனாவையும் அவளோட குஞ்சுகளையும் வீட்டு தோட்டத்துல மேய்ச்சலுக்கு விட்டுருந்தோம். எப்போதுமே வெளியே விடும் போது கொஞ்சம் கவனமா இருப்போம். பிகாஸ் எங்க ஏரியாவுல தெருநாய்களின் நடமாட்டம் அதிகமா இருக்கும். அதுங்க வயிற்று பசியை தீர்க்க கோழிகளை பிடிச்சி சாப்பிடுறதை வழக்கமா வச்சிருக்கும். பல கோழிகுஞ்சுகளை அதோட வாய்க்கு கொடுத்துருக்கோம். சோ எப்போதும் நாங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருப்போம். அன்னைக்கு எல்லா குஞ்சுகளும் ஹேனாவோட சேர்ந்து மேய்ச்சலில் இருக்க, அதுல ஒரு மஞ்சள் நிற கோழி குஞ்சு மட்டும் மிஸ்ஸிங். எனக்கு கொஞ்சம் பதட்டமாகிட்டு.

"ஐயோ அது எங்க போச்சின்னு தெரியலையே." என்று பதறியவாறே நான் அதை தேட, எங்கிருந்தோ ஒரு பலவீனமான கீச்சு சத்தம் என் காதுல விழுந்துச்சி. சத்தம் வந்த திசையில மல்லி பூ செடிகள் அடர்த்தியா வளர்ந்திருந்தது. அதை விலக்கிட்டு நான் உள்ளே பார்க்கும் போது, ஒரு செடிக்கு கீழ கால் நடக்க முடியாம கீழே கிடந்தது அந்த குஞ்சு.

"ஓ மை காட், உனக்கு என்னாச்சு?" என்று ரொம்ப  கவனமாக, அதை அமுக்காம, இரண்டு விரலால் அதை தூக்கி என் உள்ளங்கையில வச்சேன்.

நான் நினைச்சது சரி தான். அதோட கால் இரண்டுமே செயலிழந்து போய் இருந்துச்சி. ஆனா எப்படின்னு தான் தெரியல. எந்த அடியும் பட்ட மாதிரி இல்லை. ஆனா கால்ல தான் பிரச்சனைன்னு மட்டும் தெரிஞ்சுது. அதை கொண்டு போய் என் அம்மா கிட்ட கொடுத்தேன். அம்மாவும் அதுக்கு மஞ்சள் நல்லெண்ணையை போட்டு விட்டாங்க. இனி அதை வெளியே விட வேண்டாம்ன்னு, கூட்டுக்குள்ள போட சொல்லிட்டாங்க. அதுக்கு தீவனமும் தண்ணியையும் வச்சி அதை கூட்டுக்குள்ள போட்டுட்டேன். அடிக்கடி வந்து பார்ப்பேன்.

அது நடக்க முயற்சி பண்ணும் போதெல்லாம், அதுக்கு வலிக்கும் போல. வலியில "கீச்....கீச்....கீச்" ன்னு வேகமா கத்தும். எப்போதும் "கீச்... கீச்"ன்னு கத்திட்டே இருந்ததால அதுக்கு கிச்சுன்னு பெயர் கூட வச்சேன். அன்னைக்கு முழுவதும் அது சாப்டவே இல்லை. எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சி. அதை பத்திரமா என் உள்ளங்கையில வச்சி, அதுக்கு தண்ணி ஊட்டுனேன். அப்பா  வாங்கிட்டு வந்த மீனை குட்டி குட்டி துண்டுகளாக்கி, அதை கிச்சுவுக்கு ஊட்டி விட்டேன். அதுவும் நல்லா சாப்டுச்சி. என் கையால நான் அதுக்கு ஊட்டி விடும் போது கிடைச்ச சந்தோஷம் இருக்கே! அட.... அட..... சும்மா சொல்ல கூடாது. ரொம்ப ஹேப்பியா இருந்துச்சி. கிச்சுவோட இரைப்பையை பார்த்தேன். மீன் சாப்பிடத்தால ஒரு குட்டி கோலிகுண்டு மாதிரி ஆகிட்டு.

"இன்னைக்கு சாப்ட்டதும் போதும் கிச்சு. நீ எப்படியாவது குணமாகி வந்துடனும். நீ பையனா இருந்தா, பெருசா வளர்ந்ததும் உன்ன கசாப்பு பண்ணிடுவாங்க. இல்லன்னா விற்றுடுவாங்க. பொண்ணா இருந்தா, உன்ன யார்கிட்டயும் கொடுக்க மாட்டாங்க. ஆனா நீ கவலப்படாத. நீ பையனா இருந்தாலும் சரி, பொண்ணா இருந்தாலும் சரி. நான் உன்ன கைவிட மாட்டேன். சரியா இது என்னோட செல்ல கிச்சுவுக்கு நான் கொடுக்குற சத்தியம்." என்று சொல்லி அதோட மென்மையான முடி கொண்ட தலையை, தன் கன்னதோட இலேசா உரசுனேன்.

ப்பா..... செம ஃபீல் அது. இப்போ நினைச்சாலும் மெய் சிலிர்க்குது. அப்படியே கிச்சுவை கூட்டுல விட்டுட்டு நானும் தூங்க போய்ட்டேன்.

அடுத்த நாள் விடிந்தது. கடவுளிடம் ப்ரார்த்தனை பண்ணிட்டு நேரா கிச்சுவை தான் பார்க்க போனேன். ஹேனா தன்னோட எல்லா குழந்தைகளையும் தன்னோட உடல் சூட்டுல பத்திரமா வச்சிருந்தா. ஆனா கிச்சு மட்டும் ஒரு ஓரத்துல கிடந்துச்சி. அத பார்த்ததும் எனக்கு ஹேனா மேல கொலைவெறியே வந்துச்சி. ஆனா அத சொல்லி குற்றமில்லையே. சொல்லி புரிய வைக்க ஆரறிவு கொண்ட உயிரினமா அது. கிச்சுவால நடக்க முடியாததால, அதனால ஹேனா கிட்ட போகவே முடியல. நேற்று போல இன்னைக்கும் கிச்சுவுக்கு இரையும் தண்ணீரும் வச்சிட்டு போய்ட்டேன்.

மதியம் நான் என்னோட ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தேன். அப்போ என் காதுல ரொம்ப ரொம்ப மெல்லமா, ஈனஸ்வரத்துல ஒரு கீச்சு குரல் கேட்டுச்சி. இல்லை.... இல்லை கேட்குற மாதிரி இருந்துச்சி. ஏதோ பிரமைன்னு நினைச்சிட்டு நானும் அதை முதல்ல கவனிக்கல. ஆனா என் மனசுல, ஏதோ ஒரு மூலையில ஒரு சந்தேகம் உதயமானது.

"ஒரு வேளை இது கிச்சுவோட குரலா இருந்தால்....?"

அதுக்கும் மேல என்னால வீட்டுக்குள்ள இருக்க முடியல, வேக வேகமா கோழி கூட்டை நோக்கி ஓடுனேன். கிச்சு இருந்த அறையை திறந்து பார்க்கும் போது, என் கண்கள் கண்ட காட்சியால் என் மனசு உடைந்து போனது.

கிச்சுவுக்கு தண்ணீர் குடிக்க ஒரு சின்ன பாத்திரத்துல தண்ணி வச்சிருந்தோம். அந்த பாத்திரத்துக்குள்ள கிச்சு தவறி விழுந்திருக்கு. நல்லா இருக்குற கோழிக்குஞ்சுன்னா, எப்படியாவது வெளியே வந்திருக்கும். ஆனா கிச்சுவுக்கு இரண்டு காலும் நடக்க முடியாததால் தலையை மட்டும் தண்ணிக்கு மேல தூக்கிட்டு, உடல் முழுவதும் ஈரத்தோட, குளிரில் நடுங்கிக் கொண்டே இருந்தது. கிச்சுவால பாத்திரத்தை விட்டு வெளியே வரவும் முடியல. அதோட பரிதாப நிலையைப் பார்த்ததும், எனக்கு மனசோரம் ஒரு வலி. வேகமாக கிச்சுவை தண்ணீயில இருந்து தூக்கி வீட்டுக்குள்ள கொண்டு வந்தேன்.

என் தங்கச்சியோட ஹேர் ட்ரையரை எடுத்து மிதமான சூட்டுல அத காய வச்சேன். ஆனா கிச்சு  இன்னுமே குளிராலும் பயத்தாலும் நடுகிட்டே இருந்துச்சி. எனக்கு அதை பார்க்க பாவமா இருந்துச்சி. மறுபடியும் அதுக்கு கொஞ்சம் சாப்பாடை ஊட்டி விட்டுட்டு, கூட்டுல விட்டேன். அன்னைக்கு முழுவதுமே கிச்சு ஒரு மாதிரி நோய்வாய் பட்ட மாதிரியே தான் இருந்துச்சி. மனசே இல்லாமல் நானும் தூங்கப் போனேன். அடுத்த நாள் காலையில கிச்சுவை நான் சடலமா தான் பார்ப்பேன்னு அப்போ எனக்கு தெரியல.

ஆமாங்க, அடுத்த நாள் காலையில நான் கிச்சுவை பார்க்க வரும் போது, அது செத்து போயிருந்துச்சு. ரொம்ப நேரம் கோழி கூட்டுக்கு முன்னால தான் நின்னுட்டே இருந்தேன். எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னே தெரியல. கண்ணுல கண்ணீரெல்லாம் வரல தான். ஆனா மனசுல சொல்ல முடியாத வலி. அம்மா கிட்ட போய் சொன்னேன். அவங்களும் கொஞ்சம் ஃபீல் பண்ணினாங்க. அதை எடுத்து என்னையே புதைக்க சொல்லிட்டாங்க.

அன்னைக்கு என் கையால அது சோறூட்டும் போது,  என் கையாலயே அதை மண்ணுக்கு உரமாக்க வேண்டிய நாள் இவ்வளவு சீக்கிரமா வரும்ன்னு நான் நினைச்சி கூட பார்க்கல. மீதம் ஆறு கோழி குஞ்சுகள் இருக்கு. எல்லாமே "கீச்...கீச்..." ன்னு ரொம்ப அழகா சத்தம் போடுது.

ஆனா அதுல ஒரு குரலா, என்னோட கிச்சுவோட குரல் இல்லையே.

அதை நினைக்க நினைக்க மனசோரம் ஒரு வலி.

என்னையும் அறியாம என் மனசு கேட்டுச்சு

"ஏன் என்னை பிரிந்தாய்?"

வலியுடன்

எபின் ரைடர்


© Ebinrider