...

9 views

இணைந்த கைகள்


மழை மேகங்கள் மெல்ல கூடிக்கொண்டே வந்தது. பேருந்தில்இருந்த பயணிகள் தங்களின்மேல் மழை நீர் விழாமல்இருக்க கண்ணாடிச்சட்டங்களை மூடிக்கொண்டுஇருந்தனர். “நல்லவேலை என்அருகில் யாரும் இல்லை” என எண்ணியவாறே கவிதா மழைச் சாரலை அனுபவித்தாள்.

 

செங்கனல் கிராமத்தில் ஆசிரியையாக வேலைக்கு சேர இருக்கும் கவிதா அளவு கடந்த ஆனந்தத்துடன் அந்த பயணத்தை மேற்கொண்டிருந்தாள். சிறு வயது முதலே ஆசிரியை பணி அவள் கனவாக இருந்தது. இன்று அந்த கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சி ஒரு பக்கம், இன்னொரு புறம் தனது பூர்விகமான செங்கனல் கிராமத்திலேயே முதலில் பணி அமர்த்தப் பட்டது.

 

மழையின் காரணமாக மண்ணின் ஈரமும், வாசனையும் ரசித்தவாறே மெதுவாக ஊருக்குள் நுழைந்தாள் கவிதா. தந்தை கூறிய அடையாளத்தை வைத்து ஊரின் பொதுவில் உள்ள முத்தாளம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கியவள்  அங்கிருந்த பூசாரியிடம் ஊர் தலைவரின் முகவரி பற்றி கேட்டறிந்தாள்.

 

கொஞ்சம் நாகரிகமாகவே இருந்தது தலைவரின் வீடு. மெல்ல கதவை தட்டியவளின் குரலுக்கு மதிப்பளித்து வந்து எட்டி பார்த்த நபருக்கு ஒரு எழுபது வயதிருக்கும். யார் வேண்டும், என்ற கேள்விக்கு மரியாதையோடு பதிலிரைத்தாள் கவிதா. அங்கிருந்த நாற்காலியில் அவளை அமர செய்துவிட்டு சென்றவர் சற்று நேரத்தில் தண்ணீரும் மிதமான சூட்டில் பாலும் எடுத்து வந்தார்.

 

கவிதா மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.  வயதில் மூத்தவர் செய்யும் சேவை அவளை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த ஊர்த் தலைவர் கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே என இஷ்ட தெய்வத்தை வேண்டியவாறு இருந்தாள்.. சற்று நேரத்தில் கரும்பச்சை நிற யமஹா வண்டியில் வந்து இறங்கிய நபருக்கு ஒரு முப்பது வயதுக்குள் இருக்கும். இவளை வரவேற்கும் வகையில் தலையை அசைத்தவன் பெரியவரிடம் திரும்பி “ஏதாவது சாப்பிட்டாங்களா” என அக்கரையோடு விசாரித்தான்.

 

 

கவிதா கொஞ்சம் குழம்பிப் போனாள். தலைவரை பார்க்க வந்தால் யரோ ஒரு இளைஞன் தலைவர் தோரனையில் பேசுவது அவளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவளின் முக மாற்றத்தை கவனித்தபடி அவள் பக்கம் திரும்பியவன். “பயணம் எல்லாம் சுகம் தானே” எனக் கேட்டான். அவன் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு பதில் கவிதா “நீங்கள்’ என கேள்வி எழுப்பினாள். சின்ன புன்முறுவலோடு “நீங்கள் தேடி வந்த கார்மேகம்” என்றான்.

 

சில வினாடிகள் அங்கே ஒரு அமைதி நிலவியது. மன்னிப்பு கேட்கும் தோரனையில் பேச ஆரம்பித்த கவிதாவை தன் கை அசைவால் நிறுத்தி “இதில் உங்கள் தவறேதும் இல்லை. ஊர் தலைவர் என்றதும் நீங்கள் கொஞ்சம் சினிமா பண்ணையார் போல நினைத்து இருப்பீர்கள்.” அவன் பேசிய தோரனை சிரிப்பை வரவழைத்தாலும் தன்னை கிண்டல் செய்வது போல் இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் தனக்கு வந்த வேலைக்கான உத்தரவை அவனிடம் நீட்டினாள். அவள் கண்களில் தெரிந்தது சிரிப்பா, கோபமா எனப் புரியாமல் அந்த கடிதத்தை  வாங்கி படித்தவன் அவளைப் பார்த்து “நாளை காலை ஒன்பது மணிக்கு பள்ளிக்கு வந்துவிடுங்கள்” என்றான்.
...