...

3 views

இன்னும் இரு நாட்கள்
அதிகாலை நேரம் நட்டத்திரங்கள் இன்னும் மின்னிக் கொண்டிருக்க சூரியன் இன்னும் விழிக்கவில்லை....செவ்வானமும் சோம்பலாயிக்க.... கோடைக்கால வெம்மை கருணையின்றி இரவில் கூட தகித்து கொண்டிருந்தது... பணத்தில் மிதப்போருக்கும், பணக்கட்டுகளின் வாசனையில் வாழ்பவருக்கு ஏ.சி குளிரில் உறக்கம் இனிமையாய் இருக்க.... ஃபேன் காற்றிலும் இனிமையாய் உறக்கம் கொண்டிருந்தது நடுத்தர வர்க்கம்.... ஏசி காற்றோ ஃபேன் காற்றோ எதுவும் உறக்கத்தில் இனிமை தராமலும் இருந்தது ஒரு வர்க்கம்.....

சோனியா, 32 வயதான இல்லத்தரசி. வேலைக்கு செல்லும் பொறுப்பான கனவன்,  வீட்டில் தங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனார் ,மாமியார் மேலும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் இரு குழந்தைகள். இது தான் அவளது குடும்பம். குடும்பத்தில் தனக்கான கடமைகளை செய்வது மட்டுமல்லாமல், கனவனுடன் நிநி சுமையையும் சுமந்து வருகிறாள் சோனியா. அருகில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாள்.

காலையில் நான்கு மணி அடி வயிற்றில் சுளீர் என்ற வலியுடன் கண் விழித்தாள் சோனியா. கட்டிலிலிருந்து திடுக்கிட்டு எழுந்தவளுக்கு அன்றைய தேதி நினைவுக்கு வந்தது. இன்று மார்ச் 24 ஆம் தேதி. கடைசியாக தலைக்கு குளித்து 28 நாட்கள் ஆகி இருந்தது. சோனியாவின் மனதில் ஆற்றாமையுடன் ஒரு சோகம் படர்ந்தது. இன்னும் மூன்று நாட்களுக்கு நரகம் தான் என்ற கசப்பான உண்மை அவளது மூளைக்கு உரைக்கவே சோம்பலாக மெத்தையிலிருந்து எழுந்தாள். இன்னும் கண்களில் தூக்கம் மிச்சம் இருந்தது. நேற்றைய உடல் களைப்பு இன்னும் அவளது உடலை படுத்திக் கொண்டிருந்தது. காணாக் குறைக்கு மாதவிடாய் வேறு. கட்டிலிலிருந்து எழுந்தவள் தான் படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள் செங்குருதி கற்றையாய் படிந்திருந்தது. ஒரு பெருமூச்சினை விட்டாள் சோனியா. இன்றைய வேலைகளோடு இன்னும் ஒரு வேலை. படுக்கை விரிப்புகளையும் துவைக்க வேண்டும். அனுதினமும் அவளது உடலில் ஏற்படும் அதீத களைப்பானது, அவளின் அடி வயிற்று வலியையும், அவளையும் அறியாமல் உடைகளில் ஏற்படும் ஈரத்தையும் கூட உணர முடியாத அளவிற்கு அவளை ஆழ்ந்த உறக்கதிற்கு அழைத்துச் சென்று விடும். அதின் விளைவு படுக்கையில் இரத்த துளிகளின் கறை. சலிப்பாக அதை பார்த்தவள் தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கனவனின் பக்கம் திரும்பியது. அவனை தொந்தரவு செய்ய மனமின்றி அவனது நெற்றியில் முத்தமிட்டவள் , தன் துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். அன்று புதன் கிழமை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் கனவனை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என எல்லாம் வரிசைக் கட்டி வந்து நிற்க, அடி வயிற்றின் வலியையும், குருதி போக்கையும் ஓரங்கட்டியவள் வழக்கம் போல காலில் சக்கரம் கட்டிக் கொண்டு களத்திற்குள் இறங்கினாள் சோனியா....

முன் தின இரவில் சுத்தமாக துடைத்துப் போட்ட சமயலறைக்குள் நுழைந்தாள். வேகமாக ஒரு குக்கரில் அரிசியை போட்டவள் அதை அடுப்பில் வைத்தாள். மற்றொரு அடுப்பில் காலை டிபனுக்காக தோசைகளை சுட்டவள் அதை ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்தாள். கூடவே தக்காளி சட்னியையும் செய்தாள். அரிசி மாவு தோசைகளை சர்க்கரை நோயாளிகளான மாமனார் மாமியாருக்கு தர முடியாது. எனவே கோதுமை உப்புமா செய்தவள் அதற்கு தொட்டுக்கொள்ள சுவையான தொக்கு ஒன்றையும் செய்தாள். காலை தூங்கி எழுந்ததும்  குழந்தைகளுக்கு சத்துமாவு கஞ்சியும் ,கனவனுக்கு காபியும், மாமனார் மற்றும் மாமியாருக்கு கசாயமும் செய்து கொண்டு கொடுத்தாள். குழந்தைகள் இன்னும் எழுந்திருக்கவில்லை. மீண்டும் சமயலறைக்குள் வந்தவள் குக்கர் இருந்த அடுப்பை அணைத்து சுவையான வத்தக்குழம்பும் அதற்கு ஏற்ற கூட்டும் பொரியலும் செய்து வைத்தாள். அதற்குள் மணி ஏழரை. வேகமாக குழந்தைகளின் அறைக்கு ஓடியவள், குழந்தைகளை எழுப்பி அவர்களை பள்ளிக்கு தயார் செய்தாள். சமயலறைக்குள் நுழைந்தவள் வேகவேகமாக சமைத்த அனைத்து உணவுகளையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் பரப்பினாள்... குழந்தைகள் கனவன் மற்றும் அவனது பெற்றோர்கள் என அனைவர்க்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.... அப்போது அவளது முதல் மகன் தருண் திருட்டு முழி முழிக்க அவளது கண்கள் அதை சரியாய் கண்டு கொண்டது....

டேய் தருண்.... என்ன உன் முழி சரி இல்ல..... என்று ஒரு கையில் கரண்டியுடன் கேட்ட தாயை பார்த்து கண்ணை உருட்டினான் தருண்...

ஒன்னும் இல்ல அம்மா... வயிறு வலிக்கு.... என்று முகத்தை சுருக்கி கொண்டு கூற.... அவனது அந்த வலியில் அவளது முகம் கவலையை எடுத்து அப்பிக் கொண்டது.... வேகமாக சமயலறையின் பக்கம் ஓடினாள்....

நொடியில் கசாயம் தயாரானது..... மகனின் வயிற்று வலியும் பறந்தது.... அனைவரையும் அனுப்பி விட்டு, வயோதிபர்களுக்கு மாத்திரை கொடுத்து விட்டு, தான் உண்ண தட்டில் தோசைகளை எடுக்க போகும் நேரம் மணி 8.30.

ஐயோ... பஸ்க்கு லேட் ஆகிடுச்சே... என்று பதறியவளின் காலை உணவு இடைவேளை நேரம் சாப்பிடலாம் என.... பாக்ஸுக்குள் அடைபட்டது.

ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்துக்கு சென்றாள் சோனியா..... அரசு பேருந்தில் கூட்டம் அலை மோத படிகட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக போராடி கம்பியை பிடித்துக் கொண்டு நின்றாள் சோனியா... வயிற்று வலி புரட்டு எடுத்தது... காலையில் எதுவும் உண்ணாதது வேறு குடலை புரட்ட.. ஒரு வாறாக கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்... முதுகு தண்டிலிருந்து தோள் வரை சுள்ளென்று இழுத்த வலியை தனக்குள்ளே அடக்குவதை தவிர அவளுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை... வழக்கம் போல் எவ்வளவு கொடுத்தாலும் தாங்கி கொள்ளும் தன் மனதில் அந்த வலியை மறைத்துக் கொண்டாள்... கூடவே தலையும் சுற்றல் வேறு... யாராவது எழுந்தால் உட்காரலாம் என்று ஆசையாக இருந்தது.... சோனியா யாராவது இறங்குவார்களா! தனக்கு ஒரு இருக்கை கிடைக்காதா என்ற தவிப்புடன் ஒவ்வொரு நிறுத்தத்திலும் எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் .... சிறிது நேரத்தில் ஒரு நிறுத்தத்தில் ஒருவர் இறங்கி கொள்ள, ஒரு இருக்கை காலியானது நிம்மதியுடன் அதில் அமர சென்றவளின் கண்ணில் விழுந்தது ஒரு காட்சி. பேருந்தின் படிகளில் ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருக்கும் ஒரு மூதாட்டி. சோனியாவின் மனம் இளகியது  அந்த நொடியில் தன் நிலையை மறந்தே போனவள். தான் அமர்ந்த இடத்தை அந்த மூதாட்டிக்கு  கொடுத்து விட்டு ஒரு கம்பியை பிடித்தவாறே அதில் சாய்ந்து கொண்டு நின்றாள்..... குண்டும் குழிகளையும் தாண்டி, பல்வேறு போராட்டங்களை கடந்து பள்ளிக்கான நிறுத்தத்தில் பேருந்து நிற்க, ஒரு கையில் மதிய உணவு பையையும் தோளில் ஒரு பையையும், மற்றொரு கையால்  இடுப்பை பிடித்தவாறு இறங்கினாள் சோனியா....

வி.வி. எம். மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி என்ற பதாகையை தாங்கிய வளாகத்துக்குள் ஒரு பெருமூச்சினை விட்டவாறு நுழைந்தாள் ... அன்று அவளுக்கு ஏழு பாட வேளைகளும் வகுப்புக்கு செல்ல வேண்டியதாயிருக்க... ஒரே ஒரு பாட வேளை மட்டும் தான் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.... மாதவிடாயின் முதல் நாள் சில பெண்களுக்கு அக்னி பரீட்சை தான்... உடல் வலியும் , சோர்வும் வாட்டி எடுத்தாலும் அன்றாட வேலைகளில் தங்களை ஈடுபடுத்துவதன் மூலம் வலியை மறக்கும் கலை எல்லாருக்கும் இருப்பதில்லை.... அதற்காக அவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தமல்ல... அவர்களது சக்தியை விட அந்த மூன்று நாட்கள் அவர்கள் அனுபவிக்கும் வலி அதிகம் என்பது தான் உண்மை.... தங்களது நிலைமையை காரணம் காரணம் காட்டி கடமைகளை தள்ளிப் போட மனமில்லாமல் மாதம் தோறும் தங்களை நெருப்புக்குள் புடமிட கொடுத்து முடிவில் இரும்பாக மாறி விடும் பெண்கள் தான் இங்கு அதிகம்....


தன் இருக்கையில் போய் அமர்ந்தவள் பள்ளியின்  காலை வழிபாடு தொடங்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கிறது என்று கண்டு கொண்டாள்... வீட்டில் சாப்பிட நேரம் இல்லாததால் கட்டி கொண்டுவந்திருந்த டிபனை சாப்பிடலாம் என்று எண்ணி அதை திறந்தாள்.... ஒரு கவளத்தை எடுத்து தன் வாய்க்கு அருகே கொண்டு செல்லும் நேரம்....

சோனியா மிஸ்.... உங்கள எச்.எம் அவங்களோட அறைக்கு வர சொன்னாங்க... என்ற பியூனின் சத்தம் கேட்கவே..... பிய்த்த தோசையை அப்படியே வைத்தவள்.... கையை கழுவி விட்டு எச்.எம் அறைக்கு விரைந்தாள்.... பேசி விட்டு தன் இருக்கைக்கு வந்து அமரும் நேரம்... சரியாக முதல் பாட வேளை தொடங்க.... நோட்டு புத்தங்களை எடுத்தவாறு வகுப்புக்கு விரைந்தாள்..... மாணவர்களின் முகத்தை பார்த்ததும் கவலைகளும் பறந்தோடிப் போகும்.... ஆனால் உள்ளுக்குள் வலியால் கதறிக் கொண்டிருக்கும் தன் உடல் பாகங்களின் சத்தம் கேட்டும் கூட சோனியா அதை கண்டுகொள்ளவில்லை....  முதுகு தண்டுக்கும் மூச்சுத் திணறல் வந்தது போல் இருந்தது சோனியாவுக்கு... அவள் வலி நிறைந்த செங்குருதியை எல்லாம் தாங்கி கொண்டிருந்தது நாப்கீன்..... அவளுக்கு இருந்த ஒற்றை ஆறுதல் அது தானே... ஆனாலும் பயம் அதையும் தாண்டி குருதி உடையில் பட்டு விடுமோ என..... அடிக்கடி அதை யோசித்த வண்ணமாகவே இருந்தாள்.... ஒவ்வொரு வகுப்பிற்கு செல்லும் முன்னமும் தன் உடையில் கறை ஏற்ப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டாள் சோனியா... வகுப்புகள் முடிய....  இறுதி மணி அடிக்கவே... பள்ளியை விட்டு வெளியே வந்த சோனியா பேருந்து நிலையத்தில் காத்திருக்க தொடங்கினாள்... முதுகு தண்டும் கால்களும் ஓய்வு எடுக்க சொல்லி கெஞ்சியது.... ஏழு பாடவேளைகள் தொடர்ச்சியாக நின்றதால் கால் முட்டுகள் நடுங்கிக் கொண்டே இருந்தன...

பேருந்து வரவே..... மீண்டும் ஒரு போர்களத்தை காண துணிந்து அதில் ஏறினாள் சோனியா.... அதை விட்டால் வேறு வழி இல்லையே.... ஆட்டோவிற்கு பணம் கொடுத்தால் அன்றைய மாத கணக்கு சிக்கலாகி விடும்... உண்மைகள் கசப்பாக இருந்தாலும் மறுக்கப்படாதவை..... பெரும்பாலானோரால் மறக்கபடுபவை... ஒரு வழியாக வீட்டை அடைந்தவளை வரவேற்றது சிங்க் நிறைய பாத்திரமும், இலைக் குப்பைகளால் நிறைந்த வீட்டின் முற்றமும், மாமியாரின் மூட்டு வலி புலம்பலும் தான்..... பாத்திரங்களை கழுவி முற்றத்தை பெருக்கி, மாமியின் மூட்டு வலிக்கான தைலத்தை தேய்து அதில் சுடு நீர் ஒத்தடம் கொடுத்து மாமிக்கு செவிலியாகி போனாள்.... மகன் தருனும் வருனும் வந்து விட...  வழமை போல் மகன் வருன் கீழே விழுந்து கையில் காயத்தோடு வந்திருக்க... அதற்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவராகி போனாள் சோனியா... வீட்டுப் பாடங்களை செய்யும் படி குழந்தைகள் அமர அவர்களோடு அமர்ந்தவள் கடமையில் தாயாகவும் பொறுப்பில் ஆசிரியையாகவும் அவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுத்தாள்.... இடுப்பு வலி அதிகமாக இருக்கவே  சிறிது நேரம் முதுகை சாய்க்கலாம் என்று எண்ணிய  நேரம்  வேலை முடித்து கனவன் வீட்டிற்கு வந்தான்...  அவனை வாசலில் நின்று இன்முகமாய் வரவேற்றாள் சோனியா...

என்னங்க..... பார்க்கவே ரொம்ப டையர்டா தெரியுறீங்க.... வேலை ரொம்ப ஜாஸ்தியா.... என்று அக்கறையோடு விசாரித்தவளைப் பார்க்கும் போது அவள் கனவனின் தலைவலி கூட கொஞ்சம் மட்டுபட்டது....

ஆமாம்மா.... இன்னைக்கு ரொம்ப அலச்சல்.... தலைவலி வேற.... என்று சோர்வாக கூறியவன் கழுத்தில் இருந்த டையை தளர்த்தியவாறே சோபாவில் அமர்ந்தான்....

சோனி நீ எப்பவும் போடுவியே இஞ்சி டீ அத கொஞ்சம் ஸ்ட்ராங்கா போட்டு எடுத்துட்டு வறீயா என்று கேட்டான்....

இதோ ஒரு ஐந்து நிமிஷத்துல எடுத்துட்டு வரேன்.... என்று சிட்டாய் பறந்தவள்.... அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் ஆவி பறக்க இஞ்சி டீயை தன் கனவனின் முன் நீட்டினாள்....

தேங்க்ஸ் பொண்டாட்டி.... என்றவன் அந்த டீயை குடிக்க... தலைவலியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது... கனவனின் தலைவலிக்கான சிறந்த தீர்வு மனைவியின் கணிவான கவனிப்பு தானே.....

இரவு நேரம்....

சமையலை முடித்த சோனியா,அனைவரையும் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு , டைனிங் டேபிளை சுத்தமாக்கி , பாத்திரங்களையும் கழுவி, பெரியவர்களுக்கு மாத்திரை அளித்து, குழந்தைகளை உறங்க வைத்தாள்... பின் நாளைக்கு கற்பிக்க வேண்டிய  பள்ளி பாடங்களை ஒரு முறை பார்த்து விட்டு, நேரத்தைப் பார்த்தால் மணி 11...... அனைவரும் உறங்கி விட்டதால் வீடே அமைதியாக இருந்தது.... அந்த ஹாலில் இருந்த மின் விசிறி சுழழும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, கண்களும் உறக்கம் வேண்டி அவள் மனதிடம் யாசகம் கேட்டது...  மெதுவாக அறையை நோக்கி நடந்தவள் மெத்தையில் போய் அமர... இன்று காலை நடந்தது அவள் நினைவுக்கு வந்தது.... மீண்டும் போர்வைகளில் இரத்தம் பட்டு விட வேண்டாம் என எண்ணினாள்.... கடினமான போர்வைகளை துவப்பது சோனியாவுக்கு இந்த மாதவிடாய் நாட்களில் மிகவும் சவாலானது... எனவே  ஒரு தலையணையை மட்டும் எடுத்தவள் தரையில் போய் படுத்துக் கொண்டாள்.... அடித்துப் போட்டது போல அவள் உடல் வலித்தது... தூக்கம் வந்து அவள் இமைகள் மூட... அவள் மனம் அவளை சமாதானம் செய்தது....

இன்னும் இரண்டு நாட்கள் தான்....

அடுத்த நாள் காலையில்  மீண்டும் ஒரு அக்னி பரீட்சை ....

வலித்தாலும் வலிக்காதது போல் சிரித்துக் கொண்டிருக்கும் என் தாய்  தமக்கைகளுக்கு இந்த படைப்பு சமர்பணம்....

அன்புடன்...

எபின் ரைடர்...


© All Rights Reserved