...

14 views

மொம்மலாட்ட மனிதர்கள் - நிலா பிரகாஷ்

மொம்மலாட்ட மனிதர்கள்
‌நிலா பிரகாஷ்

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்துக் கொண்டு கடந்து போகும் மனிதர்களை வாசித்துக் கொண்டு இருந்தேன். இன்று கதையை எழுதி முடித்தே ஆக வேண்டும்..!! கதையின் தலைப்பை மட்டும் எழுதி வைத்துக் கொண்டு இன்று ஒரு நாளில் எழுதி முடித்து விட வேண்டும் என்ற எனது எண்ணம் எனக்கே சிரிப்பை வரவழைத்திருக்கக் கூடும். அருகில் இருந்த மனிதர் தனது தொள தொள சட்டையை உதறி விட்டு என் அருகில் இருந்து எழுந்து ஓரத்தில் போய் நின்றார்.

‘ஒரு வேளை பைத்தியக்காரன் என்று எண்ணியிருப்பாரோ?!!’

என் மனம் யோசித்தது இன்னும் இதழ்களை விரிய வைக்க இருவரது சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளியாக புகையை படர விட்டு வந்தது அந்த மாநகர பேருந்து.

நான் பேருந்தில் ஏறி அமர்ந்து, காத்திருந்த அந்த மனிதரை மீண்டும் பார்க்க அவர் தன் கையில் இருந்த கைக்கடிகாரத்தை வேகமாக நோக்கி விட்டு வெடுக்கென தலையை திருப்பிக் கொண்டார்.

‘வேடிக்கை மனிதர்கள்..இவர்களால் மட்டும் எப்படி ஒரு பொழுதில் ஒருவனை பைத்தியமாகவோ பரமாத்மாவாகவோ தீர்ப்பிட முடிகிறது'

என் சிந்தனையை கலைக்க அருகே வந்து நின்றார் நடத்துநர்.

“எங்க போறீங்க?”

“இந்த பேருந்து கடைசியா எங்க போகும்?”

“காயிலான் கடைக்கு”

நடத்துநர் நக்கல் பேசினாலும் நகைச்சுவை காட்சிக்கு வசனம் ஆயிற்று என்று எண்ணும் மனது எல்லாம் எழுத்தாளனாக இருப்பவன் மட்டுமே அறிவது.

“போற இடம் சொல்லுய்யா….கலெக்சன் ஆகல னு நானே காண்டுல இருக்கேன்”

இதற்கு மேல் மரியாதை தேயும் முன் கடைசி பேருந்து நிறுத்தத்தை சொல்லி டிக்கெட் வாங்கி அமர்ந்தேன். கதை எழுதுவது வேறு ஒரு உலகில் இறைவனாக பரிணமிப்பது .. எனக்கு எப்போதும் அந்த அவதாரம் எடுப்பதற்கு சில கணங்கள் கடவுள் படைத்த உலகத்தை பார்வையாளனாக கண்டு ரசிப்பது தேவைப்படும். அன்றும் அப்படித்தான் .

பேருந்தில் அதிகம் கூட்டம் இல்லை. லேசான மழைத் தூறல் சாளரத்தின் வழி முகத்தில் விழ வெளி உலகை கவனிக்கத் தொடங்கினேன். என்னோடு மரங்களும் மேகங்களும் நடந்து வந்துக் கொண்டு இருந்தது. பார்வைக்கு மனிதர்கள் எவரும் இல்லை.

அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஏறிய உருவத்தைக் கண்டதும் என் விழிகள் வேறு எங்கும் தங்காது அதன் முகத்திலேயே தேங்கி நின்றது. நடத்துநர் அந்த உருவத்தை வாடிக்கையான பயணி போல் எதுவும் கேளாமலே பயணச்சீட்டைக் கொடுத்து விட்டு நகர்ந்தார். அந்த உருவம் கூத்து கட்டுவதற்கு செல்ல அரிதாரம் அலங்காரம் பூசி வந்தது போலும். அது வர வர இருபுறமும் அதன் பொம்மை கைகள் உடை உரச பேருந்தில் இருந்த ஒரு சிலரும் அதன் அலங்காரத்தில் முகம் சுளித்தனர். அந்த உருவம் அவர்களைக் கடந்து என் அருகில் இருந்த மூன்று இருக்கையில் ஒரு ஆளாக அமர அதன் ஆடை அணிகலன்களும் அரிதாரமும் அவர்களை பயப்படுத்தியிருக்க வேண்டும் இல்லை முன் எச்சரிக்கையாகவே அந்த உருவத்தைத் அவர்கள் தவிர்த்து இருக்க வேண்டும்.

என்னுள் இருக்கும் எழுதுகோல் எழுதும் மையினை தேடச் சொல்ல இதழ்களில் சொற்களைப் புகுத்தி வார்த்தைகளை விடுவித்தேன்.

“நீங்க கூத்துக்கு போறீங்களா?”

“ஆமா..”

ஒற்றை சொல்லில் பதில் வர மீண்டும் பேசலாமா என்ற கேள்வி மனதில் எழ வெள்ளை வெளரென அப்பிய ஒப்பனையின் ஊடே கருமையில் இருளடைந்த விழிகள் என்னை ஏனோ மறுகேள்வி கேட்க வைத்தது.

“நீங்க எந்த ஊர் ..?”

“இங்க தான்..எரிசனம்பட்டி”

“ஓ ..என்ன வேசம் போட்ருக்கீங்க?”

“ஏவலாளி..”

“காவலாளி கேள்விப் பட்டு இருக்கேன்..அது என்ன ஏவலாளி”

“என்னைக் கேட்டா ..வாத்தியார் என்ன வேஷம் கொடுத்தாலும் நடிப்பேன்.. அவ்ளோ தான்”

அந்த உருவம் ஆடையின் இறுக்கத்தில் முகத்திலும் இறுக்கம் படர அமர்ந்திருக்க ஆணா பெண்ணா நீங்க ? என் அடுத்த கேள்வியை அப்படியே நிறுத்திக் கொண்டேன். ஒரு விரல் தடிமனில் ஒப்பனை வெகுவாக அதன் முகத்தை மறைத்திருந்தது.

‘ஒரு விரல் தடிமனில் ஒப்பனை என்றால் தோல் சுவாசிக்க முடியுமா இல்லை ஒப்பனை உரிக்கையில் தோலும் உரிந்து விடுமோ?’

என் மனதில் பிராண்டிய கேள்வியை வேறு வகையில் கேட்டுத் தொலைத்தேன். கிடைக்கப் போகும் பதில் தானே முக்கியம் கேள்வியில் தேன் தடவினால் என்ன ? விஷம் தடவினால் என்ன?

“இவ்வளவு ஒப்பனை போட்டு இருக்கீங்களே ..எவ்வளவு நேரம் ஆச்சு?”

இந்த கேள்வி அந்த உருவத்துக்கு பிடித்திருக்க வேண்டும்.

“நல்லா இருக்கா..? காலையில இருந்து நாலு மணி நேரம் போட்டுட்டு இருந்தேன்.. இதோ இந்த காதில தொங்கும் தொங்கட்டான் செய்ய இராப்பொழுது ரெண்டாச்சு..இதோ இந்த கால்சட்டை சந்தனம் தடவி கறையாகிடுச்சு..ஆனா வாத்தியார் இதே கால்சட்டையில தான் வரோனும் னு சொல்லிட்டாரு”

தொங்கட்டான் பதிலின் போது மட்டும் இடுங்கி இருளடைந்த கண்களில் மின்னிய ஒளிக்கீற்று கால்சட்டையில் சிறுபுள்ளியாய் மறைந்து போயிருந்தது.

‘சரி தான்..இப்படியே கேள்விகளை கேட்போம்…’

என் மனம் எண்ணியதை செயல்படுத்தியது.

“இங்க இருந்தே ஒப்பனையில போறதுக்கு…அங்க கூத்து கட்டற இடத்துக்கு போய் போடலாமே….ஒப்பனை இன்னும் நல்லா இருக்கும்”

“அச்சச்சோ ..அப்ப நான் கூத்தில நடிக்கிறேன் னு எப்படி தெரியும் இந்த ஊருக்கு..கூத்தில நடிக்கிறது எவ்வளவு பெருமை தெரியுமா??..இந்த ஏவலாளி வேசத்துக்கு பத்து பேரு கேட்டு இருந்தாங்களாம்..வாத்தியார் நீ தான் இதுக்கு சரியா இருப்பனு கூப்பிட்டு கொடுத்தாரு..பாருங்க என்னைப் பார்த்த எல்லாரும் எனக்கு வழிவிட்டு எவ்ளோ மரியாதையா தள்ளி நிக்கிறாங்க ..”

அருவறுப்புடன் ஒதுக்கியது மரியாதையா? அந்த உருவத்தின் அறியாமையா இல்லை அறிய மறுக்கும் பேதமையா இது ?!! என் கேள்விகள் இன்னும் நிறைய இருந்தது உண்மையைப் பேசி அதன் உதடுகளை மூடிவிட விருப்பமில்லை எனக்கு.

“இதோ இந்த சொக்காவை தைச்சு போட்டதும் வாத்தியாரு எனக்கு மட்டும் தான் இது பொருத்தமா இருக்குனு சொன்னார்..அப்படி தான் இருக்குல”

நான் ஆம் என்பதாக தலையசைத்து இல்லை என்பதை பெரிதாக புன்னகையில் மறைத்திருந்தேன். பேச்சின் சுவாரஸ்யத்தில் அடுத்த நிறுத்தம் வந்திருந்தது. கிட்டத்தட்ட அந்த உருவத்தை போலவே முகம் முழுவதும் அரிதாரம் பூசிய இன்னொரு உருவம் நின்றிருந்தது. இருவரும் பரஸ்பரம் தலையசைத்துக் கொண்டனர்.

அரிதார பொம்மை அந்த உருவத்தின் பெயராக கொள்வோமே!! அரிதார பொம்மை என்னைப் பார்த்து பெருமையுடன் சிரித்தது. கடந்து சென்ற அந்த உருவத்தைக் காட்டி பேசியது.

“அதுக்கும் எனக்கும் எவ்வளவு போட்டி தெரியுமா.. வாத்தியார் பத்தி பக்கபக்கமா கவிதை எல்லாம் எழுதி இந்த வேசத்தை வாங்க முயற்சி பண்ணுச்சு..நான் நியாயமா எத்தனை வருசம் வாத்தியார் பேசினதை அப்படியே பேசி நடிச்சிருப்பேன்..என்கிட்ட ஜெயிக்க முடியுமா?”

அதன் பெருமையில் அந்த வாத்தியாரைப் பார்த்து விடத் தான் தோன்றியது.

“ஐய்யயோ நான் உங்ககிட்ட பேசி டயலாக் மறந்துடப் போறேன்..”

“கூத்து தானே ..நீங்க காட்சிக்கு தகுந்த மாதிரி பேசக் கூடாதா?”

“ஐயோ ஒரு வார்த்தை தப்பினாலும் வாத்தியார் போ வெளியே னு துரத்திடுவார்..”

அரிதாரப் பொம்மை சொல்லி விட்டு கையில் இருந்த காகிதத்தில் எழுதியதை மனனம் செய்துக் கொண்டு அமர்ந்து இருந்தது. நான் அதன் உதடுகள் விரிந்து உச்சரிக்கும் வார்த்தையை யூகிக்க முயன்றேன். எப்படி யூகித்தும் ‘சரிங்க எசமான் ..வாழ்க எசமான்’ என்பதே அன்றி வேறொன்றும் கேட்கவில்லை.

ஓட்டுநர் பேருந்தை தேநீர் கடையில் நிறுத்தி இறங்க பயணிகளும் இறங்கினர். மீண்டும் அரிதார பொம்மை என்னைப் பார்த்தது.

“கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”

என் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினேன். ஒரு சொட்டு நீர் கூட முகத்தில் பட்டு ஒப்பனை கலையாதவாறு லாவகமாக தண்ணீரை குடித்து பாட்டிலை நீட்டியது.

“எப்ப ஒப்பனையை கழுவுவீங்க..? எப்படி சாப்பிடுவீங்க ? தண்ணீ குடிக்கவே இவ்வளவு சிரமப்படுறீங்க!”

“ராப்பொழுது தூங்கப் போகும் போது சில சமயம் காலையில குளிக்கும் போது தான் கழுவத் தோணும்.. ஒப்பனை இல்லாத என் முகத்தைப் பார்க்க எனக்கே பயம்”

“ஏன்..?”

“சிலதுக்கு பழகிப் போயிடறோமே….அம்மணமான உண்மைகள் என்னைக்கு அழகாத் தெரிஞ்சிருக்கு..அசிங்கம்னு தானே ஊரு ஏசும்”

“இவ்வளவு அழகா பேசறீங்க..உங்க வாத்தியாரை விட நீங்க அழகா டயலாக் எழுதறீங்க”

அதைச் சொன்னதும் அரிதார பொம்மையின் முகம் சிறுத்து சுற்றிலும் திரும்பி பார்த்தது. அனிச்சையாக எனது கண்களும் சுழல அரிதார உருவமோ அத்துடன் என்னிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டது. மெலிதான கோபம் என் மேலேயே எனக்கு எழுந்தது. பேசாமல் செய்தி மட்டும் சேகரிக்கச் சென்னால் உன்னை யார் உண்மையைப் பேசச் சொன்னது. என் மனம் என்னைத் திட்ட நான் மௌனமாகி வெளியே வேடிக்கை பார்க்க பஞ்சு மிட்டாய் விற்பவன் பேருந்திற்குள் நுழைந்தான். நான் ஒரு பஞ்சு மிட்டாய் வாங்க அரிதார உருவம் அதனை ஒரு வித ஏக்கத்தோடு பார்த்து விட்டு திரும்பியது.

“அக்கா..நீ ஒண்ணு வாங்கேன்..பொம்மை கணக்கா சோக்கா இருக்க…எம்மா அழகு”

பஞ்சு மிட்டாயை விட அந்த பத்து வயது சிறுவனின் பேச்சு அந்த உருவத்தை அதிகம் மயக்குவதாகத் தெரிந்தது. ஐந்து ரூபாய்க்கு ஒன்றை வாங்கி விட்டு என்னைப் பார்த்து ஒரு மேட்டிமைக் கண்களில் சிரித்தது. புகழுவதும் புகழின் போதையில் இருப்பதும் எந்த ஓப்பியமும் தரத் தோற்கும் மனநிலை.

அந்த உருவம் ஒரு நிமிடம் தன் இயல்பில் அந்த பஞ்சு மிட்டாயை சுவைப்பதை ரசித்து இருந்தேன். தன்னை எவர் பார்கிறார்? என்ற பதட்டமில்லை .. வாத்தியார் என்ன சொல்வார் என்ற பயமில்லை.. முக்கியமாக இளஞ்சிவப்பில் திட்டு திட்டாகப் பதிந்து விட்ட பஞ்சுமிட்டாயை அழுந்த தேய்த்ததில் வழிந்த எச்சிலை துடைத்ததில் அழிந்துப் போன ஒப்பனை அரிதாரமில்லாத தோலை அப்படியே காட்டி விட்டதற்கான பயமில்லை!! சிறுபிள்ளை பனிக்கூழ் உண்ணும் அழகை முதன்முறையாக தன் சுயத்தை அனுபவிக்கும் உருவத்திடம் கண்டு புன்னகைத்தேன்.

எல்லாம் தாண்டி சதை தோல் மூடிய ஆசைகளின் கூடாரம்… எனக்கு இது பிடிக்கும் என்பதை எல்லா சூழலிலும் மறைக்க இயலா பலவீனம் அது மனிதன் என்பதை உணர்த்தியது.

சுவைத்து முடித்து முகம் துடைத்து நிமிர்ந்த உருவம் தன் கையில் இருந்த ஒப்பனையைக் கண்டதும் அகோரமாக கத்தியது.

“ஐயோ…!”

அது கத்திய உடனே அதன் தலைக்குப் பின்னே இரு குமிழ்கள் முளைத்து சிகப்பு வண்ணத்தில் ஒளிர்ந்து சத்தம் எழுப்பியது.


அடுத்த நொடி எங்கிருந்தோ உருண்டு வந்த நூல்கண்டு அதன் தலையில் கரகரவென சுத்த அந்தக் காட்சியைக் கண்டு விக்கித்து நின்றேன். மறுவிநாடி என் கண்முன்னே அதே உருவம் அமர்ந்திருந்தது. அது முற்றிலுமாக பொம்மையாகி இருந்ததைக் கண்டு மூர்ச்சடையதாக குறையாக நான் அமர்ந்திருக்க அடுத்த நிறுத்தத்தில் அந்த உருவம் என்னை முற்றிலும் மறந்ததாக கடந்து இறங்கிச் சென்றது. இறங்கிச் செல்கையில் தான் கவனித்தேன் அதன் உடல் முழுவதும் நூலில் கட்டி பொம்மையாக அது நடைப்பயின்றதைக் கண்டு என்னுள் அச்சம் தலைக்கேற லேசாக வேர்த்தது.

அதன் பின் பேருந்தில் இருந்த ஒவ்வொருவரையும் உற்று நோக்க எல்லார் தலைக்குப் பின்னே இரு குமிழ்கள் நூல் கட்ட முளைத்திருக்கக் கண்டு திகைத்த நொடி என் தலை பின்னே என் கைகள் தானாகத் துழாவத் தொடங்கியது. கைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரு குமிழ்கள் லேசாக துளிர் விட்டிருந்தது.

என்னுள் சப்த நாடியும் ஒரு நொடி அடங்கி மீண்டும் உயிர்பெற அச்சத்தில் நான் ஐயோ என்று கத்திய மறுநொடி எங்கிருந்தோ ஒரு நூல்கண்டு என்னை நோக்கி வேகமாக படர்ந்தது.

வீர் எனக் கத்தி எழும்பி கால் பதிக்க படுக்கையில் இருந்து எழுந்திருந்தேன். கடிகார முள் மணி ஐந்து எனக் காட்ட இந்த மதிய நேரத் தூக்கம் ச்சை மனதிற்குள் சபித்துக் கொண்டே எழுந்தேன். அருகில் இருந்த அட்டையில் காகிதம் எழுத்துக்களோடு சிரித்தது.

“பொம்மலாட்ட மனிதர்கள்'

நான் நானாக வாழ்வதின் அதிகப்பட்ச நேரத்தை எந்த நூல்கண்டில் எந்த வாத்தியார் தீர்மானிக்கிறார் என்பதை பொம்மைகள் உணர்வதே இல்லை…!!! அதன் பாத்திரங்களும் பெயர்களும் பெரும்பாலும் ….

எழுதத் தொடங்கினேன் இன்றைக்குள் எழுதி அனுப்ப வேண்டுமே..!! என் நூல்கண்டும் குமிழும் உங்களுக்கும் தெரிகிறதா?!!



© nilaprakash novels