...

7 views

அவள் கோடீஸ்வரி..
நீலக்கடல் அத்தனை சௌபாக்கியங்களையும் தன்னுள் அடக்கியதாலோ என்னவோ ஆர்ப்பாட்டமாக ஆர்ப்பரிக்கின்றது.
கரைதொடும் அலைகளில் பாதங்கள் நனைய நனைய ஒரு ஏகாந்த யோசனையில் ரபீயா தனிமையாக நடந்து கொண்டு இருந்தாள்.

மனதோடு ஒரு சம்பாசணையில் சிக்கிக் கொள்ள காற்றின் உரசலில் சேலை பறக்க ஒரு யோகியின் தோற்றப்பொலிவில்  ஜொலிக்க சூரியன் கூட தனக்கு தானே நகைத்துக் கொண்டது.இவள் எதிர்காலம் குறித்து ஒரு தீர்க்கதரிசனப் பார்வையுடன்...

எண்ணங்கள் சம்பாஷனைக் கோர்வையில் கொழுவித் தழுவிய ஒரு மணிமாலை போல....
ஏன் இறைவா!
எப்போது எனக்கு கோடி சௌபாக்கியம் தருவாய்?
நான் எப்போது என் தேவைகளையும் என்னைச் சுற்றி உள்ள என் நேசங்களின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வது?
இந்தக் கடலுக்குள் அழுத்தமாக புதைத்து வைத்து இருக்கும் நவரத்தினங்களில் ஒரு குவியலை என் காலோரம் ஒரு புதையல் போல நீ உன் தேவதைகளிடம் சொல்லி கொண்டு வந்து கொட்டக்கூடாதா?
நான் எப்போது கோடீஸ்வரி ஆவது?
நான் எப்போது என் நேசங்களுக்கும் அயலவருக்கும் எப்போதும் உதவக் கூடியவளாக மாறுவது?
என் பிள்ளையின் திருமணச் செலவுகளை எப்படி மேற்கொள்வது?
என் கடன்களை எப்போது அடைப்பது?
உன் தாராளத்தன்மையில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு இறைவா?
நீ என் உள்ளம் பேசும் மொழி அறிந்தவன்.நான் உன் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்துள்ளேன். என் நம்பிக்கை உன் பேரருள் மழையை என் மீது பொழியட்டும்......
கண்களில் இருந்து வடிந்த உஷ்ணக் கலவை கன்னமேடு தழுவி செவ்விதழ் நனைக்க உப்புக் கரிக்க சுய உணர்வு பெற்றவள் மணல் இடுக்கில் செருகிக் கிடந்த கல்லில் தடுக்கி சரிந்து விழுந்தாள்.

இறைவன் இரக்கமுள்ளவன். தடுக்கி விழச்செய்த கல்லை கைகளால் கிளறி எடுத்தாள். சுமாராக இரண்டு கிலோகிராம் திணிவுள்ள செம்மை படர்ந்த பாராங்கல் ஒன்று அது.

கடலோரம் இறையருள் நாடி வந்து விட்டு ஏன் சும்மா போகனும்?
வலித்த கால் விரல்களை சற்று நீவி விட்ட படி தனக்கு தானே நகைத்துக் கொண்டாள்.

கல்லை மடியில் மறைத்துக் கொண்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அது இறைவன் தந்த சிறு பரிசு என அவள் அகக்கண் அவள் மனதுக்குள் ஏதோ உறுத்திக் கொண்டு இருந்தது.
அதுதான் உண்மை என்பது அவளுக்கு நாளை தெரியவரும் என்பது
இந்த அலைகளுக்கு தான் தெரியும்.

ஏனெனில் இறை கட்டளைப்படி கடலுக்குள் இருந்து இவளுக்காக
அந்த பெறுமதியான படிகத்தால் மறைத்துக் கொண்டு இருக்கும் சிவப்புக்கல்லை அலைகள் தானே கரைக்கு கொண்டு வந்து சேர்த்தன.
அவள் இறைநம்பிக்கை வீண் போகவில்லை.
இறைவன் இரக்கமுள்ளவன். அவனுக்கே எல்லாப் புகழும் என்று
துதித்தவாறு சூரியன் மெதுவாக கடலுக்குள் சங்கமமானான்.
நாளை அவளுக்கு அழகிய பொழுதை விரைவாக வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை புரிந்தவாறு.....

~ சிரியஸ் ~


© siriuspoetry