...

1 views

அமிலங்கள்
"நந்தினி! பச்சை மாங்காய் உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்." ராணி வாயில் உமிழ்நீர் ஊறக் கூறினாள்.

"ஐயோ! எனக்கு பல் எல்லாம் கூசுகிறது." மரியா வாயைக் குவித்து தோளைச் சுருக்கி நெளிந்தாள்.

"எனக்கு சாப்பிட முதலே வாயில் உமிழ்நீர் சுரக்கின்றது." ஜெகனும் சேர்ந்து கொண்டான்.

"தெரிவினைச் செயன்முறை.....சரி தானே?" சிரித்தாள் ராணி .

"அது சரி! மாங்காய் ஏன் புளிக்கிறது?" மரியா அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள்.

"அதில் அமிலம் உள்ளது. அமிலம் புளிப்புச் சுவை உடையது என டீச்சர் சொல்லித் தந்துள்ளார்." நந்தினி கூறினாள்.

"அசிட் ஆ...... ? வாய் பழுதாகி விடாதா?" ராணி பயந்து போய் கேட்டாள்.

"இல்லை.  மாங்காயில்  ஒக்சாலிக்கமிலம்,( oxalic acid) சிட்ரிக் அமிலம் (citric acid)  , மலிக்கமிலம் (malic acid), சக்சினிக்கமிலம்( succinic acid) ஆகிய மென்னமிலங்கள் காணப்படுகின்றன. இதனால் தான் மாங்காய் புளிப்புச் சுவையாக உள்ளது." நந்தினி விவரித்தாள்.

"வேறு என்ன உணவுப் பொருட்களில் மென்னமிலங்கள் உள்ளன  ராணி?"
ஜெகன் வினவினான்.
" எலுமிச்சை, தோடம்பழம், தக்காளி, புளியம் பழம், அன்னாசிப்பழம், கொரக்காப் புளி......போன்றவை "
பட்டியல் வாசித்தாள் ராணி.

" கொரக்காப் புளியில் என்ன அமிலம் உள்ளது? அது உடலுக்கு நல்லது என்று அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன் " ராணி தொடர்ந்து வினவினாள்.

" கொரக்காப் புளியில் தாத்தாரிக்கமிலம், பொசுபோரிக்கமிலம், சிட்ரிக் அமிலம் என்பன உள்ளன என்று நான் இணையத்தில் வாசித்திருக்கிறேன்." என்றாள் நந்தினி.

"இந்த அமிலங்களினால்  மனித உடலுக்கு தீமைகள் ஏதும் இல்லையா?" மரியா வினவினாள்.

" ஏன் இல்லாமல்? இவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடலில் குருதியில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் தோல் அலர்ஜி, தோல் எரிவு , வயிற்றில் எரிச்சல், வயிற்று வலி போன்றவை மற்றும் சமிபாட்டுத் தொகுதி சார்ந்த நோயான இரைப்பை அலர்ச்சி போன்றவை ஏற்படலாம்." ராணி விவரித்தாள்.

"ஆனால் ஆடைகளில் பட்ட கறையை அகற்றவும் தேசிக்காய் பயன்படுத்துவது அதில் அமிலம் உள்ளதாலா? " ஜெகன் கேட்டான்.

" எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் செறிவாக உள்ளது.
சிட்ரிக் அமிலம்  சலவைத்துணியில் உள்ள கறைகளுடன் வினைத்திறனாக தாக்கம் புரிந்து அவற்றை இயற்கையாகவே தளர்த்தி நீக்கி, துணிகளை அழகாக வெண்மையாக மாற்றுகிறது."

"ஆமாம்! எனது அம்மாவும் வாழைப்பூ நறுக்கும் போது தண்ணீரில் பிலிங்காய் அல்லது அதன் இலைகள் இட்டு அந்த பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூவை இடுவார். பிசைந்து கழுவிய பின் வாழைப்பூவின் கபில நிறக் கறைகள் நீங்கி அது வெளிறிய தோற்றம் பெறும்.இதை நான் அவதானித்திருக்கிறேன்." என்றாள் நந்தினி.

" அமிலத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களை உலோகப் பாத்திரங்களில் இடக்கூடாது என்பர். இதில் விஞ்ஞான விளக்கம் ஏதாவது இருக்கிறதா?"
ஜெகனுக்கு அறிந்து கொள்வதில் அவ்வளவு ஆசை.

"ஆம். அமிலங்களுடன் சில உலோகங்கள் தாக்கமடைகின்றன. அதன் போது உருவாகும் சேர்வைகள் சில நச்சுத்தன்மையானதாக இருக்கும்.
எனவே அது உணவுடன் கலப்பது உடலுக்கு  தீங்கு விளைவிக்கும் ஒரு சந்தர்ப்பம் ஆகும்." நந்தினி கூறினாள்.

" அப்போ தென்னம் பதனீரில் இருந்து தயாரிக்கப்படும் வினாக்கிரியும் அமிலம் தானே?"
ஜெகன் மீண்டும் வினவினான்.

" ஆமாம். அதுவும் ஒரு மென்னமிலம் தான்."

"ஆனால் அதன் பெயர் அசற்றிக்கமிலம். அசற்றிக்கமிலத்திற்கு நீர் சேர்த்து ஐதாக்கும் போது அதனை வினாக்கிரி எனும் பொதுப்பெயரில் அழைப்பர்." ராணி தனக்கு தெரிந்ததை எடுத்துரைத்தாள்.

" அமிலங்களில் வன்னமிலங்கள் என்று ஒரு வகையும் உண்டு." நந்தினி கூறினாள்.

" ஆமாம். நான் பாடசாலை ஆய்வு கூடத்தில் விஞ்ஞானப் பாடப் பரிசோதனையில் கண்டிருக்கிறேன். " ஜெகன் பெருமிதத்துடன் கூறினான்.

" ம்ம்.... ஐதரோகுளோரிக்கமிலம், சல்பூரிக்கமிலம்....மற்றது என்ன நந்தினி எனக்கு மறந்து விட்டது." ராணி வினவினாள்.

" நைத்திரிக்கமிலம். இவை வழமையாக ஆய்வுக்கூடத்தில் காணப்படும் வன்னமிலங்கள்."
நந்தினி கூறினாள்.

"எமது இரைப்பையில் சுரக்கும் அமிலம் எது?" ராணி தெரியாதது போல் கேட்டாள்.

"அது ஐதரோகுளோரிக்கமிலம்." நந்தினி கூறினாள்.

" வயிற்றுக்குள்ளும் அமிலம் சுரக்கிறதா? ம்ம்... அது சரி .... வன்னமிலங்கள், மென்னமிலங்கள் என்று எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?" மரியா கேட்டாள்.

"காட்டிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்." ராணி  கூறினாள்.

"நான் தரம் ஏழு கற்கும் போது காட்டிகளைக் கண்டிருக்கிறேன்."

"ஆம். PH தாள், சிவப்பு பாசிச் சாயத்தாள் (litmus paper)
, நீலப்பாசிச் சாயத்தாள்,  மெதையில் செம்மஞ்சள்  " என்பவை ஆய்வு கூடத்தில் காணப்படும் காட்டிகள் ஆவன." நந்தினி கூறினாள்.

"அது சரி. காட்டிகளைப் பயன்படுத்தி எப்படி அறிந்து கொள்வது?" மரியா கேட்டாள்.

"உனக்கு ஞாபகம் இல்லையா?   அமிலங்கள் உள்ள சோதனைக் குழாய்களில் நீலப் பாசிச் சாயத்தாளை இட்ட போது அது சிவப்பு நிறமாக மாறியதே?"  ராணி வினவினாள்.

" PH தாளை  அமிலத்தினுள் இட்டாலும் அமிலத்தின் வன்மை மென்மை தன்மைக்கேற்ப இளம் சிவப்பு, சிவப்பு ஆகிய நிறங்களைக் காட்டும் . " என்றாள் நந்தினி.

"நீங்கள் கூறிய மெதையில் செம்மஞ்சள் என்ன நிறம்?" ஜெகன் கேட்டான். "நான் அதைக் கண்டதே இல்லை. "

" நான் கண்டிருக்கிறேன். அது ஆரஞ்சு நிறம். அதாவது செம்மஞ்சள் நிறம். ஆனால் அதை அமிலத்தில் இடும் போது கரைசல் சிவப்பு நிறமாக மாறும். அது அழகான சிவப்பு" .  ராணியின் கண்களில் அதைக் கண்டிருந்த அனுபவம் பளிச்சென்று தெரிந்தது.

"மீண்டும் நாம் அமிலங்கள் பற்றிய பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு வருமா? எனக்கு எல்லாமே மறந்து விட்டது. "மரியா ஒரு ஆவலில் கேட்டாள் .

"கவலைப்படாதே! எங்க அண்ணன் சொன்னான், திரும்பவும் தரம் 11 இல் அந்தப் பாடம் உள்ளது என்று" நந்தினி கூறினாள்.

"அது சரி! உனக்கும் ராணிக்கும் மட்டும் எப்படி எங்களை விட அமிலங்கள் பற்றி அதிக தகவல்கள் தெரியும்? " ஜெகன் கேட்டான்.

"இது ஒரு கேள்வியா? அதுவும் இந்த நவீன காலத்தில்........ இப்போது ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள தாராளமாக இணைய வசதி உள்ளதே....மக்கு மக்கு....." ராணி ஜெகன் தலையில் சொடக்கு போட்டாள்.

" அவன் இணையத்தை விளையாட மட்டும் தான் பயன்படுத்துகிறான் போல....."   நந்தினி குற்றம் சொன்னாள்.

"மரியா! உனக்கும் தான் சொல்கிறேன். நமது அறிவை வளர்த்துக் கொள்ள இப்போது நிறைய வசதிகள் உள்ளன. அதை ஒழுங்காக பயன்படுத்திக் கொண்டால் நமக்கு தான் வெற்றி..." ராணி புத்தி கூறினாள்.

"ஐயோ!  நம்முடைய டிஸ்கஷன் ல .... நேரம் போனதே தெரியவில்லை. வாங்க இருட்ட முன் வீட்டுக்கு போவோம்." அவசரப்படுத்தினாள் நந்தினி.

அன்றைய பொழுது ஒரு பயனுள்ள பொழுதாக கழிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் தோட்டத்தை விட்டு நண்பர்கள் வெளியேறினர்.

                                 **********************

எழுதியவர்: ஹுஸ்னியா பாரூக்
(சிரியஸ்)








© siriuspoetry