...

26 views

என்னுயிர் துணையே - 11 & 12
துணை - 11

மதியம் உணவு உண்ண வந்த சத்யா வாஞ்சியோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தான். அப்புவை கார்ட்டூன் போட்டு மாடியிலேயே பிடித்து வைத்து கொண்டான். சிறுவனை அனைவருக்கும் தேடியது.. விஜய் ஜிஷ்ணுவை விட்டு வியாஷ் வேண்டும் என்று சத்யாவின் கேட்க செய்ய, மருமகனுக்காக மகனை அறையை விட்டு வெளியே அனுப்பினான். இதை எல்லாம் பார்த்துவிட்டு அனுவே இது என்னவென்று யோசனையில் மூழ்கி போய் இருந்தாள்.

மாலை தேநீர் நேரத்தில் கீழே வந்தவள், வித்யாவை தேடி போய் அவள் முன் நிற்க,

"சொல்லுங்க அண்ணி என்ன விஷயம்? "

"என்னாச்சு உங்க அண்ணனுக்கு? நான் தூங்குன நேரத்தில் யாரு என்ன செஞ்சாங்க என் செல்லத்தை, என் பேபிக்கு முகமே விழுந்துகிடக்கு.." அனு சோகமாய் கேட்க, ஹரியும் சூர்யாவும் சிரிக்க,

" நீங்க தாலி இல்லாம பிள்ளை பெத்த கதையை மாமா சொன்னாரா... அதுக்கு கோகிலா அத்தை மாமாவை வெளுத்து வாங்கிட்டாங்க.. " ஆதிரா கூற, தேன்மொழி அருகில் இருந்து ஆம் என்று தலையசைத்து கூற,

" என்ன பேசினாங்க.. " அனு கேட்க, நடந்ததை எல்லாம் கூறினாள் வித்யா.

அனைத்தும் கேட்டு அமைதியாய் அமர்ந்து இருப்பவளை பார்த்து மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அப்போது அன்பு அவளின் அருகில் வந்து அமர்ந்து,

"ஏன் அனு சத்யாவை பிரிஞ்சி உன்னால வாழ முடியுமா? "

"என்ன.. என்ன கேட்ட? "

"சத்யாவை பிரிஞ்சி உன்னால வாழ முடியுமான்னு கேட்டேன்.. "

"நான் ஏன் அவனை பிரியனும்? அது என்னிக்கும் நடக்காது."

"அப்ப கல்யாணம் பண்ணிக்க.. அடுத்த வாரத்தில் ஒரு நாள் நம்ம குலதெய்வ கோவில் போவோம். அப்ப அங்கேயே சத்யா கையாள தாலி கட்டிக்கோ.. எந்த பேச்சும் வராது.. யாருக்கும் கஷ்டமும் இருக்காது. " அன்புச்செல்வி கூறவும் அனு எந்த பதிலும் கூறாது எழுந்து அறைக்குள் சென்று இருந்தாள்.

இரவு உணவு அப்புவுக்கு அறைக்கு சென்று இருக்க, சத்யாவும் அனுவும் இரவு உணவுக்கு கீழே வரவில்லை. பால்கனியில் அமர்ந்து எதோ வேலையில் இருக்கிறாள் என்று நினைத்து சத்யா அவளை தொந்தரவு செய்யாது அப்புவை குளிக்க வைத்து உணவு கொடுத்து, கதை சொல்லி உறங்க வைத்து இருந்தான். ஆனால் அனு இன்னும் அங்கேயே அமர்ந்து இருந்தாள்.

"ஏய் லட்டு.. என்னாச்சு.. ஏன் தனியா உக்கார்ந்து இருக்க? அதும் ஸ்லீப் மோடில் இருக்கிற லேப்டாபை வெறிச்சு பார்த்துட்டே.. " சத்யா கதவில் சாய்ந்து கேட்க,

"சரக்கு அடிக்கனும் போல இருக்கு சுவீட்டி.. "

"அடியே.. டார்லி.. எங்க வீட்டுல அம்புட்டு பேரும் சோஷியல் ட்ரிங்கர்ஸ் தெரியுமா? எனக்கு வேற இங்க எவன் குடிப்பான் கூட தெரியாது. இங்க வேண்டாமே குட்டி பாப்பா.. "

"எனக்கு தலை முழுக்க குழப்பம் சத்யா.. குடிச்சா தான் நான் சரியாவேன். எனக்கு உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் சோட்டு பிளீஸ்.. "

"போட்டா டா பிளீசை.. இனி வேண்டாம் நான் சொல்லவா முடியும். இரு ஏற்பாடு பண்றேன். " சத்யா கூறிவிட்டு கீழே வர,

"சத்யா சாப்பிட வரலையா ரெண்டு பேரும்.. " ஜோதி கேட்க,

" அது.. பெரியம்மா.. அது வந்து அனு அசைவம் சாப்பிடனும் கேட்டா நான் வாஞ்சி கிட்ட வாங்கிட்டு வர சொல்ல போறேன். நீங்க சாப்பிடுங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. "

"அவ்ளோ தானா.. சொன்னா நாங்களே செஞ்சு இருப்போம்.. நம்ம வீட்டுல சமைக்க ஆளா இல்ல? " ஜோதி மீண்டும் கேட்க,

" அது.. நம்ம வீட்டில் அவ கேக்குறது செய்ய மாட்டோம் அதான்.. " சத்யா கூற,

" டேய் என்ன வாங்க போற? "

"காடை ஃப்ரை பெரியம்மா.. வேற ஒன்னும் இல்ல.. "

" சத்யா வேற எதையும் வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்துறாதா டா.. " கோகிலா கெஞ்சலாக கூற, அவர் சொல்லும் பாவத்தில் சிரித்தவன்,

" அப்போ என்னையும் அனுவையும் நீங்க வீட்டை விட்டு தான் வெளிய அனுப்பனும்.. " சொல்லிவிட்டு வெளியே சென்றவன்,

வாஞ்சியை அலைபேசியில் அழைத்து அவனிடம் நீண்ட நேரம் எதையோ பேசிவிட்டு சத்யா உள்ளே செல்ல, கோகிலாவும் ஜோதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வாஞ்சி சொன்னது போலவே வாங்கி வந்து கொடுத்து இருக்க, சத்யா நன்றி கூறி வாங்கிக் கொண்டான்.

" டேய் வாஞ்சி.. " சத்யா கிளம்பியவனை அவசரமாய் நிற்க சொன்னான்.

" சொல்லுங்க அண்ணா.. வேற எதும் வேணுமா? "

" எனக்கு வேற வழியே இல்லாம தான் உன்கிட்ட வாங்கிட்டு வர சொன்னேன். நீ நந்தா மாமாகிட்ட உண்மையா இருக்கேன் என்னை போட்டு கொடுத்துறாத சரியா? " சத்யா கூற,

" அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஆமா அண்ணி எப்படி உங்களை தண்ணி அடிக்க விடுறாங்க? ஒரு லிட்டர்.. தாங்குமா உங்க உடம்பு? " வாஞ்சி கேட்க,

" ஆங்.. என் வாயை புடுங்கமா போய் சாப்பிட்டு தூங்கு போ.." சத்யா அவனிடம் மிரட்டி அனுப்ப, வாஞ்சி சிரித்துக்கொண்டே சென்று இருந்தான். சிரிப்புடன் கீழே வந்தவனை விஜய் பக்கம் அழைத்து தோளில் கைப்போட்டு,

" என்ன வாங்கிட்டு வர சொன்னான்? "

" சாப்பாடு அண்ணா.. "

" பொய் சொன்னா, நந்தாப்பா வந்தா அப்படியே சொல்வேன். அவர் கேட்பார் அ.. " விஜய் பயம்காட்ட

" ஏன் விஜய் அண்ணா நம்புங்க.. நான் ஏன் உங்ககிட்ட பொய் சொல்ல போறேன்.. "

" நான் பார்த்தேன்.. நீ கமுக்கமா எடுத்து உள்ள வெச்சதை நான் பார்த்தேன். உண்மையான்னு உறுதி பண்ணிக்க கேக்கறேன். இப்ப உண்மையை சொல்லு பார்ப்போம். "

" ஆமா ராயல் ஸ்டாக் வாங்கிட்டு வர சொன்னார் கூட சாப்பாடும்.."

" ஓ.. அந்த நாய் விஸ்கி குடிக்குதா? டேய்.. அவன் கேட்டா, நீ வாங்கிட்டு வர முடியாதுனு சொல்லனும்.. அவன் குடிச்சு சாகனும் நினைக்கிறியா?" விஜய் கேட்க,

" நான் ஏன் அப்படி நினைக்க போறேன்? எனக்கு சத்யா அண்ணாவை ரொம்ப பிடிக்கும். ரொம்ப கெஞ்சினார் அதான் ஏற்பாடு பண்ணி கொடுத்தேன். ஆனா நீங்க சொல்றதும் சரி தான். ஒரு லிட்டர் ரொம்ப அதிகம்.. "

" ஆனாலும் எங்க அண்ணனுக்கு தைரியம் ஜாஸ்தி இல்ல விஜய் மாம்ஸ்.. " ஹரி கேட்க, சூர்யா ஆம் என்று தலையசைத்து அதை ஆமோதிக்க, வாஞ்சி மட்டும் மூவரையும் பார்த்து விழித்தான்.

" நீ சொன்னதை நாங்க மறந்துறோம். எங்ககிட்ட சொன்னதை நீ மறந்துரு, இப்போ இங்கிருந்து ஓடு பார்ப்போம்.. " விஜய் கூற, வாஞ்சி விடைபெற்றுக் கொண்டான்.

" சூர்யா உன் ரூமை கொஞ்சம் நேரம் கடனா கொடு.. உன் ரூம் பால்கனி வழியா சத்யா ரூமை பார்க்க முடியும். சைத்தான் வீட்டுக்கு வாங்கிட்டு குடிக்கிறான்.. உடம்பு என்னாகும்? "

" கேட்டா நான் லண்டன் வாசின்னு சொல்வார் " ஹரி கிண்டலாக கூற, விஜய் அவனை முறைத்தான்.

" எவன் குடிச்சாலும் குடி குடியை கெடுக்கும் தான்.. " சூர்யா கூறவும் இருவரும் அதை சரியென தலையசைத்து கொண்டனர்.

சூர்யாவின் அறை பால்கனியில் வந்து நின்றவர்கள் மெல்ல எட்டிப் பார்க்க, அனு குடிக்க வேண்டிய ஏற்பட்டை எல்லாம் செய்துக்கொண்டு இருந்தாள்.

" அருமையான பொண்டாட்டி இல்ல? வித்யாவும், என் தங்கச்சிங்களும் இதை எல்லாம் பார்க்கனும். பிஸினஸ்காக குடிச்சாலே திட்டுறவங்க நடுவில் இப்படி ஒரு பொண்ணு.. அருமை இல்ல? " விஜய் கமென்ட் கொடுக்க,

" எது இது அருமையா? சும்மா இருங்க மாப்பிள்ளை என்ன நடக்குதுன்னு பார்ப்போம்." சூர்யா கூற, மூவரின் கவனமும் அங்கே சென்று இருந்தது.

சத்தம் இல்லாமல் பூனை போல வந்து அமர்ந்த இருவரும், தம்ளரில் விஸ்கியை ஊற்றி சீர்ஸ் சொல்ல, இங்கே மூவரும் அதிர்ந்து இருந்தனர்.

" என்ன மாமா எங்க அண்ணி இப்படி இராவா அடிக்குது.. " ஹரி அதிர்வில் விஜய்யை பார்த்து கேட்க,

" அதே தான்.. கப்புன்னு குடிச்சுட்டா டா.. தண்ணி கூட கலக்காம குடிக்குது பாரேன்.. உங்க அண்ணி ஒரு குடிமகள் போல பெருமைப்பட்டுகுங்க டா.."

அங்கே, சத்யா விஸ்கி டம்ப்ளரை மூக்கின் அருகில் கொண்டு போய் வாசம் பிடிக்க, அனு அடுத்த ரவுண்ட் செல்ல, அவளின் கைப்பிடித்து தடுத்து இருந்தான் சத்யா.

" என் தங்கபுள்ள இல்ல விடுடா.."

"அடியே குடிக்காரி.. இப்படி தண்ணி குடிக்கிற மாதிரி மடக்கு மடக்குனு குடிக்கிற? நான் இன்னும் முதல் ரவுண்ட் முடிக்கவே இல்ல.. "

" சப்பி சப்பி.. மொக்கை போட்டு குடிக்க எனக்கு நேரமில்ல.. எனக்கு போதை ஏறினா தான் உன்கிட்ட பேச தைரியமே வரும். " சொன்னவள் இன்னும் இரண்டு ரவுண்ட் முடித்து இருக்க, கச்சேரியை தொடங்கி இருந்தாள்.

" அந்த அன்பு.. என்னை.. சத்யா.. "

" உனக்கு ஏறிடுச்சு.. இனி நான் குடிக்க கூடாது.. சத்தம் இல்லாம பேசுடி கப் கேக் அப்புக்குட்டி தூங்குறான். "

" ஆமா.. ஆமா.. அப்பு.. குட் பாய்.. யூர் சன்.. இல்ல.. ல்ல.. அவர் சன்.. மை ஸ்வீட்.. பேபி.. ஆங்.. டேய் சத்யா இந்த அன்பு என்னை தாலி கட்டிக்க சொல்றாடா.. நான்.. நான்.. நான் உன்னை.. "

" சொல்லி தொலைடி இம்சை.. டேய் சத்யா.. இவளோட இன்னிக்கி உனக்கு சிவ ராத்திரி தான். " சத்யா வாய்விட்டு புலம்பிக்கொள்ள,

இங்கே,

" எங்க அண்ணி என்னமோ பேசுது ஒன்னும் கேட்கல.. நடுவுல அன்பு பெயர் மட்டும் வந்துச்சு. " ஹரி கூற,

" என்ன பண்றீங்க மூணு பேரும்? " ஆதிரா கேட்கவும் மூவரும் திரும்பி இவளை பார்த்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மெல்ல பால்கனியிலிருந்து அறைக்குள் வந்தனர்.

" ஒரு பிசினஸ் டீல் நாளைக்கு மதியம் விஜய் மாம்ஸ் சென்னை போக போறார் அதான் பேசினோம். வேற ஒன்னும் இல்ல.. குட் நைட் அண்ணி " ஹரி சட்டென சமாளிக்க, விஜய்யும் இரவு வணக்கம் கூறி விடைபெற, ஆதிரா பால்கனி பக்கம் செல்ல, சூர்யா அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

" கதவை சாத்திட்டு வா போ.." சூர்யா குழைந்த குரலில் கூற, ஆதிரா கதவை சாற்ற செல்ல நிம்மதி பெருமூச்சு விட்டவன் பால்கனி கதவை சாற்றி இருந்தான்.

அங்கே,

" என்னன்னு சொல்லுடி பொம்ம.. நீ என்னை எப்படி கட்டிக்க முடியும்னு கேக்கறியா? விடு அவ தெரியாம பேசிட்டா.. "

" இல்லடா மக்கு.. நான்.. நான்.. உன்னை காதலிக்கிறேன்.. புரியுதா எருமை.. எனக்கு உன் கையால தாலி வேணும்... கண்டிப்பா வேணும்.. கட்டுல குத்தி கொன்னுடுவேன்.. ஐ வில் கில் யூ.. என்னால இனி ப்ரெண்டா இருக்க முடியும் தோணல.. லெட்ஸ் ப்ரேக் அப் அவர் ஃப்ரெண்ட் ஷிப்.. " அனு சொல்லிவிட்டு பாட்டிலை மொத்தமாய் சரிக்க, சத்யா அதை அவசரமாக அவளிடம் இருந்து புடுங்கி வைத்தான்.

" எனக்கு தெரியும்டி முன்னாடியே.. கழுதை லவ்வா என் மேல உனக்கு? நான் சந்தேகப்பட்ட எல்லாத்தையும் உண்மையாகிட்ட இல்ல வாலு நீ.. "

" ஒரு வருஷமா.. ஒரு வருஷமா இந்த காதலை.. சாரிடா செல்லம்.. ஒரு வருஷமா மறைச்சு வெச்சு இருக்கேன் சத்யா இனிமேல்.. ம்ம்.. இனி.. ஒரு நிமிஷமும்.. என்னால முடியாது.. எவ்ளோ மண்டகப்படி வேணாலும் கொடு.. மாட்டேன் மட்டும் சொல்லாத.. என் உயிருக்கு நீ தான் எப்பவும்.. எப்பவும்.. எப்பவுமே துணை.. "

" எல்லாம் தெரிஞ்சும் நீயும் ஏன்.. இது வேண்டாம்டி தங்கம் ரொம்ப வலிக்கும்.. போதும் உனக்கு கஷ்டம்.. என் கஷ்டத்தை கையில ஏந்த நிக்காத.. "

" பிளீஸ் சத்யா.. உன்னோட இருந்தா எல்லாமே.. எல்லாமே சம்மதம் தான் எனக்கு.. எனக்கு நீ வேணும் அவ்ளோ தான். ஐ லவ் யூ பேபி.. பிளீஸ் " அனு அவனை அணைத்துக் கொள்ள, சத்யா அவளை அணைக்காது கண்ணீருடன் அப்படியே அமர்ந்து இருந்தான்.

போதையில் அவள் எதேதோ பேச, இவனோ அவளை தோளில் சாய்த்து உணவை ஊட்டி விட்டான். அனு சாரி என பலமுறை சொல்ல, சத்யா சரியென கூறி அவளை கீழே உள்ள மெத்தையில் படுக்க வைத்து இருந்தான். இவனும் அமைதியாய் உண்டு, இடத்தை சுத்தம் செய்து, பல் துலக்கி விட்டு வந்து மகனின் அருகில் படுத்தான்.

அனு.. நாற்பத்தி இரண்டு நாட்களாக அவன் மனதில் நடத்திய போராட்டத்திற்கு பதில் கூறி விட்டாள். அவனின் சந்தேகங்கள் உண்மையென உறுதியாகி விட்டது. எதுவெல்லாம் அவனுக்கு வேண்டாம் என்று இருந்தானோ அதை எல்லாம் அள்ளிக்கொடுக்க காத்திருக்கிறாள் இவள். வாங்கும் தகுதி தான் இவனிடம் இருந்தும் வாங்க மனமில்லை.

சத்யா உறங்கும் மகனை பார்க்க, அவனோ அப்பனின் அருகாமையை உணர்ந்து கொண்டு அவன் மீது காலைப்போட்டு தகப்பனின் நெஞ்சின் உள்ளே புதைந்துப்போய் உறங்கினான்.


துணை - 12

காலை சத்யா கண் விழிக்க, அனு இன்னும் போதையில் உறக்கத்தில் இருந்தாள். இரவு நடந்த அனைத்தையும் நினைவு வர, மெல்ல புன்னகை எட்டிப் பார்த்தது.

அவனின் காலைக்கடன்களை முடித்து வர அப்பு எழுந்து இருந்தான். மகனை மார்பில் போட்டு கொஞ்சியவன்,

" அப்புக்கு இந்த வீட்டில் உள்ள எல்லாரையும் பிடிச்சு இருக்கா?"

" ரொம்ப.. " மகன் கையை விரித்து கூற,

" நம்ம ஊருக்கு போனா யாரையும் பார்க்க முடியாதே.."

" போக வேண்டாம் பாபா "

" அப்ப அப்புக்கு ஸ்கூல், பிரெண்ட்ஸ், ஜார்ஜியா யாரும் வேண்டாமா? "

" அப்போ எல்லாரையும் கூப்பிட்டு போகலாம். "

" பாபா மாதிரி அவங்களும் வேலைக்கு போகனும் அப்பு.. "

" பாபா.. எனக்கு பாட்டி, தாத்தா வேணும்.. "

" சரி பாபா அடிக்கடி இங்க கூப்பிட்டு வரேன் சரியா? இப்ப போய் சமத்தா ப்ரஷ் பண்ணு பார்ப்போம். " சத்யா கூறவும் மகன் குளியலறைக்குள் செல்ல, இங்கே இவன் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்.

சத்யா மகனோடு கீழே வர, விஜய் அவனை முறைத்து பார்க்க, சத்யா அதை கவனத்தில் கொள்ளாது அவனின் சிந்தனையில் மூழ்கி இருந்தான். ஆகாஷ் அன்புடன் அவர்களின் இல்லத்திற்கு கிளம்பியவன் சத்யா முன் வந்து நிற்க, கவனம் கலைந்தவன்...

" சொல்லுங்க ஆகாஷ்.. "

" அது சத்யா.. எனக்கு உங்களை பத்தி எல்லாமே தெரியும். அன்பு நிறைய சொல்லியிருக்கா.. "

" பழைய விஷயம் எதுக்கு ஆகாஷ் விடுங்க.. "

" என்னோட சந்தோசமா வாழ்ந்தாலும், பல நாள் அன்பு குற்ற உணர்வில் அழுது இருக்கா, இப்ப உங்களை குடும்பமா பார்க்கிறது எனக்கு நிம்மதியா இருக்கு.. நீங்க என்னிக்கும் இதே போல சந்தோசமா இருக்கனும். இந்த வீட்டுல மத்தவங்க உங்களுக்கு எப்படியோ.. என்னை நண்பனா பாருங்க.. எந்த உதவியா இருந்தாலும் தயங்காம கேளுங்க.. " ஆகாஷ் தயங்கி கூறி முடித்திருக்க, சத்யா முகத்தில் புன்னகை.

" நன்றி.. " சத்யா ஒற்றை வார்த்தையில் முடித்து விட, இருவரும் விடைப்பெற்று கொண்டனர்.

காலை உணவை மகனுக்கு மட்டும் கொடுத்தவன், மீண்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தான். பின் வாஞ்சியை அழைத்து எதோ பேசிவிட்டு, அப்புவை கிளப்பி கொண்டவன்.

" கோகிமா அனுவா எழுந்து வர வரைக்கும் அவளை எழுப்ப வேண்டாம். நானும் அப்புவும் வெளிய போறோம். மதிய சாப்பாடு எங்களுக்கு வேண்டாம். "

" சாப்பிடலையா நீ? "

" வேண்டாம் மா.. அனுவை மட்டும் பார்த்துக்கோங்க.."

" நீங்க எங்கப்பா கிளம்பிட்டு இருக்க? "

" டூர் போலாம்னு ஐடியா.. வீட்டுல ஒரு வேலையும் இல்ல.. ஆஃபீஸ் வேலைக்கும் லீவ்.. அதான் அப்பு கூட ஊர் சுத்தலாம்னு.. "

" சரிதான்.. போய்ட்டு வாங்க.. " கோகிமா கூற, ஜோதி புன்னகைத்து கொண்டார். சத்யா கிளம்பவும்,

" ஏன் கோகிலா அவன் நம்மை கூட இருக்க கூடாது, அவன் மகன் நம்ம கூட ஒட்ட கூடாதுன்னு இழுத்துட்டு போறான். நீ சரின்னு சொல்ற.. என்னவோ போ.. "

" அக்கா என்ன சொல்றீங்க? "

" அதான் உண்மை.. இவன் ஒட்ட மாட்டான் கோகிலா. அவன் அப்பாகாக வந்தானாம்.. நம்ம எல்லாம் யாரு அப்போ.. "

" அப்படி என்ன தான் ஆச்சுன்னு சொல்லுங்களேன் அத்த.. " ஆதிரா கேட்க,

" போ போய் உன் புருஷனை கிளப்பி விடு, அதுக்கு அப்புறம் பொறுமையா பேசலாம். " ஜோதி சொல்ல, அனைவரும் கலைந்து சென்றனர்.

மதியம் விஜய், அறிவுமதி, சூர்யா மூவரும் மதிய உணவை முடித்து கிளம்பி சென்று இருக்க, மற்றவர்களும் உண்டு விட்டு அமர்ந்தனர். அனு மட்டும் இன்னும் எழவில்லை.

" இந்த அனு இன்னுமா தூங்குறா? இவளோட சத்யா எப்படி இருக்கான்னு சத்தியமா புரியல எனக்கு, அஞ்சு மணிக்கு எழுந்து நிக்கிறவனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டி.. " கோகிலா சலித்துக்கொள்ள,

" விடுங்க.. ஓய்வா இருக்கும் போது தானே தூங்க முடியும்.. " ஹரி அவளுக்கு சாதகமாக பேச, பெண்கள் அனைவரும் அவனை ஏற இறங்க பார்த்து வைத்தனர்.

பின் அனைவரும் ஒன்றாக அமர, ஹரி தான் சொல்ல தொடங்கி இருந்தான்.

" ஆதி அண்ணி.. சூர்யா அண்ணா கெட்டவன் இல்ல. இதை கேட்டு நீங்க அவன் மேல கோவப்பட கூடாது.. எல்லாம் எங்க கெட்ட நேரம் தான் சொல்லனும். "

" என்ன ஹரி.. சூர்யாவை போய்.. அவர் குணம் எனக்கு தெரியாதா? நீங்க சொல்லுங்க "

ராகவன் எதிர்பாரா விதமாக விபத்தில் இறந்து விட, அண்ணனின் வீட்டுக்கு பிள்ளைகளுடன் வந்து சேர்ந்து இருந்தார். சத்யாவுக்கு விஜய் தன்னோடு இருக்க போகிறான் என ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் அவன் மாமா இல்லாது போனதில் அவனுக்கும் வருத்தம் தான்.

அதன்பின் விஜய், அன்பு இருவரையும் இயல்பாக மாற்றுவதே அவனின் கடமையாக மாற்றிக்கொண்டான். அறிவு ராகவனின் இடத்தை தொழிலில் நிரப்பி அண்ணனோடு அலுவலகம் சென்று விட, ஆறு பிள்ளைகளும் ஒன்றாக ஒரே வீட்டில் வளர, உதவிக்கு என செல்வசுந்தரி அழைத்து வந்தவர் தான் கோகிலா. கணவன் இல்லாத அவருக்கு வாழ்வின் பிடிப்பு எல்லாம் இவர்கள் ஆறு பேரும் தான். அதில் அனைவருக்காகவும் அனுசரித்து போகும் சத்யாவின் மீது கொஞ்சம் அதிகமாக பாசம் வைத்து இருந்தார்.

ஆனால் அறிவு எதை செய்தாலும் சத்யாவை மட்டும் ஒதுக்க ஆரம்பித்தார். சுந்தரிக்கு அறிவின் எண்ணம் புரிந்தாலும், மகனின் முகம் சுருங்கும் முன் அதை நிறைவேற்றி வைத்து விடுவார். அவர் ஒன்றும் இல்லாத வீட்டின் பெண் இல்லையே? சிவாவின் சொத்துகளுக்கு சரி நிகர் செல்வத்தில் வளர்ந்த கோடீஸ்வர சீமாட்டி அல்லவா? அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் செல்வ மகன் ஒருவனுக்கு தானே?

சத்யா ஒதுக்கத்தை உணர முடியாத அளவுக்கு பார்த்துக்கொண்டார் சுந்தரி. சத்யாவை ஒதுக்க அறிவுமதி எடுத்த ஆயுதம் தான் இப்போது சத்யாவின் மொத்த வாழ்வையும் மாற்றியது. அந்த ஆயுதம் தான் சூர்யா. கொஞ்சம் கொஞ்சமாய் அவன் நெஞ்சில் நஞ்சை கலக்க ஆரம்பித்து இருந்தார். வீட்டின் பொறுப்புகள் அனைத்தும் சுந்தரியின் கையில் இருக்க, தன் தாய் வேலைக்காரி போல இருக்கிறாள் என்று சூர்யாவின் நெஞ்சில் முதல் கோபம். சத்யாவை எதிர்யாக்கி இருந்தது. அவனுக்கு தான் எதிலும் முன்னுரிமை. யார் மறுத்தாலும் அவன் தானே மூத்தவன்?

அது புரியாது சூர்யா அவன் மீது வெறுப்பை வளர்த்தது தவறு. அறிவு சுட்டி காட்டிய இடத்தில் எல்லாம் தன் தாய் தான் பாவம் என்று தோன்றியது. சென்னையில் அம்மா எங்களுக்கு என வேலை செய்ய, இங்கே சுந்தரி மற்றவர்களை வேலை வாங்கிக்கொண்டு இருந்தார். சிவா பொள்ளாச்சி வரும் நேரங்களில் எல்லாம் சுந்தரி அவரை கோவிலுக்கு, விஷேசத்திற்கு என அழைத்து செல்ல, தன் தாயை ஒதுக்கி வைத்து இருந்த தகப்பன் மீது கோவம் வந்தது.

பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம். அப்படி தான் இருந்தது சூர்யாவின் நிலை. வருட இறுதியில் வரும் மகனுக்கு கிடைக்கும் வரவேற்பு அவர்களுக்கு இல்லை என்று தோன்றும் அவனுக்கு, உண்மையில் இவர்கள் அனைவரும் அதாவது விஜய், சூர்யா, வித்யா, ஹரி அன்பு என அனைவரும் படித்தது சென்னையில், அங்கே உதவிக்கு என அறிவும் ஜோதியும் அவர்களோடு இருந்தனர். ஆனால் சத்யா கோவையில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தான். அதனால் அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் தான் பாசங்களும் சலுகைகளும் கிடைத்தது.

மூத்தவன் வீட்டின் தலை வாரிசு என சிவபிரகாசம் யார் முன்னும் கூறி விட்டால் அன்று முழுக்க சூர்யா உணவு உண்ண வர மாட்டான். சத்யா கேட்டால் சிவா அனைத்துக்கும் தலையாட்டி விடுவார். அதுவே சூர்யா, ஹரி கேட்டால் சத்யாவை அழைத்து விசாரித்து விட்டு தான் அதற்கு ஒப்புதல் தருவார். சத்யாவை கண்டு ஊரே தரும் மரியாதை தனக்கும் தன் குடும்பத்துக்கும் இல்லையென தோன்றியது அந்த கண்ணை மூடிய பூனைக்கு.. இப்படி அறிவு கண்ணை மூடிக்கொண்டதே?

கோவையில் உள்ள அவனின் நண்பர்கள் கூட சத்யாவின் புகழ் பாடுவார்கள். சத்யா முடி சூடா மன்னாக கல்லூரி மாணவர்களின் மனத்தில் பதிந்து நின்ற காலமது. அவனின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் அவை. ஆனால் அதுவும் கூட அந்த வயதில் சூர்யாவை எரிச்சலடைய செய்தது. கொஞ்ச கொஞ்சமாய் சத்யா தனக்கு எதிரி என்பது போல நினைக்க தொடங்கி இருந்தான் சூர்யா. சரியான நேரத்தில் அவனையும் அவனின் அம்மாவையும் பழிவாங்கி விட வேண்டும் என்று காத்தும் இருந்தான்.

ஆனால் சத்யா அவனோடு தம்பி தங்கைகளுக்கு எது தேவை என்றாலும் செய்து கொடுத்தான். சிறியவர்கள் எதை கேட்டாலும் அப்பா முன் நின்று திட்டுகளை வாங்கிக்கொண்டு இளையவர்களுக்கு பெற்றுக் கொடுத்தான். பெரியம்மா, சூர்யா, ஹரி, வித்யா அனைவரையும் தன் குடும்பம் போல பார்த்து காத்தான். வித்யாவுக்கு தெரியும் எத்தனை பேரை தனக்காக அடித்து இருக்கிறான் என்று, சூர்யா காட்டாத அக்கறையை சத்யா காட்டி இருந்தான். காரணம் சூர்யா இயல்பாகவே அதிகம் பேசாதவன். அவனின் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டான். ஆனால் சத்யா அதற்கு நேர் எதிரான ஒருவன். எந்த ஒளிவம் மறைவும் கிடையாது அதனால் அவனை அணுகுவது சுலபமாக இருந்தது தங்கைக்கு, ஹரிக்கும் கூட அவன் நல்ல நண்பன்.

சூர்யா என்றாலே சத்யாவின் முகம் புன்னகை பூக்கும். அவனே குழந்தையாய் இருந்த போது, அவன் கைகளில் குழந்தையாய் தவழ்தவன். தன்னை அண்ணனாக மாற்றி பொறுப்புகள் கொடுத்தவன். தன்னோடு தன் தாயின் உதிரம் குடித்து வளர்ந்தவன் என்பதே இன்னும் இன்னும் அன்பை கொடுத்தது அவன் மீது, தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல, இந்தியா டவர்ஸ் முழுவதையும் ஆள போகும் நாளைய மன்னன் அவன் என்பது சத்யாவின் எண்ணம். அதனால் அவன் படிப்புக்கு எந்த தொந்தரவும் வர விட்டதே இல்லை. அவன் எதை பயின்றால் அவனின் வாழ்வுக்கு நல்லது என அந்த வயதிலேயே அக்கறை எடுத்து வழிகாட்டிய அண்ணன் அவன்.

சுந்தரியின் செல்வ மகன் அவன், சத்யா மீது உயிரையே வைத்து இருந்த தாய். அவன் கொஞ்சம் முகம் சுருங்கினாலும் மனம் உடைந்து போகும் இவருக்கு, அதே போல அம்மா சொன்னால் எதுவும் சரிதான். அம்மா என்ன செய்ய சொன்னாலும் மறுக்காது செய்து விடுவான். ஏன் என்று கேள்வி கிடையாது. அவன் மனதில் தாயிக்கும் மறைத்த ஒரு விஷயம் என்றால் அது அவனின் காதல். ஆம் காதல்.. உலகில் உள்ள அத்தனை கள்ளத்தனமும் கற்றுக்கொடுக்கும் காதல் இவனை மட்டும் விட்டு விடுமா?

மீசை அரும்பிய பதின் பருவ வயதில் பூத்த காதல் இது. தந்தை இல்லாத பெண்ணாக இருக்கும் அத்தை மகளின் மீது அன்பும் அக்கறையும் அவனுக்கு சிறுவயதிலேயே உண்டு. ஆனால் எப்போது? எப்படி மனதில் வந்து ஒட்டிக்கொண்டாள் என இவனுக்கே தெரியவில்லை. நான்காம் வருட இளங்கலை கட்டிடகலை பயின்று கொண்டு இருந்தான் சத்யா. சென்னையில் புகழ்பெற்ற கல்லூரிக்குள் இளங்கலை தகவல் தொழில்நுட்பம் பயில அடியெடுத்து வைத்து இருந்தனர் வித்யா, ஹரி, அன்புச்செல்வி மூவரும். அப்போது விஜய் அதே கல்லூரியில், அதே இளங்கலை தகவல் தொழில்நுட்பம் படிப்பின் நான்காம் ஆண்டான இறுதியாண்டு பயிலும் மாணவன். சூர்யா அதே படிப்பில், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டுக்குள் சென்று இருந்தான்.

எப்போதும் வரும் நலவிசாரிப்பு அழைப்பு என அன்புடன் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அன்பே கூறி இருந்தாள் அவளின் நேசத்தை, அவன் மீதான அவளின் உள்ளத்து நேசத்தை பகிர்ந்து கொண்டாள். படிக்கும் பெண்ணை சஞ்சலப்படுத்த வேண்டாம் என்று, தான் தானே உரிமைப்பட்டவன் நேரம் வரும் போது பேசிக்கொள்வோம் என்று, சத்யா கேட்டால் அப்பா எதையும் தருவார் என்ற எண்ணத்தில் அவன் மனதில் அடக்கி மறைத்த காதலை பெண்ணவள் கூற, இனி எதை மறைக்க? அவனும் மனம் திறக்க அதன் பின்னர் இருவரின் நேசமும் வளர்ந்து கொண்டு இருந்தது. மாமா என அவளும், அன்பு என இவனும் காதலில் கரைந்து போய் இருந்தனர். எல்லாம் சரியாய் தான் போய் கொண்டு இருந்தது சூர்யாவின் எண்ணங்களை தவிர, அறிவுமதி பற்ற வைத்த தீ அவனுள் வளர்ந்து கொண்டே இருந்தது. இன்பத்தில் இருந்த அறிவுமதிக்கு அதிர்வை கொடுக்க வந்தது அந்த தீபாவளி திருநாள்.

© GMKNOVELS