சங்கர மடம்
கண்விழித்து பார்த்த போது காலை மணி ஏழு. இன்றோடு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு ஏறக்குறைய எழுபது நாட்கள் ஆகி விட்டது. எப்ப தான் கோவில் திறப்பார்களோ என்று நினைக்கையில் இன்று வைகாசி அனுஷம், மகா பெரியவர் ஜெயந்தி நினைவுக்கு வந்தது. சரி, இன்று பெசன்ட் ரோடு சங்கர மடம் செல்லலாம் மகா பெரியவர் அனுஷ தினம் கண்டிப்பாக திறந்து இருப்பார்கள் அப்படியே ஸ்ரீ காமாட்சி அம்மனையும் பார்த்து விடலாம் என வேக வேகமாக கிளம்பினேன். நேராக பூட்டப் பட்டிருந்த மேல மாசி வீதி ஆலால சுந்தர விநாயகரை வணங்கி விட்டு, சொக்கநாதர் கோவிலை நெருங்கிய போது வாசலில் நின்று ஒருவர் சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார். வண்டியை விட்டு இறங்கி கோவில் வாசலில் நின்றேன். கோவில் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. படி ஏறி ஸ்பிரிங் கேட் இடைவெளி வழியாக பார்த்தேன். அன்னை மீனாட்சியின் அற்புதமான காட்சி. பல நாள் பட்டினி இருந்தவனுக்கு சாப்பாடு எப்படி மகிழ்ச்சி அளிக்குமோ அப்படி ஒரு மனநிலை. மனதார வழிபட்டு விட்டு சொக்க நாதனிடம் வந்தேன். நந்தியோடு சிவலிங்க தரிசனம் புல்லரித்தது. வேண்டியதை வேண்டி விட்டு சங்கர மடத்திற்கு மல்லிகை பூ வாங்கி கொண்டு பெசன்ட் ரோடு விரைந்தேன். வாசலில் நிறைய வண்டிகள். ஆனால் மடம் உள்புறமாக தாழிட்டு இருந்தது. மடத்தை நெருங்க நெருங்க புரோகிதர்களின் வேத மந்திரங்கள் கேட்க தொடங்கியது. வாசலை அடைந்த போது அங்கே பணிபுரிபவர் கதவை திறந்து விட்டார். ஐம்பத்தியிரண்டு வருடத்தில் இன்று தான் உள்ளே நுழைகிறேன். கையில் இருந்த ஹெல்மெட்டை வைத்து விட்டு வாசலில் இருந்த மஞ்சள் நீரால் காலை சுத்தம் செய்து விட்டு, கைகளை அவர்கள் கொடுத்த சானி டைசரால் சுத்தப்படுத்தி விட்டு மடத்திற்கு சென்றேன். ஏழு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத நடு நாயகமாக ஒரு வயதான தம்பதியினர் அமர்ந்து இருந்தனர். சுற்றிலும் பார்த்தேன். நான்கைந்து மாமாக்கள் மட்டும் சட்டை இல்லாமல் தரையில் அமர்ந்து இருந்தனர். கொண்டு சென்ற மல்லிகை பூவை ஆச்சாரியாரிடம் கொடுத்தேன். பெற்றுக் கொண்டு என்னை அமரச் சொன்னார். பதினோரு கும்பங்கள் அழகாக அமர்ந்து இருந்தன. நானும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டேன். எதிரே ஒரு பக்கம் விநாயகர் சன்னதி. ஒரு பக்கம் ஸ்ரீ காமாட்சி அம்மன் சன்னதி. இடது புரத்தில் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என விளக்குகள் மின்ன கீழே மகா பெரியவர் சன்னதியில் அமர்ந்து ஆசி வழங்கி கொண்டு இருந்தார். அரை மணி நேரம் அமர்ந்து தரிசனம். ஹோமத்தில் நடு நாயகமாக நாற்காலியில் அமர்ந்து இருந்த வயதான தம்பதியருக்கு ஐயர் தாம்பூலத்தில் மஞ்சளில் விநாயகர் பிடித்து சந்தனம் பொட்டு வைத்து விட்டு விநாயகருக்கு பூ தேடும் போது நான் கொடுத்த ஒரு முழம் மல்லிகை பூ கண்ணில் பட அதை எடுத்து விநாயகருக்கு அணிவித்து பூசைகள் செய்து அந்த விநாயகருடன் நெய் வேத்தியம் செய்த பழங்களுடன் தாம்பூல தட்டை அந்த தம்பதியருக்கு வழங்கினார். முதலில் விநாயகர் மீது அணிவித்திருந்த மல்லிகை பூவை அந்த அம்மாவின் தலையில் சூடச் சொன்னார். பயபக்தியுடன் அதை சூடிக் கொண்டு அந்த பிரசாத தட்டை அவர்கள் பெற்ற போது எனக்கு மனம் நிறைவாக இருந்தது. பிறகு மீண்டும் சன்னதி அருகே சென்று விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், மகா பெரியவரை தரிசித்து விட்டு அந்த தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்த போது மணி பத்து.