...

7 views

கடற்கரையில் காதலி
கடற்கரையில் காதலி


                  என் மச்சானை பார்த்தால்

நாய் கூட நக்கலடிக்கும்.. 
நரி கூட எள்ளி நகைக்கும்.

இது,  எனது மச்சான் கடற்கரைக்கு காதலியை பார்க்க போய் கையும் களவுமாக பிடிபட்ட கதை.

சில பேரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று சொல்வார்கள்.
என் மச்சானிடம் பழகி பார்த்தால் தான் தெரியும் இவர் பல விஷயங்களை கற்ற மேதையென்று.

             இவர் தான் ராதாகிருஷ்ணன் என்ற சுபாஷ். எனது தந்தையின் தமக்கை மகன்.

நானும் இவரும் கிங்ஙிணி மங்ஙிணியாய் நடந்த காலத்தில் இருந்தே நண்பர்கள்.

இனி விஷயத்துக்கு வருவோம்..

           என் தந்தையின் தம்பியின் திருமணத்துக்கு முந்தைய நாள். எல்லா உறவினர்களும் வர ஆரம்பித்திருந்தார்கள். வீடே களை கட்டி கொண்டிருந்தது.
பல நாட்களுக்கு பிறகு உறவினர்களை பார்த்த மகிழ்ச்சியில் பலர்.
                   
            ஆனால் காதலியை காண கடற்கரை செல்லப் போகிறோம் என்ற ஆர்வத்தில் என் மச்சான் ராதாகிருஷ்ணன்.

              எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் நகரம் அருகே உள்ள   செப்பள்ளிவிளாகம் என்னும்  அழகிய கிராமம்.  ஒரு பக்கம் நதி, மறுபக்கம் வயல், நடுவில் தென்னை மரங்கள் நிறைந்த தீவு போன்ற எங்கள் ஊரின் பெயர் செப்பள்ளிவிளாகம்.
                 
                  அன்று காதலியை காண பல திட்டங்கள் தீட்டிய மச்சானை திடீரென்று காணவில்லை. திருமண வீடு துக்க வீடாகி போகுமோ என்ற அச்சத்தில் பலர் அவனை தேடிக் கொண்டிருந்தார்கள். அன்று தொலைபேசி, அலைப் பேசி  என
எதுவும் இல்லாத காலம்.  என் மச்சானுக்கு அன்று பதினைந்து வயது இருக்கும் என நினைக்கிறேன்.

                எனது பாட்டி, "பயல காணல கேட்டியா" 
என எங்க ஊர் தமிழில் பரபரப்பாய் தேடி கொண்டிருந்தார்.

                மச்சான் காலையிலே கிளம்பியிருப்பார் போல கடற்கரைக்கு. ஆனால் விசயம் தெரிந்து தேட ஆரம்பித்ததோ மதியத்திற்கு மேல் தான்.

               அந்தி சாயும் நேரம் சந்தி சிரிக்கும் காரியங்களை செய்து களைத்து மச்சான் வருவது தூர இருந்து தெரிந்தது. அண்டை நாட்டு எதிரியை தாக்க தயாராகும் ராணுவம் போல் உறவினர்கள் தயார்நிலையில் நின்றார்கள்.  வீட்டு முற்றத்தில் மச்சான் கால் வைக்கவும் அவன் கன்னத்தில் என் தந்தை கை வைக்கவும் சரியாக இருந்தது.  "எங்கல போன"  என என் தந்தை கேட்க, திரு திரு என முழித்த மச்சான் "கொ கொ கொ கொ கொளச்சல் போனேன் மாமா"  என மச்சான் வார்த்தைகள் தடுமாறி சொன்னார்.
         ஒருத்தன் அடி வாங்குவது பார்த்தால் நமக்கு மகிழ்ச்சி தானே. எல்லாரும் கூடி விட்டார்கள். கல்யாண மாப்பிள்ளையை விட மச்சான் தான் அன்று புகழ்பெற்றிருந்தார்.

              மச்சான் சென்றதோ குளச்சல் கடற்கரைக்கு. ஆனால் யாரோ கடியப்பட்டணம் சென்றதாக புரளியை கிளப்பி விட்டனர்.

நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த காதலி யாரென்று தானே? நம்ம மச்சான் இயற்கை எனும் காதலியை காண சென்றான்.

வீட்டில் தகவல் சொல்லி விட்டு போயிருக்கலாமே.

- அப்துல் ஹலீம்


© Dr. Abdul Halim