...

14 views

அப்பாவும் முதல் ஓவியமும்
அது வரை லைன் டிராயிங் என்று சொல்லப்படும் கோட்டோவியங்கள் மட்டும் வரைந்து ஒளித்து வைத்துக் கொண்டு இருந்தேன்...
காரணம்....
அப்பாவுக்கு தெரிந்தால் அடி விழும்...

"இந்த வேலை என்னோடு போகட்டும்... உனக்கு வேண்டாம்... "
என்பது அப்பாவின் எண்ணம்

அது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமயம்

முதன் முதலில் ஒரு வண்ண ஓவியம் வரைந்தேன்

சுற்றிலும் இருள் சூழ்ந்த ஓர் இரவு நேரத்தில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று பயணிக்கிறது.
அந்த வண்டியின் அடியில் மங்கலான வெளிச்சத்தில் ஒரு அரிக்கேன் விளக்கு...
அந்த வெளிச்சத்தில்
மாடுகளின் கால்கள்
வண்டிச் சக்கரம் போன்றவை இருளும் ஒளியுமாய்த்தெரிய வேண்டும்...
அதோடு...
பாதையோரத்து வீட்டில் இருந்து இரண்டு வெளிச்சப் புள்ளிகள் (சன்னல்) தெரிய வேண்டும்...

ஓவியம் மிக நன்றாக வந்தது..
வழக்கம் போல ஒளித்து வைத்து விட்டேன்...
ஆனால்...
என் தங்கைகள் அப்பாவிடம் காட்டி விட்டார்கள்...

ஓவியம் கண்டு அப்பா புன்னகைத்தார்...
அதற்கு.. சிறப்பு சேர்க்கும் வகையில் சுவரில் ஒட்டி வைத்தார்....

ஓவியத் தொழில் என்னோடு போகட்டும் என்று சொன்னவர்...

"உனக்கு ஓவியம் வருகிறது..
நீ முறைப்படி கற்க வேண்டும் என்று சொல்லி... "
பணம் கட்டி ஓவியப் பள்ளியில் சேர்த்து விட்டார்...

பயின்றேன்...
அதன் பிறகு இன்று வரை எத்தனையோ ஓவியங்கள்...
வரைந்தாயிற்று....

ஆனால்...
அந்த முதல் ஓவியம் மறக்க முடியாத அனுபவம்...

கர்ப்பம் தொலைத்த பெண் வயிறு தடவி ஏங்குவது போல நானும் ஏங்கி நிற்கிறேன்...

காரணம்....
இன்று....
அப்பாவும் இல்லை.. அந்த ஓவியமும் இல்லை
© வேல்முருகன்